Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 7 மே, 2009

நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு



பிழைத்துப்போன களம் உன்னை
கொண்டுபோய் நிறுத்தி வைத்திருக்கிறது
நீ கொண்டு செல்ல வேண்டிய
பை கிடக்கிற கடற்கரையில் காற்று திரளுகிறது.

விளையாடுகிற முத்தமற்று
சைக்கிளில் திரிகிற ஒழுங்கையற்று
வாழ்வை யுத்தம் ஒடுக்கியருக்க
உன்னை களம் கொண்டுபோயிற்று
திணிக்கப்பட்டிருக்கிற துவக்கு
உன்னைத்தான் தின்றுகொண்டிருக்கிறது.

அண்ணாவின் கல்லறைதான்
ஒரு சொத்தென இருந்தது
அண்ணாவின் கனவு கலைக்கப்பட்டிருக்க
கல்லறையும் தகர்ந்து போயிற்று
இப்பொழுது வீடு இல்லை
எங்களில் யாரும் வாழ்வதற்கு
அண்ணாவைப்போலவும்
அவனின் கனவைப்போலவும்
அலைந்துகொண்டிருக்கிறோம்.

எல்லாவற்றையும் இழந்து
அலைந்து ஒடுங்கியிருக்கிற
அச்ச மூட்டுகிற இராத்திரிகளில்
பொத்தி வைத்திருந்த
உன்னை இழுத்துச் செல்லப்படுகிற
எங்கள் விதியை என்ன செய்வது?

எங்களை அலைத்துக்கொண்டிருக்கிற எதிரியை
நீ எப்படி சுடுவாய்?
எவற்றையும் உணர முடியாத
அறிந்திருக்காத வயதில்
உனக்கு யுத்தம் தரப்பட்டிருக்கிறது
கையில் தரப்பட்டிருக்கிற துவக்கு
பிஞ்சு மனதை வேகவைத்துக்கொண்டிருக்கிறது
எதியிடம் சரணடைகிறது எஞ்சிய நிலம்.

இப்படி ஒரு கவிதையும்
இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்
ஏன் என்னை நெருங்கின
கடைசியில் பொய்த்துப்போய்
கிடக்கின்றன என் சொற்கள்.
இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?

ஷெல்களின் மத்தியில் சேர்ந்துகொண்டு
நடுங்கியபடியிருக்க நீ வேண்டும்?
யார் உன்னை இழுத்துச் சென்றனர்?
அண்ணாவைப்போல அவர்கள் இருந்தனர்.
அண்ணா நமது தேசத்தைப்போலவே
உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்.

குழந்தைகள் துப்பாக்கிகளில் மறைந்திருந்தனர்
என்று அம்மா சொல்லுகிறாள்.

இப்பொழுது நமது நகரமும் இல்லை.
வாழ்வுமில்லை.
எதுவுமற்ற நாமும் இல்லை.
எனினும் நீ வேண்டும்
அவியாத கொஞ்ச சோற்றையும்
தண்ணிரில் அவித்த பருப்பையும் தின்பதற்கு.

விரைவாக வந்துவிடு
நாம் மேலும் நிலம் பெயர்ந்தலைவோம்.
0
தங்கச்சி வேங்கனிக்கு

தீபச்செல்வன்
20.04.2009


3 கருத்துகள்:

உமா சொன்னது…

//விளையாடுகிற முத்தமற்று
சைக்கிளில் திரிகிற ஒழுங்கையற்று
வாழ்வை யுத்தம் ஒடுக்கியருக்க
உன்னை களம் கொண்டுபோயிற்று.
திணிக்கப்பட்டிருக்கிற துவக்கு
உன்னைத்தான் தின்றுகொண்டிருக்கிறது.//

//இப்படி ஒரு கவிதையும்
இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்
ஏன் என்னை நெருங்கின.
கடைசியில் பொய்த்துப்போய்
கிடக்கிறது எனது சொற்கள்//

ஆறுதல் சொல்லவும் முடியாது சொற்கள் செத்துவிட்டன.

திருமாவளவன் சொன்னது…

வாழ்த்துக்கள் கவிஞரே!
திடீரென ஏன் இப்படி ஒரு இடுகை. உங்கள் நம்பிக்கையும் மன உறுதியும் எப்படி உடைந்து போயிற்று. துவக்குகளுக்கு இதயம் இல்லை. அது எதிரி கையிலிருந்தால் என்ன உங்கள் கையிலிருந்தால் என்ன துவக்குகள் துவக்குகள்தான்.
எதிரி அழிக்கிறான். அது இன அழிப்பு என்கிறேம். நாங்கள் ஏன் எங்கள் இனத்தை அழிக்கிறோம். வெளிநாடுகளிலிருந்து பரணிபாடுவது இலகுதான். அங்கு அவர்கள் குடும்பங்கள் ப+ரண பாதுகாபிலும் செழிப்பிலும் இருக்கும்.
போர்ப்பரணி பாடியவர்கள் எல்லாம் புலவர்கள். மொழியிலே புலமையுள்ளவர்கள். அரசரிடம் ஊதியம் பெற்று பணியிலிருந்தவர்கள் கவிஞர்கள் அப்படியல்ல. அவர்களுக்கு கடமை இருக்கிறது. உண்மையை சொல்ல..
இன்று உங்களை கவிஞராய் பார்கிறேன். உங்கள் மனதை நோகடிப்பது என் நோக்கமல்ல. உங்கள் துன்பம் புரிகிறது. என்னிடமும் ஆறுதல் வார்த்தைகள் இல்லை.
திருமாவளவன். (கனடா)

chandra சொன்னது…

வணக்கம் தீபன்.உலகில் எல்லா மனிதர்களும் இடம்பெயர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அது எதன் பெருட்டு என்பதுதான் தீரா சோகத்தையும்,பெரும் துக்கத்தையும் தருகிறது. மலைகள் சூழ்ந்த என் இயற்கை பூமியைவிட்டு, வெயில் தார் ஒழுகும் சென்னை நகரத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறேன். என் திருமணத்தின் பொருட்டு. இப்போது நானே நினைத்தாலும் என் ஊரில் முழுவதுமாக வாழமுடியாது சென்னை நகர வாழ்க்கை பழக்கப்பட்டுப்போனது. ஆனால் மனது எப்போதும் நினைவில் ஊரைக் கொண்டிருக்கிறது. என்னைப் போன்றவர்களும் இந்த நினைவு சாப்பிட்டபின் விடும் பணக்காரனின் ஏப்பம் போன்றது. ஆனால் உங்களுடையதோ பசி ஏப்பம். என்னைப்போன்றவர்கள் தலையணையை அடிக்கு கொடுத்து எழுதுவது சுலபம். ஆனால் திரும்ப அகதியாக தன் ஊருக்கு திரும்புவதும் அல்லது அகதியாக தன் சொந்த மண்னில் முகாம்களில் அடைபட்டு கிடப்பதும் வாழ்வின் பெருந்துக்கம்.நான் காளியைப் போலவோ அல்லது தேவதையைப் போலவோ இருந்தால் அதிகாரத்தாலோ அல்து அன்பாலோ என் மக்களை முள்வேலியிருந்து திறந்துவிடச் செய்ய முடியும். அது மாயக் கற்பனை.என்னால் என் அருகிலிருக்கும் மக்களையே ஒன்றிணைக்க முடியவில்லை. அதான் போர் முடிந்து விட்டதே என்று சொல்லும் அறிவு ஜீவிகளும் பாமரர்களும் என்னை கண் தெரியாதவள் வண்ணத்தை பேசுவதை போலத்தான் பார்க்கிறார்கள். ஆனால் நாம் ஒரு நாளும் நம் குழந்தைகளின் கண்களிலிரும், மனதிலிருந்து வெற்றிப் பரணியை நம்பிக்கை இழக்கச் செய்ய வேண்டாம். அம்மா அடிக்க அடிக்க மண் அள்ளித் தின்ற புழுதி நிறைந்த தெருக்களில் மீண்டும் வாழ்வோம் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்.குழந்தைகளுக்கும் அதையே பாடுங்கள். அதற்கான புது அரசியலைச் செய்ய வேண்டும் நண்பரே. யூதர்களைப் போன்ற நாமும் நம் தாய் நிலத்தைப் பெறுவோம் என்று குழந்தைகளும் வெற்றிப் பரணி பாடுங்கள்.

நன்றி
சந்திரா

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...