o தீபச்செல்வன் ----------------------------------------
01
கைநழுவிக் கொண்டிருக்கிற நிலத்தில்
இறப்பர் கூடாரங்கள் நெருங்கி எரிய
நாள் முழுதும் தீயில் நனைந்துகொண்டிருக்கிறோம்
மலத்திலும் சோற்றிலும் வந்தமரும்
இலையான்களை துரத்த இயலாதிருக்கையில்
எங்கள் காணிகளுக்குச் செல்லும் வீதிகளை
திருப்பி விடுகின்றனர்
நாங்கள் வெட்டிய வீதிகள் மூடுண்டு கிடக்க
புதிய புதிய வீதிகள் புதிய புதிய முகாங்களுக்குச் செல்கின்றன.
நாங்கள் மெலிந்து விட்டோம்
நிலத்திற்காய் குரல்கள் அழுகின்றன.
பார்க்கக்கூடிய தூரத்தில் குழந்தைகளின் காணிநிலம் தெரிகிறது
மிதிக்கப்பட்ட தென்னைகளின் பூக்களையும்
இளம் குருத்துக்களையும் ஓலைகளையும்
நாம் பார்த்திருக்க களவாடிச் செல்கிறார்கள்.
கற்களையும் மணலையும் அள்ளிச் செல்லும் வண்டிகள்
நமக்கு முன்னால் ஆறுகின்றன
நாங்கள் மிகவும் வடிப் போயிருக்கிறோம்.
02
மீண்டும் மீண்டும் நிலத்தில் மிதிவெடிகள் முளைக்கின்றன
நிலா வராதிருக்கிற இரவில்
எங்கள் காணிகளில் எண்ணிக்கையற்ற
மிதிவெடிகள் முளை விட்டிருக்கின்றன
மிதிவெடி மரமாகி மிதிவெடிகள் காய்த்துக் கொட்டுமா என
குழந்தைகள் கேள்விகளை இரவில் கேட்கின்றனர்.
விமானங்கள் பறப்பதற்காவும் அவை வந்திறங்குவதற்காகவும்
பணம் அரைக்கும் ஆலைகள் திறப்பதற்காகவும்
நாங்கள் மீண்டும் மீண்டும் அகதிகளாக்கப்படுகிறோம்
இந்த நிலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
நிலத்தில் உறங்குவதற்காய் குழந்தைகள் அழுகின்றனர்.
இந்தக் கிராமங்களில் பிறந்ததிற்காய்
வெயில் இறங்கியிருக்கும் வெளியில்
குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்
இந்த முகாம் தனது வாசலை அகலமாய் திறந்தேயிருக்கிறது.
03
துப்பாக்கிளோடான இராணுவங்களற்ற
முகாமின் வாசலின் ஊடாக நாங்கள் வெளியேறி எங்கே செல்வது?
இந்த முகாங்களிலும் அந்த முகாங்களிலும்
திறக்கப்பட்டும் மூடப்பட்டும்
நிலத்திற்கான வழிகள் தடுதடுக்கப்பட்டிருக்கின்றன.
பிறந்த நிலத்தில் சிறைவைக்கபபட்டவர்களாயிருக்க
எங்கள் காணிகள் மிக சமீபமாயிருக்கின்றன
மிதிவெடிகளை தூக்கி எறியும்
குழந்தைகள் தயாராக முன்னால் நிற்கின்றனர்.
வீட்டுக்குச் செல்லத் துடிக்கும் இந்தக் குழந்தைகள்
குண்டுகளுக்கோ துப்பாக்கிச் சூடுகளுக்கோ அஞ்சாதிருக்கின்றனர்
எந்த வாகனங்களிலும் ஏறிச் செல்ல மறுக்கின்றனர்.
கனவு நிலத்தில் பேய்களின் நிழல் படர்ந்து ஆக்கிரமிக்க முயல்கிறது
குழந்தைகளின் நிலக்கனவு தகிக்கிறது.
நாம் பார்த்துக் கொண்டிருக்க
பூர்வீக நிலத்தை அள்ளிச் செல்லும் பொழுது
குழந்தைகளின் கண்களை பொத்திக் கொள்வதா?
______________
07.08.2010
தீபச்செல்வன்
7 மாதங்கள் முன்பு