எனது காயங்களை ஆற்றக்கூடிய
எனது வார்த்தைகளை புரிந்துகொள்ளக்கூடிய
எனது நியாயங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய
நண்பர் ஒருவரை
இந்த நகரத்தில் சந்திக்கக்கூடுமென எதிர்பார்க்கிறேன்
தலையற்ற பனைகளுக்குள் வடலிகள் முளைக்குமென
பறிக்கப்பட்ட வீடுகளுக்கு நாம் திரும்பவேண்டுமென
அழிக்கப்பட்ட நகரங்கள் உயிர்க்குமென
சிதைக்கப்பட்ட கிராமங்கள் செழிக்குமென
சொல்லக்கூடிய ஒருவரை கடற்கரை இருக்கைகளில் தேடுகிறேன்
காணாமல் போனவர்கள் திரும்ப வேண்டுமெனவும்
பிள்ளைகளை இழந்த தாய்மாரின் கண்ணீர் துடைக்கவேண்டுமெனவும்
கொல்லப்பட்டவர்களின் கனவு மெய்யாகவேண்டுமெனவும்
சொல்லக்கூடிய ஒருவரை
இந்தத் தெருக்களில் சந்திக்க காத்திருக்கிறேன்
யாவற்றின் பிறகும்
எனது தாய்மொழியை மதிக்கும் ஒருவரை
எனது இனத்தை ஏற்கும் ஒருவரை
எனது தேசத்தை அங்கீகரிக்கும் ஒருவரை
எனது தேசத்தை அங்கீகரிக்கும் ஒருவரை
நான் எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கி றேன்
புத்தர் உறங்கும் சிங்கள தேசத்தில்.
-தீபச்செல்வன்