உடலெங்கும் சிங்கக் கோடுகளில்
இராட்சத பாம்புபோல
காவி நிறத்துடன் நுழையுமொரு நதி
மென்று விழுங்கியது என் காடுகளை
நதியின் பெயரால்
துடைக்கப்படும் தேசத்தில்
முளைத்துச் சடைக்கின்றன களை வீடுகள்
தெற்கிலிருந்து
பண்டாவையும் புத்தனையும்
யுத்த டாங்கிகளையும்
அள்ளி வரும் நதி
எம் தலைநகரிலிருந்து
ஒரு வார்த்தையேனும்
எடுத்துச் சென்றதில்லை
எம்மீது நதியின்
ஒரு துளியும் பட்டதில்லை
பீரங்கியிலிருந்து பாயும்
குண்டுகளைப் போன்ற பேரலையின் எதிரே
சிவந்த கண்களுடனிருக்கும்
மாவிலாறு போலொரு சிறுவனும்
முகம் மறைக்கப்பட்ட
மணலாறு போலொரு சிறுமியும்
தாகத்துடன் அலைவதைக் கண்டேன்
எல்லோரும் விழித்திருக்கும் பொழுதில்
துப்பாக்கியை ஏந்தியபடி வீட்டுக்குள் புகும்
ஒரு இராணுவத்தினன் போல
என் நிலத்தில் நுழைகிறது மகாவலி.
தீபச்செல்வன்
2017