நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து
எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சகோதரியே! உன்னை உரித்து
சிதைத்தவர்களின் கைளிலிருந்து
எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது.
கண்டெடுக்கப்படாவர்களின் சடலங்களுக்கு
என்ன நேர்ந்திருக்குமென்று
தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு
இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு
உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம்
எண்ணிக்கையற்ற முனைகளில்
நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது.
உன்னை சிதைந்து எங்கு எறிந்திருக்கிறார்கள் என்பதையும்
யார் உன்னை தின்றார்கள் என்பதையும்
உனது தொலைக்காட்சியில்
நீயே செய்தியாக வாசித்துக்கொண்டிருக்கிறாய்.
நீ நடித்த பாடல்களும் படங்களும்
ஒளிபரப்பபட்டுக்கொண்டிருக்கிற அலைவரிசையில்
உனது பாதிப்படம் ஒரு மூலையில்
பார்க்கப் பொறுக்க முடியாத
கோலமாக தொங்குகிறது.
அதே படைகளினால் கவலிடப்பட்ட
நிலத்தில் எங்கோ ஒரு மூலையில் உனது
தாயைப்போலவே ஒருத்தி
தன் மகளைத் தேடி துடித்துக்கொண்டிருக்கிறாள்.
ஆண்குறிகளை வளர்த்து
இரத்தத்தை படையலிட்டிருக்கிற
படைகளின் யுத்த முனைகளில்
உன் சீருடைகளை
கழற்றி எறிந்திருக்கிறார்கள்.
உன் வீரத்தை கரைத்துவிட்டார்கள்
தொலைந்துபோன உன் துப்பாக்கி
படைகளின் கையிலிருக்கிறது
முன்னர் வெற்றியடைந்த களமொன்றிலேயே
நீ சரணடைந்திருக்கிறாய்.
துப்பாக்கிகளும் ஆண்குறிகளும்
ஒரே மாதிரியாய்
வாயைப் பிளந்து உன்னை தின்று போட்டிருக்கிறது.
முற்றத்தில் தெருவில் வயல்களில்
கண்ணிவெடிகளுக்கு கீழாகவும் மண் பிரளும் இடங்களிலெல்லாம்
சீருடைகள் முதலான உடைகளும்
இரத்தமும் சைனைட் குப்பிகளும் புகைப்படங்களும்
மற்றும் சில குறிப்புகளும் கிளம்பி வந்துகொண்டிருக்கின்றன.
என்னிடம் வாங்கிச் சென்ற
கவிதையை எங்கு போட்டிருப்பாய்?
இசைப்பிரியாவுக்கு.
25.12.2009
o தீபச்செல்வன்
கணினி ஓவியம் - ரமணி
5 கருத்துகள்:
யுத்த நோக்கம் என்பதே ஆண்குறிகளின் வெற்றி தானே தீபன்? யுத்தம் முடிந்துவிட்டது. ஆனா ஆண்குறிகள் இன்னமும் ஓயவில்லை. தமது ஆதாயத்துக்காக, வேறொரு அரசியல் வேறு வேறு அரசியல்கள் செய்தபடி. சனத்தைப் பலியிட புதுப் புது வழிகளைக் கண்டுபிடித்தபடி.
Ovvoru varigalum
yosikka vaikirathu.
Valthukkal.
Ki.charles
mathi750@yahoo.in
நல்லாயிருக்கு.
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
mathi750@yahoo.in
இசைப்பிரியாவுடன் நானும் பணி நிமிர்தம் பழகியவன். மென்மையான அந்த பெண்னை மேனி சிதைந்த நிலையில் கண்ட போது கலங்கிக் போனேன். முதலில் அவளை தலைவரின் மகள் என்றார்கள். உண்மையில் அவளும் தலைவரினால் மகள் போலவே வளர்த்து எடுக்கப்பட்டவள். நடனம் சங்கீதம் அறிவிப்பு நடிப்பு திருமணம் என அனைத்து விடயத்திலும் ஒரு தந்தையின் தானத்தில் இருந்து அவளுக்கு வேண்டியதை செய்திருந்தார். அவளும் ஒரு குழந்தைக்கு தாயாகி அக் குழந்தையும் மரணித்து விட்டதாக அறிகின்றேன்.
தீபன்,
இன்னும் இன்னும் குதறிக் கிழிக்கப்பட்ட பிணங்களாகக் கண்டெடுக்கப்படுவார்கள். இன்னும் இன்னும் பெண்கள்... பெண்கள் என ஆண்குறிகளால் அறிவுறுத்தப்படுவோம். அவருடைய முகத்தைப் பார்க்குந்தோறும்...
கருத்துரையிடுக