குழந்தைகள்தான் உன்னை
கடத்தியிருக்க வேண்டும்
அவர்கள் மீண்டும் துவக்குகளை
நீட்டத் தொடங்கியுள்ளனர்
பீரங்கிகளை திருப்பி விட்டனர்
சோதனைச்சாவடிகளை திறந்து கொண்டனர்
இதற்குள் நீ எங்கு சென்றாய்?
யாருமற்ற எனது நண்பனுடன்
சுயமி எடுத்து,
பூச்சி பூரான்களை துரத்தி
ஒன்றாய் உணவருந்தி
காவல் செய்து
ஒரு குழந்தையைப் போல
மடியுறங்கி விட்டு எங்கு சென்றாயோ?
எதற்காகவோ தொடங்கிய யுத்தம்
மீண்டும் நமது கழுத்தை நெரிக்கிறது
பொழுது சாயுமுன்னே
கதவுகளை மூடும் உத்தரவில்
உனை எங்கு தேடுவேன்?
புகைப்படங்களை துரத்திப் பிடித்து
பாடல்களை கைது செய்து
கண்ணீரை சிறையிலடைந்து
நினைவுகளை விசாரணை செய்கிற நாட்டில்
வீட்டை விட்டு ஏன் வெளியேறினாய்?
வீட்டுக்கொருவர் காணாமல் ஆக்கப்பட தேசத்தில்
வளர்ப்புப் பிராணிகளும் தொலையுமா?
மனிதர்களே கூட்டம் கூட்டமாய்
இல்லாமல் ஆக்கப்படுவதே யுத்தமும் அறமுமாயிருக்க
எந்தக் காவல் நிலையத்தில் புகாரளிக்க?
எந்த நீதிமன்றில் வழக்குரைக்க?
உன் குழந்தைமை விழிகள்
குறும்புச்செயல்களால்
ஈர்க்கப்பட்ட யாரோவொரு குழந்தையால்
நீ தூக்கிச் செல்லப்பட்டிருக்கலாம் என்றே
எனை ஆற்றிக்கொள்கிறேன்
எல்லாவற்றையும் ஆற்றியதுபோல்.
-தீபச்செல்வன்