Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வெள்ளி, 30 ஜூன், 2023

பெட்னா 36ஆவது விழாவுக்கு வாழ்த்துகள்



வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் பாரம்பரியம் மிக்க 36ஆவது தமிழ் விழா இன்று கலிபோனியா மாநிலத்தில் துவங்குகிறது. இந்த நிகழ்வில் விருந்தினராக கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதும் பேரவை நண்பர்கள், மிக வருத்தம் அடைந்தனர். என்றாலும் என்ன வரும் காலத்தில் கலந்துகொள்வோம் என்று பேரவை நண்பர்களிடம் தெரிவித்தேன்.

பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொள்கின்ற நிலையில், உலகத் தமிழ் மக்களின் பல்வேறு பண்பாட்டம்சங்களை வெளிப்படுத்தும் இந்த பெட்னாவின் வருடாந்த விழா, ஒடுக்கப்பட்ட ஈழத்து மக்களின் உரிமைகளையும் வாழ்வு நிலைகளையும் பேச ஒருபோதும் தவறுவதில்லை. இம்முறையும்கூட உலகத் தமிழ் அரங்கத்தில் ஈழத் தமிழர் விவகாரம் பேசுபொருள் ஆகிறது.

என் எழுத்துப் பயணத்தில் மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்ட வட அமெரிக்க தமிழ் சங்கம், கடந்த காலத்தில் மெய்நிகர் வழியாக என் எழுத்துக்கள் குறித்த கவனம் மிக்க உரையாடல்களையும் நிகழ்த்தியிருந்தது. தமிழின் தொன்மையை வலியுறுத்தும் தொனியில் இடம்பெறும் இந்த ஆண்டு விழாவில் ஈழத்தின் தொன்மை முகமும் மிளிரும்.

உறவுகளுக்கு பேரன்பு மிகு வாழ்த்துகள்

Federation of Tamil Sangams of North America - FeTNA 


சனி, 24 ஜூன், 2023

லண்டனில் இன்று தீபச்செல்வனின் 'பயங்கரவாதி' அறிமுக நிகழ்வு | பிரமாண்ட ஏற்பாடு



ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவலின் அறிமுக நிகழ்வு இன்று (ஜூன் 24) லண்டனில் இடம்பெறவுள்ளது.
தாயகத்தில் இருந்து தீபச்செல்வன் கலந்து கொள்ளும் நாவல் அறிமுகம் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வணக்கம் இலண்டன் இணையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் விசேட நிகழ்வுகளில் ஒன்றான பயங்கரவாதி அறிமுக நிகழ்வு பிரித்தானிவின் பிரமாண்ட அரங்கான Alperton community schoolஇல் இடம்பெறவுள்ளது.
திரள் அமைப்புடன் வணக்கம் இலண்டன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு கிளி பீப்பிள் அமைப்பு ஆதரவு வழங்க அபியகம். முல்லை எக்ஸ்பிரஸ். ராம் றீரையில்ஸ். பிராங்கோ குரூப். அம்மா ஹோம் கெயார் சேவை. மிற்சி சாறீஸ் முதலிய அமைப்புக்கள் அனுசரனை வழங்குகின்றன.
நடுகல் நாவல் வாயிலாக உலக அளவில் கவனத்தை பெற்றுள்ள தீபச்செல்வனின் புதிய நாவல் பயங்கரவாதியும் பலதரப்பட்டவர்களாலும் விரும்பி வாசிக்கப்படும் நிலையில் லண்டனில் இந் நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.
படைப்பாளி சந்திப்பு, இரவுணவு முதலிய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - வணக்கம் லண்டன்
May be an image of 11 people and text
All reactions:
You and 2 others

திங்கள், 19 ஜூன், 2023

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் முன்மாதிரி

 


ஈழ தாகத்தையும் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் பேசுவதனால் நான் மாத்திரமின்றி என் படைப்புக்களும் ஒடுக்கப்படுகிற சூழலில், சமானியர்கள் தரும் வரவேற்பும் கொண்டாடுதலும்தான் என்னை உயிர்ப்போடும் உந்துதலோடும் வழி நீளச் செய்கிறது.

யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருடத்தை சேர்ந்த அலெக்ஸ் என்ற மாணவர் தன் பிறந்த தினத்தை முன்னிட்டு தன் சொந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள தேறாங்கண்டல் பாடசாலைக்கு தன் சக மாணவர்களை அழைத்துச் சென்று 'பயங்கரவாதி', 'நடுகல்' முதலிய நாவல்கள் மற்றும் 'நான் ஸ்ரீலங்கன் இல்லை' கவிதை தொகுதியின் பிரதிகளையும் அன்பளிப்புச் செய்துள்ளார்.

அர்த்தச் செறிவான உரையாடல்களும் குழந்தைகளை விழிப்பூட்டும் முன் மாதிரியான செயல்களுமாய் இன்றைய நாளை வரலாறு ஆக்கி அசத்தியுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந் நிகழ்வுக்கு அனுமதியளித்த பள்ளிக்கும் என் அன்பும் நன்றியும். .

செவ்வாய், 6 ஜூன், 2023

கனடாவின் இனப்படுகொலைத் தீர்மானத்திற்கு ஜெயலலிதாவும் காரணமா? | தீபச்செல்வன்



கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை அறிவித்தமைக்கு ஆதரவு தெரிவித்தும், கனடாவின் நிலைப்பாட்டை கண்டித்த இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் ஒரு கூட்டம் கிளிநொச்சியில் நடந்தது. இதில் இனப்படுகொலை குறித்தும், பன்னாட்டு குற்றங்கள் குறித்தும், கனடா நாட்டின் இனப்படுகொலைத் தீர்மானம் குறித்தும், சிறீலங்கா அரசின் இனப்படுகொலை குறித்தும் மக்கள் மத்தியில் சிறந்த உரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஒரு தேசத்தில் இனப்படுகொலையின் நீதிக்காக காத்திருக்கும் ஒரு நிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை பரவலாக செய்ய வேண்டும். ஏனென்றால் நமக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை முதலில் நாம் அறிந்து கொள்வது தான் இங்கே முக்கியமானதாக இருக்கிறது.

2009 ஆம் ஆண்டு போர் நடந்த சமயத்தில் மாத்திரமல்ல, அதற்கு முந்தைய ஆண்டுகளிலேயே ஈழத்தில் இனப்படுகொலை நடக்கிறது என்றும், பாரிய இனப்படுகொலைக்கு திட்டங்களை இலங்கை அரசு தீட்டுகிறது என்றும், விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் பல ஆதாரங்களையும், எதிர்வு கூறல்களையும் செய்திருந்தது. அதுவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாக நடந்தது. 2009 மே 18இற்குப் பிறகு, இனப்படுகொலை குறித்தும், அதற்கான நீதி குறித்தும் எழுதியும், பேசியும் வந்தவர்களை நம்மில் பலரே கேலியாக பார்த்த நிகழ்வுகளும் நடந்தன. இலங்கை அரசு போரில் வென்றுவிட்டது என்றும், இனிமேல் தமிழ் தேசியம் பேசாமல், சிறீலங்காவில் பன்மைத்துவத்தை ஏற்று தனிநாடு கோராமல், சிங்களவர்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்றும் விடுதலைப் புலிகளை அண்டி வாழ்ந்தவர்கள், அரசுடன் அண்டி வாழ்ந்தபடி கூறினார்கள்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை கூட்டாகவும், அழுத்தமாகவும் சொல்வதும், எழுதுவதும், பேசுவதும் கூட சிறீலங்கா அரசால் திட்டமிட்டு தடுக்கப்பட்ட அதே நேரத்தில் அதனை பல்வேறு மட்டங்களில் குழப்பியவர்களும் உண்டு. உதாரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்கள், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஆதாரங்கள் இல்லை என்றும் கூறியதை நினைவுபடுத்துல் பொருத்தமாக இருக்கும். அதேவேளை சுமந்திரன் தமிழ்த் தேசத்திற்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரானவர் என்பதால் அவர் எடுக்கும் நிலைப்பாடு பிழை என்பதை உணர்ந்தும் இனப்படுகொலையை ஆதரிக்கவும் வலுப்படுத்தவும் பலர் துணிந்தனர்.

இப்படியான சூழல்கள் இனப்படுகொலையை செய்த சிறீலங்கா அரசுக்கு பெரும் ஆதரவை வலுப்படுத்தியது. இனப்படுகொலையின் குற்றவாளிகள் தாம் தப்பித்துக் கொண்டோம் என்று மகிழ்ந்து கொண்டனர். ஈழத்தைப் பொறுத்தவரையில், முழுக்க முழுக்க இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டும், அடக்கப்பட்டும் இருந்தது. தனிநாடு கோரி மீண்டும் ஈழ மக்கள் போராடக்கூடாது என்பது இந்த ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறையின் ஒரு நோக்கம் என்பதுடன் நடந்த இனப்படுகொலைக்கான நீதி குறித்தும் மக்கள் போராடக் கூடாது என்பது இன்னொரு மறைநோக்கமாகும்.

ஈழ இனப்படுகொலையில் கனடா ஏற்டுத்திய தீர்மானம் குறித்து அண்மையில் இந்து நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். தமிழ் நாட்டின் அரசியல் பிரமுகர்கள் முதல் படைப்பாளிகள், கலைஞர்கள் வரை தொடர்பு கொண்டு பாராட்டி இருந்தார்கள். பல உறவுகள் மின்னஞ்சலில் கடிதம் எழுதியும் இருந்தனர். குறித்த கட்டுரையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியமையே இன்று கனடா தீர்மானத்தின் வெற்றிக்கு ஒரு படியாக இருந்தது என்பதையும் பதிவு செய்திருந்தேன்.

தமிழ்நாட்டு மத்தியிலும், புலம்பெயர் தேசத்திலும் அதிகம் வாசிக்கப்படும் உரிமை மின்னிதழ் வழியாக மற்றொரு கருத்தையும் பதிவு செய்வதும் இக் கட்டுரையாளரின் மிகுந்த பொறுப்பாகும்.  2009 இற்குப் பிறகு, கிட்டத்தட்ட 2015 வரையான காலம் வரையிலும் ஈழத்தின் குரல் மிகவும் அடக்கி ஒடுக்கப்பட்டது. ஈழ மக்களே நம்பிக்கை இழந்த அக் காலகட்டத்தில் தமிழ்நாடும், புலம்பெயர் தேசமும் இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து குரல் எழுப்பி வந்தனர். தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் வேறுபாடின்றி ஈழ இனப்படுகொலைக்காக குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை பல்வேறு வழிமுறைகளில் முன்னெடுத்தார்கள்.  தமிழ்நாட்டு மாணவர்களும் இதில் அளப்பெரிய போராட்டங்களை செய்தார்கள்.

இதனால் தான் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் அடியை தொடக்கினார். இந்த தீர்மானத்தால் வரலாற்றில் உங்கள் பெயர் பொறிக்கப்படும் என்று அன்றைக்கு மதிப்புமிக வைகோ அவர்கள் பதிவு செய்தார். தமிழ் நாட்டின் ஈழத்தை நோக்கிய ஆதரவுக் குரலாகவும், உலகை நோக்கிய  இனப்படுகொலைக்கு எதிரான சீற்றமாகவும், தமிழ் நாட்டின் சட்டமன்றத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஏக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானம் அமைந்திருந்தது.

இதேவேளை ராஜபக்ச, சரத்பொன்சேகா போன்ற இனப்படுகொலையாளிகள் அன்றைக்கு தமிழக தலைவர்களை எள்ளி நகையாடினார்கள். சிங்கள ஊடகங்கள் கேவலமான ஊடகப் பதிவுகளை வெளியிட்டு தமிழக முதல்வரரையும், தலைவர்களையும் அசிங்கப்படுத்தியது. ஆனால் அதனை கண்டெல்லாம் தளராமல் தமிழ்நாட்டுத் தலைவர்கள் இன்று வரையில் ஈழ இனப்படுகொலைக்காக குரல் கொடுக்கிறார்கள். ஜெயலலிதா அம்மையாளருக்குப் பிறகு வந்த முதல்வர்களும் அப் பணியை தொடர்கிறார்கள். தமிழ் நாட்டிலும், புலம்பெயர் தேசத்திலும் ஈழ இனப்படுகொலைக்கான நீதி குறித்து எழுப்பட்ட குரல்கள் கூட்டு ஆயுதமாக மாறியிருந்தன. கனடாவில் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் அரசு பிரகடனமாக அறிவிக்கப்பட்டது போன்று தமிழ்நாடு சட்டமன்றதின் அரச அறிவிப்பாக இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் அறிவிக்கப்பட வேண்டும். அதனைச் செய்து இன்றைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இவ் வரலாற்று பணியில் பங்கு கொள்ள வேண்டும். அதேபோன்று இந்திய அரசு இனப்படுகொலைத் தீர்மானத்தை எடுக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்த வேண்டும்.

இலங்கையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானமும் இதில் குறிப்பிடத்தக்க பங்கை வகின்றது. இந்த தீர்மானத்தை திரு சிவாஜிலிங்கம் முன்மொழிந்த போது சுமந்திரனைப் போன்றவர்கள் அதற்கு எதிராய் நடந்து கொண்டார்கள். சிவாஜிலிங்கத்தை கேலி செய்தவர்களும் உண்டு. அத்துடன் கனடா நாட்டில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாய் உள்ள ஹரி ஆனந்தசங்கரி, விஜய் தணிகாசலம், லோகன் கணபதி போன்றவர்களின் அயராத உழைப்பும், முயற்சியும், பணியும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய மாண்புகளாகும். இலங்கையில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள போதும் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் இனப்படுகொலை குறித்து வலியுறுத்தாமல் மௌனம் காத்து வந்தனர்.

தூரத்து தண்ணி ஆபத்துக்கு உதவாது என்று கிளிநொச்சியை சேர்ந்த ஒரு அரச ஆதரவுக் கவிஞர் கட்டுரை எழுதியதும் நினைவுக்கு வருகிறது. இன்றைக்கு உலக அரங்கில் ஈழ இனப்படுகொலைக்காக கனடா வெளியிட்ட குரல் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது. இன்னும் பல நாடுகளின் மனசாட்சியைத் தட்டும் நம்பிக்கை குரலாக ஒளிக் கீற்றாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்டோவின் குரல் மாறியிருக்கிறது. இப்பெரும் படுகொலைக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லையே என்ற வேதனை தாளாமல் அழுது உருகித் துடித்த மக்களின் மத்தியில் முள்ளிவாய்க்காலில் இம்முறை நின்று கொண்டிருந்தேன். அப்படி வேதனையில் துடிக்கும் எம் ஈழ மக்களுக்கு ஆதரவு தந்தது கனடாவின் குரல். இதனை உலக நாடுகள் அனைத்தும் எடுத்து ஈழ நிலத்தில் விடியலையும், விடுதலையையும் ஏற்படுத்தும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

நன்றி -உரிமை

பயங்கரவாதி | காவலூர் அகிலன் விமர்சனம்




எமது நிலம் அதில் வாழ்ந்த மக்கள் அது கண்ட வெற்றிகள் என எழுதித்தீர்த்திருக்கிறார் எழுத்தாளரும் கவிஞருமான தீபச்செல்வன் இது அவரது இரண்டாவது நாவலாகும் இதற்கு முன்பு நடுகல் என்ற நாவலை எழுதியிருந்தார் அதுவும் எம் ஈழம் சார்ந்ததாகவே வந்திருந்தது.

அதிலிருந்து இன்னும் கொஞ்சம் வித்தியாசமானதாகவும் உண்மையில் நாம் கண்டு அனுபவிச்ச சம்பவங்களையும் எழுதியிருக்கிறார்.

இந் நாவலில் ஒவ்வொரு பகுதியிலும் மாறனாக வரும் பாத்திரமாகட்டும் துருவன்,சுதர்சன்,மலரினி,செந்தாளன்,ஏனைய கதாபாத்திரங்களாகட்டும் அத்தனைபேரினது பாத்திரங்களாக நாம் வாழ்ந்திருக்கிறோம் என்றே சொல்லலாம் உண்மையில் போராட்ட காலத்தில் நடந்தவற்றை அப்படியே கண் முன் கொண்டு வந்திருக்கிறார் அதை விட அக்காலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பட்ட அவஸ்தைகளைக் எழுதியிருக்கிறார் ஒவ்வொரு அத்தியாயங்களைக் கடக்கும் போதும் அங்கு நான் இருப்பது போலான தொற்றமே என் மனதில் நிலைத்திற்று .
கடைசிப் பக்கம் பார்க்கும் வரையில் அந்த நாவலில் இருக்கும் கதையை எங்களுடைய கதையாகவே பார்க்கத் தோன்றியது இத்தனை காலமும் சொல்லப்படாத கதைகளை எழுதப்படாத கதைகளைக் கூறியிருக்கிறார் அண்ணன்.

எங்காவது பயங்கரவாதியாக யாரோ ஒருவரின் கதை தென்படும் என பார்த்துக்கொண்டே போனேன் ஆனால் அவர்கள் பார்வையில் நாங்கள் எல்லோரும் பயங்கரவாதிகள்தான் என்பதை சொல்லி முடித்திருக்கிறார் இந்த நாவல் ஊடாக உண்மையில் இதை நாவலாக பார்த்துவிட்டுக் கடந்துபோக முடியாது இது நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை நாங்கள் அனுபவித்த துயர்கள் என்பதுவே உண்மை .

நடுகல் நாவலை மூன்று இரவுகளில் வாசித்து முடித்திருந்தேன் ஆனால் பயங்கரவாதியை இரவு பகல் வேலைத்தளம் என வாசித்திருக்கிறேன் .

தீபச்செல்வன் அண்ணா எழுதும்போது இவ்வளவு கதைகளை இதற்குள் கொண்டுவருவேன் என எண்ணினாரோ தெரியவில்லை ஆனால் அழகாகவும் சிறப்பாகவும் கதைகளைக் கூறிமுடித்திருக்கிறார் அதுவும் உண்மைக் கதைகளை .

52 பகுதிகளையும் 319 பக்கங்களையும் கொண்ட இந்நாவல் எம் ஈழத்துப் படைப்பின் பெரும் படைப்பாக இருக்கும் .
நிச்சயம் வாங்கிப் படியுங்கள்.

காவலூர் அகிலன்.

திங்கள், 5 ஜூன், 2023

லண்டனில் பயங்கரவாதி




பிரித்தானிவின் பிரமாண்ட அரங்கான Alperton community schoolஇல் 'பயங்கரவாதி' நாவலின் அறிமுக நிகழ்வு இந்த மாதம் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது. நேற்றைய தினம் 'தூவானம்' ஈழத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியிடலின் போது லண்டனில் 'பயங்கரவாதி;' நாவல் அறிமுக நிகழ்வு குறித்த அழைப்பு காட்சிப்படுத்தப்பட்டது. 

விலைபோன கவிஞன் | தீபச்செல்வன் கவிதை

 


எதுவும் நடக்கலாம் என்பதற்காய்
எதுவும் பேசப்படலாம்
பின்னர் எதுவும் நடக்கலாம்
கறுப்பை வெள்ளை நிறமெனச் சொல்லக் கூடும்

துயரக் காலத்தில் வசந்தம் பொழிகின்றது என்று
சொல்லக்கூடும்
யாரோ தலைவன் எனவும்
யாரோ காவலன் எனவும்
ஆக்கிரமித்திருப்பவர்களை பாதுகாவலர்கள் எனவும்
சொல்லக் கூடும்
கொடுநரகத்தை சுவர்க்கம் என்றும் சொல்லக் கூடும்

நாங்கள் சுதந்திரமாக நடத்தப்படுகிறோம்
என்று கணந்தோறும் சொல்லக் கூடும்
சொல்லிக் கொடுப்பவைகளை சொல்ல நேரிடுவதுடன்
சமயத்திற்கு  ஏற்பவும் அவன் சொல்லவும் கூடும்

கவிஞர்கள் தலைமறைவாயிருக்கும் காலத்தை
ஒரு மகா உன்னத காலத்தில்
வசிக்கிறோம் என்று சொல்லுகையில்
நீ என்ன உணர்வாய்?

கவிதைகள் எழுதப்படாத காலத்தில்
சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும்
உனது செவி எப்படியானது?
நான் கண்டேன்
அவர்கள் ஒரு கவிஞனை
பத்துக் காசுக்கு விலைக்கு வாங்கினர்
எதிரிகளுக்காக சொற்களை
வளைத்துக் கொண்டிருக்கும்
அவன் கவிஞன் இல்லை என்றனர் சனங்கள்

சொற்கள் அற்றுப் போயினர் எமது சனங்கள்
ஆனால்
நான் பேசுவேன்
எப்படி வாழ்ந்துகொண்டிருக்கின்றோமென
ஏனெனில் நாம் முகங்களற்றுப் போக இயலாது.
***
தீபச்செல்வன்

ஜீவநதி 2014

வெள்ளி, 2 ஜூன், 2023

கதைசொல்லவா? நிகழ்வில் 'யாழ் சுமந்த சிறுவன்'

 


புலக்கண் யூடியூப் அலைவரிசையில் கதைசொல்லவா நிகழ்வில் தீபச்செல்வனின் யாழ் சுமந்த சிறுவன் கதை இடம்பெற்றுள்ளது. ஈழ எழுத்தாளர் எறிகணை நாவல் ஆசிரியர் தியா காண்டீபன் இக் கதையினை சொல்லியுள்ளார். 


https://www.youtube.com/watch?v=QeAsO8Sx3y4

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...