ஆழ் கடலிடியில் அமிழ்த்தப்பட்ட
காற்று நிரம்பிய பலூனைப் போலொரு
இருதயத்தோடிருக்கும் சிறுமி
தன் குரல்களை தானே நசிக்கிறாள்
பறிக்கப்படாத உண்ணிப் பழங்களை
உண்ணும் வண்டுகள் உனைத் தேடுகின்றன
நாவற் தடிகளால் அடித்து
வகுப்பெடுக்கும் செடிகள் வாடிப்போயிருக்கின்றன
குழந்தைகள் காணாமல் போகுமொரு தேசத்தில்
இனி என்னதான் இருக்கும்?
எனது தேசத்தின் குரலாயிருந்த சிறுமியே!
முன்பு குழந்தைகளுக்குச் சவப்பெட்டிகள்
விற்கப்பட்ட நகரில்
இப்போது சிறைச்சாலைகள் திறக்கையில்
எப்படி உனக்கு ரிப்பன்கள் வாங்கித் தருவேன்?
அண்ணாவுக்காக அழுதது குற்றமெனவும்
அவனைத் தேடியது தண்டனைக்குரியதெனவும்
உன்னையும் கடத்துகையில்
நீயும் காணாமல் போகிறாய்
காணாமல் போய்விட்டன பள்ளிக்கூடக் கதிரைகளும்
அண்ணாவோடு ஓடிப் பிடித்து விளையாடவும்
அம்மாவின் உணவுகளை தட்டிப் பறித்து உண்ணவும்
வளர்க்கப்பட்ட கனவுகள்
அனுமதிக்கப்படாத தேசத்தில்
உனக்கொரு பந்து கொடுத்திருக்கிறார்கள்
சிறைவைக்கப்ப்ட்ட அம்மாவைத் தேடி
நடு நிசிகளில் எழுந்து குந்திருந்து
அழுமுன் குரலை திருகிவிட
நள்ளிரவில் திக்கிட்டுக் கத்துகிறது ஊர்க்குருவி
உனைச் சுற்றி நிற்கும் படைகள்
பொம்மைகளே தம்மிடம் இருக்கின்றதெனச் சொல்கையில்
உன்னை எப்படி விடுவிப்பதெனத்
துடிக்கிறது உன் பொம்மை
பனியுறைந்த வயல்களைக் கடந்து
பழங்களை வீழ்த்த வீரமரங்களுக்கு
தடியெரிந்து செல்லுகையில்
நீ கதை பேசிய காகமொன்று
தனியே கரைந்து இந்த நகரத்தை அதிரச்செய்கிறது.
தீபச்செல்வன்
நன்றி: ஜீவநதி ஏழாவது ஆண்டு மலர்