மதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில்
திரும்ப முடியாமற் போகலாம் என
எண்ணுபவனின் கால் தடம்
மரணம் சைக்கிளின்
பின்கரியலில் ஏறியமர்ந்த தெருக்களில்
உள் உறிஞ்சிய பெருமூச்சு
நெஞ்சறைகளுக்குள் எழுதியெழுதி
தனை அழித்த நாட்களில்
நிராகரிக்கப்பட்டவனின் முனகல்
தன் தாய் மண்ணில் இறங்கி விளையாட
அடம்பிடிக்கும் குழந்தை போலோரு
கவிஞனின் குரல்
அதிகாரத்தை எதிர்த்தமையால்
கொலைப்பட்டியலில் இடப்பட்டவனின்
இரகசிய முகம்
மூன்றாம் நாள் பின் மாலையில்
உனை கொல்லவிருக்கிறோம்
என அறிவிக்கப்பட்ட பின்னர்
எழுதிய பதற்றமான இறுதிக்குறிப்பு
பதுங்குகுழிக்குள் வானம் இறங்கி
இருள் கவிழ்ந்து
போர் மண்ணை விழுங்கிச்
செறித்த காலத்தில்
தெறித்த சிறு பொறி
போரிருட்டில் அலையுமொரு சிறுவன்
கையில் ஏந்திய
அணையும் தீப்பந்தத்தை சுற்றியிருக்கும்
எழுத்துக்களின் கசியும் ஒளிபோலும்
இவ் வலை*.
தீபச்செல்வன்
ஜூன்30 2016
நன்றி - குளோபல் தமிழ் செய்திகள்
*'நீ கொல்லப்படுவாய்!' என சிங்கள இராணுவத்தால் எச்சரிக்கப்பட்ட காலங்களில் என் கவிதைகளை பாதுகாகத்தது இந்த வலைப்பதிவு. இதுதான் இறுதிக் குரலோ என்று அஞ்சியபடி பதிவேற்றப்பட்ட கவிதைகளை சேகரித்ததும் இந்தத் தளமே. எழுத்தின் தொடர்புகளை, உறவுகளை தந்ததும் இந்த தளமே. என் எழுத்துக்களை பலருக்கும் கொண்டு சேர்த்த இந்த எளிய வலைத்தளத்தை, போர் நிறைந்து மூடுண்ட கிளிநொச்சி நாட்களில் (30.06.2007) உருவாக்கி பத்து வருடங்கள் ஆகிவிட்டன.