கந்தகப் புகை படிந்து கறுத்த சூரியன்
பீரங்கி இரண்டாகப் பிளந்த நிலா
செல்கள் கொலைசெய்த குளங்கள்
போர் அணைகளால் துண்டிக்கப்பட்ட ஆறுகள்
பொஸ்பரஸ் குண்டுகளால் நீவப்பட்ட குழந்தைகள்
விமானங்கள் மென்ற கோயில்கள், வீடுகள், தெருக்கள்
டாங்கிகள் கிழித்த நிலம்
திரும்புமிடமெல்லாம்
வெடிகுண்டுகளை நிரப்பிய இராணுவமுகாங்கள்
திறந்த குழாய்களுடன்
வீடு நோக்கி
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆட்லெறிகள்
நெற்றிகளை குறிபார்க்கும் துப்பாக்கிகள்
சன்னங்கள் சித்திரம் வரைந்திருக்கும்
உடலெங்கும் வெடிபொருட்களின் பாகங்களை
சுமந்தபடியிருக்கும் ஒருவனால்
வெடிகுண்டின் சிறு பெரியினால்
சிறுபுல் ஒன்று கருகுவதைக்கூட தாங்குதல் இயலாது.
0
தீபச்செல்வன்
நன்றி - குளோபல் தமிழ் செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக