மஞ்சளும் சிவப்புமான
ஏதேதோ பொருட்களெல்லாம் தோரணங்களாக
துயிலும் இல்ல நினைவுப்பாடலை முணுமுணுக்கிறான்
யாரோ ஒரு சிறுவன்
அழ முடியாதவர்களுக்காய் வானம் உருக
விளக்குகளின் ஒவ்வொரு துளி நெருப்பிலும்
தெரிந்தன களம் சென்ற வீரர்களின் புன்னகை
மற்றும் இறுதிக் கையசைப்பு
துயிலும் இல்லங்களின்மேல் முகாங்கள்
கல்லறைகளின் மேல் காவலரண்கள்
சிதைமேடுகளின் மேல் துப்பாக்கிகள்
மண்ணுக்காய் மாண்டுபோனவர்கள் உறங்கும்
மயானங்களைகளிலும் துப்பாக்கிகள்
புதையுண்ட சிதைகளோடான யுத்தம்
இன்னும் முடியவில்லை
வாழ்தலும் இல்லை
நினைவுகூர்தலும் இல்லை
கண்ணாடிகளெங்கும் தெறிக்கின்றன
தடைசெய்யப்பட்ட முகங்கள்
சிதைக்கப்பட்ட கல்லறையை சுற்றித் திரியும்
தாயொருத்தி சிந்தும் ஒரு துளி கண்ணீர்
இரண்டாய் பிரித்துவிடுமா இத் தீவை?
வெறித்துப்போயிருக்கும் தெருவில்
வீரர்களின் நினைவுப்படங்களிருப்பதாய்
பூக்களை வைத்துச் செல்லுமொரு தாயின்
ஈமத்தாழிபோல் கனத்திருக்கும் நெஞ்சில்
கோடிச் சுடர்களின் அனல்
0
நன்றி- குளோபல் தமிழ்