குளத்தின் மேலாக வட்டமிடும் பறவைகள் இல்லை
துப்பாக்கிகள் தொங்கும் மருதமரங்களின் கீழாக
பேசிக் கொண்டிருக்க யாருமில்லை
ஆஷா! நாங்கள் எங்கு செல்வோம்?
இரவில் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்தபடி
பேசிக் கொண்டு நடந்து வரும் பொழுது
நான் துப்பாக்கிகளில் மோதுண்டேன்
ஒரு தெரு எப்படியிருக்கும்?
கால்களறியாத தெருக்களில் ஏதோ விளைய
அழிவின் நிழலில்
அழகிய தோட்டத்தைக் காண்பீர்கள் என்று
நாம் வாழும் காலத்தைச் சபித்தது யார்?
உண்ணிப் பூக்கள் ப+த்திருக்க
பச்சைப் பாம்புகள் ஈச்சைகளுக்குள் புணர
கைகளுக்குள் சிக்காத காணாங்கோழிகள்
பற்றைகளுக்குள் இருந்து மிரண்டபடி பார்க்க
நீயும் நானும் ஆற்றங்கரையிலிருப்போமா?
ஆஷா! இரத்தம் பட்டு வறண்ட கன்னங்களுக்கு
இனிக்கும் உனது முத்தம் வேண்டும்
என்னோடு நீயும் இருக்கப் பிரியப்படும் இடத்தை
நான் எப்படி இழப்பேன்?
முத்தங்கள் பூத்த கொடிகள்; படரும்
நாவல் மரத்தில் நீ பழங்களைப் பறிப்பாய்
நான் கிளைகளை வளைப்பேன்
பழங்களை உண்ண பறவைகள் திரும்பும்.
நன்றி : தீராநதி ஜனவரி 2013