ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள்
எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென
ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை
பயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா?
வேற்றினம் என்பதாற்தானே
அழிக்கின்றனர் நமது சந்ததிகளை
ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள்
எமை அழைத்தனர் பிரிவினைவாதிகளென
ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களை
பிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா?
வேற்று நாடு என்பதாற்தானே
ஆக்கிரமிக்கின்றனர் நமது நாட்டை
நாமொரு இனம்
எமக்கொரு மொழி
எமக்கென நிலம்
அதிலொரு வாழ்வு
வீர நிலத்தில் புதையுண்டிருக்கும் என் தோழியே!
உறிஞ்சப்பட்ட குருதியும்
மனிதப்படுகொலைகளும்
அழித்துவிடுமா ஓரினத்தின் சரித்திரத்தை?
சுதந்திரம் எவ்வளவு இனிமையானதோ
அதைப் பெறுவதும் அவ்வளவு கடினமானதென்றபடி
மாபெரும் விதையாய் புதைந்திருப்பவளே
இன்னும் பல நூறு வருடங்களெனினும்
நான் காத்திருப்பேன்
நீ அறிவாய்
நான் வரலாறு முழுதும் போராடுவேன்
அடிமையை எதிர்த்துக்கொண்டே இருப்பேன்
காதலியே! அடிமையால் என் அடையாளத்தை ஒழிக்க இயலுமோ?
ஆக்கிரமிப்பால் என் தேசத்தை மறைக்க இயலுமோ?
மாபெரும் சுற்றிவளையிலும்
நான் முன்னகர்வேன்!
நம் கண்களுக்கு முன்னால் விரிந்திருக்கும்
எனது நாட்டை
வேறொரு பெயரால் அழைக்காதே நண்பா!
வேறொரு பெயரால் அழைக்காதே நண்பா!
ஒரு பாலஸ்தீனனை
இஸ்ரேலியரென அழைப்பயா?
என்னை சிறிலங்கன் என்று அழைக்காதே
நான் தமிழீழத்தவன்
எனது நாடு தமிழீழம்
மாபெரும் சமுத்திரத்தில்
தொலைக்கப்பட்ட ஓர் ஊசியினை
தேடியலைவதுபோல
அலைகிறேன் என் தாய்நாட்டைத் தேடி.
தீபச்செல்வன்
நன்றி: தீராநதி மே 2014
0 கருத்துகள்:
கருத்துரையிடுக