Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 10 டிசம்பர், 2007

இந்த நாகரிகத்தின் வேர் படுகிறது


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

01
ங்களில் யாருக்கும்
இங்கு வாழ்க்கையில்லை
படையெடுத்து வந்தவர்களின்
வாழ்வுக்குள் நசியக்கூடிய
சிறிய வாழ்க்கை ஒன்றை
ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம்.

இனி யாருடைய ஆதிகளும்
இங்கிருப்பதாய்
மார்பு நிமித்த முடியாது
இப்பொழுது
நிமிர்ந்த மார்புகள்தான்
சரிக்கப்பட்டிருக்கின்றன
இந்தக்குறியில்
எப்படி நாங்கள்
நமது மார்புகளை
நிமித்தப்போகிறோம்?

நாம் எல்லோரும்
குனிந்து கொண்டுதானே
போகிறோம்.

02
எங்கள் நாகரிக்தின்
வேர் படுகிறது
இந்த நகரத்தை விட்டு
ஒவ்வொருவராக
வெளியேறி வருகிறார்கள்
இது கைவிடப்பட்ட
நகரமாகிறது
துண்டிக்கப்பட்ட
தனிமையிலிருக்கிறது.

ஆதியை துறந்தவர்களாய்
வெளுறிய வீதிகளிலிருந்து
கால்களைத் தூக்கி
படகுகளில் நிரப்பி
மடக்கிக்கொள்கிறார்கள்.

இந்த நகரத்தை
யாருக்காக விட்டுச்செல்கிறோம்?
இங்கு யாருடைய வாழ்வு
சாத்தியப்பட்டடிருக்கிறது?

03
நாங்கள் ஒரு சங்கில்லியன் சிலை
வளர்த்திருக்கிறோம்
இப்பொழுது
சங்கிலியனின் சிலையை
எங்களால் நிமிர்ந்து
பார்க்க முடியாதிருக்கிறது
அது சிதைக்கப்பட்டிருக்கலாம் என்ற
ஜயத்துடன்
கண்களை வேலியின் கீழாக
சொருகிப்போகிறோம்
எங்கள் முன்னவர்களின்
நடுகல்கள்,நினைவுத்தூபிகள்
சில இரவுகளில்
அகழ்ந்து மண்ணாய் கிடக்கிறது
எங்களின் மம்மிகள்
இல்லை என்றாகின்றன.

இனி இந்த சுவர்களுக்ககு
வண்ணம் பூசவியலாது
அதில் பாசி படர்ந்திருக்கிறது
எங்கள் வாசகங்கள்
மறைக்கப்பட்டுவிட்டன.
எங்கள் சுவர்களின் ஆணிகள்
துருப்பிடித்து உக்கிவிட்டன.

எங்கள் நாகரிகத்தின் சுவடுகளை
சுவர்களில்
தொங்கவிடமுடியாது.

சிறைச்சாலை வண்ணம் பூசப்பட்டிருக்கிறது
அரச சிறைச்சாலை
அடைக்கலம் புகுவதற்கும்
அகதிகளாக்குவதற்கும்
தரப்பட்டிருக்கிறது
நாங்கள் நடமாட முடியாது
உயிரைப்பொத்தி வைத்திருக்கலாம்
கால்களில்
கட்டுப்போடப்பட்டிருக்கும்.

04
துப்பாக்கிகளால்
தவரவிடப்பட்டவர்களாயிருந்தாலும்
எதுவரை வாழப்போகிறோம்
எப்படி இங்கு ஒரு சந்ததி
உருவாகப்போகிறது?
நீ சந்ததியை உருவாக்க
திறனற்றவனாக்கி
விடுவிக்கப்பட்டிருக்கிறாய்
இவளின் கருவிலிருக்கும்
குழந்தையின் ஆயுள்
எவ்வளவு நீளமானது?
குழந்தையைவிட
இவளின் கருவில்
என்ன நிறைந்திருக்கிறது?

நீ குழந்தைகளுக்காக
சுவர்களில் வரைந்நிருந்த
உனது நாகரிகத்தின்
வீரதீர காட்சிகள் அழிந்துவிடட்ன
மீண்டும் அதை உன்னால்
வரைய இயலுமா?
நமது நாகரிகத்தின்
நிறங்கள் உதிர்கையில்
உருவப்படுகையில்
வெளுறிய பிள்ளைகள்
காலம் பிசகிய
பள்ளிக்கு போகிறார்கள்.

05
நிறைய வீடுகள்
பூட்டடப்பட்டிருக்கின்றன
பாழடைந்து விட்டன
நிறையவீதிகள் சருகுகளால்
நிரம்பி உள்ளன
ஒன்றில் அவர்கள்
வெளியேறியிருப்பார்கள்
அல்லது
கொலைசெய்யப்பட்டிருப்பார்கள்
சில வீடுகள்
சோபையிழந்து புகைகின்றன
அங்கு அவர்கள்

ஊமைகளாக்கப்பட்டிருக்கலாம்
குருடர்களாக்கப்பட்டிருக்கலாம்.

இங்கு யாருடை விழிகள்
திறந்திருக்கின்றன?
இங்கு யாருடைய வாய்கள்
பேசுகின்றன?
இங்கு யாருடைய நடமாட்டங்கள்
நிகிழ்கின்றன?

எங்கள் வீதி என்ற
துணிச்சலுடன் போகிறோமா?
நாம் பிரதான வீதியில்
செல்ல அனுமதிக்கப்படுகிறோமா?
வைத்தியசாலைப்பயணத்ததிற்கு
ஒரு மூதாட்டி நெடு நேரமாய்
காத்திருக்கிறாள்
எல்லோரும் தடுக்கப்பட்டு
உள்வீதிகளில்
நிறுத்தப்பட்டிருக்கிறோம்
இவைகளில் நசுங்கி
சில பிள்ளைகள்
தாமதமாக பள்ளி போகிறார்கள்.

06
நமது நாகரிகத்தின்
வேர் படுகிறது
நமது நாகரிகத்தின்
வாழ்வு அழிந்துவிட்டது
என்பதை வெட்கத்துடன்
ஒப்புக்கொள்வோமா?

இந்தக்குடா இப்பொழுது
எதற்கு விரிந்திருக்கிறது?

படையெடுத்தவர்கள்
நிறைந்திருக்கிறார்கள்
அவர்களுக்கு கையாள
பயங்கர ஆயுதங்கள்
நிறைந்திருக்கின்றன
அவர்கள் மரணத்தை
நிறைத்திருக்கிறார்கள்.

இதற்குள்ளளாகவே அந்த
வாழ்வு தரப்பட்டிருக்கிறது
நிறம் உருவப்பட்ட
வாழ்வை ஏற்க
நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்
அல்லது அரச படகு இருக்கிறது
கால்களை மடக்கி
அதில் ஏறிப்போகலாம்?

நமது வாழ்வில் வழியும்
வெட்கத்தை துடையுங்கள்
நாம் நமது மார்புகளை
எப்படி நிமித்த வேண்டும்?
இந் த நாகரிகத்தின் வேரை
எப்படி துளிர்க்கச் செய்யவேண்டும்?
நமது வர்ணங்கள் எங்கிருக்கின்றன?
நமதேயான வாழ்வை
மீட்டெடுக்க வேண்டும்..
---------------------------------------
யாழ்நகர்செல்படலம்2007

றஞ்சனியின் கடிதம்
-------------------------------------------------------------------


அன்பின் தீபச்செல்வன்,
எந்த உணர்வுள்ள சுதந்திரத்தை விரும்பும் மனிதனுக்கும் பொய்வேசமும் தேவையில்லை தனது உணர்வுகளை உண்மையை எழுதுவதற்கு ,இது எனது கொள்கை நீங்களும் அதைத்தான் செய்கிறீர்கள் என எண்ணுகிறேன்।,பாஹீமாஜஹானின் கவிதைகளும் உணர்வுள்ள கவிதையாக நன்றாக இருக்கு. மனதை தளரவிடாமல் எழுதுங்கள் தமிழருக்கென்று ஒரு நாடு கிடைக்காமலா போகும்.
--------------------------------------------------------------------------

வணக்கம் தீபச்செல்வன்
உங்கள் தீபம் பக்கம் பார்த்தேன் , கவிதைகள் மனதை உருக்கி நிக்கிறது எம் போராட்ட வாழ்க்கைக்குள் இருக்கும் ஒருத்தியினதோ ஒருவனினதோ அல்லது அனைத்துமக்களினதோ மனநிலையைப்பிரதிபலிக்கிறது உங்கள் கவிதைகள் , கொடூரமான போராட்ட வாழ்க்கை நிம்மதியில்லாது அலையும் மக்கள் , இறப்புக்களும் ,இழப்புக்களும் சாதாரணமாகி , கனவிலும் கொடுமைகளே வரக்கூடிய ஒரு சூழலில் எமது நாடு இருக்கிறது , உங்களைப்போன்றவர்களின் எழுத்துக்கள் எம்மை எமது தேசத்திற்கு கொண்டுசெல்கிறது ,இந்த சூழலிலும் உங்களால் எழுதமுடிவதை பாராட்டுகிறேன் வசதி கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்கள் அது உங்கள் மன அமைதிக்கும் உதவியாக இருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி
றஞ்சினி

சனி, 1 டிசம்பர், 2007

பதுங்குகுழியில் பிறந்தகுழந்தை

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
01
ருவேளை எனது குழந்தை
அமெரிக்காவில்
ஒரு மாளிகையில்
பிறந்திருந்தால்
எதை உணர்ந்திருக்கும.?

குழந்தைகளுக்கான
சிறிய சவப்பெட்டிகள்
நிரம்பிக் காணப்படும்
எதுவுமற்ற
நமது நகரத்தில் அல்லவா
பிறந்திருக்கிறது.

02

குழந்தைகளின் புன்னகைகளை
நிலங்களின் அடியில்
புதைத்து வைத்துவிட்டு
நாம்
நசுங்கிய எதிர்காலத்தோடு
அமர்ந்திருக்கிறோம்

பதுங்கு குழியினுள்
அவர்களின் பள்ளிக்கூடங்கள்
தொலைந்துவிட்டன.
இசையின் நாதம்
செத்துவிட
குழந்தைகளின் பாடல்கள்
சாம்பலாகிப் பறக்கின்றன.

மலர்கள்
தறிக்கப்பட்ட தேசத்தில்
இராணுவச் சப்பாத்துகளின்கீழ்
வாழ்வைத் தொலைத்துவிட்டு
இனத்தின் ஆதிப்புன்னகையை
அறியாது வளர்கிறார்கள.

நமது வாடிய முலைகளுடன்
மெலிந்த குழந்தைகளைப் பெற்று
புன்னகைப்பட்ட
நாடு செய்கிறோம்.
இந்தப் பதுங்கு குழியில்
கிடக்கும்
எனது குழந்தையின் தாலாட்டில்
நான் எதை வனைந்து பாடுவது?

03

தாய்மார்களின் வற்றிய
மடிகளின் ஆழத்தில்
குழந்தைகளின் கால்கள்
உடைந்துகிடக்க
பாதணிகள்
உக்கிக்கிடந்தன.

அவர்களின் உதடுகள்
உலர்ந்து கிடக்கின்றன
நாவுகள் வரண்டு
நீள மறுக்கின்றன
நாங்களும்
திறனியற்ற நாவால்
இந்தக் குழந்தைகள்
கருவூட்டப்பட்டிருக்கையில்
எதைப் பேசினோம்?

04

குழந்தைகளின் விழிகளில்
மரணம் நிரந்தரமாக
குடிவாழ்கிறது
அவர்களுடன் ஓட்டிப்பிறந்த
கருணை வார்த்தைகளும்
விடுதலைப் பாதங்களும்
அவர்கள் அறியாமல்
பறிக்கப்பட்டுள்ளன

எதையும் அறியது கிடக்கும்
எனது குழந்தை
சதாமின் ஆட்சிக் காலத்தில்
ஈராக்கில் பிறந்திருக்கலாம்

05

நான் கடும் யுத்தப்பேரழிவில்
பிறந்ததாய்
அம்மா சொன்னாள்
எனது குழந்தையை
நான் இந்த பதுங்குகுழியில்
பிரசவித்திருக்கிறேன்

அது நாளை என்னிடம்
ஜனாதிபதியையும்
இராணுவத் தளபதிகளையும்
விசாரிக்கக்கூடும்
நான் நிறையவற்றை
சேமித்துவைக்க வேண்டும்.

கண்ணாடிகளை உடைத்து
தண்ணீரைக் கிறுக்கி
எங்களை நாங்கள்
காணாமல்
இருட்டில் வாழ்ந்தோம் என்றும்
அது பிறக்கையில்
எரிந்த தொட்டிலின்
தாழத்தில்
தாலாட்டுப் பாடல்கள்
கருத்திருந்தது என்றும்
நான் கூறவேண்டும்.

06

நான் மலட்டுத் தன்மை அடைவதற்கு
வேண்டியதற்காக
அப்பொழுது வெட்கப்பட வேண்டியிருக்கும்
ஏதாவது பேசுங்கள்
ஏதாவது செய்யுங்கள்
என்ற எனது உரையால்கள்
தலைகுனிந்து கிடக்கும்

07

பதுங்குகுழிக்குள்
எனது குழந்தையின் அழுகை
உறைந்துவிடுகிறது

08

ஏன் இது
ஒரு ஈழக்குழந்தையாக
இங்குவந்து பிறந்திருக்கிறது?
அதுவும் இந்தப் பதுங்குகுழியில்
கண்ணை விழித்திருக்கிறது?
எனது குழந்தையின் அழுகை
நாளை இந்நாட்டின்
தேசிய கீதமாய் மாறலாம்
---------------------------------------------------

கடைசி உணவு நாட்கள்

கவிதை_____________________________
--------------------------தீபச்செல்வன்
__________________________________________------------------------------------------------------------------
01
மது கோப்பைகள்
வெறுமையாயிருக்கின்றன
துயரங்கள் நிரம்பிய
கோப்பைகளோடு
நாட்கள் கடைசியாகிவிட்டன.

கோப்பையில்
நிரம்பியிருக்கும் துயரத்தை
என்னால் சாப்பிடமுடியவில்லை.

இருட்டுப்பந்தலில்
நாற்காலிகள் இருட்டாகிகிடக்கின்றன
நான் திரும்பி வரமுடியாத
பிரதேசம் ஒன்றிற்கு
போகப்போகிறேன்
நான் வாழமுடியாத
நகரம் ஒன்றில்
தங்கியிருக்கப்போகிறேன்.

கோப்பைகள் பாரமாயிருக்கின்றன.

02
எனக்கு மிகவும் பிடித்த
தோழனே
என்னால் தாங்கமுடியயதிருக்கிறது
சாந்தம் அழிந்திருக்கும்
உனது முகத்திலும்
சிவந்து கசிந்துகொண்டிருக்கும்
உனது கண்களிலும்
சூழ்ந்திருக்கும் துயரத்தை
கொஞ்சமும் பார்க்கமுடியாதிருக்கிறது
நான் உன்னோடு
பேச முடியாமல் மௌனமாயிருக்கிறேன்.

நமது விளக்குகளை
இரவுகள் விழுங்கிவிட்டன
எனது பயணம்
இருட்டு வீதியில் தத்தளிக்கிறது.

நாம் வளர்த்த மரத்தின் கீழ்
அடையாளம் தெரியாத
நிழல் படருகிறது
அந்த மரத்தின் வேர் படுகிறது
சந்தர்ப்பங்களற்றிருக்கும்
நமது நாற்காலிகளில்
தெரு நாய்கள்
மலம் கழித்திருக்கின்றன
சிறு நீர்பெய்திருக்கின்றன.

எனது கோப்பை நெழிய
உணவு பழுதாகி கிடக்கிறது.


03
தோழனே எல்லாம்
கடைசி என்றாகி விட்டது
இவை கடைசி உணவாகிவிட்டது.

நீயும் நானும் கூடியிருக்கவே
விரும்புகிறோம்
நான் விலகியிருக்கிறேன்
எனக்கு சிலுவை காத்திருக்கிறது
எனக்கு ஆணிகள் காத்திருக்கின்றன
எனது குருதி
பகிர்ந்துண்ணப்படவிருக்கிறது.

நம்பிக்கையற்ற நகரத்திற்கு
நம்பிக்கையின்றியே போகிறேன்
பயங்கரம் நிரம்பிய
வீதிகளில் நடக்கப்போகிறேன்
ஆபத்தான வண்டிகளில்
ஏறப்போகிறேன்
சுடும் வெந்நீரில்
நீந்தப்போகிறேன்
நான் திரும்புவதைப்பறிறியே
நீ யோசிக்கிறாய்?

நாம் நிச்சயமற்ற இனத்திலே
பிறந்திருக்கிறோம்
அவர்களது கோப்பையில்
நிரம்பியிருக்கும்
எனது குருதியை நினைத்து
அச்சப்படுகிறாய்
பலிகளுக்கு ஏற்கப்பட்ட
இனத்திலிருந்து பேசுகிறோம்.

04
அதிகாரங்கள் நம்மை
தேடி வதைக்கின்றன
வன்முறைகள் நம்மை
மொய்கின்றன
நமது அலைச்சல் நீளுகிறது
நாம் அமைதிக்காக
அதிகாரங்களோடு போராடுகிறோம்.

எனக்கு மிகவும் பிடித்த தோழனே
நான் போகிறேன்
எனக்காக முகத்தினோடு.
மிகப்பாரமான
எனது பயணப்பையில்
இந்தக்குரல்
மொத்தமாய் கிடக்கிறது.
--------------------------------------------------

வெள்ளி, 23 நவம்பர், 2007

கிளிநொச்சி:மீள்எழுத்துகவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
01

பிரகாசிற்கு இப்பொழுது
பியரில் நாட்டமில்லை
முன்பு நாம்
பியர் குடிப்பதில்லை
சமாதான காலத்தில்தான்
இங்கு பியர்கள்
கொண்டுவரப்பட்டன.
அப்போதுதான்
நானும் பிரகாசும்
பியர் குடிக்கப்பழகினோம்.

இப்பொழுது இங்கு
பியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை
முன்பு கொண்டுவரப்பட்ட
பியர் போத்தல்களின்
சுட்டுத்துண்டு நிறங்கள்
வெளுறிக்கிடக்கின்றன.

02

நாங்கள் பயணம் செய்த
பேருந்துகள்
ஓய்ந்தோ முடங்கியோ
கிடக்கின்றன
நாங்கள்
பேருந்துகளையோ பயணங்களையோ
விரும்புவதில்லை

இப்பொழுது
சைக்கிளை
மெதுவாக ஓட்டியபடி போகிறோம்
எங்கள் மோட்டார் சைக்கிள்
வீட்டில் நிற்கிறது.
இனி நடந்தும் போகவேண்டி இருக்கும்.

03
பிரகாசின் அம்மா
புற்றுநோயில்
இறந்துவிட்டாள்
பாதை பூட்டியிருந்தததால்
அவளுக்கான வைத்தியங்கள்
தவறிவிட்டன.
கடைசி நாட்களில்
நல்ல சாப்பாடுகளைக்கூட
பிரகாசு
வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

இப்பொழுது அவன்
பியரை நன்றாக
வெறுத்துவிட்டான்

04

வீடுகளில்
விளக்கு வைப்பது
பெரும்பாடாகி விட்டது.
சிவப்புநிற மண்ணெண்ணையில்
வண்டிகள்
புகையுடனும்
பெரும் இரைச்சலுடனும்
ஓடுகின்றன
எமது வண்டிகளுக்கு
எதிர்காலமே
இல்லாமலாகி விட்டதென்று
அனேகரும் கவலைப்படுகிறார்கள்.

வீதிகள் எல்லாம்
குன்றும் குழியுமாகி விட்டன.
சில்லுடைந்துவிடும்
காற்றுப் போயிவிடும்
சைக்கிளை
மெதுவாக ஓட்டுகிறோம்

05

கான்ஸ்பிரஸ்கரின்
சிரிப்புடன்கூடிய படம்
எரிக்சொல்கெய்மின்
சிரிப்புடன் கூடிய படம்
எல்லாம்
சுவர்களில் இருந்து
அகற்றவேண்டி ஆகிவிட்டது.
அவர்கள்தான்
எங்களுக்கான பியர்களை
எடுத்துவந்திருக்க வேண்டும்.

அவர்கள்தான் சோடாவும்
கொண்டு வந்திருக்க வேண்டும்
மினரல் தண்ணீர்களும்
கொண்டு வந்திருக்க வேண்டும்.
இப்பொழுது சுடும்
கலர் தண்ணிகளை
பொலித்தீன் பையில் அடைத்து
இங்கு விற்கிறார்கள்
அது சூடாய் இருக்கிறது.
கடைகள் குறைந்து விட்டன.

06

எங்கள் தாத்தாவின்
வாயில்
மூள மறுக்கும்
குறைச்சுருட்டுக் கிடக்கிறது
அவர் பழைய
குறைச்சுருட்டுக்களை
தேடிக்கொண்டிருக்கிறார்
நெருப்புக் கொள்ளியுடன்
போராடுகிறார்.

07

கடிகாரத்திற்கான
பென்டோச் பற்றியுமில்லை
சுவர்க்கடிகாரம் ஓடுவதில்லை
ரணில் விக்கிரமசிங்கவும்
தலைவர் பிரபாகரனும்
இணைக்கப்பட்ட படமுடைய
கடிகாரத்தை
புத்தளத்தில் இருந்து வந்த
முஸ்லீம் கடையில்
அம்மா வாங்கி வந்தாள்.
அது பழுதாகி விட்டது.
பற்றி போட்டும் வேலையில்லை.
நேரம் சரியில்லை.

08

எப்படி வீடுகளில்
பதுங்குகுழி என்று
நானும் பிரகாசும்
விசாரித்துக் கொள்கிறோம்.

நாங்கள் நல்ல
பதுங்குகுழி அமைக்கவில்லை.
சாமாதான காலத்தில்
சீமெந்துகள்
அனுமதிக்கப்பட்டிருக்கையில்
நிலத்தின்கீழ்
வீடுகட்டியிருக்க வேண்டும்.

09

படுகொலை செய்யப்பட்டவர்களின்
பெயர் விபரங்கள்
சந்தியில் அறிவிக்கப்படுகின்றன.
அது நமது பாடலாகி ஒலிக்கிறது.

சைக்கிளை விட்டு
இறங்கி வீதிக்கரையில்
நிற்கிறோம்
களமுனையில் வீழ்ந்த
மாவீரர் ஒருவரின்
விதையுடல்
சிப்பு மஞ்சள் வண்டியில்
துயிலும் வீடுநோக்கிப் போகிறது.

10

சைக்கிளை ஒதுக்கி
வழி விடுகிறோம்
விமான தாக்குதலில்
காயமடைந்த
மக்களைக் காவிக்கொண்டு
அம்புலன்ஸ் வண்டி
ஓமந்தை நோக்கிப் போகிறது
சிலவேளை
பிணத்துடன் திரும்பி வந்துவிடும்

11

நமது உடைகள்
மங்கி சுருங்கி விட்டன
செருப்பும் தேய்ந்துவிட்டது.

பசிக்கிறது.
கொஞ்சமாய் சாப்பிட வேண்டும்.
நானும் பிரகாசும்
மெலிந்து விட்டோம்

மீண்டும் ஒருநாள்
நானும் பிரகாசும்
பதுங்குகுழியை விட்டு
வெளியில் வந்து பேசுகிறோம்.
___________________________

வியாழன், 22 நவம்பர், 2007

கனவில் நிகழுகிற பயங்கர உலகம்கவிதை________________________
--------------------------தீபச்செல்வன்

-------------------------------------------------------------

01.
னது கனவுகள் ஏன்
பயங்கரமானவையாக
இருக்கின்றன?

முதலில் இரவு
பயங்கரமாக வருகிறது
மிக தாமதமாகவே
தூக்கம் வருகிறது
முழு தூக்கத்தையும்
பயங்கர கனவுகள்
விழுங்கி விடுகின்றன.

02
ஆற்றங்கரை குடிசைகளை
வெள்ளம்
அள்ளிப்போகிறது
எனது அம்மாவையும்
தங்கையையும்
எங்கள்
சமையல் பாத்திரங்களையும்
வெள்ளம்
வழித்தெடுத்துக்கொண்டிருக்கிறது.

03
நான் ஒரு மாட்டு வண்டியில்
எனது நகரத்திற்கு
போய்க்கொண்டிருக்கிறேன்
வழிநிறைய கிடந்த
சோதனைசாவடி ஒன்றின்
சுவர்களில் மோதி
நான் பயணித்த வண்டி
சிதைகிறது
இழுத்து வந்த எருதுகள்
செத்து கிடக்கின்றன
வேறு இரண்டு எருதுகள்
தமது கொம்புகளால்
என் வயிற்றை கிழிக்கின்றன.

04
ஆறுகள் சிதைந்து கிடக்க
மரங்கள்
அழிக்கப்பட்டிருக்க
எனதூரில்
எல்லோரும் கூடியிருக்கிறார்கள்
சவப்பெட்டிகளும்
பாடைகளும்
நிறைந்து கிடக்கின்றன
வானத்தை இருள்
சூழ்ந்திருக்க
அவர்கள் கட்டி
அழுதபடியிருக்கிறார்கள்.

05
எனது கால்கள் உடைந்து கிடக்க
பாழடைந்து வரும்
நகரத்தில் உறைந்து விடுகிறேன்
வெளுறிய வீதியில்
செல்ல முற்பட்ட
என் மாட்டு வண்டி
சாம்பலாய் கிடக்கிறது.

06
பகல்களில் தப்பியிருந்தேன்
மெல்ல அச்ச மூட்டியபடி
பயங்கர இரவு வருகிறது
மெல்ல மெல்ல அச்ச மூட்டியபடி
பயங்கர தூக்கமும் வருகிறது.

மிக வேகமாவே
அச்சமூட்டியபடி
பயங்கர கனவுகள் வந்து
தீவிரமாகின்றன
நான் திடுக்கிடுகிறேன்.

எனது கனவுகள்
ஏன் பயங்கரமானவையாகவே
தொடர்கின்றன.. ?
-----------------------------------------------------

செவ்வாய், 13 நவம்பர், 2007

கடலில்கரைந்த ஒருதுண்டுபடகு.

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
மது வாழைமரங்களை
அழிக்க அவர்கள்
மிகப்பெரிய வாட்களோடு
புகுந்தார்கள்
எல்லா வாழைஇலைகளும்
கிழிந்து கிடக்கின்றன
பசுமையைகாலடியில் போட்டு
மிதித்திருந்தார்கள்
காற்றின் கூடுகளை
கிழித்தழித்தார்கள்.

நமது மிகப் பழமையான
மண் அரித்துச்
செல்லப்பட்டுக்கொண்டிருந்தது
வீடுகளும்
வீதிகளும் வாழ்வும்
கரைந்துகொண்டிருந்தன.
நிலவு அழுதுவடிக்கிறது
மிகப்பசுமையான
வாழையிலையில்
கலந்து படைத்திருந்த
நமது முகங்களையும்
அவர்கள் கிழிக்க
நான் கடலில் மிதந்தேன்
நமது கண்கள்
காற்றில் மிதந்தன
எனது முகத்தை காணவில்லை.

அலைகள் மொழிகளை
இழந்து அமைதியாயிருந்தன
கடலின் முகங்கள்
வீங்கி பெருத்திருந்தன
நானிருந்த படகு
அலைந்துகொண்டிருந்தது
இறுகிய
தண்ணீர் மேடுகளில்
மோதி
துண்டுதுண்டாய் உடைந்தது.

எஞ்சியிருந்த
ஒரு துண்டு படகும்
கரைந்துவிட்டது
உப்புக்காற்று தேங்கிய
ஈரமான
எனது வெள்ளைத்துணி
தவறி கடலில் விழுந்தது
நான் எடுத்து வந்த
அரிசி அடங்கிய
சின்ன பொதிகளும்
கைதவறி விழுந்து
கடலில் தாண்டன.

நான் கண்டேன்
எனதூரில்
அவர்கள் கிழித்த
சில வாழையிலைகள்
கடலில் எறியப்பட்டிருந்தன
மீன்களும் கொலைசெய்யப்பட்டு
மிதந்துகொண்டிருந்தன.
-------------------------------------------------

திங்கள், 22 அக்டோபர், 2007

சைனைட்டுக்களின் வெளியில்..

_______________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________

ரண்டு சைனைட்டுக்களிடையே
இந்த தோழமை
வளர்க்கப்பட்டிருக்கிறது
இரண்டு துப்பாக்கிகளிடையே
இந்த தோழமை
வளர்க்கப்பட்டிருக்கிறது
இரண்டு சீருடைகளிற்கிடையே
இந்த தோழமை
வளர்க்கப்பட்டிருக்கிறது
பிரித்துப்பார்க்க முடியாத
சிந்தனையின் தாய்மையில்.

பொதுமைப்பட்ட
உன் புன்னகையின்
அர்த்தத்தை நான் மட்டும்
பிரித்து வாசித்திருக்கிறேன்.
அக்கறையான
உன் அழுகையை
நான் மட்டும்
பிரித்து வாசித்திரக்கிறேன்.
நீயில்லாத
நானில்லாத வெளிகளும்
நெருக்கங்களும்
உள்ள இலக்கின் இணைப்பில்.

உனது முகத்தில்
கசிந்த வாசத்தை
நுகர்ந்திருக்கிறேன்.
உனது விழியில் தெரிந்த
பரிவான பார்வையை
உணர்ந்திருக்கிறேன்.
உனது விரைந்த
செயலின் ஆழத்தை
பார்த்திருக்கிறேன்.
நமது இலக்கின்
ஒருமைக்குள் தாய்மையடைந்து
சுதந்திரத்தை பிரசவிக்கும்
புனிதமான சீருடைக்குள்.

நமது தோழ்களின்
வெளியில்
மக்கள் கண்துங்கிறார்கள்.
நமது சைனைட்டுக்களின்
வெளியில்
மக்கள் புன்னகைக்கிறார்கள்.
நமது துப்பாக்கிகளின்
வெளியில்
மக்கள் கைகளை வீசுகிறார்கள்.
நமது சீருடைகளின்
வெளியில்
கடமை அணிவகுக்கிறது.

நமது பிரிவில்
பாதிஉறவுகள் மீண்டிருக்கிறார்கள்.
உனது மௌனத்தில்
பாதித்தேசம் விடிந்திரக்கிறது.
--------------------------------------------------------------------

ஞாயிறு, 21 அக்டோபர், 2007

நீ இரத்தம் சிந்திய தெருக்கள்

_______________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________நமது சந்திப்புக்கள் ஒவ்வொன்றும்
ஆயுளை விட பெரியன
இடங்களும் சொற்களும்
காயபமல்
தேனீர் கோப்பைகளை
நிரப்பியிருக்கின்றன.

உன்னிடம் தான்
நான் நிறைய சொற்களை
கவிதைகளாயும்
பாடல்களாயும்
வாங்கியிருக்கிறேன்.

ஒவ்வொரு சொற்களிலும்
உனது ஒளிபடர்ந்த முகமும்
கருனை கலந்த குரலும்
அடர்ந்திருந்தன.

குறிப்பாக மாலை நேரங்களில்
உனது முகத்தை
மஞ்சள் வெயிலில் பரப்பி
வீட்டுக்கு வருவாய்
எனது வெள்ளை சீருடைகளில்
எனது புத்தகங்களில்
என்னை மறைத்து வைப்பேன்

உனக்கு ஆறுதலலித்த
எனது வீடும் எனது முகமும்
பாதுகாப்பளித்த விழிகளும்
பெருமையில் அழுகின்றன.

உன்னிடம் தான்
கருனையின் புன்னகையை
பார்த்திருக்கிறேன்
உன்னால் தான்
ஒரு தயைப்போல அணுகமுடியும்.

யாரும் குறித்து வைக்காத
நமது சந்திப்புக்களை
இடங்களை சொற்களை
தூரத்தில் விட்டு
உனது வேளைகளுக்காக
துடிக்கிறேன்.

எல்லாம் தெருக்களில் மறைந்தன.

நீ பகிர்ந்த தாய்மையை
உனது இலட்சியத்தை
துணிவை சாதனையை
தோள்களின் பலத்தை
இழந்து விடுவேனோ
அச்சமடைந்திருக்க
இருளின் கல்லறைக்குள்ளும்
வெளியிலும்
நடமாடுவதைப்போல
உனது முகம் தெரிகிறது.

கடைசிவரைக்கும்
நாம் திரிந்த
குறுக்குத் தெருக்களில்
உனது சைக்கிள் எங்கேனும்
நிறுத்தப்பட்டிருக்கிறதா என்று
தேடியபடி இருப்பேன்.

நீ விரும்பிய பிரதான தெருக்களில்
திரியும் அங்கலாய்ப்பு
நமது நகரின் வாசலுக்கு
மடிந்து கொண்டு வருகிறது
அந்த தெருக்களுக்காக
மரங்களுக்காக
நீ இரத்தம் சிந்தினாய்
நான் வியர்வையேனும் சிந்துவேன்.

என்றேனும் ஒருநாள்
நமதுநகரின் பிரதானதெருவில்
உனது சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கம்.
--------------------------------------------------

வெள்ளி, 19 அக்டோபர், 2007

தேவராசா

_____________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________


ல்லாச் சிறுவர்களும்
தேவராசா
என்று சிரிக்கிறார்கள்
எல்லோருக்கும்
தேவராசாவின் இயல்பில்
சிரிப்பு வருகிறது
எதையும் அவன்
அறியாது பேசுகிறான்..


தேகத்தில்
புளுதியை அள்ளி தானே
பூசிக்கொண்டிருந்தான்
கையில் ஐந்துரூபாய்
றப்பர் பை ஓட்டையுடனிருந்தது.
அவற்றுள் கிழிந்தும் கிழியாததுமாய்
ஒரு சில புத்தகங்களிருந்தன.

அவனின் மேல் சட்டை
பொத்தான்கள்
மாறி மாறி பூட்டப்பட்டிருந்தன.
அவனின் காற்சட்டை
ஒரு பக்கம் கிழிந்து
கயர் பிரண்டிருந்தது.

வயதாகியும்
அவனுக்குள் சரிப்படாத
தடங்கல் பேச்சு
அதுவும்
பார்ப்பவர்களுக்கு
சிரிப்பூட்டுகிறது.

அப்பாவை ஆமி
சுட்டுட்டான்
அம்மா வேலைக்கு போட்டுது
சோறு கொண்டருமே
நான் திரும்ப திரும்ப கேட்க
விளங்க முடியாத
அவனின் மொழி
கவிதையாடுகிறது.
தன்பாட்டில்
தேவாரங்களை அனுபவித்து
பாடுகிறான்.

தேவராசாவின்
யாருக்கோ எதற்கோவான
நேர்மை
கீழே எறியப்பட்டு
மணலில் புதைந்து தெரியும்
காலாவதியான பென்சில்களை
எடுக்கலாமா என்கிறது.

கொப்பியும் பென்சிலும்
வாங்கித்தரும்படி
கேட்கிறது
என்னுடனான அவனின் உரிமை.

படிப்பு சொல்லித்தரும்படி
கேட்கிறது அவனின்
அவசியமான அக்கறை.

தேவராசா
புத்தகங்களை எடுத்து
வாசிக்கத் தொடங்கிவட்டான்.
--------------------------------------------------------------
19.01.2006 பளையில் தேவராசா என்ற இந்த சிறுவனை சந்தித்தேன்..
-----------------------------------------

மழை இரவுகள்


பட்டியற்ற மாடுகள் தெரு மரங்களில்
உறைந்திருக்க பெருமழை பெய்தது
புளுதியடங்க மின் குமிழ்கள் சிரித்தன
விடுதியில் தொடங்கிற்று மழை உரையாடல்

சாளரங்களை திறந்து ரசிப்பவனும்
குளிர் தாங்காது மூடுபவனும்
மின்கம்பிகளின் அடியில்
இருட்ட உருவங்களுக்கு அஞ்சுபவனுமாய்
சாளரங்கள் திறந்து மூடும் 

எப்படியும் ஒருவன்
துப்பாக்கிகள் அலையும் இரவு பற்றி நிதானமாயிருப்பான்
கதவுகளை இறுக்கி பாதுகாப்பான்
இரவை அமத்தும் அவனை மீறி
கூச்சல் போடும் மீதிப்பேரும்
அடிக்கடி தூரத்தில் தெரியும் துப்பாக்கிகளை
அண்மித்து வருவார்கள்.

மழை நாட்கள்
மழை இரவுகள் 
மழைத் தெருக்கள்
குறித்து ஒருவன் பேசத் தொடங்க
புத்தகங்கள் ஒதுங்கின

எப்போதும் மழையில் நனையவும் 
நனைந்தபடி சைக்கிளில் திரியவும் 
ஆசையோடிருக்கிறோம் மூடுண்ட நகரில் 

இரவு, மழை, தெருக்கள்
வேறுபாடின்றி இணைந்து கிடக்கும் நாளொன்றில் 
ஒரே ஒருமுறை நகரை சுற்றி வருதலை
நினைக்க மனதில் ஒரு மழைதுளி விழுந்தது

மழைப் பின்னிரவில் நீண்டது
கதவுகளை தாண்டி
புத்தகங்களை நோக்கி 
மழைநாட்களின் இரவுகளையும் 
தின்னுதொரு துப்பாக்கி 
0
2007

தீபச்செல்வன்


அப்பாவின் குளக்கரை..

_______________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________னக்கு தேவாரம்
பாடத்தெரியவில்லை
அப்பா குளிக்க மூழ்கிய
குளக்கரையின்
ஏதிர்த்திசையில்
ஆவதானிக்கிறேன்
ஞானப்பாலூட்டுவதற்கு
கடவுளோ
அவரின் மனைவியோ
வருவதாயில்லை..

நான் தொடர்ந்து
அழுது பார்க்கிறேன்
எனது அழுகையின்
பக்கத்தில்
பலரும் போய்வருகிறார்கள்
என் அழுகை குறித்து
விசாரிக்க எவருமில்லை
அவரவர்
தங்கள் வண்டிகளில்
பார்வைகளை செலுத்தியபடி
அதை ஓட்டிப்போகிறார்கள்..

எனக்கு தாகமெடுக்கிறது
ஞானப்பால் குறித்த
நினைவுகளில்
இப்போது
தேனீர் வண்டிக்காரனின்
சில்லரைக்காசுகளின் சத்தம்
வியாபார முழக்கமிடுகிறது...

அந்த தேனீர் வண்டிக்காரனும்
கடவுளாகவோ
அவரின் மனைவியாகவோ
இருக்க முடியாது..

மூன்று வயதின்
ஞானப்பால் நினைவை
அந்தக் குளக்ரையில்
வீசியிருக்கிறேன்..

இப்பொழுதும் அந்த வழியில்
போய்வருகிறேன்
அப்பா குளித்து
கரையேறாத
அந்தக் குளக்கரையில்
எனது பார்வைகளை
செலுத்துவதில்லை..
------------------------------------------------------------

புதன், 17 அக்டோபர், 2007

பசுமைகள் தலைசிதறின

--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________


ந்தத் தென்னை மரத்தின்
தலை சிதறியிருந்தது
அதன் உடல் எல்லாம்
கிழிந்து
இரத்தம் கொட்டியது
துயரத்தை ஏற்றிய
கொடிபோல
அது நின்றுகொண்டிருந்தது.

வீதிகளில் பசுமை
வறண்டுபோய் கிடந்தது
கடைகிளில்
குடிப்பதற்கு குருதிறே
அதுவும் விற்பனையில்..
சதைகதைராசில் போட்டபடி
சிதறிய தலைகளுக்கு
விவாதிதித்தார்கள்.

பசுமை கவிதைகளை
விற்கவந்த நாடோடிகள்
முகங்களை உடைத்து
அழுகைகளை சம்பாதித்தனர்
சிரித்தபடி வந்தவர்கள்
அழுகை கொண்டே போனார்கள்.

அவர்கள் வந்து பார்த்தார்கள்.

எல்லோரும் இரைச்சலுக்காக
விழுந்து கிடந்தோம்
சிலர் சிழுந்த இடங்களிலேயே
கல்லறை எழும்பியது
உறவுகளும் மகிழ்வுகளும்;
தலைசிதறி மயானமாய் கிடந்தன.

என் இரண்டு வயது
பிள்ளையும்
பதுங்கி கிடந்த இடத்தில்
நடு கல்லாயிருந்தாள்
அவளை அணைத்தபடி
என் பசுமையும்
தலை சிதறி கிடந்தது

அதையும் அவர்கள்
பார்த்திருக்க வேண்டும்.அந்த நெரிசலில்
அவர்கள் என் தொலைந்த
பசுமையை தேடித்தர இயலாது.

போகும் போது
பிணங்களை விலக்கியே
அவர்களால் போக முடிந்தது.

அவர்கள் வரும்போது
நான் நம்பினேன்
எல்லாம் பசுமையாய் இருக்குமென்று

இருந்தாலம்
அவர்கள் நெடுகபார்ப்பார்கள்
போன பிறகும் பார்ப்பார்கள்.

தலைசிதறித்தெரியும் - அந்த
தென்னைமரத்தின் வழியே
தேடப்படும் எங்கள் பசுமையை
-----------------------------------------
09.11.2006 அன்று வாகரையில் பாடசலை-அகதிமுகாம் மீது இலங்கை இராணுவம் நடத்திய எறிகனைத்தாக்குதலில் 50க்கு மேற்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
-------------------------------------

செவ்வாய், 16 அக்டோபர், 2007

இரவு நட்சத்திரங்கள்


----------------------------
கவிதை:தீபச்செல்வன்
---------------------------------------------------------------------------
இந்த இரவு
நட்சத்திரங்கள் பூட்டப்பட்டதைப்போலிருக்கிறது
ஓரு திருப்தியோடு மதுக்கோப்பைகளை
தூக்கி அருந்தமுடிகிறதில்லை
நான் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறேன்
எங்களால் எப்படி
இந்த செயற்கை மகிழ்ச்சியோடு
வாழ்ந்துவிட முடிகிறது.

ஓரு விருந்து ஓழுங்குசெய்யப்பட்டிருக்கிறது
நாம் பேசுகிறோம்
உன்னைப்பற்றி என்னைப்பற்றி
எங்களைப்பற்றி
எங்களை சூழ்ந்திருப்பவை பற்றி
மனந் திறந்து பேசுகிறோம்.

எங்களோடு கூடியிருந்த நண்பன்
களத்தில் மரணித்ததுபற்றி
நினைவுகொள்கிறோம்
எல்லைகளில் அடிக்கடி
மூளும் போரைப்பற்றி பேசுகிறோம்
துப்பாக்கிகளோடு எந்நேரமும்
எல்லைகளில் விழித்திருக்கும்
போராளிகளைபற்றி பேசுகிறோம.

எங்களால் பாடல்களை இசைக்கமுடிகிறது
சிகரட் விரலிடுக்கில்
புகைந்துகொண்டிருக்கிறது
மதுக்கோப்பபைகள்
சிதறலாக தெரிகின்றன.

எனினும் நாம் எதைப்புரிந்தோம்
நமது தோள்கள்
உதிர்வதைப்போலிருக்கின்றன
நேற்று எங்களோடிருந்த
இந்த மேசையின் நண்பன்
எதுவும் சொல்லாமல் நாட்டைவிட்டு
ஓடிப்போயிருக்கிறான்.

நாம் நிறையவற்றை அறியாதிருக்கிறோம்
மலரவேண்டிய இடத்தில்
மௌனமாயிருந்து உதிருகிறோம்
மதுக்கோப்பைகளின் இருட்டில்
நெருங்கியிருக்கும் நமதன்புகளை
எந்தக்காலையில் உலர்த்தப்போகிறோம்.

நாம் எந்த நிதானத்தை பற்றி
பேசவேண்டும்
எந்த புரிதலும் வார்த்தைளும்
நமக்கு தேவைப்படுகின்றன
பிரகாசமும்
மங்களலும் எங்கிருக்கிறது.

நாம் எந்த பாடல்களை
இசைக்கவேண்டும்
எங்களுக்கு மதுவை
சேவகம் செய்பவனின் வியர்வைத்துளிகள்
பியர்கள்மீது படுகின்றன
அவனிடம் ஒரு நிறைந்த
புன்னகை இருக்கிறது
ஓவ்வொரு காலையிலும்
அவனின் முகம் பிரகாசமடைகிறது.

மதுக்கோப்பைகளிலும்
சிகரட்டுக்களிலும் கலந்துகிடக்கும்
இந்த வெளிச்ச சூழலின்
ஆயுளைப்பற்றி என்ன பேசினேன்?
சிலவேளை நான் தவறாய் பேசலாம்
இந்த மேசையில் நிறைய விடயங்களை
புரியமுடியும்
நெருக்கத்தை பரிமாறமுடியும்
ஆதரவும் பலமும் பிறக்கமுடியம்
வார்த்தைள் கடும் அர்த்தமாயிருக்கும்
நாம் அறியவேண்டியவை
நிறைய இருக்கிறது.

நான் தள்ளாடுகிறேன்
சிகரட்டின் நுனியில் குடிவாழும்
நெருப்பை இழத்தபடி
இரவில் வெளிச்சம் தீர்வதுபோலிருக்கிறது.

பாடல்களை நிறுத்துகிறோம்
வானத்திற்கு காதெறிகிறோம்
வேவு விமானம் சுற்றுகிறது
அவதானத்துக்கான நேரம் வருகிறது
வானத்தில் நட்சத்திரங்களை காணவில்லை
சிகரட்டுகள் அணைகின்றன
மதுதீர்ந்த கோப்பைகளை
சேவகன் எடுத்துப்போகிறான்
மேசை வெளிக்கிறது
நாம் இரவின் நடுவிலிருக்கிறோம்।

பதுங்குகுழியை இன்றும் கூட
சுத்தம்செய்ததுபோலிருக்கிறது.
--------------------------------------------------------
14।10.2007 கிளிநொச்சி 1-9 தங்ககத்தில் ஒரு விருந்து நடைபெற்றது.
---------------------------------------------------------------

ஞாயிறு, 14 அக்டோபர், 2007

இராப்போசனம்!

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________

னக்கும் எனக்குமான
சமன்பாடுகளில்
சரிவு வந்துவிட்டது
அசாதாரணங்களின்
அடம்பிடிப்புகளால்.

உன்னை நானும்
என்னை நீயும்
அடியோடு
மறந்துகொள்ள
முயற்சிப்போம்
எங்களுக்கான
மரணங்கள் வரை.

எங்களுக்கான
இறுகிய உறவு
எதையோ
அச்சுறுத்தல் செய்யுமெனில்
அதை அறுத்துவிடல்
நமக்கே நல்லது.

உன்தோள்களில்
நான் கைபோட்டுக்கொண்டதும்
உன்னால்
என் கண்ணீர்
துடைக்கப்பட்டதும்
ஒரு துரதிஸ்டக்காரனாய்
எனக்குள்
நானே கண்ட
கனவாய்போகட்டும்.

அதெப்படி என்னை
சிலுவையில்
அறையப்போகிறார்கள்
என்றதும்
உன்னால் என்னை
உதறமுடிந்தது
நான் இயலாதிருக்க.

எங்களுக்குள்
நிகழ்ந்து முடிந்த
இந்த
இராப்போசனத்தை மட்டும்
அடிக்கடி நினைத்துப்பார்
நாம் நமக்குள் இருப்போம்.
-----------------------------------------------------

கீறல்பட்ட முகங்கள்


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------


ங்கள் கொடிகள்
உயரவே பறக்கிறது
உங்கள்
குரலும் முகமும்
எங்களை கீறீ
நிறையவே வலிமையை
சாதித்துவிட்டது.

குண்டுகளால் காயப்பட்ட
எமது முகங்கள்
மறைக்கப்பட்டிருக்கின்றன
அலறிவிடாமல்
காயங்கள் நசுக்கி
மருந்திடப்பட்டிருக்கின்றன.

நாங்கள் மறைந்திருந்தபடி
மிக தொலைவிலிருந்தே
பேசுகிறோம்
குருதி பீறிட
உங்கள் நகங்களால்
கீறப்பட்ட
எமது முகங்களை
நீங்கள் விரும்பியபடி
யாரும் பார்க்கமுடியாது.

அதனால் தொடர்ந்தும்
நீங்கள் எல்லோரும்
விமானங்களையும்
குண்டுகளையும்
எறிகணைகளையும்
உற்பத்திசெய்யுங்கள்.

எமது முகங்களில்
நீங்கள் செய்த
விஞ்ஞானங்களை
எறிந்து காயப்படுத்தி
சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

எங்கள் முகங்களுக்காகவே
இன்னும் புதியவைகளை
சிந்தனை செய்தும்
பரிமாறுங்கள்.

உங்கள் சாதனைகளின்
ஒளிப்பதிவுகள்
இதோ வருகிறது
உலகம் முழுவதிலும்
முக்கியமாக
காண்பிக்கப்படுகிறது
உங்கள் உற்பத்தி
குறித்தே எல்லோராலும்
பேசப்படுகிறது
திருப்தியுடன் கைகளைப் பரிமாறி
அதிகாரங்களைப் பகிர்ந்து
புன்னகைத்து
உயர்த்திப் பேசுங்கள்.

மறைக்கப்பட்ட எமது
முகங்களின் கீறல்களிலும்
நசுக்கப்பட்ட எமது குரல்களின்
முனகல்களிலும்
உங்கள் வல்லமை பொருந்திய
கொடிகளை
உயரப்பறக்கவிடுங்கள்.
----------------------------------------------------

இந்தக்கவிதை 11.08.2006 அன்று போர் வெடித்த தருணத்தில் எழுதப்பட்டது. சமாதானம் அன்று ஏ9 பாதையை முறித்தபடி இருந்த உயிரும் இழக்கிறது. கிழக்கில் தொடங்கிய போர் அன்றிலிருந்து வடக்கிலும் பரவத் தொடங்கியது.

வியாழன், 11 அக்டோபர், 2007

நெருப்பின் கல்லறைவெளி

அவர்களின் தொலைந்த முகங்களைப் பார்த்து
பிணங்கள் கேள்வி கேட்டன
காயப்பட்ட முகங்கள்
அவர்களை பார்த்து புன்னகைத்தன
ஆனால் அவர்கள் மரணத்தின் பாடலுக்குக் காத்திருந்தனர்.

அவர்கள் சொன்னார்கள்
மரணங்களை எங்கள் மீது ஏவி விடுங்கள் என்று
அதனால் நிலங்களுக்காக
குணத்தை வெறிப்படித்தினார்கள்.

அவர்கள் சொன்னார்கள்
எங்கள் உரிமைகளை
உரித்து கேவல் செய்யுங்கள் என்று
அதனால் எமது அடையாளம்
அதிகாரங்களின் காலடியில் போடப்பட்டது.

இன்று ஒரு வெளிச்சத்தின்
முகவரியிலிருந்து புறப்படும்
மரணப்பாடலின் அர்த்தங்களுக்காக
யாரோ காத்திருக்கின்றனர்.

மரணங்களுக்கு ஏவல் செய்தவர்கள்
இருளை அறுவடை செய்து ஓய்ந்திருக்கிறார்கள்
தீயிட்டவர்களுக்கு
நெருப்பிற்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

முகங்களை கொழுத்த வந்தவர்களின்
முகங்கள் கருகிப்போயின
குரலை திருக முற்பட்டவர்கள்
குரல் தீர்ந்து வார்த்தைக்கு கை ஏந்தி
பிச்சை கேட்டனர்.

பிணங்களுக்கு
ஆசைப்பட்டு அணிவகுக்க
தொடங்கியவர்கள்
பிணங்களாகினர்
உயிர்களைப் பறிக்க
அதிகாரம் செய்தவர்கள்
உயிர் தீர்ந்து அலைந்தனர்.

முகங்களை தொலைத்தனர்.

வெளிச்சத்தின் சந்தையில்
கைகளில் இருள் காசுகளுடன்
நெருப்பின்
கல்லைறை வெளியிலிருந்து
புறப்படும் மரணத்தின் பாடலுக்காக
காத்திருக்கிறார்கள்.
-------------------------------------------------------------

விடுதலை சிருஸ்டிப்போம்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


ணர்வுகளால் பகிர்வோம்
மகிழ்வுகளால் பகிர்வோம்
வலிகளால் பகிர்வோம்.

நாம் நிலவின்
வெளிச்சத்தில் பகிர்வோம்
களங்கமில்லாத
நமது குழந்தை முகங்களை.

நாம் சூரியனின்
ஒளியில் பகிர்வோம்
தாய்மையடைந்த
நமது மடியின் குரல்களை.

உனது கையை பிடித்து
பயணம் செய்தும்
உனது தோள்களில் சாய்ந்து
தூங்கியும்
ஏன் மடியில்
நீ வேர் விட்டும்
தாய்மையை
நமக்குள் பகிர்வோம்.

பிணைந்த நமது
விரலிடுக்குகளில்
சமத்துவ வலிமையில்
எங்களை நாங்களாய்
சுமப்போம்
உன்னை நான் சுமக்கையில்
நான் தாயாகிறேன்
என்னை நீ சுமக்கையில்
நீ தாயாகிறாய்.

எனது சிறகு
பறிக்கப்படாதவரை
உனது சிறகும் பறிக்கப்படாது
நான் சிறைவைக்கப்படாதவரை
நீயும் சிறைப்படமாட்டாய்.

சொற்களின் ஈரத்தால்
குளிர்ந்த எண்ணங்களால்
வெள்ளை புன்னகையால்
நாம் இணைந்து
அழகிய வாழ்வு நெய்வோம்.

பூமியின் வேரில்
ஓளியின் அடியில்
நாம் விடுதலை சிருஸ்டிப்போம்

நாம் நமக்குள்
போராடத்தேவையில்லை
நாம் நமக்குள்
வதைபடத்தேவையில்லை
மகிழ்வை புதைக்கத்தேவையில்லை
கோப்பைகளை பரிமாறுவோம்.

உன்னிடமும் என்னிடமும்தான்
நமக்கான விடுதலை இருக்கிறது
நம்மை நாமே
விடுதலை செய்வோம்.

வா…அழகிய நமது விடுதலையுடன்
வாழ்க்கையை பகிர்வோம்.
---------------------------------------------------------

புதன், 10 அக்டோபர், 2007

நிலவிலே பேசுவோம்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


நிலவு உடைந்துவிடவில்லை
உனது திசை கறுத்திருக்கிறது
பகிரவேன்டிய சமாச்சாரங்களுக்கு
அப்பால் சுருங்கிய
வழியின் இடைநடுவில்
உனது பயணம் தள்ளாடுகிறது
உனது புன்னகையின்
கலவரம் புரியாது
உதடுகளை கணக்கெடுத்த
குழந்தைகள் முகங்களை
பொத்திக்கொள்கின்றனர்.

எங்களுக்கு ஒளிவீசும்
நிலவுமீது
கூரிய கத்தியை வீசிவிட்ட
உனதுதிசை இருளாகிறது.

உனது குரலில் யதார்த்தமும்
செயல்களில் கருணையும்
ஒரு போதும்இருக்கப்போவதில்லை
இதுவரையிலும்
உனது செயற்கைமழை
பெரியளவில்
அடித்து ஓய்ந்திருக்கிறது.

எந்தவிதமான குளிச்சியும்
அடங்கியிருக்காத
நிரந்தரமும் உறுயும் இல்லாத
உனது அதிகரத்தின்
செயற்கை மழையில்

எனது சிறகுகள்
ஒடுங்கிவிடவிலை
நான் நேசிக்கும் வழிகள்
கரைந்து விடவில்லை
எனது வேர்கள் அழிந்துவிடவில்லை.

உனது மலைதான் சிதைகிறது.

வெளிகளை தடைசெய்து
முகங்களை சிறைப்பிடித்த
உனது பாரியமலை
அதிவேகமாக சிதைய
மிகப் பெரும்கற்கள்
உனது முகத்தை
நோக்கியபடி வருகின்றன.
நீ உருவாக்கிய கிளர்ச்சியில்
உனது இருப்பு வெடித்து சிதறுகிறது
எனது அடையாளம் ஒளிர்கிறது
நம்பிக்கை சிவக்கிறது.

எந்த பதற்றமுமின்றி
மிக அமைதியாக இருகிறது
எங்கள் நிலவு.
இருப்புக்கான புரட்சியுடன்
நாங்கள் போராடுவோம்
எங்கள் அழகிய
விடுதலை பற்றி
எல்லோருமாக பேசுவோம்
உரிமையுடன் செயற்படுவோம்
குற்றமில்லாத நிலவின்
மிக நீணடவெளி
எல்லையற்று இருக்கிறது

அவசியம்
எங்களுக்கு தேவையான
கருணைக்கும் விடுதலைக்குமாக.
--------------------------------------------------

புதியதோர் வீதி

______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________

நீ எனக்காக
ஓருநல்ல வீதி செய்துதந்திருக்கிறாய்
நீ தெரிவு செய்து அனிந்திருக்கும்
நிம்மதி தருகிற
கௌரவம் தருகிற
அங்கிகளையே நானும் அணிந்து
நீ செய்து தந்த வீதியில்
உன்னோடு வருகிறேன்.

மிகுந்த ஆவல்கள்
ஊட்டப்பட்ட
நமது தோட்டம் இன்னும்
பசுமை துளிர்த்து வருகிறது
நீ தேர்வு செய்த
பாடல்களை பாடியபடி
தோட்டத்தை அடையலாம்.

முதலில் தோட்டத்தில
புசிக்கத்தகாது விலக்கப்பட்ட
கனிகளை
தேடிஅழிப்போம்
நமது சந்ததியின்
அமைதியான வாழ்விற்காய்
ஆரொக்கியம் தரும் நல்ல
கனிகளை உற்பத்தி செய்வோம்.

நமது நாகரீகங்கள்
அழிந்துவிட்டது
என்று நமது
முகங்கள் மீது
கரிபூச சாத்தான்கள்
படையெடுக்கின்றன.

எல்லோராலும்
புறக்கனிக்கப்பட்ட
இரவொன்றில்
மிக அதிகதூரத்தில்
மங்கி எரியும் விளக்கைச்சுற்றி
நமது புத்தகம்
மிகுந்த பற்றுடன்
வாசிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு இராத்திரியிலும்
கூடுகளை அடைந்தபிறகு
வீதியின் பாடலுக்காக
தவமிருக்கும் கால்கள்
உதிர்ந்தும் கிடக்கின்றன
தோட்டத்தின் பசுமைக்காக
காத்திருக்கும் கண்கள்
விழித்தும் கிடக்கின்றன.

நமக்காக எழுதப்பட்ட
புனித புத்தகத்தை
வாசித்தபடி
பயணங்களில்
மிகுந்த அக்கறை செலுத்துவோம்.

உன்னால் திட்டமிடப்பட்ட
வீதிகளின்
இனிய வாசனையுடன்
நீ மூட்டும்
அழகியதோட்டத்தின்
இதமான பசுமையில்
புதியவாழ்வு
பரிசளிக்கப்பட இருக்கிறது
அப்பொழுது
நீ எடுத்து வரும் சூரியவிளக்குகளில்
நமது புத்தகம் வாசிக்கப்படும்
நல்ல கனிகளை புசித்தபடி.
--------------------------------------------------------------

ஊர்திரும்பிய படகுகள்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________

டகுகள் ஊரைப்பிரிந்து
புறப்படத் தொடங்கின
கொலை செய்யப்பட்ட
மீன்களின்
அஞ்சலிக்கூட்டத்திலிருந்து
மீன் கூட்டங்கள்
திரும்பிக்கொண்டிருந்தன.

கடலின் ஆழம்
சுருங்கத் தொடங்கியது
நதிகளின்
சுறுசுறுப்புகளும்
ஓட்டங்களும் காயந்தன.

கடலின் வெளி
அலைகளை இழந்து
தாண்டு கொண்டிருந்தது
மேகங்கள் காய்ந்து
அண்டம் வெளித்தது .

எனினும் மீன்கள்
நீந்தியபடி இருந்தன.

ஊரைவிட்டுப்புறப்பட்ட
படகுகள்
நீரின்றிய கடலின் ஆழத்தில்
தத்தளித்த போது
படகுகளை
மீன்கள் சுமந்து நீந்தின.

மீன்களின் கண்ணீரில்
மீண்டும்
கடல் பாரிய
சமுத்திரம் கொள்ள ஆரம்பித்தது.

படகுகள் ஊர்வந்து சேர்ந்தன
------------------------------------

திங்கள், 8 அக்டோபர், 2007

விசம் நிரம்பிய தேநீர்கோப்பைகள்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


நீ நீட்டிய தேநீர்க் கோப்பையை
உதடுகள் வரை
எடுத்;து வாசித்து விட்டு
எச்சரிக்கையை உணர்ந்தேன்
கோப்பையில்
விசம் நிரம்பியிருந்தது.

நீ தேநீர் பருகவே
என்னை அழைத்தாய்
என்று கருதி
தயாரிக்கப்பட்ட
மாலை நேரம்
இரத்தம் வடிய எட்டிப்போகிறது.
சூரியனில் இரத்தம்
சிந்திக் கொண்டிருக்க
காலைகளை
நானிழந்து விடவும் நேரிட்டது.

தேநீர்க் கோப்பையின்
விசத்தில்
நீ மறைத்து எழுதிய
வாசகத்தை நான் படித்தேன்
சாம்பலில் எழும்பிய
நகரத்தில்
நீ கொடியேற்ற கனவு காண்பதாய்
எழுதியிருந்தாய்.

பயங்கர ஆயுதங்களை
கையாண்டு
எமது நகரங்களை அள்ளி
சவப்பெட்டிகளில்
நிரப்பவும் நினைத்தாய்
எனது குரல் எரிந்து
சாம்பலாகிப்போகும்
அதில் நீ நடந்து வரலாம்
என்றும் நீ நம்பினாய்
நான் அதிக எச்சரிக்கையாக இருந்தேன்.

என்குள் நீ
அடிக்கடி எழுப்பிய
ஒலியின் அதிர்வு
எனக்கென்று ஒரு பாடலை எழுதியது
என் மீது அடிக்கடி நீ
பிரயோகித்த ஒளி
எனக்கென்ற வெளிச்சமாகி
ஒரு திசையைத் திறந்து விட்டது.

நீ காணும்
சாம்பல் நகரம்
பற்றிய அதீத கனவிலிருந்து
உன்னை
தூக்கி எறியவும்
நான் வருகிறேன்
எந்த நிறம்
உதிர்ந்து போகும்
என்று நீ கருதினாயோ
அந்த நிறமே உன்மீது
படையெடுத்து வருகின்றது
எந்த சொற்கள்
சாம்பலாகிப்போகும்
என்று நீ நம்பினாயோ
அந்தச் சொற்களே
உன்னைத்திருக வருகின்றன.

உனது சாம்பல் வண்டி
உதிர்ந்தபடி வருகின்றது.
நான் நன்கு வாசித்த
உனது விசம் நிரம்பிய
தேநீர்க்கோப்பைகள்
நமக்கிடையில்
எரிந்து கிடக்கின்றன.

எனது வண்டி
வெற்றியின் சீருடையை அணிந்து
கம்பீரமாகப் புறப்படுகினறது.
-------------------------------------------------

குருதிவிதிப்பட்ட புன்னகை

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


எனக்கென்று ஒரு
புன்னகை இருந்தது
அது எனது அடையாளமும்கூட.
எனது மகிழ்வும் அழுகையும்
ஊட்டப்பட்ட ஒலியில்
எனது புன்னகை ஒளிர்ந்தது.

இன்னாளில் விலக்கப்பட்ட
புன்னகையாய்
முகத்திற்கு அதிதூரப்படுகையில்
உதடுகள்
பூனையைப்போல
பதுங்கிக்கொள்கின்றன.

எனக்கென்று உரிமையுடைய
வார்த்தைகள் எவற்றையும்
விரித்து வாசிக்கமுடியாது போயிற்று.
நான் என்னை மூடிப்போகிறேன்
வேற்று ஆடைப்போர்வையில்
எனது உருவம் ஒடுங்கியிருக்கிறது.

எனது புன்னகையில்
குருதிதான்வடிகிறது
உதடுகள் உதிர்ந்து
மிதிபட தெருக்கள்
எதையும் கவனிக்காது
மௌனமாய் கிடக்கிறது.

காயப்பட்ட எனது உதடுகளில்
என்னை மீறி
குருதியின் வாசனையுடைய
புன்னகை வெளிவருகிறது.

எனது புன்னகையை
யாரோ களவாடிவிட்டார்களா?
அல்லது எனது புன்னகை
தனது வேருடன் அழிந்துவிட்டதா?
களவாடப்பட்ட எனக்குரிய
ஓலிகளை தேடுகையில்
காற்று தீர்ந்துவிட
கண்கள் இரவாப்போகின்றன.

எனது புன்னகை மிதிபட
எழும் ஒலியை இரசித்து
சக்கரங்கள் உருள்கின்னறன.

குருதியுடன் சம்பந்தப்பட்ட
புன்னகை பிறண்ட
வார்த்தைகள்
தடைசெய்யப்பட்ட காலத்தில்
முகத்தை கழற்றி
ஏறிந்துவிட்டு வருகிறேன்.

ஒருநாள் தெருவெளிக்கையில்
பதுங்கிய உதடுகள்
மீள வந்துசேரும்
எனது புன்னகையியின்
வேர் தளைக்கும்
எனது புன்னகை
வானமாய் விரிந்து வெளிக்கும்..
-------------------------------------------------------------

குண்டு வெடிக்கிறது

--------------------------------------------------------------
எழுதியவர்:தீபச்செல்வன்
---------------------------------------


படையினர் எனது புத்தகத்தை
பறித்து வீசினார்கள்
அது கிழிந்துபோனபடி
சிதறிக்கிடர்ந்த
இராணுவ அதிகாரியின்
உடலில் விழுந்து கறுத்தது.

வெடித்த குண்டின்
கோபமான
அடையாளங்கள் கீறிய
முகத்துடனும் படையினர்
பெண்களை பார்த்து
சிரித்துக்கொண்டனர்
அவர்கள்
செத்துக் கொண்டிருந்தார்கள்.

எல்லா அப்பாக்களும்
வரிசையாக
நிறுத்தப்பட்டனர்
அண்ணாக்களின்
கைகள் கட்டப்பட்டபடி
விசாரனை நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்பாக்களை எண்ணி
துப்பாக்கிகனை
கணக்கெடுத்தார்கள்
அண்ணாக்களை எண்ணி
ரவைகளை
கணக்கெடுத்தார்கள்
இவைகளுடன்
அம்மாக்களின் அழுகைகளையும்
வீடியோக்கள் மூலம்
பதிவுசெய்தார்கள்.

இனந்தெரியாத துப்பாக்கிகளையும்
வெள்ளைவான்களையும்
அறிமுகப்படுத்தி
இராணுவ சீருடைகளை
ஜனாதிபதின் படத்தில்
தொங்கவிட்டார்கள்.

இறந்து கிடந்த
இராணுவ அதிகாரியின்
கருகிப்போன முகத்தில்
படையினர் கூட்டம் போட்டு
அறிவித்தனர்
வெடித்த குண்டின்
விலைகளை சொல்லிக் கொண்டிருந்தனர்.

எல்லோரும் சிதறிய குண்டையே
பார்த்தபடி நின்றார்கள்
இறந்த இராணுவ அதிகாரி
எழுதிய
குண்டு பற்றிய கவிதைகளை
படையினர்
விநயோகம் செய்தனர்
எல்லோரும்
குண்டுகளை தின்றுகொண்டு திரும்பினர்
-------------------------------------------------------

கடவுளின் படுகொலை

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


டவுள் கொஞ்சம் கொஞ்சமாய்
செத்துக்கொண்டிருக்கிறார்
அவரின் கழுத்து
நெரிக்கப்பட்ட பின்பும்
வெள்ளைக் கயிற்றில்
சுருக்கிலிடப்பட்டிருக்கிறார்.

அவர் தான் வளர்த்த
சேடிகளைப்பார்த்து
ஏதோ பேச
ஏத்தனிக்கிறார்
அவரின் கண்கள்
வெள்ளைத் துணியினால்
கட்டப்பட்டும்
ஓளி வெளியில் பீறிடுகிறது
அதில் செடிகள்
மூச்சிடுகின்றன.

இப்போது
யாரோ ஒருவனின்
கறுத்த முகத்தில்
கடவுள் என்று
சிவப்பு மையால்
எழுதப்பட்டிருக்கிறது
அவன் சிரிக்கிறான்
அவனின் பற்களில்
அழுகுரல்கள் காய்ந்து
சொருகியிருக்கின்றன
படிந்திருக்கின்றன.

அவன் செடிகளை
முண்டியடித்து
கடவுளின் முகத்தை
மறைத்தபடி
அவர் மரணிக்கிறார்
என்று கதறி அழுகிறான்
அடியில் சிரிப்பெழுகிறது.

அவனின் முகராசியில்
செடிகள்
பீறிட்டு அழுகின்றன
கடவுளைப்பார்த்தும்
அவனின் முகத்தில்
எழுதப்பட்டவைகளைப் பார்த்தும்.

அவன் குடுமில்
காயாத வேர்களை
முடிந்திருக்கிறான்
வாடாத குருத்துக்களை
வாயில் போட்டு
சப்பியபடி
கடவுள் வளர்த்த
செடிகளை
தொட்டு அழுகிறான்.

எல்லா செடிகளையும்
வேரோடு பிடுங்கி
இனி மயானத்தில் நடுவான்.

கடவுளின் உருவம்
தூரப்படுகிறது
அவரின் ஒளிமட்டும்
மற்றொரு புதிய திசையில்
தனித்துத்தெரிகிறது
செடிகளை சுடலைவாசி
படைத்துக்கொள்கிறான்
தன் வாசத்தில்.
-------------------------------------------------------------

ஞாயிறு, 7 அக்டோபர், 2007

எரிந்த நகரத்தின் காட்சிக் குறிப்பு

----------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________

இந்த நகரத்தில் மட்டும்
ஏதோ ஒரு விதத்தில்
மனிதர்கள
தீர்நதுகொண்டிருந்தார்கள்
தங்கள்பிள்ளைகளை
மரணங்களுக்கு
ஒப்புக்கொடுத்துவிட்டு
புதைந்துபோன தாய்மார்களின்
கண்ணீரில்
எரிந்தநகரம்
சூடேரிக்கொண்டிருந்தது.

கல்லறைகளும்
தகர்க்கப்பட்டு வரும்
அகண்டகாலடியில்
அழிவுகள் முளைவிட்டன
மரணங்களுக்கும்
மரணமளித்து
சுடலைகளும் அழிக்கப்பட்டு
சுடலையாயின.

வீடுகள் சிதைந்து
பயணங்களின்
அடையாளமும் அர்த்தமும்
கிடையாது
சறுக்கி விழுந்துகிடந்தன.
குழந்தைகளின் எலும்புக்கூட்டின்
சாம்பலில் மலர்ந்த மலர்களில்
வெள்ளைக்காகங்கள் வந்து
குந்திக் கொண்டன.

எண்ணிக்கையிலடங்காத
தனிமையில்
நகரம் துடித்துக்கொண்டிருந்தது
கணக்கெடுக்கப்படாத
அழிவின் சீருடைகளை
அணிந்த எண்ணற்றவர்கள்
எரிந்து முடிந்த நகரத்தை
படையெடுத்து
வந்து சேர்ந்தனர்.

பிய்ந்து அழிந்துபோன
கூடுகளை
தாங்கிய பட்டமரங்களின்
நிழலில்
எரிந்து கருகிய
மனிதர்களின் சாம்பல்கள்
அடுக்கப்பட்டிருந்தன.

சிறகுகள் கிழிந்து
தொங்கிக்கொண்டிருக்கவும்
தீர்ந்துவிடவும்
பறவைக்கூட்டங்களில் எஞ்சியவை
நகரின் மரங்களை இழந்து
எங்கோ?
தொலைந்துகொண்டிருந்தன..
------------------------------------
20.07.2007
------------------------------------------------

கிராமங்களின் பாடல்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


கரங்களில் கேட்பதில்லை
கிராமங்களின் பாடல்
குடிசை முகத்துடன்
கிராமங்கள்
நீண்டுகொண்டு போயின
அங்குதான்
காற்று வசிக்கிறது.

புதுமைகளை
நாகரிகங்களை
ஆதியில்
கிராமங்களே பிரசவித்தன
கிராமங்களின் ஜீவனில்
நகரங்கள் நடமாடின
கிராமங்களின் செய்தி
எங்கும் கேட்காமல்
குடிசையில் மண்டிக்கிடக்கிறது.

நகரங்களில்
வருத்தங்கள் மனிதரோடு
உலவுகின்றன
மின் கம்பங்களின் சுற்றில்
மனிதர்கள்
நிம்மதியை தொலைத்து
திரிகிறார்கள்.

கிராமங்களில் விளக்குகள்
நிரம்பிய குடிசைகளில்
இருள் நிரம்பிய
புத்தங்களின் குரல்கள்
தேங்கிக்கிடக்கின்றன.

நாகரிகங்கள்
மனிதரை
கருனையை
கொன்று தீர்த்தன.

கிராமங்களிடம்
நதி இருக்கிறது
நதியின் தாகத்திற்கு
கிராமம் அருக்கிறது
நதியைப்போல ஆறுதல் இல்லை
நதி தாயைப்போல
கிராமங்களை வளர்த்தன

கிராமங்கள்
மனிதர்கள்
நாகரிகங்கள்…எல்லாம்
நகரங்களாகியபோது
கிராமங்கள் துரத்தப்பட்டன.

நைல் நதியை விடவும்
குவாங்கோ நதியை விடவும்
எனது நதி மேலானது.

படையெடுத்து பெயர்க்கப்பட்ட
நதிக்கிராமங்களைப்போல
எனது கிராமம் விழுங்கப்படக்கூடாது.

கிராமங்களின் விடுதலை இருள்
கிராமங்களின் அமைதி நிழல்
கிராமங்களின் வலிமை ஒளி
கிராமங்களின் வெள்ளை பசுமை
எல்லாவற்றிலும்
எனது தோற்றம் பிணைந்து கிடக்கட்டும்
நதியில் பசியாறலாம்.

பசுமை வழியும்
கிராமத்தின் முகத்துடன்
நமது ஆயுள் தீரும் வரை
பசியாறுவோம்
கிராமங்களின் தெருவில்.
---------------------------------------------------

மனிதர்கள்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


பூமியின் இருட்டில்
ஒரு துளிவெளிச்சம்
எஞ்சிக்கிடக்கிறது
நீயும் நானும்
பகிர்ந்து கொண்ட
முத்தத்தின் ஒரு துளி அது.

இரவுக்குள்
ஒரு சூரியனைப் போல
பிரகாசிக்கிறது
அந்த துளியில்
நமது வாழ்வு
துர்ந்து கிடக்கிறது.

நமது நெருக்கங்களும்
வார்த்தைகளும்
கலந்து கிடக்கின்றன.

நாம் நமது
மகிழ்ச்சின் துளியை
தியாகம் செய்ய துணிவோம்.

நமது பிரிவு பூசிய
அந்த துளியில்
வெளிச்சம்
எல்லோருக்குமாக
புறப்படுகிறது.

ஏப்பொழுதும் போல
நாம் இரவாக இருப்போம்
நமது துளியில்
எப்படியோ
சூரியன் கூடு கட்டியிருக்கிறது.

விளக்குகளுக்காக
மனிதர்கள்
தவமிருக்கிறபொழுது
இருட்டில் விளக்குகள்
தொலைக்கப்படுகிற பொழுது
நாம் நமது
முத்தத்தின் துளியில்
மண்டிக்கிடர்ந்து
பிரகாசிப்போம்.
--------------------------------------------

வயிறுதீர்ந்த பசியில்A-9

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


ஒட்டிய வயிறுகளுடன்
தேசிய நெடுஞ்சாலையின்
ஆடர்ந்த
இராணுவ சருகுவெளியில் நின்று
ஆறுலட்சம் பேரும்
பசிக்கிறது என்றார்கள்.

ஆக்கிரமிப்பு பசிக்காக
வுpரதமிரந்தவர்கள்
பசியின் அழுகையையும்
பலவீனத்தையும்
தராசில் நிறுத்தி
வயிற்று வெளிகளுக்கு
விலைபேசினார்கள்.

ஆறுலட்சம் மக்களின்
மோத்த பசியின் கீழ்
இராணுவ பாதுகாப்பும் தீர்வும்.

ஏக்கங்கள்
அழுகைகள்
மரணங்கள்..என்று
பசிக்கான கட்டணத்தை
செலுத்தியபடி மக்கள்
வயிறுகளின்றி தீர்ந்து
உணவு கேட்டனர்.

யாருக்குப் பசிக்கப்போகிறது.

பசியில் துடித்து
வெறுமையை நிரப்பி
வயிறு முட்டியவர்களுக்கு
தீர்வின் தலைநகரத்திலிருந்து
பசியாற்றும் பாடல்
வெளியிடப்பட்டது.

நகரில்லை..
தெருவில்லை..
வீடில்லை..
உணவில்லை..
பசியின் அடியில்
சிருஸ்டித்து
சித்திரவதைக்குட்பட்ட
வாழ்வு
நசிங்கி மறைந்தது.

துப்பாக்கிகளாலும்
இராணுவ சீருடைகளாலும்
செய்யப்பட்ட
பயங்கர நகரத்தில்
பசி நிரம்பிய வயிறுகள்
காட்சிக்காக
வைக்கப்பட்டன.

பசியின் அழுகையில்தான்
அவர்களது
பாதுகாப்பும் இருப்பும்
அதன் நிழலில்
ஒட்டிய வயிறுகளை
இராணுவ தீர்வால் ஊதி
பசி போக்கிவிட்டு
பன்னகையால்
பதிலளிக்கிறது
அவர்களின் நகரம்.
--------------------------------------

வியாழன், 4 அக்டோபர், 2007

சாத்தியங்களற்ற நீட்சி

_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________


நான் நேசிப்பவைகள்
உனக்கு
விரோதமானவை
நீயும் நானும்
இணையும்
சாத்தியங்கள்
அகராதியில் இல்லை.

அப்படியென்றால்
நமக்கான
சம்பந்தம் பற்றிய
பிரயத்தனங்கள்
வீணானவைதானே.

இதில் நாமிருவரே
நிதானித்து
முடிவெடுக்கவேண்டும்.

என்னை சிறையிலும்
உன்னை வெளியிலும்
அடைப்பித்து
அவைகளை
நரகத்தில்
நடமாடவிடும்
அவர்களின்
கலாசாரம் பற்றி
நாமே கவலைப்படுகிறோம்
அவர்களல்ல.

உன்னுடைய
ஒப்புதலுக்காக
நான் உடன்பட்டேன்
எதிர்ப்புகளிலும்.

சரிஎன்று
எத்தனை தடவைகள்
சமாளிப்பது
இது இறுதியான
நாம்பற்றிய
பார்வையாயிருக்கட்டும்.

இதில் நீயும் நானும்
உறுதியாய்
இருப்போம்.

பயனற்ற பயணத்தில்
நடந்துகொண்டதால்
உனக்கு கால்கள்
வலிக்கிறது.
உள்ளே இருந்து
துயரங்களை
தின்றதனால்
எனக்கு உள்ளம்
வலிக்கிறது
ஆக வதைப்புகள்
நமக்குத்தானே.

என்னுடைய
காத்திருப்புகளும்
உன்னுடைய
ஏமாற்றங்களும்
இனி நிச்சயம்
எதிர்த்துக்கொள்ளவேண்டும்
பொங்குதலாய் அவைகளில்.

அதனால் அடுத்து
நீ சிறைப்படு
நான்
விடுதலையடைகிறேன்.
-----------------------

ஒற்றைகையின் குறிப்பு

_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________


உனது முகத்தை
நான் பறிகொடுத்துவிட்டேன்
பதுங்குகுழியின்
அழுகையின் ஓரத்தில்
உனது புன்னகை
எறிந்து கிடக்கிறது.

பதுங்கு குழிக்காக
எல்லோரும்
நிலத்தை அளவெடுக்கிறார்கள்
அதன் இன்றைய
பொய்மையில்
உனது தோற்றம்
சிதறி கிடக்கிறது.

உனக்கு ஒரு விமானம்
உனது தம்பிக்கு
ஒரு விமானம்
ஆளுக்கு நான்கு குண்டுகள்
மொத்தம்
இருபது குண்டுகளுக்கு
உனது குடும்பம்
பதிலளித்திருக்கிறது.

நீ ஒரு மாணவனாக
இருக்கலாம்
உன்னோடு
உனது வெள்ளைச்சீருடை
புத்தகங்கள்
பேனாக்கள் மீதெல்லாம்
உனது இன அடையாளத்தின்
அடிப்படையிலேயே
குண்டு வீசப்படும்.

தேசிய பாதுகாப்பு
என்கின்ற அட்டவணையின்
வரிசையில் இன்று
நீஇ உனது குடும்பம்
தெரிவுசெய்யப்பட்டு
அழிக்கப்பட்டிருக்கிறது.

இனி நீ அணிந்திருந்த
வெள்ளை சீருடையும்
வைத்திருந்த புத்தகங்களும்
மறைக்கப்பட்டு
ஆயுதம் தரித்திருந்தவனாகவே
கருதப்படுவாய்
உனது வீட்டினுள்ளிருந்து
அவர்களின் தேசிய பாதுகாப்பை
அச்சுறுத்தும்படி
நடமாடியவனாகவே
பார்க்கப்படுவாய்.

உனது அப்பாவித்தனமான
குருதியை திருகி
குடித்து
ஏப்பமிடுகிறது
அதிகாரம் தங்கிய
ஜனநாயகம்.
-----------------------------------------

ஒற்றை கையின்குறிப்பு

_____________________________

எழுதியவர்:தீபச்செல்வன்

_____________________________


உனது முகத்தை
நான் பறிகொடுத்துவிட்டேன்
பதுங்குகுழியின்
அழுகையின் ஓரத்தில்
உனது புன்னகை
எறிந்து கிடக்கிறது.

பதுங்கு குழிக்காக
எல்லோரும்
நிலத்தை அளவெடுக்கிறார்கள்
அதன் இன்றைய
பொய்மையில்
உனது தோற்றம்
சிதறி கிடக்கிறது.

உனக்கு ஒரு விமானம்
உனது தம்பிக்கு
ஒரு விமானம்
ஆளுக்கு நான்கு குண்டுகள்
மொத்தம்
இருபது குண்டுகளுக்கு
உனது குடும்பம்
பதிலளித்திருக்கிறது.

நீ ஒரு மாணவனாக
இருக்கலாம்
உன்னோடு
உனது வெள்ளைச்சீருடை
புத்தகங்கள்
பேனாக்கள் மீதெல்லாம்
உனது இன அடையாளத்தின்
அடிப்படையிலேயே
குண்டு வீசப்படும்.

தேசிய பாதுகாப்பு
என்கின்ற அட்டவணையின்
வரிசையில் இன்று
நீஇ உனது குடும்பம்
தெரிவுசெய்யப்பட்டு
அழிக்கப்பட்டிருக்கிறது.

இனி நீ அணிந்திருந்த
வெள்ளை சீருடையும்
வைத்திருந்த புத்தகங்களும்
மறைக்கப்பட்டு
ஆயுதம் தரித்திருந்தவனாகவே
கருதப்படுவாய்
உனது வீட்டினுள்ளிருந்து
அவர்களின் தேசிய பாதுகாப்பை
அச்சுறுத்தும்படி
நடமாடியவனாகவே
பார்க்கப்படுவாய்.

உனது அப்பாவித்தனமான
குருதியை திருகி
குடித்து
ஏப்பமிடுகிறது
அதிகாரம் தங்கிய
ஜனநாயகம்.
-------------------------

புத்தரின் புதல்வர்களுக்கான கோடுகள்

_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________

புத்தரின் புதல்வர்களும்
நாங்களும்
அழைக்கப்படுகிறோம்
வெள்ளைபுத்தகங்களை
ஓதுவதற்கு.

ஏற்கனவே
புத்தரின்புதல்வர்கள்
சில புத்தகங்களை
வாசித்திருக்கிறார்கள்
அவைகள்
இனித்திருக்கின்றன
நாங்கள் அவைகளோடு
வேறு சிலபுத்தகங்களையும்
வாசித்திருக்கிறோம்
அவைகள்
திடமாயிருந்தன.

நாங்கள் இருசாராரும்
வெள்ளைபுத்தகங்களின்
கோடுகளை
வாசிக்கவேண்டும்.

வெள்ளைபுத்தகங்களின்
கோடுகளின் வழிகளை
அவர்கள் விசே~மாக
அளந்து பார்க்கிறார்கள்
அந்தக்கோடுகள்
அவர்களுக்கு
புதிதாயிருக்கின்றன
வேறுசிலகோடுகளையே
அவர்கள் அறிந்திருக்கிறார்கள்

முன்பெல்லாம்
இந்த கோடுகள்குறித்து
நிறையவே புத்தருடன்
பகிர்ந்திருக்கிறோம்
நிறையவே புதுமையான
கோடுகள் போட்டும்
காட்டியிருக்கிறோம்
புத்தர் அவைகளை பற்றி
அடிக்கடி தன் புதல்வர்களுக்கு
கற்பித்திருக்கவேண்டும்

திரும்ப புத்தரை
கூப்பிட்டு
கோடுபோட்டு காட்டுவோம்
அவர் தன்புதல்வர்களுக்கு
புத்திகூறட்டும்.
------------------------------
மீள்எழுத்து:கனையாழி।2006செப்ரம்பர்.
_____________________________________

இறுதி விருந்து

_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________

நாம் திருப்தியுடன்
எழுந்து போவதற்கான
நேரம் வந்துவிட்டது.

வெளியிட மறுக்கப்பட்ட
இரவின்
விருந்தொன்றில்
நாம் மீண்டுமொருமுறை
சந்தித்திருக்கிறோம்
சிறப்பாக பகிரப்பட்ட
இறுதி உணவில்
நமது விருந்தின் மேசைகள்
இரண்டான திருப்தியுடன்
சொருகிய கைகளை
இழுத்துக்கொள்வோம்.

உனக்கான நேரம்
முடிவடைந்துவிட்டது
உனது இருதயத்தை
திறந்து
உன்னை வெளிப்படுத்தி
பேசவும்
கேலிசெய்யவும்
உனது சுயம் புறப்படவும்
உனது முகம்
திறந்து விடப்படுகிறது.

எந்தத் தெருவும்
உரிமையற்ற காலத்தில்
கைகளை
சொருகியிருக்கிறோம்
கை குலுக்கியிருக்கிறோம்
அள்ளிப்பறித்த
சுதந்திரங்களை
நீ வீசிவிட்ட
துரோகத்துடனும்
பகமையுடனும்
நாமாக போவதற்குத்தயாரில்லை.

வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில்
கசப்பையும்
வெறியையும்
பரிமாறிய திருப்தியில்
விருந்தை தகர்த்து
எழுந்து கொள்வோம்.

முரண்பட்ட இரவினை
புதைத்துவிட்டு
ஒரு விடிகாலைப்பொழுதை
உருவாக்க முயல்வோம்
விளக்குகளை
அணைத்துவிட்டு
அருளும் முகங்களை
சூரியனை உரிப்பதன்
ஒளியில் காட்டுவோம்
நமக்குள்
ஒரு வெண்மையின்
இருப்பும் வலிமையும்
வெளித்தெரியும்.

இருப்பை கண்டுபிடிக்கவும்
வெளியிடவும்
கைகளை இலவகமாக வீசுவோம்.

பாதைகளை
பிரி;ததெடுத்துக்கொண்டு
நமக்குரிய பயணங்களை
தீர்மானித்தபடி
புறப்பட தயாராகுவோம்.

விருந்துகளை கைவிட்டு
எழுந்து கொள்வோம்..
---------------------------

மரணத்துள் வாழ்வோம்

_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________

நாங்கள் எல்லோரும்
மரணங்களைச் சுமந்தே
வாழ்கிறோம்
எனது அப்பாவின் மரணம்
மர்மமானது
எனது அக்காவின் மரணம்
பரிதாபமானது
மரணங்களுக்குள்
நீதியை சமன்செய்த
எனது அண்ணாவின் மரணம்
மகத்துவப்பட்டு வாழும்
மற்றொரு விதமானது.

எல்லோரும் மரணங்களைச்
சுமப்பது
அந்நியக்குணங்களின்
கறுப்பாக்கப்படுதலுக்கான
தேசத்தின் மீதான குறி.

மரணங்களில் சிலர்
வாழ்கிறார்கள்
அந்த ஒவ்வொரு
மரணங்களிலும்
ஒரு சுதந்திர உலகம்
நிகழுகிறது
வேறுபக்கத்தில்
சமிக்காது தேங்கியிருக்கும்
அழுகைப்பட்ட
மரணங்களின் மொழிகளை
சுவைத்துப் பார்க்கிறேன்
அவைகள்
மரணங்களின் விதிகளை
நொந்து அழுகின்றன.

நானும் சுயக்கல்லறையில்
மரணித்து வாழ்கிறேன்
பிணமாகி
உதிராதபடி நடமாடுகிறேன்
கிழித்துப்பறிக்கப்பட்டு
கறுப்பாக்கப்படும்
அதே தேசத்தில்.

அந்நிய முகங்களின்
கோரப்புன்னகைகளை
வலிந்து
சுவைக்க இயலாமலும்
அதிகாரக்குரல்களை
சமிக்க இயலாமலும்
இறுகியிருக்கிறது
ஆன்மாவின் இயக்கம்.

இப்போது வலிந்து
எம்மீது சுமத்தப்பட்ட
மரணங்களை
தொடர்ந்தும் யாரும்
தலையில் சுமந்து
போகக்கூடாது
பொதுமைப்பட்டு
பரவமுனையும்
வலியின் கோரகுணத்தை
திருக பாரம் தரும்
விதிப்பட்ட மரணங்கள்
மற்றொரு விதத்தில்
நிகழட்டும்
எங்களுக்கே உரிய
சுதந்திர உலகத்தை விரித்து.
---------------------------------------

செவ்வாய், 2 அக்டோபர், 2007

சவம் நிரம்பியபுத்தகபைகள்

_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________


பள்ளிக்கூட மாணவர்கள்
வெள்ளை சீருடைகளை
அணிந்து
நண்பர்களை
நிரப்பிய
சவப் பெட்டியுடன்
மயானங்களை நோக்கி
போய்க் கொண்டிருந்தார்கள்

புத்தகங்களை
சோதனைச்சாவடியில்
விரித்தும்
முகாங்களில்
ஒதுக்கியும்
சீருடைகளை
முட்கம்பிசுருள்களில்
உலரவிட்டும்

பள்ளிக்கூடங்கள்
இராணுவ முகாம்கள் என்று
அறிவிக்கப்பட்டது
இராணுவ சீருடைகளுக்கு
கீழேயும்
துப்பாக்கிகளில் அமர்ந்தும்
பரீட்சை எழுதும்படியும்
அறிவிக்கப்பட்டது

பள்ளிக் கூடங்கள்
சிறைச்சாலையாகவும்
துப்பாக்கி கதவுகளை தாண்டி
வருபவர்களும் அஞ்சுவர்களும்
புத்தகத்தின் நடுப்பக்கத்தை
தாண்டாதவர்களும்
சீருடைகளால் கட்டி
தகர்க்கப்பட்டனர்.

முட்கம்பி ஓடைக்குள் நின்று
மாணவர்கள்
அழுதார்கள்
ஆசிரியர்களும்
சவப்பெட்டியை நினைத்து
திடுக்கிட்டார்கள்

ஆசிரியர்களும்
மாணவர்களுமாய்
துப்பாக்கிகளின் முன்
அணிவகுத்து நின்றார்கள்
இராணுவ சீருடையின் பின்னணியில்
விழுத்தப்பட்ட ஒளிப்படத்துடன்

சவத்தை நிரப்பிய
புத்தக பைகளுடன்
மயானங்களை முதலிய
பள்ளிக்கு மாணவர்கள்
தோள்களை சுமந்தார்கள்
----------------------------------------------------------

நீயும் நமதுகுழந்தைகளும்

_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________

எனது பிள்ளைகளும்
அழுகிறார்கள்
உனது பிள்ளைகளும்
அழுகிறார்கள்
நமது குழந்தைகள்
நமது தோள்களின்
பயங்கர வெளிக்குள்
நித்திரையின்றி திரிகிறார்கள்.

முற்றங்களுக்காக எல்லைகளுக்காக
வெளிகளுக்காக
முகங்களை பகிர்வோம்

நாம் புன்னகைக்காலம்
எனக்கும் புன்னகை மீது
மொய்ப்பதே விருப்பம்
உனக்கும் கூட என்கிறாய்
நாம் நாமாக
புன்னைகக்க வேண்டும்
அதற்காக
முதலில் நமது முகங்களில்
வழியும் பயங்கரத்தை
துடைப்போம்

யார் முதலில்
பயங்கரத்தை துறப்பது என்பதில் கூட
நமக்குள் இழுபறியும் பிடியும்.
பயங்கரத்தின்
முரண்களுக்குள்
நமது குழந்தைகள்
புதைந்து போகிறார்கள்.

உனக்கும் எனக்குமான
வெளியின் பயங்கரத்தில் உலவும்
நமது குழந்தைகள்
முற்றங்களை குழப்பிவருகிறார்கள்.

இப்போது நமது
மௌனத்திலும் பயங்கரம்
பாய்ச்சி வழியவிடுகிறோம்.

குழம்பிய நித்திரையில்
நமது குழந்தைகள்
தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளார்கள்
அவர்கள் எழும்பியதும்
நாம் பதில் கூறவேண்டும்
அவர்கள்
நமது விரல்களைத்தான்
நோக்கப் போகிறார்கள்

அவர்களுக்காக நம்மிடம்
என்ன பதில் கிடக்கிறது?
பயங்கரத்தை தவிர
எதையும் குழப்பதேவையில்லை
பயங்கரத்தை கூட
பகிரத் தேவையில்லை
முற்றங்களை
விழுங்காமல் இருப்போம்

நமது குழந்தைகளின்
வீடுகள் சிதையாமலிருக்க வேண்டும்
பயங்கரமில்லாத
ஒரு முற்றம்
அவர்களுக்கு அவசியம்.
----------------------------------------------------------

ஒளியின் சுவடு

_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________


ஒளியை நோக்கி இருட்டில்
கண்ள் படையெடுக்கின்றன
பூமியில் இருள்
முளைக்கத்தொடங்கியது
மண்ணின் இருளுக்குள்
இருளின் வேருக்குள்
தளைத்த பாரிய மரங்களில்
அரும்பிய
இருள் பழங்களை
புசிக்க முடியாது
கைகள் தடுமாறி அலைந்தன.

விபத்துக்களில் மோதி
தலைசிதரிய
பயணங்களின்
முதலாவது அடியெடுப்புக்கள்
தோழ்வியின் மீது மீளமீள
படித்து கொண்டிருந்தது.

எங்கேனும் தெரிகிற
ஒருதுளி வெளிச்சத்திற்காக
கண்கள் அடியெடுத்துவைக்கமுடியாத
இருளின் இடஞ்சலுக்குள்
கொலை செய்யப்பட்ட
மின்மினிகள்
ஒளியின் ஆதாரமற்று
தரையில் புதைந்துகிடந்தன.

மின்மினிளின்
துணையிலாவது
வீட்டை அடையாளம்
என்ற நம்பிக்கை
மின்மின்களின் சிறகுகள் மீது
உக்கிக் கிடந்தது.

கனவுகளில் வருகிற
ஒளியை நெருங்க
நினைகையில்
மறைந்து போகிற
மெழுகுவர்த்தியில்
அணிவகுப்புக்களில்
கனவின் ஒளி உருகிக் கொண்டிருந்தது.

ஒளியின் சாஸ்திரங்கள்
சாலை ஓர கால்வாய்களில்
அசிங்க இருட்டில்
போப்பட்டிருக்க
கண்ககள் கறுப்பாகின
வெள்ளை மனிதர்கள்
கறுப்hக்கப்பட்டனர்.

ஒளியை மிச்சம் வைக்காது
ஒளியை சேமிக்காது
விரயம் செய்தவனை
ஏசிக்கொண்டிருந்தது தெரு.

எனினும் கால்கள்
இருட்டை மோதி
முன்னேறிக் கொண்டிருந்தது.

நெருப்பின் சுவடு
அழிந்துவிட்டது என்னுருனைக்கையில்
ஒரு முதியவர்
பூட்டப்பட்ட கடையின்
தாழ்வாரத்திலிருந்து
புகைவிட்டுக் கொண்டிருந்தார்।

விளக்குகள் தீர்ந்தது என்று நினைக்கையில்
மிகவும் நினைவு கூரப்படுகிற
ஒரு கல்லறை மீது
விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
----------------------------------------------------------

சனி, 22 செப்டம்பர், 2007

விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
------------------------------------------------------------------

இது வாகரை இடப்பெயர்வு

-----------------------------------------------------------------------------
தண்ணீரில்லாத
வரண்ட காடுகளில்
இறப்பர் கூடாரங்களில்
புதிய குடியிருப்புகள்
எழும்பியிருந்தன.

மிகவும் ஆழமான
குழாய்க்கிணறுகளில்
தாகத்தைச் சொல்லிச்சொல்லி
பெண்களும் சிறுவர்களும்
தண்ணீரை மீட்கிறார்கள்.

பொருட்கள் எதுவுமில்லாத
கொட்டில் கடைகளில்
சிறுசிறு போத்தல்களில்
காய்ந்த இனிப்புகள்
விற்பனையற்றுக்கிடந்தன.

தொழில் இல்லாமல்
உழைக்க வேண்டிய ஆண்கள்
தாடி வளர்ந்து முகத்தை மறைக்க
மூலைகளில்
சோர்ந்து கிடந்தனர்

பிள்ளைகள் பசியில்
அழுதுபடி இருந்தார்கள்
நிறைய கூடாரங்களில்
அடுப்பே இல்லாதிருந்தன.

வாழ்விடங்களும் தொழில்களும்
விடுவிற்பதற்கான
நடவடிக்கையில்
பறிக்கப்பட்டு
இவர்கள் துரத்தப்பட்டிருந்தனர்

அவைக்குள்ளும்
புழுதி பிரண்ட
வெள்ளைச் சீருடைகளுடன்
கிழிந்த புத்தகங்களை
சுமந்து கொண்டு
பிள்ளைகள்
மர நிழலில் ஒதுங்கினர்.

அநாதைகளாக்கப்பட்டவர்கள்
அங்கவீனமாக்கப்பட்டவர்கள்
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்
புழுதியில் உருண்டு
புலம்பிக் கொண்டிருந்தனர்

இராணுவ வண்டிகள்
உறுமிக் கொண்டிருந்தன.
ஊர்களும் மனிதர்களும்
இராணுவ அணிகளில்
புதைக்கப்பட்டு வர
அழிவின் சீருடையில்
இன்னும் நிலங்கள்
விடுவிக்கப்படுமென்று
அறிவித்து
இலங்கைத்தேசியம்
சிரித்தபடி வந்து கொண்டிருந்தது.

இந்தச்சுமைகளை
தலையில் சுமந்து கொண்டு
இன்னும் எவ்வளவு தூரம்
இடம் பெயர்ந்து ஓடுவது.
--------------------------------------------

வெளிக்குநகரும் மரங்கள்

_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________

எந்த மரங்களும் எனது கையில்லை.
நிழலுக்கான அதிகாரங்கள்
பறிபோன நிலையில்
தோப்பைவிட்டு
நான் துரத்தப்பட்டுவிட்டேன்.
எனினும் அந்த மரங்களிலேயே
எனது இருப்பும் ஆவலும்
மொய்த்துக்கொண்டிருக்கின்றது.

நான் எதுவும் செய்யாதிருந்தேன்
நிழலில்லாத
வெம்மை வெளிகளில் காலை
புதைத்தபடி நிற்கின்றேன்.

தூரத்திலிருந்து தோப்பைப் பார்த்து
மனதாறிவிட்டோ
நிழலை ரசித்துவிட்டோ
வாழமுடியாதிருக்கிறது।

ஒவ்வொரு இரவிலும்
ஒவ்வொரு மரமாக
குறைந்துகொண்டு வருகிறது।
எனது மரங்களின் உயிர் குடிக்கப்பட்டு
கட்டைகளாகத் தகனம் செய்யப்படுகின்றன.

நான் எந்த மரங்களையும்
நாட்டாதவன்
அந்த மரங்களுக்கும்
நீர் ஊற்றாதவன்

எனக்காக வழங்கப்பட்ட மரங்களே
பறிபோய் அழிகிறபொழுது
கோடரிகளைத் தடுக்க இயலாதவன்.
அப்படியாயின் எனக்கு
வெம்மை தானே பரிசளிக்கப்படும்.
நிழல்தீர்ந்த எரிந்த காட்டின்
தணலில்தான்
நடக்கவிடப்படுவேன்.

நாளைக்கு எனது பிள்ளைகள்
நிழலுக்காகத் துடிக்கிறபொழுது
நான் எந்தத்தோப்பின் வாசலில் நிற்பேன்
யாரிடம் நிழலுக்குக் கையேந்துவேன்.
என்னால் அவர்கள் அலையப்போகிறார்கள்
அவர்களின் தலை
நிழல் இன்றி கருகிற பொழுது
இந்த வெம்மையையா வைத்து
குடைபிடிக்கப்போகின்றேன்

கோடரிகளை மீறி
என்னைக் கடந்து
மரங்கள் வெளிக்கு நகர்கின்றன.
---------------------------------------------------------

வியாழன், 20 செப்டம்பர், 2007

நமது நிறம்...

_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________

எல்லோரும் நமக்கென்று
இருக்கிற நிறங்களை
காத்துக்கொள்வோம்.

எனது வீட்டின்முற்றத்தில்
உருண்டு கிடக்கையில்
எனது நிறத்தால் மகிழ்கிறேன்
எனக்கு எனதுநிறம்
மிக முக்கியமானது
எதற்காகவும் எனது நிறத்தை
இழக்க தயாரில்லை.

எல்லோரும் அவரவர்
நிறங்களை
தங்கள் சிறந்தவண்டிகளில்
ஏற்றிப்போகிறார்கள்
நான் எனது நிறத்தை
அள்ளிச் சுமந்தபடி
கால்நடையாக பயணிக்கிறேன்.

யாருடைய நிறங்களையும்
அழிப்பதற்கு
நான் புறப்பட்டதில்லை
எனது நிறத்திற்காக
அழுதிருக்கிறேன்
விழித்து எழுந்திருக்கிறேன்.

எனது நிறம் மறைக்கப்படுவதான
பிரகடனங்களும்
வலிந்த தலையீடுகளும்
எனது நிறம்பற்றிய
வெள்ளை சிந்தனைகளை
எனது நிறத்தின் ஆயுளை
துரத்தி சிலகோடுகளாக திரிந்தன.

நிறம் பற்றிய வாதங்கள்
முற்றியநாளில்
தெருவொன்றில் சிதைந்துகிடந்த
எனது நிறத்தின் ஆதியை
தூக்கி சுகப்படுத்த
வண்டியற்று திரிந்த
வலியின் சுமையில்
நிறம் வெறிகொள்ளத்தொடங்கியது.

நிறங்களின் மிகுந்த வறுமையோடு
திரிகிற வண்ணத்துப்பூச்சிகளாலும்
மான்களாலும்
மயில்களாலும்
நிரம்பிய வெளுத்த தோட்டத்தில்
நிறம் பற்றிய
புதிய நிமிர்வு நெருப்பில் பிறந்தது.

நிறத்தை வென்று
நமக்கென்ற
நிறத்துடன் ஒளிர்கையில்
மீண்டும் நமது வெல்லப்பட்ட
நிறம் தேடப்படுகின்றுது
நிறத்தை பூசியபடி
நிறத்தை உடுத்தியபடி
நிறத்தை அள்ளிச்சாப்பிட்டபடி
போகமுடியாமல் இருக்கிறோம்.

நாம் நமது நிறத்தை
விடுத்து
இருளாக நடமாடமுடியாது
நமக்கென்ற
நிறத்தை அணிந்தபடியே
நமது அடையாளத்தின்
ஒளியிலே
தெருக்களில் நடமாடுவோம்।
---------------------------------------------------

முகமில்லாத மனிதன்

_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________

முகமில்லாத மனிதனின்
புன்னகை
அந்த இரவுக்குள்
தொலைந்துகொண்டிருந்தது.

இது வேறுஒரு செயற்கை இரவு.

முதலில் இரவை சிறைவைத்தார்கள்
பிறகு இரவாய் நாளை
சிறைவைத்தார்கள்
பிறகு நாட்டை சிறைவைத்தார்கள்
இந்த செயற்கை இரவு
காலத்தை படர்ந்து
விழுங்கிக்கொண்டிருந்தது.

இனந்தெரியாத துப்பாக்கிகளும்
வெள்ளை வான்களும்
இராணுவ முகாம்களும்
மனிதர்களை இந்த இரவில்
தேடித்திரிய தொடங்கியது.

இரவில் முகங்கள் புதைந்தன.

மரணத்தை ஊதி பெருப்பித்து
அழுகைகளை நிரப்பி
இரவால் நாடு செய்தார்கள்.

இரவின் தெருவில்
நிதானமற்று எல்லோரும்
அலையத்தொடங்கினோம்
அடங்கிப்போய்
இருட்டில் அடைந்தோம்.

இரவு இன்னும் ஆக்கிரமித்தது.

இருட்டில் எழுதி
இருட்டில் கேட்டு
இருட்டில் திருகி
இருட்டாகி போகிறது
முகங்களும் புன்னகையும்.

இரவுக்காக ஒருவன்
அழுதுகொண்டிருந்தான்
இரவும் அழுதுகொண்டிருந்தது.

வெளிகளின் உயிர்த்தெழுகைபற்றிய பிந்திய பாடல்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
01
நான் மீட்டும் இசை
நிலவு தென்னைமரம்
மணல் கும்பி இவைகள்
நிரம்பிய நகரத்தில்
ஒலித்துக்கொண்டிருக்கும்
காலத்தை நீ வெளியிட
மறுத்த பிறகு
எனது புல்லாங்குழலின் இசை
அடந்த இரவில்
தடுமாறிப்போகிறது.

02
வெளிகள் நோக்கிய
தருணம் ஒன்றில்
நானும் தோழர்களும்
தயராகிறோம்.

03
ஆனாலும் நான் இனி
உன் நிழல் தேடி வரமாட்டேன்
உனது இசை தீர்ந்த
நிழலில்
பயங்கரமும் துரோகமும்
நிரம்பி வழிகின்றது.
அமைதியின் வேரை
உன்னில் தொலைத்த பிறகு தான்
அசுரநிழலில்
நீ இசைத்த பாடலின்
அர்த்தம் உணர்ந்தேன்.
முகமில்லாத
இரவுகளில் தான்
உனது பாடலை கேட்டு
திரியமுடிகின்றது।

04
நீயும் நானும்
ஆதியில் சந்தித்துக் கொண்ட
தெருக்களெல்லாம்
விகாரமுற்று
தொலைந்து விட்டன.
நாம் சந்தித்த
சருகு வெளி கதைகளையெல்லாம்
புதைத்து விட்டு
ஏத்தனை முறை உயிர்த்தெழுந்தேன்
ஓவ்வொரு தருணத்திலும்
ஊன்னை புதிய குணமாய்
எதிர்பார்த்தேன்
நீ மாறவே இல்லை
பயங்கத்திலும் துரோகத்திலும்

05
இப்போது இந்த நகரம்
புதிதாக கட்டப்பட்டது
நாம் முன்பு கூடிக்கொண்ட
நகரங்களைப்போல இது இல்லை
உனது நிழலை
எதிர்பார்க்க சந்தர்ப்பம் இல்லை
புல்லாங்குழலின்
இசையின் சூழல்
நகரத்தின் அடியில் கிடக்கின்றது
நீயும் நானும்
புதைந்த அந்த அழகிய
இசையின் சூழலை
மீட்டெடுக்கவும் முடியும்
அதற்காக நீ சிறகுகளோடு
வருவாய் என்றே
ஒவ்வொரு தருணத்திலும்
நான் எதிர்பார்த்திருந்தேன்
ஆனால் அந்த
இடைவெளியில்
எனக்கு முளைத்த சிறகுகளை
கத்தரிக்கவே
உனது பறப்பும் பயணமும்
நிகழ்ந்தது.

06
தனி ஒருவனாய்
எனது வாக்கு மூலம்
ஒலித்துக்கொண்டு இருக்கின்றது
நீ எப்பொழுதும் போலவே
மௌனமாய் இருக்கின்றாய்
உனது மௌனத்தை விட
அதிக பயங்கரம் எதுவுமில்லை
அதிக அசுரம் எதுவுமில்லை
உனது மௌனத்தை
உலுப்பி புன்னகைத்த
ஒவ்வொரு தருணத்திலும்
நான் எனது
இசையின் சூழல் வாழும்
வனங்களை
இழந்து வந்தேன்
பயங்கரத்தை
அபிவிருத்தி செய்யும்
அசுரத்தை பகிர்ந்தளிக்கும்
உனது சமரச புன்னகையை
இப்போது எனது நகரம்
கிறுக்கி வைத்திருக்கின்றது.


நீ நோக்கிய பயணத்தில்
அதிகம் ஆக்கிரமிக்க விரும்புது
எனது நகரத்தை தானே
ஒரு முறை இந்த நகரத்தை
நீ வேரோடு பிடுங்கி எறிந்தாய்
பட்டுப்போன மரமாயும்
புதைந்த நகரமாயும்
நீ ஆக்கிய ஆக்கிரமிப்பு காலம்
புதைந்த மீண்டும்மொரு நகரம்
இனி நிச்சயம் ஏமாற மாட்டாது
உனது கால்களை
திருகும் திறன் என்னிடம் உள்ளது.

07
எனக்குப் பிடித்த
பாதையின் அர்த்தம் பற்றி
கலந்துரையாடிய
எத்தனை நிலவின் இரவுகளை
நீ கொலை செய்திருக்கிறாய்
உனக்காக நான் செய்துவைத்த
எத்தனை சிறகுகளை
நீ புறக்கணித்திருக்கிறாய்
நான் கட்டிய
எத்தனை வீடுகளை
நீ குழப்பி வந்திருக்கிறாய்.
நீ அம்புகளை செய்து
அறிவித்த ஒவ்வொரு தருணத்தையும்
அன்பின் தருணமாக
நான் நம்பினேன்
நீயும் நானும் கிடக்கும்
சிறைகளுக்காக வேண்டியிருக்கிறேன்
எல்லை தாண்டி போவதற்குள்
நீ எத்தனை தடவை
உன் அம்புகளால்
என்னை கிழித்திருக்கிறாய்
வனங்களை அழித்திருக்கிறாய்
மீண்டும் மீண்டும்
உன்னால் சிறைக்குள்ளே
அசுர வெளிகளை
ஏற்படுத்தவே முடிகிறது.
மீண்டும் நான்உன்னிடமிருந்து
உர்த்தெழுந்திருக்கிறேன்
நான் இனி என்
புல்லாங்குழலின் இசையை
புறக்கணிக்கலாம்
உனது நிழலை
புறக்கணிக்கலாம்
இனி நீ எந்த அம்புகளையும்
எடுத்துவர தேவையில்லை
எனக்கென்று
நல்ல வனமும் நகரமும்
என்னிடம் இருக்கிறது
நீ பறப்பதற்கான
வெளிகளும் என்னிடம் இருக்கிறது
உனக்கு எந்த சிறகுகள்
பொருத்தம்
எந்த வெளிகள் பொருத்தம்
என்பதை நான்
உணர்ந்திருக்கிறேன்;.

08
ஒரு பொழுதும் நாம்
சிறைகளுக்குள்
சிறகுகளை பரிமாற முடியாது
பறக்கவும் முடியாது
வலிகளால் தைத்த
சிறகுகளும்
அசுரத்தால் தைத்த
சிறகுகளும்
உச்சிக்கொண்டிருக்கும்
நிழலில் எனது வனங்கள்
கருகுவதற்கு அனுமதியில்லை.

கருகிய வனங்களுக்குள்
கருகிப்போன
புல்லாங்குழலை மீட்டி
கருகிப்போன
இசையின் போதையில்
இரவு தடுமாறவும் முடியாது
எனக்குள்ளிருந்து
வெளிவரும் எல்லா இசையையும்
வி~மாக வேண்டுமென்று
நீ விரும்புகிறாய்
எல்லோரும் என்னை
புறக்கணிக்கும்
ஏதிரொலியை நீ விடுகிறாய்

09
முன்பெல்லாம்
நான் குழலில்வார்க்கும்
இசையில்
என் வனங்கள் செழிக்கும்
அமுதைப்போல காற்றில் இசை பரவி
நகரமே இனித்தது
எப்போது நீ என் நகருக்குள்
அனுமதியின்றி நுழைந்தாயோ
அப்போதே எல்லாம்
இயல்பு குலைந்தன
நீ எப்போது
உன் அசுரத்தலையை
எனது நகரில் விழுத்தினாயோ
அப்போதே
எனது நிழல் கருகத் தொடங்கியது.
உனது அசுரம் பிரண்ட
முகத்தில்
சாவின் புன்னகையை
மன்னித்து
வரவேற்றுப் பிழைத்த நிமிடங்கள்
ஒவ்வொன்றிலும்
என் அமைதியின் வேரை
நீ பறித்தாய்.
எத்தனை மன்றுகளில்
கால் வலிக்கநடந்து
குரல் வலிக்க பேசியிருப்பேன்
நீ சிலுவை பற்றி
பேசிய பொழுதெல்லாம்
மன்னித்திருக்கிறேன்
நீண்டு வலிந்த முரனை
வரணளித்து
ஒவ்வொரு கண்ணீரின்
தருணத்திலும்
உனது மாளிகை
சிரித்துக்கொண்டிருந்தது
நான் கண்ணீரைப்பற்றியும்
குருதியைப்பற்றியும்
வியர்ந்த ஒவ்வொரு சொல்லிலும்
நீ ஏளனத்தைப் பரிசளித்தாய்.

10
ஆதியிலிருந்து உன்னால்
திருகப்பட்ட
எனது அமைதியின் வேரை
உன்னிடமிருந்து
எடுத்துக்கொள்ளப் போகிறேன்
நீயும் நானும்
நமக்கென்று இருக்கின்ற
நகரங்களில் திரிவோம்
வனங்களை ஆளுவோம்.
நெருப்பில் எனது முகமும்
சூழ்ச்சியில்
உனது முகமும்
முரண்பட்டுக்கிடக்கிறது
எரிந்து கொண்டிருக்கும்
நெடுந் துயரில்
அழிக்கப்பட்ட கிராமங்களின்
எண்ணிக்கையில்
துயரங்களின் அடுக்கில்
உனது பெயரை இனி
நிறுத்தி
புன்னகைக்க முடியாது.
நீ அழிவின் சிறையை
உன்னை சூழ
வார்க்கிறாய்
நான் என்னை சூழ்ந்திருக்கும்
துயரின் சிறையை
உடைக்கப் போகிறேன்
நம்மை தாண்டிய வெளிகளில்
வாழும் இசையை
தழுவப் போகிறேன்
தோல்வியின் பிறகேனும்
நீ பறப்பதற்கு முயற்சி செய்.

11
எனக்கான நகரம்
எனக்கான சிறகுகள்
எனக்கான வனங்கள்
எனக்கான சொற்கள்
எல்லாம்
உன்னிடமிருந்து மீட்கப்பட்ட
புதிய தருணத்தில்
வெளிகளால் கட்டப்பட்டிருக்கும்
வீட்டில் இனி
நானும் என் தோழர்களும்
வாழுவோம்
பறக்கத்தொடங்கியிருக்கிறோம்.
-----------------------------------------

புதன், 19 செப்டம்பர், 2007

பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்

______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________

பாட்டியின் கதையும்
குழந்தைகளின் உலகமும்
-----------------------------------------------------

வானம் இடிந்து விழுந்திருந்தது
பாட்டியின் முகத்தில்
பழைய கதைகள்
உறைந்திருக்க
புதிய உலகம் பற்றியகதை
தெரியத்தொடங்கியிருந்தது
குழந்தைகள் கதைக்காக
பாட்டியை சூழ்ந்தார்கள்.

பழைய கதைகளின்
ஐதீகமும் மர்மமும்
குழந்தைகளிடம் ஆர்வமற்றிருந்தது
ஐதீகமும் மர்மமுமுடைய
கனவுலகின் கதையில்
தீவிரம் அற்றுப்போயிருந்தது.
உலகம் வேறொன்றாக இருந்தது.
குழந்தைகள் பாட்டியிடம்
ஜதார்த்தமும்
நடைமுறைச்சாத்தியமுமுடைய
கதையை எதிர்பார்த்தார்கள்.

நிலவு கலவரத்தில்
சிக்கியிருந்தது
முற்றங்கள் பாதிக்கப்பட்டு
சுருங்கிக்கொண்டிருந்தன.
சதையும் குருதியுமுடைய
மண்டைஓடுகளின் மத்தியில்
குழந்தைகளின் விளையாட்டுவீடுகள்
குழம்பியிருந்தன.

பாட்டி புதிய உலகம்
பற்றிய கதையை
அளக்கத்தொடங்கினாள்.

மண்டை ஓடுகளின் குவியல்கள்
நிரம்பியிராத உலகம்
உருவாகப் போகிறது.
அங்கு மரங்கள்
கிழிந்திருக்கப்போவதில்லை
நிலவு கலவரமின்றியிருக்கும்
முற்றம் அச்சமின்றி
விரிந்திருக்கும்
காற்றில் மரணத்தின்
வாசனை இருக்காது.

சொற்களில் குருதியின்
வாசனை வீசப்போவதில்லை
பறவைகள் மீண்டும் தங்கள்
சங்கீதங்களை இசைக்கும்
தெருக்களில் சூழ்ச்சி இருக்காது
மரணங்கள் பற்றியும்
சவப்பெட்டிகள் பற்றியும்
நம்மில் யாரும் அறியாதிருப்போம்.
வானம் மனிதாபிமானத்தில்
வெளித்திருக்கும் விழிகள்
எந்தக் காயங்களுமின்றி திறந்திருக்கும்
மிகப் பசுமையானகாட்சிகளால்
அந்த உலகம் நிரம்பியிருக்கும்

ஜதார்த்தமுடைய கதையை
கூறியதாகப் பாட்டி
திருப்திப்பட்டாள்
பாட்டியின் இருப்பில்
நிம்மதியிருந்தது.
கதையில் நம்பகம் இருப்பதாக
குழந்தைகள் உணர்ந்தனர்.

குழந்தைகளின் விழிகளில்
அச்சம் நீங்கின
பாட்டியின் வார்த்தையின்
ஆர்வம் குழந்தைகளை
குதூகலிக்கச் செய்தது.

குழந்தைகளின் முகங்களில்
புதிய உலகம்
நிகழத்தொடங்கியது.
_________________________

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...