_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________
எனக்கென்று ஒரு
புன்னகை இருந்தது
அது எனது அடையாளமும்கூட.
எனது மகிழ்வும் அழுகையும்
ஊட்டப்பட்ட ஒலியில்
எனது புன்னகை ஒளிர்ந்தது.
இன்னாளில் விலக்கப்பட்ட
புன்னகையாய்
முகத்திற்கு அதிதூரப்படுகையில்
உதடுகள்
பூனையைப்போல
பதுங்கிக்கொள்கின்றன.
எனக்கென்று உரிமையுடைய
வார்த்தைகள் எவற்றையும்
விரித்து வாசிக்கமுடியாது போயிற்று.
நான் என்னை மூடிப்போகிறேன்
வேற்று ஆடைப்போர்வையில்
எனது உருவம் ஒடுங்கியிருக்கிறது.
எனது புன்னகையில்
குருதிதான்வடிகிறது
உதடுகள் உதிர்ந்து
மிதிபட தெருக்கள்
எதையும் கவனிக்காது
மௌனமாய் கிடக்கிறது.
காயப்பட்ட எனது உதடுகளில்
என்னை மீறி
குருதியின் வாசனையுடைய
புன்னகை வெளிவருகிறது.
எனது புன்னகையை
யாரோ களவாடிவிட்டார்களா?
அல்லது எனது புன்னகை
தனது வேருடன் அழிந்துவிட்டதா?
களவாடப்பட்ட எனக்குரிய
ஓலிகளை தேடுகையில்
காற்று தீர்ந்துவிட
கண்கள் இரவாப்போகின்றன.
எனது புன்னகை மிதிபட
எழும் ஒலியை இரசித்து
சக்கரங்கள் உருள்கின்னறன.
குருதியுடன் சம்பந்தப்பட்ட
புன்னகை பிறண்ட
வார்த்தைகள்
தடைசெய்யப்பட்ட காலத்தில்
முகத்தை கழற்றி
ஏறிந்துவிட்டு வருகிறேன்.
ஒருநாள் தெருவெளிக்கையில்
பதுங்கிய உதடுகள்
மீள வந்துசேரும்
எனது புன்னகையியின்
வேர் தளைக்கும்
எனது புன்னகை
வானமாய் விரிந்து வெளிக்கும்..
-------------------------------------------------------------
தீபச்செல்வன்
7 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக