_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________
நகரங்களில் கேட்பதில்லை
கிராமங்களின் பாடல்
குடிசை முகத்துடன்
கிராமங்கள்
நீண்டுகொண்டு போயின
அங்குதான்
காற்று வசிக்கிறது.
புதுமைகளை
நாகரிகங்களை
ஆதியில்
கிராமங்களே பிரசவித்தன
கிராமங்களின் ஜீவனில்
நகரங்கள் நடமாடின
கிராமங்களின் செய்தி
எங்கும் கேட்காமல்
குடிசையில் மண்டிக்கிடக்கிறது.
நகரங்களில்
வருத்தங்கள் மனிதரோடு
உலவுகின்றன
மின் கம்பங்களின் சுற்றில்
மனிதர்கள்
நிம்மதியை தொலைத்து
திரிகிறார்கள்.
கிராமங்களில் விளக்குகள்
நிரம்பிய குடிசைகளில்
இருள் நிரம்பிய
புத்தங்களின் குரல்கள்
தேங்கிக்கிடக்கின்றன.
நாகரிகங்கள்
மனிதரை
கருனையை
கொன்று தீர்த்தன.
கிராமங்களிடம்
நதி இருக்கிறது
நதியின் தாகத்திற்கு
கிராமம் அருக்கிறது
நதியைப்போல ஆறுதல் இல்லை
நதி தாயைப்போல
கிராமங்களை வளர்த்தன
கிராமங்கள்
மனிதர்கள்
நாகரிகங்கள்…எல்லாம்
நகரங்களாகியபோது
கிராமங்கள் துரத்தப்பட்டன.
நைல் நதியை விடவும்
குவாங்கோ நதியை விடவும்
எனது நதி மேலானது.
படையெடுத்து பெயர்க்கப்பட்ட
நதிக்கிராமங்களைப்போல
எனது கிராமம் விழுங்கப்படக்கூடாது.
கிராமங்களின் விடுதலை இருள்
கிராமங்களின் அமைதி நிழல்
கிராமங்களின் வலிமை ஒளி
கிராமங்களின் வெள்ளை பசுமை
எல்லாவற்றிலும்
எனது தோற்றம் பிணைந்து கிடக்கட்டும்
நதியில் பசியாறலாம்.
பசுமை வழியும்
கிராமத்தின் முகத்துடன்
நமது ஆயுள் தீரும் வரை
பசியாறுவோம்
கிராமங்களின் தெருவில்.
---------------------------------------------------
தீபச்செல்வன்
5 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக