_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________
உணர்வுகளால் பகிர்வோம்
மகிழ்வுகளால் பகிர்வோம்
வலிகளால் பகிர்வோம்.
நாம் நிலவின்
வெளிச்சத்தில் பகிர்வோம்
களங்கமில்லாத
நமது குழந்தை முகங்களை.
நாம் சூரியனின்
ஒளியில் பகிர்வோம்
தாய்மையடைந்த
நமது மடியின் குரல்களை.
உனது கையை பிடித்து
பயணம் செய்தும்
உனது தோள்களில் சாய்ந்து
தூங்கியும்
ஏன் மடியில்
நீ வேர் விட்டும்
தாய்மையை
நமக்குள் பகிர்வோம்.
பிணைந்த நமது
விரலிடுக்குகளில்
சமத்துவ வலிமையில்
எங்களை நாங்களாய்
சுமப்போம்
உன்னை நான் சுமக்கையில்
நான் தாயாகிறேன்
என்னை நீ சுமக்கையில்
நீ தாயாகிறாய்.
எனது சிறகு
பறிக்கப்படாதவரை
உனது சிறகும் பறிக்கப்படாது
நான் சிறைவைக்கப்படாதவரை
நீயும் சிறைப்படமாட்டாய்.
சொற்களின் ஈரத்தால்
குளிர்ந்த எண்ணங்களால்
வெள்ளை புன்னகையால்
நாம் இணைந்து
அழகிய வாழ்வு நெய்வோம்.
பூமியின் வேரில்
ஓளியின் அடியில்
நாம் விடுதலை சிருஸ்டிப்போம்
நாம் நமக்குள்
போராடத்தேவையில்லை
நாம் நமக்குள்
வதைபடத்தேவையில்லை
மகிழ்வை புதைக்கத்தேவையில்லை
கோப்பைகளை பரிமாறுவோம்.
உன்னிடமும் என்னிடமும்தான்
நமக்கான விடுதலை இருக்கிறது
நம்மை நாமே
விடுதலை செய்வோம்.
வா…அழகிய நமது விடுதலையுடன்
வாழ்க்கையை பகிர்வோம்.
---------------------------------------------------------
தீபச்செல்வன்
5 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக