_______________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________
இரண்டு சைனைட்டுக்களிடையே
இந்த தோழமை
வளர்க்கப்பட்டிருக்கிறது
இரண்டு துப்பாக்கிகளிடையே
இந்த தோழமை
வளர்க்கப்பட்டிருக்கிறது
இரண்டு சீருடைகளிற்கிடையே
இந்த தோழமை
வளர்க்கப்பட்டிருக்கிறது
பிரித்துப்பார்க்க முடியாத
சிந்தனையின் தாய்மையில்.
பொதுமைப்பட்ட
உன் புன்னகையின்
அர்த்தத்தை நான் மட்டும்
பிரித்து வாசித்திருக்கிறேன்.
அக்கறையான
உன் அழுகையை
நான் மட்டும்
பிரித்து வாசித்திரக்கிறேன்.
நீயில்லாத
நானில்லாத வெளிகளும்
நெருக்கங்களும்
உள்ள இலக்கின் இணைப்பில்.
உனது முகத்தில்
கசிந்த வாசத்தை
நுகர்ந்திருக்கிறேன்.
உனது விழியில் தெரிந்த
பரிவான பார்வையை
உணர்ந்திருக்கிறேன்.
உனது விரைந்த
செயலின் ஆழத்தை
பார்த்திருக்கிறேன்.
நமது இலக்கின்
ஒருமைக்குள் தாய்மையடைந்து
சுதந்திரத்தை பிரசவிக்கும்
புனிதமான சீருடைக்குள்.
நமது தோழ்களின்
வெளியில்
மக்கள் கண்துங்கிறார்கள்.
நமது சைனைட்டுக்களின்
வெளியில்
மக்கள் புன்னகைக்கிறார்கள்.
நமது துப்பாக்கிகளின்
வெளியில்
மக்கள் கைகளை வீசுகிறார்கள்.
நமது சீருடைகளின்
வெளியில்
கடமை அணிவகுக்கிறது.
நமது பிரிவில்
பாதிஉறவுகள் மீண்டிருக்கிறார்கள்.
உனது மௌனத்தில்
பாதித்தேசம் விடிந்திரக்கிறது.
--------------------------------------------------------------------
தீபச்செல்வன்
5 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக