எழுதியவர்:தீபச்செல்வன்
---------------------------------------
---------------------------------------
படையினர் எனது புத்தகத்தை
பறித்து வீசினார்கள்
அது கிழிந்துபோனபடி
சிதறிக்கிடர்ந்த
இராணுவ அதிகாரியின்
உடலில் விழுந்து கறுத்தது.
வெடித்த குண்டின்
கோபமான
அடையாளங்கள் கீறிய
முகத்துடனும் படையினர்
பெண்களை பார்த்து
சிரித்துக்கொண்டனர்
அவர்கள்
செத்துக் கொண்டிருந்தார்கள்.
எல்லா அப்பாக்களும்
வரிசையாக
நிறுத்தப்பட்டனர்
அண்ணாக்களின்
கைகள் கட்டப்பட்டபடி
விசாரனை நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்பாக்களை எண்ணி
துப்பாக்கிகனை
கணக்கெடுத்தார்கள்
அண்ணாக்களை எண்ணி
ரவைகளை
கணக்கெடுத்தார்கள்
இவைகளுடன்
அம்மாக்களின் அழுகைகளையும்
வீடியோக்கள் மூலம்
பதிவுசெய்தார்கள்.
இனந்தெரியாத துப்பாக்கிகளையும்
வெள்ளைவான்களையும்
அறிமுகப்படுத்தி
இராணுவ சீருடைகளை
ஜனாதிபதின் படத்தில்
தொங்கவிட்டார்கள்.
இறந்து கிடந்த
இராணுவ அதிகாரியின்
கருகிப்போன முகத்தில்
படையினர் கூட்டம் போட்டு
அறிவித்தனர்
வெடித்த குண்டின்
விலைகளை சொல்லிக் கொண்டிருந்தனர்.
எல்லோரும் சிதறிய குண்டையே
பார்த்தபடி நின்றார்கள்
இறந்த இராணுவ அதிகாரி
எழுதிய
குண்டு பற்றிய கவிதைகளை
படையினர்
விநயோகம் செய்தனர்
எல்லோரும்
குண்டுகளை தின்றுகொண்டு திரும்பினர்
-------------------------------------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக