_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________
நாம் திருப்தியுடன்
எழுந்து போவதற்கான
நேரம் வந்துவிட்டது.
வெளியிட மறுக்கப்பட்ட
இரவின்
விருந்தொன்றில்
நாம் மீண்டுமொருமுறை
சந்தித்திருக்கிறோம்
சிறப்பாக பகிரப்பட்ட
இறுதி உணவில்
நமது விருந்தின் மேசைகள்
இரண்டான திருப்தியுடன்
சொருகிய கைகளை
இழுத்துக்கொள்வோம்.
உனக்கான நேரம்
முடிவடைந்துவிட்டது
உனது இருதயத்தை
திறந்து
உன்னை வெளிப்படுத்தி
பேசவும்
கேலிசெய்யவும்
உனது சுயம் புறப்படவும்
உனது முகம்
திறந்து விடப்படுகிறது.
எந்தத் தெருவும்
உரிமையற்ற காலத்தில்
கைகளை
சொருகியிருக்கிறோம்
கை குலுக்கியிருக்கிறோம்
அள்ளிப்பறித்த
சுதந்திரங்களை
நீ வீசிவிட்ட
துரோகத்துடனும்
பகமையுடனும்
நாமாக போவதற்குத்தயாரில்லை.
வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில்
கசப்பையும்
வெறியையும்
பரிமாறிய திருப்தியில்
விருந்தை தகர்த்து
எழுந்து கொள்வோம்.
முரண்பட்ட இரவினை
புதைத்துவிட்டு
ஒரு விடிகாலைப்பொழுதை
உருவாக்க முயல்வோம்
விளக்குகளை
அணைத்துவிட்டு
அருளும் முகங்களை
சூரியனை உரிப்பதன்
ஒளியில் காட்டுவோம்
நமக்குள்
ஒரு வெண்மையின்
இருப்பும் வலிமையும்
வெளித்தெரியும்.
இருப்பை கண்டுபிடிக்கவும்
வெளியிடவும்
கைகளை இலவகமாக வீசுவோம்.
பாதைகளை
பிரி;ததெடுத்துக்கொண்டு
நமக்குரிய பயணங்களை
தீர்மானித்தபடி
புறப்பட தயாராகுவோம்.
விருந்துகளை கைவிட்டு
எழுந்து கொள்வோம்..
---------------------------
தீபச்செல்வன்
7 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக