_____________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________
எல்லாச் சிறுவர்களும்
தேவராசா
என்று சிரிக்கிறார்கள்
எல்லோருக்கும்
தேவராசாவின் இயல்பில்
சிரிப்பு வருகிறது
எதையும் அவன்
அறியாது பேசுகிறான்..
தேகத்தில்
புளுதியை அள்ளி தானே
பூசிக்கொண்டிருந்தான்
கையில் ஐந்துரூபாய்
றப்பர் பை ஓட்டையுடனிருந்தது.
அவற்றுள் கிழிந்தும் கிழியாததுமாய்
ஒரு சில புத்தகங்களிருந்தன.
அவனின் மேல் சட்டை
பொத்தான்கள்
மாறி மாறி பூட்டப்பட்டிருந்தன.
அவனின் காற்சட்டை
ஒரு பக்கம் கிழிந்து
கயர் பிரண்டிருந்தது.
வயதாகியும்
அவனுக்குள் சரிப்படாத
தடங்கல் பேச்சு
அதுவும்
பார்ப்பவர்களுக்கு
சிரிப்பூட்டுகிறது.
அப்பாவை ஆமி
சுட்டுட்டான்
அம்மா வேலைக்கு போட்டுது
சோறு கொண்டருமே
நான் திரும்ப திரும்ப கேட்க
விளங்க முடியாத
அவனின் மொழி
கவிதையாடுகிறது.
தன்பாட்டில்
தேவாரங்களை அனுபவித்து
பாடுகிறான்.
தேவராசாவின்
யாருக்கோ எதற்கோவான
நேர்மை
கீழே எறியப்பட்டு
மணலில் புதைந்து தெரியும்
காலாவதியான பென்சில்களை
எடுக்கலாமா என்கிறது.
கொப்பியும் பென்சிலும்
வாங்கித்தரும்படி
கேட்கிறது
என்னுடனான அவனின் உரிமை.
படிப்பு சொல்லித்தரும்படி
கேட்கிறது அவனின்
அவசியமான அக்கறை.
தேவராசா
புத்தகங்களை எடுத்து
வாசிக்கத் தொடங்கிவட்டான்.
--------------------------------------------------------------
19.01.2006 பளையில் தேவராசா என்ற இந்த சிறுவனை சந்தித்தேன்..
-----------------------------------------
தீபச்செல்வன்
6 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக