Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 28 நவம்பர், 2016

ஒரு கெரில்லாவின் இறுதிக் கணம்



வரிகளில் தேசக் கனவை எழுதிய
சீருடைகளை அணிந்தனர்
நேற்றைய போரில் மாண்டுபோனவர்
கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து
அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்

எல்லோருடைய அழுகையையும்
துடைக்கும் அவர்களால்தான்
இறுதிக் கணத்தில் புன்னகைக்க முடியும்

எல்லோருடைய துயரையும்
துடைக்கும் அவர்களால்தான்
இறுதிக் கணத்தில் ஒளிமுகத்துடன் செல்ல முடியும்

கழுத்தில் சைனைட் குப்பி
தோளின் குறுக்கே சன்னங்களின் மாலை
துப்பாக்கியை கையளித்து மாண்டுபோன
தோழியின் நினைவில் மறந்தாள்
களம் செல்லத் தடுக்கும் தாயின் குரலை

துப்பாக்கியை ஏந்திக்
கையசைக்கும் விழிகளில் தேசத்தின் வரைபடம்
நேற்றைய போரில்
கொல்லப்பட்ட குழந்தைகளின் நினைவில் மறந்தான்
தந்தையைத் தேடி அழும் தன் குழந்தையை.

'நாளை மீட்கப்படும் கிராமத்தில்
நான் இல்லாது போகலாம்
அம்மாவின் பொழுது சொந்தவூரில் புலர்கையில்
சாணி தெளித்த முற்றத்தில்
செவ்வரத்தம் பூவாய் பூத்திருப்பேன்'.

முதுகுப் பொதிக்குள்
உலர்ந்துபோன உணவுப் பொட்டலம்
ஒரு குவளை குடிநீர்
பெருந் தாகத்தில் ஊடறுக்கும்
கெரில்லாவின் இறுதிக் கணத்தில்
மனமெங்கும் பரவிக் கிடந்தது
கனவு பூத்த தாய் மண்.
¤

தீபச்செல்வன்

கார்த்திகை 2016

புதன், 23 நவம்பர், 2016

கூப்ரூ மலையின் மகள்


மரட்சியுடன் திரியும் மான்கள் நிறைந்திருக்க
செம் மல்லிகை பூத்திருக்கும்
கூப்ரூ மலையின் மகளே
நெடிய விரத்தினை முடித்து உணவருந்து!

துப்பாக்கிகளின் விற்பனைக்கான பூமியில்
இனியும் பசியோடிராதே!

உருகிய உன்னுடலருகே நின்றவுன் சனங்கள்
ஒவ்வொரு உணவு வேளையிலும்
கோப்பைகளைத் தூக்கும்போதடைந்த
குற்ற மனம் இனியேனும் தணியட்டும்

வற்புறுத்தப்பட்ட உணவுத் தண்டணையும்
மூக்கில் சொருகப்பட்ட உணவுக் குழாய்ச் சிறையும்
இத்தோடு முடிந்துபோக
நெடுநாளாய் மறந்த உணவைக் கையிலெடு

நிர்வாணங்களினால் போரிட்ட
மணிப்பூரிகளின் பசியை சுமந்து
வெறு வயிற்றில் கனவு நிறைத்த
இரும்புப் பெண்ணே
ஏதுமறியாக் குழந்தை போல
மிதமானது உன் இருதயம்.

சாவு விளையாடப்
பசியால் வறண்டு பாலைபோலத் தகித்த
உன்னுடல் வலிய ஆயுதம்

மரணம் நெருங்க மறுத்து
தோல்வியை தழுவச் செய்த
கொதித்தடங்கா உன் குரல் பெருந்தீ

தோழியே, குண்டுகளின் உற்பத்திக்கான பூமியில்
இனியும் உன் மெல்லிய இதயத்தால் போரிடாதே


யோனிகளுக்குள் இராணுவக் குறிகளைச் சொருக
துப்பாக்கிகளை நீட்டும் அதிகாரம்
காரணமேதுமின்றிக் கைதாக்கவும்
காணமல் போகச் செய்தலுக்குமாக ஆண் மக்கள்
எதிர்காலம் மாண்ட குழந்தைகள்
எல்லாத் திசைகளிலும் சூரியனை எதிர்பார்க்கும் விழிகள்
துளியேனும் வேறுபாடற்றன நம் நிலங்கள்

எம் பிரியமிகு
கூப்ரூ மலையின் மகளே
திலீபனைப் புதல்வனாய் பெற்ற எம் தேசமறியும்
நெடிதுயிர்த்தவுன் பசி வேட்கையை போக்கியிராதது
பல்லாண்டுகளின் பின்னரான உணவு

விடுதலைப் பசியில்
உழலும் உன் இருதயம்

 -தீபச்செல்வன்

இரோம் சர்மிலாவுக்கு

நன்றி - குமுதம்

புதன், 2 நவம்பர், 2016

அமைதித் தளபதி


அதிகாலை இருண்டுபோகும்படி
வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில்
உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர்

தகர்க்கப்பட்ட வெண்சொற்கள்
தோரணங்களாய் தொங்கும் நகரில்
சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம்

முறித்தெறியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினடியில்
சூழ்ச்சியை முறிக்கும் சாதுரியமான
முடிவற்ற புன்னகையின் தீராத் துகள்கள்

நேற்றும் நமது தலைநகரிற்கு வந்தவர்க்கு
கைலாகு கொடுத்து
விரிந்த மலர்கொத்துக்களைபோல்
புன்னகையை நீட்டியவனின் உதடுகளை
மூடிக் கிடந்தது ஈரமண்

முள்முருக்கில் அமர்ந்திருந்த
வெண்புறா எழுந்து பறந்தது
கொடும் சிங்கத்தின் முகத்துடன்
இறகுகள் முறிக்கப்பட்ட புலுனி வீழ்ந்தது
நாவல் மரத்திலிருந்து

அமைதித் தாகத்தின்
புன்னகையடர்ந்த அவன் முகத்தின்
ஒரு துளி மௌனத்தில்
தோற்கும் உம் அறம் பிழைத்த போர்.

-தீபச்செல்வன்

02.11.2007. சமாதானப் போராளியாக உலகறிந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஸ்ரீலங்கை அரச படைகளின் விமானத் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். 

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...