வண்டிகள் எல்லாம் இரும்புக் குவியலாயிருக்க
சக்கரங்களும் இல்லை
ஓட்டமும் இல்லை
துருப்பிடித்த பறவைகளின் நிழல் கவிந்த
யாருமற்ற இடுகாட்டில்
பிஞ்சுத் தலைகளின்மீது இரும்பு மூட்டைகளைச்
சுமக்கின்றனர் சிறுவர்கள்
இரும்பு படிந்த உடல்களிலிருந்து
உதிர்கிறது துருவேறிய துகள்கள்
மலிவான சிறுவர்கள்
எவ்வளவு பாரமேனும் சுமப்பார்களென
விலைக்கு வாங்கப்பட்டனர்
வெடிக்காத குண்டுப் பொறிகளுக்குளிருக்கும்
இரும்பை கொண்டு வருவார்களென
இரும்புக்காட்டில் தொலைவுக்கு அனுபப்பட்டனர்
அழுகிய இரும்பை நெறுக்கும்
தராசுகளுக்குள் உறங்கி எழும் சிறுவர்களிடம்
இருந்தவை இரும்புகளைவிட பாரமான கண்கள்
கால்களுக்கு கீழேயும் தலைக்கு மேலேயும்
வெடிகுண்டுகள் நிறைந்திருக்க
சிறுவர்கள் உள் நுழையும்பொழுது
இரும்புக்காட்டில் மலர்ந்திருக்கும் பூக்களை பறித்துக்கொண்டு
உக்கிய பேரூந்தையும்
உருட்டிச் செல்லுகின்றனர் யாரோ!
•
தீபச்செல்வன்
நன்றி: கல்கி