மெரீனாவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்
தேனீர்க் கோப்பையுடன் எதிர்பார்த்திருக்கும் அம்மாவை
பெயர்ச்சியால் கவிந்த வானம் இருண்டுபோக
புலம் இழந்த பறவைகள் அலைகின்றன
நேற்றும் ஊரிலிருந்து சில நண்பர்கள்
படகெடுத்து பெருங்கடலின் வழியே சென்றனர்
எனது நகரத்தின் மரநிழலில் நடப்பதுபோலவும்
எனது தெருவில் சைக்கிளை ஓட்டுவதுபோலவும்
எதுவுமில்லை
யாருக்கும் புரியாத பேச்சோடு
எதிரில் யாருமற்றிருந்தேன்
வெடிப்பதுபோல ஊதும் இருதயம் முழுவதும் தாய்மண்.
கனவுகள் காய்க்கும் பனைமரக்காட்டிலிருந்து
வேர் அறுத்த மரமாய்
சென்னை நகரத்திற்குத் தூக்கி எரிந்தது யார்?
மண்ணிழந்து வாடத் தொடங்கிற்று செடி
தாய் மண்ணைப் பிரிய
தேம்ஸ் கரைபோல இலையுதிர்காலத்தில்
அசைவற்று இருக்கிறது மெரீனாக்கரை
காற்று எங்கோ இழுத்துச் செல்லுகிறது பறவைகளை
நள்ளிரவில் கண் விழிக்கச் செய்யும்படி
மெரீனாவுக்கு மேலால் தாழ இறங்கி
கத்திச் செல்கின்றன சில வலசைப் பறவைகள்!
•
தீபச்செல்வன்
நன்றி: தீராநதி மார்ச் 2013
1 கருத்துகள்:
நல்ல ரசனை...
கருத்துரையிடுக