Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 29 ஆகஸ்ட், 2007

குட்டி மானின் புள்ளிகள்.

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________

அந்த குட்டிமானை யரோ
துரத்திக்கொண்டிருக்கிறான்
துரத்திக்கொண்டு வருபவன்
இராமனாக இருக்கலாம்
இரவணனாக இருக்கலாம்
மான்மீது
சீதையும் ஆசைப்பட்டிருக்கலாம்
சூர்ப்பனையும் ஆசைப்பட்டிருக்கலாம்.

குட்டிமானின் கண்களிள்
தவிப்பு பெரியளவில்
ஊறி சிந்திக்கொண்டிருந்தது.

அந்த மான் மாரீசனாக இருக்கலாம்
சூர்ப்பனையாக இருக்கலாம்
சீதையாக இருக்கலாம்।

இப்பொழுது மானாகவே தெரிகிறது
மானின் காலடியில்
பொறிகள் இருக்கலாம்
கால்சுவடுகளில் பொறிகள் முளைத்திருக்கலாம்।

மானே பொறியாக இருக்கலாம்.

கால்கள் இடருப்பட
கால்களை விரித்து ஒதுக்கி
மான் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது
மானகா மாறியவர்களும்
மானிற்கு ஆசைப்பட்டவர்களும்
அலைந்து கொண்டிருக்கிறார்கள் ।

காடுகள் நீண்டு பரந்திருக்கின்றன.

இப்பொழுது
மானைப்போலவே
எல்லோருடைய கண்களிலும்
தவிப்பு பெரியளவில் சிந்துகிறது।
__________________________________

அப்பத்தின் உரையாடல்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________

எல்லா தோழர்களும்
இருக்கைகளை விட்டு
எழுந்து போய்விட்டார்கள்
எஞ்சியிருக்கும்
நீயும் நானும்
நமது அப்பத்தின் கதைபற்றிய
வாழ்க்கையை
கலந்துரையாடுவோம்
பிரம்புகளை
ப+சையறையில் வைத்துவிட்டு.

ஒவ்வொரு இராத்திரியிலும்
நமக்கிடையேயான
அப்பத்தின் கதை
இறுதியின்றிய
இராப்போஃனமாக
தொடருகிறது.
விடியும்பொழுது
அப்பங்களை சுமந்தபடி
நமக்கென்ற
தெருக்களில் திரிவோம்.

அப்பங்களுக்காக
கூவிக்கொண்டிருக்கும்
நமது குரலிலும்
அப்பத்தின் நடுவிலும்
நமது வியர்வையும்
கண்ணீரும் நிரம்பியிருக்கும்
அப்பத்தின் காசுகளுக்காக.

அப்பத்தின் கூடையை
கொழுவியிருக்கும்
கையிலிருக்கும்
பிரம்பை பற்றி
நம்மிடம் அப்பம் வாங்கிய
எல்லோரும்
அறிந்திருக்கிறார்கள்
அப்பம் பிரம்பு
இவைகளை
பிரித்துப்பார்க்க முடியாத
நமது வலிமையான
பயணங்களில்
நமது பசியையும் தீரத்தையும்
அறிந்திருக்கிறார்கள்.

கையில் பிரம்புடன்
தெருநாய்களை
கலைத்துவிட்டு
அப்பங்களை சுமந்தே
நம்மால் பசி போக்க முடிகிறது.

ஒவ்வொரு இராத்திரியிலும்
நாம் விற்பனை செய்யும்
அப்பங்களை பற்றியும்
பிரம்பின் தீரம் பற்றியும்
கலந்துரையாடுவோம்.

விடிந்ததும்
ஆளுக்கொரு தெருவில்
அப்பங்களோடு போவோம்
தாவீதின் கல்லைப் போன்ற
பிரம்புடன்.

நம்மிடம்
அப்பங்களை வாங்க
நிறையப்பேர் காத்திருக்கிறார்கள்।
______________________________

பதுங்குகுழி வாழ்வு

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

பதுங்குகுழியினூளான வாழ்வு
மனித நாகரீகத்தை
வியந்துகொண்டிருக்கிறது
நமது நகரின் பதுங்குகுழி
பற்றிய விளம்பரங்களோடு.

வீதியில் நடந்துகொண்டிருக்கையில்
வேலியோர
கால்வாய்களை அண்டியபடி
அன்றாட வாழ்வு
சென்றுகொண்டிருக்கிறது.

வெள்ளைச்சீருடைகளை
அணிந்துகொண்டு
புத்தகங்களை
பதுங்கு குழிகளில் நிரப்பி
அதன் சுவர்களில்
பாடத்தை எழுதி
படித்துக்கொண்டிருக்கிறார்கள்
மாணவர்கள்.

அடிக்கடி திடுக்கிட்டு
சிறுசிறு பள்ளங்களில்
விழுந்து கிடக்கும்
குழந்தைகள்
சத்தமிடாமல் மூச்சிட்டு
பதுங்கு குழியின் மூலைகளில்
ஒளிந்துகொண்டு
செவிகளை அறுத்து வீசினார்கள்.

காற்றைக்கேட்டுப் பயந்துகொண்டார்கள்
வானத்தை பார்க்க மறுத்து
குப்புற விழுந்தார்கள்.

வீடுகட்டத் தேவையில்லை
பள்ளிக்கூடம்
கட்டத் தேவையில்லை
வீதிசெய்யத் தேவையில்லை?
மண்ணைக் கிண்டியே
வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும்
மண்ணைக்கீறியே
பயணம்செய்யவேண்டும்.
நிலத்தின்கீழ்
இயல்பான தேவைகள்
அடங்கிக் கிடக்கின்றன.
உரிமைகளும் அடையாளங்களும்
புதைந்துபோகின்றன.

ஒவ்வொருவரும் தங்களுக்கான
பதுங்கு குழிகளைப்பற்றியே
தீவிரமாக செயற்படவேண்டியிருக்கிறது
தூக்கிப் புதைப்பதற்கு
யாரும் மிஞ்சியிருக்க மாட்டார்கள்
மொத்த வாழ்வும்
பதுங்கு குழியில் அடங்கி
புதைகுழிகளாகவும் மாறலாம்.

மனித வாழ்வு மண்ணைக்கிண்டி
பூமியின் அடியைநோக்கி
சென்றுகொண்டிருக்கிறதே?
புதிய நாகரீகத்தின்
வாழ்க்கை முறையா?
விஞ்ஞானங்களின் பிரதிபலிப்பா?
மனித உரிமைகளும் சிறுவர் உரிமைகளும்
உக்கித்தொலைகின்றன
வாழ்வும் கேள்விகளும்
பதுங்கு குழியில் புதைகின்றன.
_______________________
மீள்எழுத்து:தினக்குரல்
__________________________

நல்லதோர் வீடுசெய்வோம்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________

உடைந்து துண்டு துண்டாக
கிடக்கிறது
உனக்காக நான்
கட்டிவைத்த வீடு
நீயும் நானும்
பேசிக்கொள்ளவும்
சுயங்களை
பரிமாறி நமக்குள்
உறவை ஏற்படுத்தவும்
வீடு கட்டப்பட்டிருந்தது..

உனக்காக சில
விசேஷ சாளரங்களை
அமைத்து
பல்வேறுவிதமான
காட்சிகளையும்
மாட்டியிருந்தேன்..
நமது நலனுக்காகவே
சில சாளரங்களை பூட்டி
சில காட்சிகளை
காணாமலும்
வழி திறந்தேன்..

கதவுகள் இல்லாத
வாசல்களை
நிறையவே செய்துவைத்தேன்
உனக்கு பிடித்த
பல்வேறு வரவுகளால்
உனக்கேற்ற
தூரங்களால்
எனது வாசல்
மிக அகல விரிந்து
உன்னை வரவேற்றது.

நீ என்னோடு
பேசிக்கொண்டிருக்கையில்
எனது வீட்டின் கூரையை
சுவரை
ஜன்னல்களை
வாசலை
படம் பிடிப்பது போல
நோட்டமிட்டு வேவெடுத்தாய்..

எனது கூரையை
சிதைத்து
எனது சுவர்களை
சரித்து
எனக்கான பசுமையை
அழித்து
உனது பார்வையில்
வெறியூட்டி
எனது வீட்டின் நிழலை
குழப்பியடித்திருக்கிறாய்..

இனி நாம் நமக்கென்ற
வீடு பற்றிய
எண்ணத்திலிருந்து விடுபடுவோம்;.
நீ உனக்கான
வீட்டை கட்டு
நான் என்கான
வீட்டை கட்டுகிறேன்
யாரும் யாருடைய வீடுகளையும்
சிதைக்கத்தேவையில்லை
கட்சிகளை குழப்பத்தேவையில்லை
அவரவர் நிழல்களை
விடுவித்து
அவரவர் சுயத்துடன் வாழ்வதற்கு
நல்லதோர் வீடுசெய்வோம்
அவரவர் வீட்டின்
சாளரங்களை திறந்து
பொருத்தமான
காட்சிகளை பார்ப்போம்।
____________________________

வீடும் தெருவும்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________

எப்பொழுதும் எனது
கையிற்குள்
பிடிபட்டுக்கிடக்கும்
காலுக்குள்
மிதிபட்டுக்கிடக்கும்
எனது சைக்கிளை
மறந்து
கடைத்தெருவில் நிறுத்திவிட்டு
நடந்துபோகிறேன்.

நடைவலித்துக்கொண்டிருந்தாலும்
தெருவின் மணத்தில்
வித்தியாசம் தெரியாமல்
நடையை ரசிக்கத்தூண்டும்
செருப்பை மறந்து
முட்களில்
நடந்துகொள்ளவும்முடியும்
இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தாலும்.

எனது தெரு
சுதந்திரமான நடை
தெருக்கரை மரங்களின்நிழல்
வீட்டை கடந்து
அலுவலகத்தை கடந்து
மறந்தபடியும் போகலாம்
தெருவும் ரசனையும் நீளும்.

எதுவரையும் போகலாம்
எங்கும் எனதுவீடு
எப்பொழும்
தெருவில் உலவலாம்
எப்பொழும்
வீடு வந்து சேரலாம்.

பள்ளிக்கூடத்திற்கு போய்
பிள்ளை
வீடு வந்துசேரமாலிருக்கவும்
எனது மனைவி தேடமாட்டாள்
அவன் வருவான்
இன்னும் படிக்கிறான்
பிள்ளையின் வரவில் இன்னும்
எதிர்பார்ப்பும் விசேஷமும்இருக்கும்.

பால்க்காரன்
உரியநேரத்துக்கு வருவான்
தபால்க்காரன்
உரியநேரத்துக்கு வருவான்
பத்திரிகை
உரியநேரத்துக்கு வெளிவரும்
கடைகள் உரியநேரத்துக்கு
திறந்து வியாபாரம் நடக்கும்.

எங்கே உங்கள் செருப்பு
எங்கே உங்கள் சைக்கிள்
என்றெல்லாம்
எனது மனைவி கேட்கமாட்டாள்
எப்பொழும்
கதவுகளும் ஜன்னல்களும்
திறந்துவிட்டபடி
காற்றில் மிதந்து
இயற்கையை
ரசித்துக்கொண்டிருக்கும்
எனதுவீடு.

சைக்கிள் ஞாபகத்திற்கு
வரும் பொழுது
கடைத்தெருவரை
நடந்துபோய்
எடுத்துக்கொண்டு போகலாம்
பயணத்தில் தடையிருக்காது.
____________________________________

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007

செஞ்சோலைவலி

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

இடிந்த கட்டிடங்களுக்குலிருந்து
பள்ளிக்கூடங்கள்
மீட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
நைந்துபோன
வெள்ளைச்சீருடைகளும்
கிழிந்த புத்தகங்களும்
உடைந்த பேனாக்களும்
வெளியிலெடுக்கப்படுகின்றன.

முல்லைத்தீவு அழுகிறது.

சூரியன் குருதியில்
மூழ்கி திணறியது
நாம் தூக்கிய
தேனீர்கோப்பைகளினுள்
குருதி தீடீரென கொட்டியது
சிதறிய நம்சதைகள்
மேகங்களுக்கிடையில்
சிக்கிக்கொண்டன.

செஞ்சோலை சிவப்புசோலையானது.

மரங்களின் நிழல்கள் உடைந்து
வேரோடுசிதறிக்கிடந்தன
எனது சகோதரிகள்
செத்து கும்பல்கும்பலாக கிடந்தார்கள்
எனது ஓருகையும் ஒருகாலும்
சிதறி எங்கோ போயிற்று
என்னை ஒரு பெண்போராளி
தூக்கிப்போகிறாள்.

நமது வெள்ளைச்சீருடைகள்
குருதியில் தோய்ந்திருந்தன
வெண்கட்டிகளும்
கரும்பலகைகளும்
ஆசிரியர்களின்முன்
அழுதபடி நின்றன.
வெள்ளைக்காரர்கள் வந்தார்கள்
எங்கள் மொழியை புரியாது நின்றார்கள்
அவர்கள் போக பின்னால்
ஆச்சரியமற்றுக்கொண்டிருந்தது.

அதிகாரவாதிகளிடம் பேசினோம்
கருணையாளர்களிடம் பேசினோம்
நடுநிலையாளர்களிடம் பேசினோம்
யாரும் எதையும் பேசஇயலாது
உதடுகளை சொறுகிக்கொண்டனர்
முல்லைத்தீவு அழுகிறது.

போர் நமக்காகவும் தொடங்கப்படுகிறது
நம்மீதும் தாக்குதல்கள்
இடம்பெறுகின்றன
நமக்காக குண்டுகளும் விமானங்களும்
இறக்குமதி செய்யப்படுகின்றன
நாம் தொடர்ந்து
யுத்தத்துடன் போராடுகிறோம்
வெள்ளைச் சீருடைகளின்
சமாதிகளின் மத்தியில்
நமது புத்தகங்கள்
தொடர்ந்து எரிகின்றன.

மிஞ்சிய ஒருகையில்
பேனாவை எடுக்கிறேன்
மிஞ்சிய ஒருகால்
பள்ளிக்கூடம் நோக்கிபோகிறது
காயப்பட்ட தேகம்மீது
குருதியுறிய வெள்ளைச்சீருடையை
கழுவி உலர்த்தி
அணிந்திருக்கிறேன்.

கூடு உடைந்ததிற்காகவும்
நிழல் கிழிந்ததிற்காகவும்
முல்லைத்தீவின் அழுகை
அடங்காது எரிந்தது.
__________________________________________
பின்குறிப்பு:ஆகஸ்ட் 14 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
வள்ளிபுனம் செஞ்சேலைவளாகத்தில்
இலங்கை வான்படை கீபீர்விமானம் குண்டு வீசி
தாக்கியதில் 53 மாணவிகள் கொல்லப்பட்டனர்.125க்கும்
மேற்பட்டோர் காயமடைந்தனர.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த நெஞ்சை உருக்கும் நிகழ்வு குறித்த விவரணம் ஒன்றை தயாரிக்கும் முகமாக நேரடியாக காயமடைந்த மாணவிகளையும் பலியான மாணவிகளின் பெற்றோர்கள் அவர்கள் கல்வி கற்ற பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,சக மாணவர்கள் முதலியேரை செவ்வி கண்டேன். நான் கலங்கி ஆடிப்போயிற்றேன்...நான் எழுதி இயக்கிய இந்த வலிமிகுந்த சந்திப்பிலானான விவரணத்தை பாருங்கள்.
http://www.yarl.com/videoclips/view_video.php?viewkey=885e0d7c260cc007e8b9
-------------------------------------------------------------------------------------
செஞ்சோலையில் என்ன நடந்தது...
ஓகஸ்ட் 14 2006

இருள் சூழ்ந்த கிழக்கு


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------


சூரியனோடு கிழக்கை
சிங்கம் விழுங்கிவிட்டது.

முட்கம்பிகளாலும்
எச்சரிக்கை அறிவிப்புகளாலும்
இராணுவ நடமாட்டங்களாலும்
மீன்கள் இடம்பெயர்ந்தன
வாவிகள்
தற்கொலை செயதுகொண்டன.

கிழக்கில்தான் சூரியன் உதிக்கும்
கிழக்கு சூரியனை பிரிந்து
இருட்டாகிவிட்டது
மலைகளுக்கு இடையில்
அழிவுகள் கும்பியாயிருக்கின்றன.

தெருக்களெல்லாம்
குருதி பிறன்ட கேக்துண்டுகள்
மனித சதைகளோடு கிடக்கின்றன
சிங்கத்தின்
கோரப்பற்கள் பொறிக்கப்பட்ட
கேக்துண்டுகளில்
முகாம்கள் எழும்பிவந்தன.

தலைகளற்ற மக்கள் நடுவில்
நீண்ட காலமாய்
முகங்களை மறைத்த
சிங்கத்தின் கோரப்புன்னகையுடைய
பயங்கரக்கொடி
பறந்தபடி இருக்கிறது
கொடியின் அசைவு
சுவாசங்களை உலுப்பி
குழந்தைகளை தூக்கிஎறிந்தது.

எந்த இடத்தில் நாம்
மௌனமாயிருந்தோம்
எப்பொழுது அசையாதிருந்தோம்
குரல்கள் வெடிப்பதன் அவசியம்
எங்குஒளிந்துகொண்டன.
உதடுகள் தீப்பற்றி எரிகின்றன.

நாங்களில்லை
இங்கு நாங்கள் யாருமில்லை
ஊரில்லை
இது நாம் வாழ்ந்த ஊரில்லை
நாம் மீண்டும் தேடுகிறோம்.

பொறிகளாக கேக்குகள்
முளைக்கின்றன
இராணுவம் கேக்கை இனிக்கிறது
ஜனாதிபதி வந்து கொடியேற்றுகிறார்
தலைதுண்டிக்கப்பட்ட எங்களுக்கு
கேக்குகளால் செய்யப்பட்ட
சவப்பொட்டிகளை வழங்குகிறார்.

மாரடித்து அழும் ஓசையோடு
நாம் சூரியனை தேடுகிறோம்
மீன்கள் எங்குபோயின
மீன்களின்பாடல்
புளுதியில் வாடிக்கிடக்கின்றன.

குடும்பிமலையின் மௌனங்களை
அழுகைகளை மெல்லியதாக
சிங்கம் தின்றுகொண்டிருக்கிறது
சிங்கத்தின் வாயிலிருந்து
கொடுரம் கொட்டியபடி இருக்கிறது.

சிங்கத்தின் வாயைகிழித்து
சூரியனோடுகிழக்கை வெளியிலேடுப்போம்
வுhவிகள் திரும்பிவிடும்
மீன்கள் திரும்பிவிடும்
காடுகள் பரந்து நீள்கின்றன
பசுமை மலைகளாய் உயர்கின்றன
கிழக்கில் மீண்டும் சூரியன் உதிக்கும்
_______________________________________
பின்குறிப்பு: இலங்கைஅரசு கிழக்கை ஆக்கிரமித்து
ஜீலை19 கிழக்கின் உதயம் என்ற வெற்றிவிழாவை
கொண்டாடியுள்ளது. இதனால் பலநூற்றுக்கணக்கான
மக்கள் கொள்ளப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள்
இடம்பெயப்ந்துள்ளனர்.

ஏ-9 வீதி:கவிதை

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


நமது நகரத்த சூழ்ந்திருந்த
எல்லா எண்டிகளும் புறப்பட்டுவிட்டன
புனரமைக்கப்பட்ட வீதி
மீண்டும் தனித்திருக்கிறது
நம்மிடம் இப்பொழுது
ஒரு பயங்கர அமைதியும்
குருர கலவரமும் திணிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளயைடித்து பயணிக்கப்பட்ட
இந்த வீதியை சிதைப்பது பற்றி
யாரிடம் முறையிடுவது?
அல்லது எப்படி தடுத்து நிறுத்துவது?
குருதியால் பெறப்பட்ட
சிவப்பு வீதியின் வரலாற்றை
வெள்ளைத்தோரணங்கள்
பிரதிபலிக்காமலே போய்விட்டன
வீதி கிழிந்து கிடக்கிறது.

இது எனது வீதி
எனது வீட்டிற்கு பிரதானமானது
எனக்காக நீளுகிறது
இதற்காக நம்மில் பலர்
குருதி சிந்தியிருக்கிறார்கள்
உயிரை புதைத்திருக்கிறார்கள்.

இப்பொழுது இந்த வீதி
பசியின் வரலாராகவும்
நோயின் தரிப்பிடமாகவும்
உயிர்களை பறிகொடுக்கிறது
நிழலுக்காக முளைத்த
பனைமரங்களின் கனவுகள்
தின்னப்படுகிற முகாமாகிவிட்டது.

பனைமரங்களை வறியாதீர்
என்ற மூத்தோரின் குரல்கள் கேட்கின்றன
எத்தனை பனைமரங்கள்
காயப்பட்டிருக்கின்றன
எத்தனை பனைமரங்கள்
அழிந்துவிட்டன
எதிர்கால பனைமரங்களுக்கான
விதைகளும் நாற்றுக்களும்
எங்கிருக்கின்றன.?

வந்த வண்டிகள் எதையோ
ஏற்றி விட்டு திரும்பிபோகின்றன.
எங்கள் வண்டிகள் எதுவும்
எரிபொருள்இன்றி நகருவதில்ல
வெள்ளபைபோர்நம்ம சூழ்கிறது.

எமது வீதிகளை யார் தீர்மானிக்கிறார்கள்
எமது வண்டிகளை யார் தீர்மானிக்கிறார்கள்
எமது நகரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்
எமது வீடுகளை யார் தீர்மானிக்கிறார்கள்
எமது பனைமரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்
_________________________________________
பின்குறிப்பு:ஆகஸ்ட் 11 2007 உடன் ஏ-9 வீதி
மூடப்பட்டு ஒரு வருடமாகிறது

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...