_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________
எப்பொழுதும் எனது
கையிற்குள்
பிடிபட்டுக்கிடக்கும்
காலுக்குள்
மிதிபட்டுக்கிடக்கும்
எனது சைக்கிளை
மறந்து
கடைத்தெருவில் நிறுத்திவிட்டு
நடந்துபோகிறேன்.
நடைவலித்துக்கொண்டிருந்தாலும்
தெருவின் மணத்தில்
வித்தியாசம் தெரியாமல்
நடையை ரசிக்கத்தூண்டும்
செருப்பை மறந்து
முட்களில்
நடந்துகொள்ளவும்முடியும்
இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தாலும்.
எனது தெரு
சுதந்திரமான நடை
தெருக்கரை மரங்களின்நிழல்
வீட்டை கடந்து
அலுவலகத்தை கடந்து
மறந்தபடியும் போகலாம்
தெருவும் ரசனையும் நீளும்.
எதுவரையும் போகலாம்
எங்கும் எனதுவீடு
எப்பொழும்
தெருவில் உலவலாம்
எப்பொழும்
வீடு வந்து சேரலாம்.
பள்ளிக்கூடத்திற்கு போய்
பிள்ளை
வீடு வந்துசேரமாலிருக்கவும்
எனது மனைவி தேடமாட்டாள்
அவன் வருவான்
இன்னும் படிக்கிறான்
பிள்ளையின் வரவில் இன்னும்
எதிர்பார்ப்பும் விசேஷமும்இருக்கும்.
பால்க்காரன்
உரியநேரத்துக்கு வருவான்
தபால்க்காரன்
உரியநேரத்துக்கு வருவான்
பத்திரிகை
உரியநேரத்துக்கு வெளிவரும்
கடைகள் உரியநேரத்துக்கு
திறந்து வியாபாரம் நடக்கும்.
எங்கே உங்கள் செருப்பு
எங்கே உங்கள் சைக்கிள்
என்றெல்லாம்
எனது மனைவி கேட்கமாட்டாள்
எப்பொழும்
கதவுகளும் ஜன்னல்களும்
திறந்துவிட்டபடி
காற்றில் மிதந்து
இயற்கையை
ரசித்துக்கொண்டிருக்கும்
எனதுவீடு.
சைக்கிள் ஞாபகத்திற்கு
வரும் பொழுது
கடைத்தெருவரை
நடந்துபோய்
எடுத்துக்கொண்டு போகலாம்
பயணத்தில் தடையிருக்காது.
____________________________________
தீபச்செல்வன்
7 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக