நேற்றும் சில குழந்தைகள் பிறந்தனர்
அவர்கள் அழுகிறார்கள்
அவர்கள் பெரிதாய் சத்தத்தோடு சிரிக்கிறார்கள்
குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்
குழந்தைகள் தங்கள் கண்களால்
இந்த நாட்டைப் பார்க்கிறார்கள்
கைகளை அசைத்து கால்களால்
நடக்கத் தொடங்குகிறார்கள்
லட்சம்பேர் இறந்த பிறகும்
கொல்லப்பட முடியாத நாட்டில்
அங்கங்கள் பறிக்கப்பட்டவர்களின் குழந்தைகள்
ஆரோக்கியமாகப் பிறக்கின்றனர்
இந்தக் குழந்தைகள்
இப்பொழுதே பேசத் தொடங்குகிறார்கள்
நான் கேட்காத இன்னும் பல்லாயிரம் கேள்விகளை
அவர்கள் கேட்பார்கள்
நான் காணாத வாழ்வின் பகுதிகளை
அவர்கள் காண்பார்கள்
அவர்கள் சுகந்திரத்தைப் பெறுவார்கள்
ஏனெனில் கொல்லப்பட முடியாத
நாட்டின் செடிகளாக அவர்கள் பிறந்திருக்கிறார்கள்.
தீபச்செல்வன்
நன்றி : கல்கி