பெரு வழியில் எத்தனையாயிரம்
மக்கள் நடக்கின்றனர்
யாரிடமும் கிண்ணங்கள் இருக்கவில்லை
துயரங்களை காலம் ஏந்திக் கொண்டிருந்தது
திரும்புவர்களும் பெயர்பவர்களும்
எதைப் பகிர்ந்து கொள்வது?
பல்லாயிரம் மையல்களில்
விரியும் வீதிகள் எப்படி உருவாக்கப்பட்டன?
அழிவின் மீதிகளைத் தவிர
எதுவும் வைக்கப்பட்டிருக்காத ஊரில்
பொறிகள் விதைக்கப்பட்டிருந்தன
அலைச்சலின் இறுதியில்
ஒரு கிண்ணம் தண்ணீருக்கு
சனங்கள் அடகு வைக்கப்பட்டனர்
அம்மா பசியோடு இருந்தாள்
பொதிகள் காய்ந்துபோயிற்று
இளைத்து தன் நிலத்தில் விழுகையில்
ஒரு கிண்ணம் தண்ணீர் கேட்டாள்
முட்கம்பிகளுக்குளிருந்து வெளியில் வர
ஒரு வழியும் கேட்டாள்
நிலத்தை மூடியிருந்த இரவில்
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து
ஒரு கிண்ணம் தேனீரோடு ஓடி வந்தேன்.
தீபச்செல்வன்
நன்றி : கல்கி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக