தீபச்செல்வன்
வேருடன் பிடுங்கி எறியப்பட்ட மரத்தின் இலைகள்
உதிர்ந்து நிரம்பிய யாருமற்ற நிலத்தில்
உறைந்த வீழ்ச்சியில்
கனவுகள் நிரம்பிய வாழ்வு உக்கிக் கொண்டிருக்கிறது
பறவைகள் குந்தியிருப்பதற்கு கிளைகளற்று
அழிந்த வானத்தில் அலைந்தபடியிருக்கின்றன
அழிந்த தடிகளான மரங்களில்
குதித்திறங்கும் நிலத்தின் சூரியன் காயத்தோடலைகிறது.
வாழ்வை காற்று இழுத்து தூக்கி வீசிக் கொண்டிருக்கிறது
பசிமுகங்களில் வரையப்பட்ட
அடக்குமுறையின் சித்திரங்களை
குழந்தைகள் நகமற்ற விரல்களால் கீறி வெளிகளை நிரம்புகின்றனர்.
நிலம் அழிந்து கொண்டிருக்கிறது
நிலம் தின்னும் கொடும்பறவைகள்
மகிழ்வோடு நிலப்பறவைகளை வேட்டையாடுகின்றன
சிறகுகள் கருகிய நிலப்பறவைகள் அடையும்
காலம் நிறைந்த வரலாறு மிகுந்த கனவை
பொந்துகளில் சொருகி வைத்திருக்கின்றன.
மழையும் வெயிலும் நிலப்பறவைகளை தின்னும்
காலத்தில் வாழ்வெனப்படுவது
நிலத்திலிருந்து அறுந்து அந்தரத்தில்
கயிற்றில் தொங்கியலையும் பொதியில் அடைக்கப்பட்டிருந்தது
வெறும் நிலத்தில் வேரறுந்த பறவைகள் மேலைய
வீழ்ந்த மரத்தின் சருகாகிய இலைகள் கீழலைகின்றன.
நன்றி - கணையாழி