o தீபச்செல்வன் ----------------------------------------
மலக்குழிகளிலிருந்து தீர்க்கப்பட்ட எலும்புக்கூடுகள்
மூடிகளின் மேலால் வெளித்தள்ளுவதை
முதலில் குழந்தைகளே பார்த்தனர்
இவை உயிர் பிரிந்தலையும் யாருடைய எலும்புக்கூடுகள்?
சடலங்களுடன் கட்டிப் அடக்கம் செய்யப்பட்ட
பலகைத்துண்டுகளிலும் படிக்க முடியாத குறிப்புக்கள் இருக்கின்றன
சடலங்களுடன் மீட்கப்பட்ட
பனை மட்டைகளில் ஒலி பிரிந்த வார்த்தைகள் ஒட்டியிருக்கின்றன
அடக்கி மலக்குழிகளில் தள்ளப்பட்ட பொலித்தீன் பைகளின்
மூலைகளில் அடங்கியிருக்கும்
உயிரை தேடும் தாய்மார்கள் வந்திருக்கின்றனர்.
கழுத்தில் கட்டப்பட்டிருந்த சயனைட் குப்பிகளில்
இறுதி வார்த்தைகளை அவர் நிரப்பி விட்டுப் போயிருக்கிறார்கள்
கையில் இலக்கத்தகடுகள் கட்டிய கறுப்பு கயிறுகளில்
இருந்த முடிச்சுக்களினிடையில் துயர்க் காலம் படிந்திருக்கிறது
வரிச்சீருடையின் காற்சட்டை மட்டும்
அணிந்திருக்கும் இரண்டு எலும்புக்கூடுகளில்
அழிக்கப்பட்ட தாய்நிலத்தின் வரைபடம் கீறப்பட்டிருக்கிறது
கிணற்று வாளியில் தன் பிள்ளையின்
கண்களை ஒரு தாய் எடுத்து வைத்திருக்கிறாள்
ஏன் சடலங்கள் மலக்குழிக்குள் ஒளிக்கப்பட்டன?
உக்கிப்போகாத சதைத் துண்டுகள்
பெருங்கனவின் எச்சங்களாய் உருந்து கொட்டுகின்றன
கால்சட்டை மட்டும் அணிந்த ஒரு எலும்புக்கூட்டில்
ஒரு பெண் தன் கணவனின் மடியாத புன்னகையை தேடுகிறாள்.
பிடவை சுற்றப்பட்டிருக்கும் எலும்புக்கூட்டில்
ஆழமாக விழுந்திருக்கும் கீறல்களை எல்லோரும் எண்ணுகிறார்கள்
நிர்வாணமாயிருக்கும் எலும்புக்கூட்டில்
குழந்தைகள் தங்கள் தந்தை தாய்களை உணருகின்றனர்
அடையாளங்களாக பொலித்தீனில் உக்காது படிந்திருக்கும்
காயங்களையும் வீக்கங்களையும்
ஆற்றத் துடிக்கின்றனர் தாங்காதிருக்கிற தாய்மார்கள்
மலக்குழியில் சடலங்கள் நிறைத்து மகிழ்பவர்கள் யார்?
ஆக்கிரமிப்பாளர்களால் மூடப்பட்ட கிணற்றுக்குள்
உயிர் வதைபட்ட மணம் கிளம்புகிறதை நான் பார்க்கிறேன்
அவர்கள் இறங்கி கைகளை கழுவி மூழ்கிய கிணற்றுக்குள்
தண்ணீரில் இரத்தக்கறைகள் மிதக்கின்றன என தாய் சொல்லுகிறாள்
இடிபாடடைந்த சுவர்க்கரைகளில்
சித்திரவதையின் கோடுகள் நிறைந்த
எலும்புக்கூடுகளின் தலைகள் இறுக்கமாக மூடுண்டு கிடப்பதையும்
குழந்தைகள்தான் பார்த்தனர்
ஏன் ஏலும்புக்கூடுகள் வெளியில் வருகின்றன?
எலும்புக்கூடாகும் நகரத்தில்
குழந்தைகளின் கண்களை பொத்திக் கொண்டு வாருங்கள்
இவை தேடியலைந்து கொண்டிருக்கும் யாருடைய எலும்புக்கூடுகள்?
___________________________
04.06.2010
ஒளிப்படம் : கஜானி