o தீபச்செல்வன் ----------------------------------------
அடர்த்தியாய் வளர்ந்துபோயிருக்கிற
பற்றைகளுக்குள் ஆதிக்கத்தின் அபாயம் படிந்திருக்கிறது
குழந்தைகள் தூரத்திற்கு சென்று விளையாட வேண்டாம்
என்று அறிவுறுத்தும்
தாய்மார்கள் வேலிகளை அடைக்கவும்
கூடாரங்களுக்கு கதவுகளை பூட்டவும் முயல்கின்றனர்.
விட்டுச் சென்ற பொருட்கள்
எங்கும் சிதைந்து கிடக்கின்றன
மெலிந்து ஒடிந்து
வந்து சேரும் பொழுது முதலில் நிலத்தில்
விழுந்து ஆற அழவேண்டும் போலிருக்கிறது
கைவிடப்பட்ட சனங்களின்
நிலத்தில் எங்கும் ஆதிக்கமும் ஆக்கிரமிப்புமே
நடப்படுகின்றன
முன்பொரு காலத்தில் அழகாயிருந்த நமது நகரம்
புதிய வடிவத்தில்
சூறையாடப்படும் புத்திகளால் வார்க்கப்படுகிறது
குழந்தைகள் பற்றைகளுக்குள் படிந்திருக்கும்
அபாயங்களை கிளற முற்படுகின்றனர்.
இது எனது நகரம் இல்லைப் போலிருக்கிறது.
இங்கு வந்திருப்பவர்கள்
எனது மனிதர்கள் இல்லைப்போலிருக்கிறது.
காலம் எங்களை இழுத்தடித்து ஏமாற்றியிருக்கிறது.
ஒன்றுமில்லாத நிலத்தில்
சூறையாடப்பட்ட நமது பொருட்களை இழந்து
நிவாரணத் தகரங்களில் வேகிக்கொண்டிருக்கிறது
மீளத் தொடங்குகிற வாழ்வு.
முகாங்களில் கட்டி வைத்திருந்த மூட்டைகளுடன்
இன்னும் இன்னும் சனங்கள் வந்திறங்குகின்றனர்
பதிவுகளும் புகைப்படங்களும்
பேரூந்துகளும் என்று
எல்லாவற்றிலும் அலைச்சலும்
துயரமும் வழங்கப்படுகிறது
கடும் சித்திரவதைகளுக்குப் பின்னால்
அவர்கள் தங்களை தகரங்களால் மூடிக்கொள்கிறார்கள்.
கண்ணிவெடிகளை பணியாளர்கள் பிடுங்கிக்கொண்டிருக்கும்
பகுதியை தாண்டி மாடுகள் செல்கின்றன
சிதைந்த சைக்கிள்களின் பாகங்கள் முதல்
எல்லாவற்றையும் தேடிக்கொண்டிருக்கிறோம்
வாழ்வுக்காக மிகத் தவிக்கிறோம்.
விட்டுச்சென்ற சமையல் பாத்திரங்கள் முதல் புகைப்படங்கள் வரை
எல்லாவற்றையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.
அந்நியர்கள் இந்த நிலத்திற்கு பொருத்தமற்ற
வேறுபடட் பொருட்களை கொண்டு வருகிறார்கள்
அழிக்கப்பட்ட பெருநிலமெங்கும்
சிதைவுகளிலிருந்து செடிகள் முளைக்கின்றன
அழிவு உறைந்துபோயிருக்கிற அபாயச் சூழலில்
இந்தக் குழந்தைகள் புன்னகைக்கத் தொடங்குகிறார்கள்.
__________________
13.10.2010
நன்றி : தீராநதி ஏப்பிரல் 2010
3 கருத்துகள்:
கைவிடப்பட்ட சனங்களின்
நிலத்தில் எங்கும் ஆதிக்கமும் ஆக்கிரமிப்புமே
நடப்படுகின்றன//
அவலங்கள் நிறைந்த வாழ்விற்குப் பின்னால் எமக்கு அழகான வாழ்வாவது கிடைக்காவிட்டாலும் சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ முடியவில்லையே எனும் ஏக்கத்துடன் ஆக்கிரமிப்பின் அதட்டல்களுக்கு மத்தியில் வாழ்வோரினைப் பிரதிபலிக்கும் கவிதை.. சோகங்கள் கலந்த எம் ஈழத் தமிழர்களின் உணர்வின் வெளிப்பாடாய்த் ஒலிக்கிறது.
வாழ் நாள் முழுவதும் சோகங்கள் என்று வாழ்வோரை நன்றாகப் கவிதையில் நன்றாகச் சுட்டியுள்ளீர்கள். என்ன செய்ய காலமிட்ட சாபம் எனப் பெரு மூச்சு விடுவதைத் தவிர வெறென்ன இனிச் செய்ய முடியும்?
நண்பா ...வார்த்தைகளில் தெறிக்கும் வலிமொத்தத்தையும் உள்வாங்கிக்கொள்கிறேன் . மனம் கனத்து துடிக்கிறது . நீ விவரிக்கும் காட்சி எதுவுமே எங்களால் முழமையாக கற்பனை கூட செய்து பார்க்க முடியாது . அப்படியான ஒரு சூழலை எங்களால் இங்கிருந்து நினைத்துப் பார்க்க முடியவில்லை . ஆனால் உன் கண்களை உற்றுநோக்கி வார்த்தைகளை உள்வாங்கும்போது இடியை போல இருக்கிறது துயர் .
//மெலிந்து ஒடிந்து
வந்து சேரும் பொழுது முதலில் நிலத்தில்
விழுந்து ஆற அழவேண்டும் போலிருக்கிறது//
இந்த வரிகள் எதனாலோ எனக்கு கேவலை கொண்டுவருகிறது ..
கவிதையை கடைசியாய் நீ முடித்திருக்கிறாயே "இந்தக் குழந்தைகள் புன்னகைக்கத் தொடங்குகிறார்கள்..." என்று , இந்த வரிகளில் நான் நம்பிக்கை பெற்று திடம்கொள்கிறேன் . அம்மண்ணில் படிந்திருக்கிற அபாயம் நீங்கவேண்டும் என்பது தான் நான் உள்ளிட்ட இங்கிருக்கிற தமிழர்களின் வேண்டுதல் ,பிரார்த்தனை , உள்ளம் முழுதும் விரவிக் கிடக்கிற வாழ்நாள் விருப்பம்

கருத்துரையிடுக