01.
மழைநாளில் இடம்பெயரும் தெருவொன்றில்
வெட்டப்பட்ட குழியைப்போலிருக்கும் கூடாரங்களுக்குள்
பாலஸ்தீனக் குழந்தைகள் வந்து ஏன் ஒளிந்திருக்கின்றனர்?அகதிகளாக சனங்கள் வெற்றிக்கொள்ளப்பட்ட நாளில்
உலகத்தின் எல்லா அகதிக் குழந்தைகளும் ஒரே மாதிரி அழுகின்றன
சிறுவர்கள் துப்பாக்கிகள் பிடிக்கும் நாளில்
தாய்மார்கள் பொதிகளை சுமந்தலையும் காடுகளின் வெளியில்
எல்லோருமே ஏதோ ஒரு நடவடிக்கையில் துரத்தப்பட்டனர்
வீடு அழித்துத் துடைக்கப்பட்டதையும்
நகரம் சிதைத்து உரு மாற்றப்பட்டதையும்
நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதையும்
இந்த அகதிச் சனங்கள் தாங்க முற்படுவர்
அகதிகளின் காலங்கள் அலைச்சலால் நிரம்பியிருக்கின்றன
மீண்டும் மீண்டும் பொருட்களைக் தூக்கிக்கொண்டு
சில மீற்றர்களுக்கோ சில கிலோ மீற்றர்களுக்கோ நடந்து செல்ல முடியாமல்
இந்தக் குழந்தைகள் கீழே அமர்ந்து விடுகின்றனர்
காடுகளுக்கோ சனங்கள் நுழைந்திராத கடல் வெளிகளுக்கோ
இந்தப் பாதங்கள் செல்ல விரும்புவதில்லை.
குழந்தைகளுக்கான உணவிற்காய்
அடுப்பு எரிந்து கொண்டிருந்த வீட்டை யுத்தத்தீ எரித்து விட்டது
கோகட் நகரத்தில் நீண்டுசென்ற அகதி வரிசைகள் மலைகளை இடித்தன.
02.
ஆப்கானிஸ்தானில் இடிபாடடைந்த கட்டிடங்களுக்குள்ளால்
ஈழக் குழந்தைகள் ஏன் செல்லுகின்றனர்?
கொங்கோ குடியரசின் சனங்கள் எங்கள் கூடாரத்திற்குள்
இரவில் வந்து தங்குகின்றனர்
ஒரு துண்டு ரொட்டிக்காகவும் ஒரு கிண்ணம் கஞ்சிக்காகவும்
ஒரு கோப்பை தண்ணீருக்காகவும்
உலகத்தின் எல்லா அகதிக் குழந்தைகளும் ஒரே மாதிரி அழுகின்றன.
கனவுகள் நிராகரிக்கப்பட்டு பிரித்து சிதைக்கப்பட்ட
இணைந்த மாநிலத்தில் காலம் படியவிட்டிருக்கும்
ஈழ அகதித்துயரை
ஆக்கிரமிப்பாளர்கள் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்
ஒரு பெருமழையையோ சிறிய தூறலையோ
இந்தக் கூடாரங்கள் தாங்க முடியாதிருக்கின்றன
நிலத்தின்மீதாக அரும்பும் எல்லாக் கனவுகளையும் சீவியெறிந்து
நிலத்தை கொலைசெய்யும் ஆக்கிரமிப்பாளர்கள்
எல்லா திசைகளுக்கும்
மிகவேகமாக சென்றுகொண்டிருக்கின்றனர்
இனங்களின் நிறங்களை சூறையாடும் தந்திரங்களை
ஆக்கிரமிப்பாளர்களின் தலைவனோ சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை
சோமாலியாவின் பசிக்கிண்ணங்கள் மாத்தளனில் புதைக்கப்பட்டன.
காடுகளை சூறையாட முற்படுபவர்களும்
கிணறுகளை கொள்ளையடிக்க முற்படுபவர்களும்
நிலத்தை அள்ளிச் செல்ல முற்படுபவர்களும்
உரிமையை அழித்து முடிக்க புறப்பட்டவர்களும்
முதலில் குழந்தைகளைத்தான் கொலை செயதனர்
குழந்தைகளின் இரத்தில் அகதிச் சனங்களின் கனவு நனைந்துபோனது
03
சனங்கள் தங்கள் பூர்வீக நிலங்களிலிருந்து துரத்தப்பட்டதை
பெருகும் அகதித்துயிரினிடையில்
வெற்றிகொள்ளப்பட்ட அதிகாரம் நிறைந்திருக்கும்
தங்கள் கொண்டாட்டத்திற்குரிய நாளில் படைகள்
ஒரு கையில் துப்பாக்கியையும்
மறு கையில் மனித உரிமைப் பிரதிகளையும்
எடுத்துச் சென்றதாக
ஆக்கிரமிப்பாளர்களின் தலைவன் சொல்லுகிறான்.
படைகள் கொண்டு சென்ற மனித உரிமைப் பிரதிகளே
சனங்களை நெடுந்தூரத்திற்கு துரத்தின
எல்லாச் சனங்களும் வாழ்வு பிடுங்கப்பட்டு
பூர்வீக நிலத்திலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர்.
எல்லா குழந்தைகளும் புழுதியில் கிடந்தபடி
ஒரே மாதிரியான கிண்ணங்களை தூக்கி வைத்திருக்கின்றனர்
எப்பொழுதும் தூக்கிச் செல்லக்கூடிய
பொதிகளையும் எங்கோ ஒரு இடத்தில் விட்டுச்செல்லுகிறார்கள்
ஆக்கிரமிப்பாளர்கள் படையெடுக்கும்பொழுது
வீசும் குண்டுகளைவிடவும்
கொடுமையாக வார்த்தைகளை எறிகின்றனர்
உலகத்தில் கூடாரங்களும் அகதிகளும் நிறைக்கப்பட்டிருந்தாலும்
அகதிகள் சிரிக்கப் பழகியிருக்கிறார்கள்
டாபர் குழந்தைகள் தடிகளாலான கூடாரங்களுடன்
தேய்ந்த ஒற்றைச் செருப்புக்களையும்
கிழிந்த சட்டைகளையும் வைத்திருக்கின்றனர்
ஆணுறைகளை கொண்டு செல்லும் இராணுவம்
தங்கள் தலைவனுக்கு விடுமுறையில் பெண்குறிகளை கொண்டு வருகின்றனர்
04
யுத்தம் நீண்ட தூரத்திற்கு சனங்களைத் துரத்திவிடும்
மனிதாபிமானம் மிக்கது
ஈராக்கின் சிதைவுகளோடு தலமைத்தேசம் இன்னும் ஒளிர்ந்துகொண்டேயிருக்கிறது.
காஷ்மீரில் சனங்கள் துரத்தப்பட்டார்கள்
கோத்ராவில் சனங்கள் வெளியேற்றப்பட்டார்கள்
ஒரிசாவில் பெயர்த்தலைக்கப்பட்டார்கள்
பள்ளத்தாக்குகளுக்கும் மலைகளுக்கும் வனங்களுக்கும்
அனுப்பி வைக்கப்பட்டனர்
மணிப்பூரின் குழந்தைகளுடன்
டார்ஜிலிங் குழந்தைகளும் காடுகளை அழிக்கத் தொடங்கினர்
மதமும் கடலும் காடுமே சனங்களைத் துரத்துகின்றன
வெளியேற மறுக்கும் சனங்களை அவை கொல்லுகின்றன.
சனங்களிடமிருந்து நிலத்தை மீட்ட அரசின் வெற்றிக் கொடிகள்
அகதிகளின் கையிலிருந்து பறக்கின்றன.
எல்லாத் தேசங்களிலுமிருக்கும் அகதிகள்
எல்லா நாட்களிலும் அலைகின்றனர்.
சனங்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து
தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
__________________________________
ஜீன் 20 : உலக அகதிகள் நாளை முன்னிட்டு இக்கவிதை பிரசுரமாகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக