o தீபச்செல்வன் ------------------------------------------------------------------
நாட்கள் சலித்துப்போன நாட்காட்டியில்
குறித்து வைத்த திகதிகள்
ஊட்டிய நிறத்தை இழந்துகொண்டிருக்கின்றன.
வீடு திரும்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
அம்மா மீளவும் ஒரு திகதியை அறிவித்திருக்கிறாள்.
யரோ ஒருவருடைய வீட்டில்
அவிந்துகொண்டிருக்கிறது எங்களுக்கான உணவு.
வெளியேறி வருவதற்கான
அம்மாவின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதாக
அறிவிக்கப்பட்ட முதல் நாள் மாலை
அரிசியும் காய்கறிகளும் வாங்கி வைத்திருந்தேன்.
புழுதி படிந்து காலம் முடிந்த பேருந்துகள்
வந்துகொண்டிருக்கும் வழியால்
நகர மறுக்கிற பேரூந்தில் அம்மா வருகிறாள்.
இன்னும் வளராமல் இருக்கிற தலைமுடியை இழுத்துக்கட்டியபடி
தங்கை வருகிறாள்.
வெயில் தின்ற
அவர்களின் புன்னகையைப் பற்றி பாடிக்கொண்டிருக்கிறது
இந்த நகரம்.
நகரத்தின் வழிகள் பலவாறு பிரிந்து செல்கின்றன.
திகதிகள் கடந்து செல்ல
தொடர்ந்து காத்திருக்கும் அம்மாவை
அழைத்துக்கொண்டு வரும் பொழுது நகரமெங்கும்
அகதிப் பைகளை தூக்கியபடி
அடையாளத்தை உறுதி செய்துகொண்டு
காலச்சுமைகளை சுமந்தபடி
திரிகின்றனர் பெருநிலத்தின் சனங்கள்.
திரும்புவதற்கு ஒரு வீடு இல்லை என்பதையும்
கடிதம் வந்து சேருவதற்கு ஒரு முகவரி இல்லை என்பதையும்
அம்மா சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
முகவரியும் வீடுமற்று அலையும் அகதியாகி
யாரோ ஒருவருடைய வீட்டில்
வைத்து வரப்பட்ட உடுப்புப் பையை
நான் எடுத்து வருகிறேன் இன்னொரு வீட்டுக்கு.
வீட்டுக்கு வீடும்
தெருவுக்கு தெருவும்
அகதியாகி அலைந்துகொண்டிருக்கிறோம்.
ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகத்திற்கு
வரும் பொழுது மீளவும் பெயர்ந்துகொண்டிருக்கிறேன்.
யாரோ ஒருவருடைய சட்டி பானையில் கொதித்துக்கொண்டிருக்கிறது
மதிய உணவு.
தூக்கிச் செல்லும் சுமை நிறைந்த பைகள் முதல்
எல்லாமே வார்த்தைகளை பகிர்ந்துகொண்டிருக்கின்றன.
அகதிகள் அலைந்து கொண்டிருக்கும் நகரத்தில்
வைத்து நிச்சயமாக வீடு திரும்பலாம்
என்றபடி அம்மா மீளவும் ஒரு திகதியை மாற்றிச் சொல்லுகிறாள்.
மாலை நேரமாய் அகதிகளை அள்ளிக்கொண்டு
புழுதியடிக்கப்பட்ட பேரூந்து
தடுப்பு முகாங்களை நோக்கி புறப்பட்டுச் செல்லுகின்றன.
__________________________________________________
(வவுனியா நகரத்தில் இருந்து) 16.02.2010
தீபச்செல்வன்
5 மாதங்கள் முன்பு