Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 19 டிசம்பர், 2013

நான் வசிக்கும் நிலம்


01
எத்தனை தடவை
இந்த நகரத்தைச் சுற்றியிருக்கிறேன்?
இறுதித் தருணத்தில் 
நகரம் என்னைச் சுழன்றது
நானாய் விரும்பி வெளியேறும்
பொழுது எதற்காக அழுதேன்?

சிதைக்கப்படும் இந்தப் புரதான நகரைப்
பிரிகையில் நான் கொல்லப்படுகிறேன்.

ஏன் இந்த நிலத்தை அங்குலம் அங்குலமாய்
நான் நேசிக்கிறேன்?
ஏன் இந்த நகரத்தின் சுவர்களை
மிக நெருங்கியிருந்து வாசிக்கிறேன்?

சுற்றிச் சுற்றி நாய்கள் குரைத்து
இரவை அதிரப் பண்ணிய நாட்களிலும்
நகரின் தெருக்களில் நான் பாடித் திரிந்தேன்
அபாயங்கள் கால்வாய்களில் ஒளிந்து
வருபவர்களை எதிர்பார்த்திருந்த காலத்திலும்
நான் வாழ்ந்திருந்தேன்.

வாழ்வு என்பது என்ன?
எப்பொழுது மரணம் சம்பவிக்கிறது?

கொலை பிரகடனப்படுத்தப்பட்ட நகரிலுள்ள
சிறிய அறைகூட
பெரிய உலகமாக விரிந்திருந்தது
அச்சம் நிர்மூலமாய் கவிழ்ந்திருந்த பொழுதிலும்
மரணம் வாசலில் பதுங்கிக்கிடந்த பொழுதிலும்
வாழ்வைப் பற்றிக் கனவுகள் வளர்த்தேன்.

02
பயங்கரங்களில் கலந்த பொழுதுகளையும்
துளிர்த்த வாழ்விலிருந்த வார்த்தைகளையும்
கொலை நகரின் மூடப்பட்ட அறையில் விட்டுவந்திருக்கிறேன்

ஒன்றையும் எடுத்துவரவில்லை
எல்லாம்
எனது அறையிலும் தறப்பாள் கூடார வீட்டிலும்
எனது நகரத்திலும் பெருநிலத்திலும்

நான் துரத்தப்படுவதை
நானாகவே வெளியேறிக் கொள்வதாக எழுதுகிறேன்
உயிர் தப்பித்து வந்த பொழுது
நான் மரணித்துப் போனேன்
வேருடன் பிடுங்கி நெருப்புக் கிண்ணத்தில்
நடப்பட்டிருக்கும் செடியாகக் கருகினேன்

எல்லாம் சுழன்று வீழ்ந்தன
அம்மாவைப் பிரியும்
சிறிய குழந்தையாய் தேம்பியழுதேன்

ஒரு குழந்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது

குழந்தைகள் மட்டும் அனுபவிக்கும் துயரங்களாய்க்
குழந்தைகள் மட்டும் பேசி முடியும் கதைகளாய்க்
குழந்தைகள் ஆசைப்படும் உலகமாய்
எல்லாமே நிராகரிக்கப்பட்ட குழந்தைகளைப்போல
தூக்கி வீசப்பட்டேன் எனது நிலத்திலிருந்து!

தீபச்செல்வன்

2011

நன்றி: மகுடம் ஜனவரி -மார்ச் 2013


புதன், 27 நவம்பர், 2013

விதைக்கப்பட்டவர்களின் குரல்


வீடுகளும் கல்லறைகளும்
கோயில்களும் அழிக்கப்படுகையில்
ஒரு நாய்க்குட்டி இடமற்றுத் திரிகிறது

கல்லறையற்றிருக்கும் மரித்தோருக்கும்
வீடற்றிருக்கும் மனிதர்களுக்கும்
இடம் மறுக்கப்பட்ட கடவுள் என்ன செய்வார்

இருப்பவர்களின் வீடுகள் அழிக்கப்படுகையில்
மாண்டுபோன தனது பிள்ளையின்
அழிக்கப்பட்ட கல்லறைக்காய்
ஒரு துண்டு நிலம் கேட்கிறாள்
கார்த்திகை மாதக் காந்தள் மலரோடு
அலையும் தாயொருத்தி

பிள்ளைகளும் இல்லை
கல்லறைகளும் இல்லை
கனவைப் போல
பூத்திருக்கும் காந்தள் பூமரங்களில்
எரிகின்றன விளக்குகள்.

வாழும்பொழுதும்
மரணத்திற்குப் பின்னரும்
இடம் மறுக்கப்படுகையில்
இறந்தவர்களும்
இருப்பவர்களும் என்ன செய்ய முடியும்

எதற்காக இறந்தோம்
எதற்காக இருந்து கொண்டிருக்கிறோம்

நீ நினைப்பாய்
கடவுளுக்குகூட நிலம் மறுக்கப்படுகையில்
என்ன நம்பிக்கையோடு இருக்கிறார்களென

எனது நிலத்தின் கல்லறைகள்
மரணத்தை விரும்புபவையல்ல
அழகியதொரு வாழ்வின் கனவோடு
புதையுண்டு போனவர்கள்
துயிலும் வீடுகள்

குழந்தைகளின் குரலாக
கல்லறைகளின் குரலாக
நாம் கேட்போம்

ஏனெனில் இது எமது தாய் நிலம்
நாம் யாருடைய நிலத்தையும் அபகரிக்கவில்லை

தீபச்செல்வன்

2013 நவம்பர்

நன்றி: குங்குமம்

கணினி ஓவியம் - ரமணி

ஞாயிறு, 17 நவம்பர், 2013

விற்கப்பட்டது உனது காணிநிலம்


யாருடைய கால்களுமற்ற மைதானத்தில்
தனியே உருண்டு கொண்டிருக்கிறது 
நேற்று விளையாடி பந்து

நான் சுவையற்ற மதுவை தனியே அருந்துவேன்
கிராமங்களுக்குள் நுழையும் வீதியில் தனியே செல்லுவேன்
இரண்டு மதுக்கோப்பைகளில் ஒன்றைக் காணவில்லையென
மதுச்சேவகன் தேடுவான்

புளுதி கிளப்பிச் செல்லும் ஒரு மோட்டார் சைக்கிள் 
எங்கு மறைந்தென்று தெருவில் ஒருத்தி தேடுவாள்

இனி யாருமில்லை நண்பா
வெறிச்சோடிய நகரத்தில்
வீதியில் தனியே நடந்து செல்லுகிறேன்
இனி ஒரு கதையையும் பேசப்போவதில்லை

ஏதாவது ஒரு நாட்டில் இறங்கி
குளிருக்குள் கணத்த ஆடைகளை அணிந்தபடி
அனுப்பும் ஒரு புகைப்படத்திற்கு
சோறூட்டுவாள் உனது அம்மா

வர்த்தக மாளிகைகள் எழுப்புதவற்காய் 
நேற்று விற்றுத் தீர்க்கப்பட்டது உனது காணிநிலம்
எல்லோரும் வெளியேறிய நகரத்தில் 
யாரோ அகன்ற வீதிகளைப் போடுட்டு
உயர்ந்த மாளிகைகளை எழுப்புகின்றனர்

எனக்கென இருந்த இறுதி நண்பனே 
நேற்றுடன் நீயும் வெளிநாடு சென்றுவிட்டாய்
தாய் நிலத்திலிருந்து
இன்றுடன் உனது பெயரையும் அழித்துவிட்டனர்

தீபச்செல்வன்

நன்றி: கணையாழி நவம்பர் 2013
ஓவியம்: மணிவர்மா

புதன், 13 நவம்பர், 2013

பிரளயத்தின் சாட்சி

கண்கொண்டு பார்க்க முடியாது
ஒரு பறவை
இரத்தம் சொட்டச் சொட்ட
நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்
பிய்த்து வீசப்பட்டிருப்பதை

முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்
பின்னர் ஆண்குறிகளால்
பின்னர் துப்பாக்கிகளால்

அழுகிய பிணங்களைப்
புணரும் வீரமிகு படைகள்
வேறெதைச் செய்வர்?

யாருமற்ற கடற்கரையில்
ஈனக்குரல் எழுப்புகையில்
ஒரு ஊர்க்குருவியும் துணைக்கில்லை

வற்றப்பளையம்மன் எங்கு சென்றாள்?

யாராலும் எழுத முடியாது
நேரிட்ட நிர்க்கதியை
சிந்திய கண்ணீரை
உறிஞ்சபடப்ட்ட இரத்தத்தை
பிய்த்தெறியப்பட்ட கதையை
இறுதிக்குரலை

நிராயுதயபாணிகளை வேட்டையாடும்
கொலையாளிகளிடம்
‘அது நானில்லை’
என்று சொன்னாய்
யாரை அவர்கள் விட்டு வைத்தனர்?

அன்றொருநாள் கதிர்காமநகரில்
மன்னம்பேரியை நிர்வாணமாய்
இழுத்துச் செல்கையிலும்
அவளிடம் துப்பாக்கியேதுமில்லையே

இசைப்பிரியா,
முள்ளிவாய்க்கால் பிரளயத்தின் முடிவில்
அணையும் இறுதிக்குரலில்
மாபெரும் குற்றங்களின் சாட்சியமானாள்.

இனியும்
ஒரு பெண்ணுக்கும்
ஒரு இனத்திற்கும் வேண்டாமென்றாள்
ஈனக்குரலும் நெருப்பு மேனியுமாய்

தீபச்செல்வன் 

மன்னம்பேரி: 1971இல் கதிர்காமம் என்ற இடத்தில் இலங்கைப் படையினரால்; பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சிங்களப் பெண் போராளி. 
வற்றாப்பளையம்மன்: முள்ளிவாய்க்காலுக்கு அருகில் உள்ள கோயில். 

நன்றி: குமுதம்


வியாழன், 3 அக்டோபர், 2013

எனது குழந்தை பயங்கரவாதி


தமது துப்பாக்கிகளிலிருந்து சமாதானம் பூக்கிறதென
அவன் சொல்லும்போது
சமாதானம் எப்படியிருக்கும் என 
நான் கேட்கவில்லை

தமது கண்களிலிருந்து பாதுகாப்பு பிறக்கிறதென
அவன் சொல்லும்போது
பாதுகாப்பை எப்படி உணர்வதென 
நான் கேட்கவில்லை

எமது நிலத்தை தாம் ஆக்கிரமிக்கவில்லையென
அவன் சொல்லும்போது 
புத்தர்சிலைகளும் இராணுவமுகாங்களும் எப்படியானவையென 
நான் கேட்கவில்லை

நாம் அனைவரும் ஒருநாட்டுப் பிரஜைகளென
அவன் சொல்லும்பொழுது 
சகோதரர்களை நீ எப்படி நடத்துவாய் என 
நான் கேட்கவில்லை

யாரும் காணாமல் போகவில்லையென 
அவன் சொல்லும் பொழுது
சரணடைந்தவர்கள் எங்கு சென்றனரென
நான் கேட்கவில்லை

எமது பெண்கள் எவரையும் 
வன்புணர்ந்து கொல்லவில்லையெனவும்
இளைஞர்கள் எவரையும் 
நிர்வாணமாக இருத்தி பின் பக்கமாக 
தலைகளில் சுடவில்லையெனவும் 
அவன் சொல்லும்பொழுது 
அந்த நிலத்தில் குருதி எப்படி கொட்டியதென  
நான் கேட்கவில்லை

யாரையும் தாம் கொல்லவில்லையெனவும்
கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகளெனவும்
அவன் சொல்லும் பொழுது 
நான் சொன்னோன்
எனது குழந்தை ஒரு பயங்கரவாதியென.

தீபச்செல்வன்

நன்றி: தீராநதி அக்டோபர் 2013

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

கள்ளத்தோணி

இம்முறையும் குழந்தையை நாங்கள்தான் கொன்றோம்
ஏனெனில் அவனுக்கென்று எம்மிடம் எதுவுமில்லை

மூன்று வயதுச் சிறுவனொருவனுக்கு
ஆழ்கடலில் என்ன வேலையென நீங்கள் கேட்கக்கூடும்?
அவன் தன் தந்தையைச் தேடிச்சென்றான்
தந்தை எதற்காகச் சென்றார்?
யாருக்கும் இங்கு ஒன்றுமில்லையே

அதனால் அக்குழந்தையை நாம்தான்
பேர்த் நகருக்குச் செல்லுமாறு துரத்தினோம்

தந்தைக்கு கொடுப்பற்காக
நெடுநாளாக வைத்திருந்த முத்தங்களைத் தவிர
அவன் எதையும் எடுத்துச்செல்வில்லை

கடலில் இறங்கிய பொழுது
முன்னால் எதிர்கரையும் மரணமும் மிதந்தது
எனினும் அவன் சென்றான்
ஏனெனில் அவனுக்கென்று நிலம்தான் இல்லையே

நேற்று ஒரு தோணி மூழ்கிய பொழுதும்
இன்றைய தோணியும் புறப்பட்டு விட்டது
ஒரு குழந்தைக்காக நான் இரங்கிக்கொண்டிருக்கையில்
கும்மிருட்டில் இன்றொரு குழந்தை
முதுகிலொரு கனத்த பையுடன்
கள்ளத்தோணியில் ஏறிக்கொண்டிருக்கிறது

ஆழ் கடலிருட்டில் அலைந்து கொண்டிருப்பது
நிலமற்ற தோணிகளெனினும்
எங்கோ ஒரு கரையில் ஒதுங்கும் சடலங்களாக

கடல்மடியில் குப்புறக்கிடக்கும் இக்குழந்தை
ஆப்கானியக் கள்ளத்தோணியா?
ஈரானியக் கள்ளத்தோணியா?
மியன்மார்க் கள்ளத்தோணியா?

பெருங்கடலைக் குடித்தும் தாகம் அடங்காமல்
கள்ளத்தோணியென கிடக்கிறது ஒரு ஈழக்குழந்தை
நாம்தான் அவனைக்கொன்றுவிட்டோம்
ஏனெனில் எம்மிடம்தான் எதுவுமில்லை

எம் நிலத்தில் நாளை ஒரு குழந்தையுமில்லை!

-தீபச்செல்வன்

நன்றி - ஆனந்த விகடன்

புதன், 29 மே, 2013

பதுங்குகுழியில் கொல்லப்பட்ட குழந்தை


ஒரு பாலகனாகவே இருந்தைத்தவிர
வேறெதையும் செய்வில்லை 
ஒட்டிய வயிறுடன்
நிராயுதமான களத்தில் அணிந்திருந்த காற்சட்டையையும்
முடியிருந்த போர்வையையும் தவிர வேறெதுவுமில்லை

இனியொரு பாலகரின் கண்களை எப்படிப் பார்ப்பது?

ஏதுமறியாப் பாலகர்கள்
இம்மண்ணில் பிறந்திருந்தைதவிர
வேறெதையும் செய்திருக்கவில்லை 

தனித்துப் பிடிபட்ட சிறுவனிடம்
ஏக்கம் மிகுந்த இரண்டு கண்கள்மட்டுமே இருந்தன

குற்றங்களால் நிரம்பியிருந்த வானத்தில் 
ஒரு பறவையும் இல்லை
பதுங்குகுழியில் பிறந்த குழந்தை
பதுங்கு குழியிலேயே கொல்லப்படுகையில் 
எஞ்சியது ஒன்றுமில்லை 

இப்பூமியில் மீண்டும் புற்கள் முளைக்குமா? 

நெஞ்சில் இரும்புத் துப்பாக்கிகள்
அப் பாலகன் இறுதிக் குரலெடுக்கையில்
உடைந்த நிலவைத்தவிர 
எந்தச் சாட்சியுமில்லை

20.02.2013 

தீபச்செல்வன்

நன்றி: நேர்காணல் இதழ்

செவ்வாய், 7 மே, 2013

ஓரிடம்தேடப்பட்டவனைக் காணவில்லையென 
கேட்டுக் கொண்டே செல்பவர்
நேற்று முழுவதும் கதவை பூட்டியிருந்தார்

வாடகைக்கு தங்கியிருந்த
ஒரு கவிஞனிடம் வார்த்தைகள் மட்டுமேயிருந்தன

ஓரிரவில் பூட்டப்பட்ட கடையின் முன்பாக
நாய்கள் சலம் கழிக்குமிடத்தில்
உறங்கவிருக்கும் மனிதனுடன் பேசிக்கொண்டே
ஒரு இரவை முடித்திருக்கும் சில நேரங்களில்
குழந்தையைப்போல அழுதுகொண்டே நடக்கையில்
யாருமில்லை

வார்த்தைகளுக்காய்த் தண்டிக்கப்படும் ஒரு கவிஞன்
திறக்கப்படாத கதவுகளைத் தட்டுகையில்
வைக்க இடமற்றிருக்கும் பொருட்களைவிடவும்
மிகப் பாரமாயிருந்தது இதயம்

அழைக்க விரும்பாத நண்பர்கள்
வெளியேறிச் செல்லும்பொழுது
பார்த்துக் கொண்டே நின்றனர்
விடைபெறும்பொழுது
யாதொரு கையும் அசைத்தனுப்பவில்லை

குடியேறிச் சில நாட்களிலேயே
வெளியேறச்சொல்லும் பொழுது
ஒரு நாள் கூட அவகாசம் கொடுக்கக்கூடாதவன்
என்று வாசலில் வெளியேற்றக் காத்திருக்கும்
யாரோ ஒரு அம்மா
தன் பிள்ளையைப் போலவும் நினைக்கவில்லை

சூரியன் உதித்திராத அதிகாலையில்
கையில் கிடைத்த பொருட்களுடன்
பூமியில் ஓரிடம் தேடி
யாருமற்றவனாய்
நகரத்தைவிட்டுப் பெயர்ந்து செல்லும்பொழுது
எதிரில் யாதொரு வண்டியுமில்லை

ஒரு கவிஞன் நாட்டைவிட்டுத் தப்பியோடினான்!

தீபச்செல்வன்

கணையாழி மே 

திங்கள், 8 ஏப்ரல், 2013

ஒரு குழந்தையை பலியிட்டதன் பின்னரான புரட்சிபலியிட முன்பாக விட்டுச்செல்லப்பட்ட
ஒரே ஒரு பார்வையில்
தன் சாட்சியை வழங்கிற்று அக்குழந்தை

கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு
துப்பாக்கிகளின் முன்பாக
இருத்தப்பட்ட  குழந்தைகளிடம்
பொம்மைகள்கூட இல்லை

ஆயிரமாயிரம் குழந்தைகளுக்கு
எதிரான குற்றங்களில்
மலர்ந்திருக்கிறது அல்லிப்பூ

ஓரினம் அழித்துத் துடைக்கப்பட்ட நாளில்
எதுவும் முடிந்திருக்கவில்லை
எதனையும் முடி மறைக்க முடியாதபடி
எதையே விட்டுச்சென்றது அக்குழந்தை

நஞ்சூட்டப்பட்ட இறுதி உணவோடு
பூமியின்மீதான கடைசிப் பார்வையைச் செலுத்துகையில்
அடுத்த தலைமுறையை
புரட்சிக்கு அழைக்கும் முதல் குழந்தையாயிருந்தது

குழந்தைகளுக்காகவே யுத்தம் செய்தோம்
யுத்தத்தைத் தவிர ஏதுமறியாக் குழந்தைகள்
திரும்ப வேண்டுமென காத்திருக்கிறது இப்பூமி

வாழத் தொடங்கும் ஒரு குழந்தையை கொல்லுகையில்
அதன் கடைசிப் பார்வையிலிருந்து தொடங்கிற்று புரட்சி

அழிந்துகொண்டிருக்கும் தேசத்தை
மீண்டும் துளிர்க்கச் செய்கிறது
ஒரு குழந்தையைப் பலியிட்டதன் பின்னரான புரட்சி!


தீபச்செல்வன்

நன்றி: குமுதம்


சனி, 9 மார்ச், 2013

இரும்புக்காட்டின் பூக்கள்வண்டிகள் எல்லாம் இரும்புக் குவியலாயிருக்க
சக்கரங்களும் இல்லை
ஓட்டமும் இல்லை
துருப்பிடித்த பறவைகளின் நிழல் கவிந்த
யாருமற்ற இடுகாட்டில்
பிஞ்சுத் தலைகளின்மீது இரும்பு மூட்டைகளைச்
சுமக்கின்றனர் சிறுவர்கள்

இரும்பு படிந்த உடல்களிலிருந்து
உதிர்கிறது துருவேறிய துகள்கள்
மலிவான சிறுவர்கள் 
எவ்வளவு பாரமேனும் சுமப்பார்களென
விலைக்கு வாங்கப்பட்டனர்
வெடிக்காத குண்டுப் பொறிகளுக்குளிருக்கும் 
இரும்பை கொண்டு வருவார்களென
இரும்புக்காட்டில் தொலைவுக்கு அனுபப்பட்டனர்

அழுகிய இரும்பை நெறுக்கும்
தராசுகளுக்குள் உறங்கி எழும் சிறுவர்களிடம்
இருந்தவை இரும்புகளைவிட பாரமான கண்கள்

கால்களுக்கு கீழேயும் தலைக்கு மேலேயும்
வெடிகுண்டுகள் நிறைந்திருக்க
சிறுவர்கள் உள் நுழையும்பொழுது
இரும்புக்காட்டில் மலர்ந்திருக்கும் பூக்களை பறித்துக்கொண்டு 
உக்கிய பேரூந்தையும்
உருட்டிச் செல்லுகின்றனர் யாரோ!

தீபச்செல்வன்

நன்றி: கல்கி

புதன், 6 மார்ச், 2013

மெரீனாக்கரை
மெரீனாவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்
தேனீர்க் கோப்பையுடன் எதிர்பார்த்திருக்கும் அம்மாவை 
பெயர்ச்சியால் கவிந்த வானம் இருண்டுபோக
புலம் இழந்த பறவைகள் அலைகின்றன
நேற்றும் ஊரிலிருந்து சில நண்பர்கள் 
படகெடுத்து பெருங்கடலின் வழியே சென்றனர்

எனது நகரத்தின் மரநிழலில் நடப்பதுபோலவும்
எனது தெருவில் சைக்கிளை ஓட்டுவதுபோலவும் 
எதுவுமில்லை 
யாருக்கும் புரியாத பேச்சோடு
எதிரில் யாருமற்றிருந்தேன் 
வெடிப்பதுபோல ஊதும் இருதயம் முழுவதும் தாய்மண். 
கனவுகள் காய்க்கும் பனைமரக்காட்டிலிருந்து 
வேர் அறுத்த மரமாய்
சென்னை நகரத்திற்குத் தூக்கி எரிந்தது யார்?
மண்ணிழந்து வாடத் தொடங்கிற்று செடி
தாய் மண்ணைப் பிரிய
தேம்ஸ் கரைபோல இலையுதிர்காலத்தில் 
அசைவற்று இருக்கிறது மெரீனாக்கரை
காற்று எங்கோ இழுத்துச் செல்லுகிறது பறவைகளை
நள்ளிரவில் கண் விழிக்கச் செய்யும்படி
மெரீனாவுக்கு மேலால் தாழ இறங்கி 
கத்திச் செல்கின்றன சில வலசைப் பறவைகள்! 

தீபச்செல்வன் 

நன்றி: தீராநதி மார்ச் 2013

திங்கள், 25 பிப்ரவரி, 2013

கொலை பூமி
வென்றவர்கள் கைப்பற்றியாளும் பூமியில் 
தோற்ற பூர்வீகச் சனங்களை 
அழிவுக்கு பரிந்துரைத்திருக்கிறான் அரசன்
காயங்களுககு உள்ளான புன்னகையையும்
சிதறுண்ட கைகளின் சின்னத் துண்டுகளையும்
யுத்த அரசன் பிடுங்கிக் கொள்ளுகிறான்
நகரில் கொலை வார்த்தைகளை எரிந்து
பயங்கரங்களை தெருவில் திறந்து
பூமியிலிருந்து நம்மை துடைக்கும்படி
மாபெரும் கட்டளையிட்டு
குழந்தைகளை தடாககங்களில் எறிந்து 
மிரட்டும் நாட்களில் 
ஒரு மருத்துவமனையை சவச்சாலையாக்கினான்
கீரிமலையின் கேணியில்
விஷத்தை கலந்து 
பாவத்தண்ணீராக்கி பூமிக்குப் பாய்ச்சினான்
சனங்களின் பெயரை கொலைப்பட்டியில் எழுதி
நகரெங்கும் வீசியெறிந்தான்
அடிமை கொள்ளப்பட்ட நகரில் 
வென்றவர்கள் யுத்த ஆட்டம் போடுகையில்
தோற்ற நாமோ துயருக்குள் அமிழ்த்தப்படுகிறோம்
யுத்த அரசனோ நமது பூமியை கொலை செய்து 
அடியில் விசமரத்தை நடுகிறான்
நிலத்தோடு எல்லாம் பிடுங்கப்பட்டு 
அழிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட எனது சனங்களே!
கொலை பூமியில் 
குழந்தைகள் இன்னுமா போராட வேண்டும்?

* * *
கணையாழி மார்ச் 2012 


(இக்கவிதைக்கு கணையாழியின் சிறந்த கவிதைக்கான ஆண்டாள் விருது வழங்கப்பட்டிருக்கிறது) 

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

இருக்கப் பிரியப்படும் இடம்


குளத்தின் மேலாக வட்டமிடும் பறவைகள் இல்லை
துப்பாக்கிகள் தொங்கும் மருதமரங்களின் கீழாக
பேசிக் கொண்டிருக்க யாருமில்லை
ஆஷா! நாங்கள் எங்கு செல்வோம்?

இரவில் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்தபடி
பேசிக் கொண்டு நடந்து வரும் பொழுது
நான் துப்பாக்கிகளில் மோதுண்டேன்
ஒரு தெரு எப்படியிருக்கும்?

கால்களறியாத தெருக்களில் ஏதோ விளைய
அழிவின் நிழலில்
அழகிய தோட்டத்தைக் காண்பீர்கள் என்று
நாம் வாழும் காலத்தைச் சபித்தது யார்?

உண்ணிப் பூக்கள் ப+த்திருக்க
பச்சைப் பாம்புகள் ஈச்சைகளுக்குள் புணர
கைகளுக்குள் சிக்காத காணாங்கோழிகள்
பற்றைகளுக்குள் இருந்து மிரண்டபடி பார்க்க
நீயும் நானும் ஆற்றங்கரையிலிருப்போமா?

ஆஷா! இரத்தம் பட்டு வறண்ட கன்னங்களுக்கு
இனிக்கும் உனது முத்தம் வேண்டும்
என்னோடு நீயும் இருக்கப் பிரியப்படும் இடத்தை
நான் எப்படி இழப்பேன்?

முத்தங்கள் பூத்த கொடிகள்; படரும்
நாவல் மரத்தில் நீ பழங்களைப் பறிப்பாய்
நான் கிளைகளை வளைப்பேன்
பழங்களை உண்ண பறவைகள் திரும்பும்.

நன்றி : தீராநதி ஜனவரி 2013 

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...