தமது துப்பாக்கிகளிலிருந்து சமாதானம் பூக்கிறதென
அவன் சொல்லும்போது
சமாதானம் எப்படியிருக்கும் என
நான் கேட்கவில்லை
தமது கண்களிலிருந்து பாதுகாப்பு பிறக்கிறதென
அவன் சொல்லும்போது
பாதுகாப்பை எப்படி உணர்வதென
நான் கேட்கவில்லை
எமது நிலத்தை தாம் ஆக்கிரமிக்கவில்லையென
அவன் சொல்லும்போது
புத்தர்சிலைகளும் இராணுவமுகாங்களும் எப்படியானவையென
நான் கேட்கவில்லை
நாம் அனைவரும் ஒருநாட்டுப் பிரஜைகளென
அவன் சொல்லும்பொழுது
சகோதரர்களை நீ எப்படி நடத்துவாய் என
நான் கேட்கவில்லை
யாரும் காணாமல் போகவில்லையென
அவன் சொல்லும் பொழுது
சரணடைந்தவர்கள் எங்கு சென்றனரென
நான் கேட்கவில்லை
எமது பெண்கள் எவரையும்
வன்புணர்ந்து கொல்லவில்லையெனவும்
இளைஞர்கள் எவரையும்
நிர்வாணமாக இருத்தி பின் பக்கமாக
தலைகளில் சுடவில்லையெனவும்
அவன் சொல்லும்பொழுது
அந்த நிலத்தில் குருதி எப்படி கொட்டியதென
நான் கேட்கவில்லை
யாரையும் தாம் கொல்லவில்லையெனவும்
கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகளெனவும்
அவன் சொல்லும் பொழுது
நான் சொன்னோன்
எனது குழந்தை ஒரு பயங்கரவாதியென.
தீபச்செல்வன்
நன்றி: தீராநதி அக்டோபர் 2013
4 கருத்துகள்:
great
இயன்றவரை அயற்சொற்களை நீக்கி எழுதுங்கள். இது தமிழ்மொழி காப்பிற்கான அன்பு வேண்டுகோள். அவ்வளவே!
உங்கள் கவிதை என்னை மிகவும் பாதித்தது.
அடக்குமுறை உள்ளவரை விடுதலை போர்
தொடர்ந்தே தீரும்.
உங்கள் கவிதை அதற்கு கலங்கரை விளக்கமாக
தென்படுகிறது.
உங்கள் இலக்கிய சமூக பணி தொடர வாழ்த்துகள்.
இவை எல்லாம் ஏன் நடக்கின்றன. என அந்த பிள்ளைகள்
கேட்கும் போது
எம்கண்கள் கலங்குகின்றன.????
கருத்துரையிடுக