என்னிடம் துப்பாக்கிகள் இல்லை
பீரங்கிகள் இல்லை
குண்டுகளும் டாங்கிகளும் இல்லை
வார்த்தைககள் மட்டுமே உண்டு
அவை என்னுடைய வார்த்தைகளல்ல
என்னுடைய நிலத்தின் வார்த்தைகள்
என்னுடைய சனங்களின் வார்த்தைகள்
துப்பாக்கிளோடு அலையும்
டாங்கிகளின் உலவும் வீரமிகு படைகள்
என் கவிதைகளுக்கு ஏன் அஞ்சுகின்றனர்?
எதிர்வீடுகளில் விசாரிப்பதுவும்
தெருவில் என் கால் அடிகளை எண்ணுவதும்
அறியாத தொலைபேசி எண்களிலிருந்து
பதிலற்று அழைப்புக்களை துண்டிப்பதுவும்
நள்ளிரவில் நாய்களை குலைக்கச் செய்வதும்
நண்பகலில் மோட்டார் வண்டியில்
உறுமியபடி செல்வதும்
என் புத்தகங்களை தேடுதல் செய்வதும்
எனை ஏதோ செய்யுமென நினைத்தனர்
வீரமிகு படைகள்
உன்னுடைய துப்பாக்கிகளை முறிக்கும்
குண்டுகளை நொருக்கும்
பீரங்கிகளை உடைக்கும்
டாங்கிகளை சிதறடிக்கும்
முகாங்களை அழிக்கும்
எனது வார்த்தைகளுக்கு நீ அஞ்சுவாய்
நாமோ எமது நிலத்திற்காய்
போராடுகிறோம்
நீயோ எம்முடைய நிலத்தை அபகரிப்பதற்காய்
போர் புரிகிறாய்
ஆதலால் நீ என் கவிதைகளுக்கு அஞ்சுவாய்
என் சனங்களுக்கு அஞ்சுவாய்
என் நிலத்திற்கு அஞ்சுவாய்
0
தீபச்செல்வன்
நன்றி - தீராநதி
பெப்ரவரி 2016
பெப்ரவரி 2016