Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 26 டிசம்பர், 2009

உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்



நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து
எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சகோதரியே! உன்னை உரித்து
சிதைத்தவர்களின் கைளிலிருந்து
எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது.

கண்டெடுக்கப்படாவர்களின் சடலங்களுக்கு
என்ன நேர்ந்திருக்குமென்று
தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு
இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு
உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம்
எண்ணிக்கையற்ற முனைகளில்
நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

உன்னை சிதைந்து எங்கு எறிந்திருக்கிறார்கள் என்பதையும்
யார் உன்னை தின்றார்கள் என்பதையும்
உனது தொலைக்காட்சியில்
நீயே செய்தியாக வாசித்துக்கொண்டிருக்கிறாய்.
நீ நடித்த பாடல்களும் படங்களும்
ஒளிபரப்பபட்டுக்கொண்டிருக்கிற அலைவரிசையில்
உனது பாதிப்படம் ஒரு மூலையில்
பார்க்கப் பொறுக்க முடியாத
கோலமாக தொங்குகிறது.

அதே படைகளினால் கவலிடப்பட்ட
நிலத்தில் எங்கோ ஒரு மூலையில் உனது
தாயைப்போலவே ஒருத்தி
தன் மகளைத் தேடி துடித்துக்கொண்டிருக்கிறாள்.
ஆண்குறிகளை வளர்த்து
இரத்தத்தை படையலிட்டிருக்கிற
படைகளின் யுத்த முனைகளில்
உன் சீருடைகளை
கழற்றி எறிந்திருக்கிறார்கள்.
உன் வீரத்தை கரைத்துவிட்டார்கள்
தொலைந்துபோன உன் துப்பாக்கி
படைகளின் கையிலிருக்கிறது

முன்னர் வெற்றியடைந்த களமொன்றிலேயே
நீ சரணடைந்திருக்கிறாய்.
துப்பாக்கிகளும் ஆண்குறிகளும்
ஒரே மாதிரியாய்
வாயைப் பிளந்து உன்னை தின்று போட்டிருக்கிறது.

முற்றத்தில் தெருவில் வயல்களில்
கண்ணிவெடிகளுக்கு கீழாகவும் மண் பிரளும் இடங்களிலெல்லாம்
சீருடைகள் முதலான உடைகளும்
இரத்தமும் சைனைட் குப்பிகளும் புகைப்படங்களும்
மற்றும் சில குறிப்புகளும் கிளம்பி வந்துகொண்டிருக்கின்றன.
என்னிடம் வாங்கிச் சென்ற
கவிதையை எங்கு போட்டிருப்பாய்?

இசைப்பிரியாவுக்கு.
 25.12.2009

o தீபச்செல்வன்

தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் பணிபுரிந்த காலத்தில் அவருடன் அறிமுகம் ஏற்பட்டது. 'வேலி' என்ற குறும்படத்தில் மிகத்திறம்பட நடித்திருந்தார். 'வேலி' படம் பற்றி நான் வீரகேசரியில் எழுதிய பொழுது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். 'ஈரத்தீ' படத்திலும் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தவர். பாடல்களிலும் நடித்திருக்கிறார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளாராக இருந்திருக்கிறார். வீடியோ, எடிட்டிங், எழுத்து போன்ற எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இரக்கமும் அன்பும் கொண்ட மிகுந்த எளிமையான - கருத்தாழம் கொண்ட 'சிறந்த' போராளியாக வாழ்ந்தவர்.

கணினி ஓவியம் - ரமணி

சனி, 19 டிசம்பர், 2009

புகைப்படத்தில் கொல்லப்பட்ட சகோதரன்



o தீபச்செல்வன்
------------------------------------------------------------------

எங்கள் எல்லா ஞாபகங்களையும் கனவையும்
இறுதிநாளில் களைந்தபிறகுதான் சரணடையவேண்டியிருந்தது.
தாய்மார்கள் தாங்களகவே
தமது பிள்ளைகளின் புகைப்படங்களை கிழத்துப்போட்டனர்.

சகோதரனே யுத்தத்தின் இறுதி நாட்கள் வரையிலும்
உன்னை ஏதோ ஒரு வகையில்
பதுக்கி வைத்திருந்தோம்.
கடுமையான மழை நாள் இரவொன்றில்
எங்கள் எல்லா முகங்களும்
வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றபோது
உனது முகம் மட்டுமே
எங்களிடம் எஞ்சியிருந்தது.

நீங்கள் தறித்திருந்த புகைப்படங்களையும்
நாங்களாகவே அழித்துவிடவேண்டிய தருணம் வந்திருந்தது.
தீபங்கள் இறந்துபோயிருந்தன.

நாங்கள் சரணடைந்ததாக சொல்லப்பட்ட நாளில்
அல்லது
கைது செய்யப்பட்டதாக நாங்கள் உணரப்பட்ட நாளில்
உனது கல்லறைகளையும்
தகர்த்துவிட்டார்கள் என்ற செய்தியை அறிந்தோம்.

நீங்கள் வரிசையாய் துடித்துக்கொண்டிருப்பதை
நான் கண்டேன்.
பெரிய கிடங்கொன்றில் அவர்கள் உங்களை
புதைத்துவிடப்போவதாக பேசிக்கொண்டார்கள்.
அந்தப் பெரிய சவப்பெட்டி.யில்
குருதி வடிந்து எங்கள் வாழ் நிலத்தை நனைத்துக்கொண்டிருந்தது.

உன்னை அவர்கள் கொன்றனர் என்ற அந்த செய்தியால்
யாரும் அறியாதபடி மிக அமைதியாகவேனும்
எங்களால் அழ முடியவில்லை.
உனது மரணம் உன்மையில் எங்கு நிகழ்ந்தது
என்று தெரியாமலிருக்கிறது.
உன்னை மதிக்கிற
மாலைகளை நிரந்தரமாக இழந்து
நினைவுகள் வீழ்ச்சியடைந்திருக்க
ஒரு பெரிய சவப்பெட்டியில் தகர்க்கப்பட்ட
முழுக்கல்லறைகளினது சாம்பலையும் நிரப்பி வைத்திருந்தார்கள்.

சகோதரனே உனது புகைப்படத்தை
அம்மா விட்டு வரநேர்கையில் தனது கைகளில்
குருதி கசிந்து கொட்டியது என்கிறாள்.
உன்னை நினைவு கூறுவதற்காய் எங்களிடம் எதுவும் இல்லை.
புகைப்படத்தில் வைத்தே
உன்னை அவர்கள் கொலை செய்துள்ளனர்.
நீ நாட்டிய தென்னங்கன்றும்
வேருடன் அகழ்ந்து அகற்றப்பட்டிருக்கிறது.

உனக்காக தங்கையும் உனது குழந்தையும்
கொண்டு திரிகிற தீபம் எரிந்து கையை சுடுகிறது.
_________________________
20.11.2009

(நன்றி: வடக்குவாசல் டிசம்பர் 2009
ஓவியம்  சந்திரமோகன்)

சனி, 12 டிசம்பர், 2009

கூடார மக்களது குழந்தைகளின் விருப்பம்


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------

இந்தக் குழந்தைகள் எப்பொழுதும் கூடாரத்திற்கு
வெளியில் செல்லவே விரும்புகிறார்கள்
என்பதை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
மிகவும் சிறியதான இந்தக் கூடாரம்
ஒரு சிறைச்சாலையைப்போல பெரிதான சித்திரவதைகளை
திறந்துகொண்டிருக்கிறது.
எங்கும் நடக்க முடியவில்லை., காட்டு மரங்களின் வேர்கள்
முகங்களை குத்திக்கொண்டிருக்கிறது.
தோழரே, கூடார மக்கள் குறித்து நீங்கள் பேசுவது
உங்களுக்கு ஆபத்தை தரலாம்.
நாங்கள் பேசுவதை நிறுத்துவதும்
கோருவதை தவிர்பதுமாகவே எல்லாம் நிகழ்ந்துவிடுகிறது.

இந்தப் புழுதியிலும் சேற்றினிலும்
அவர்கள் எப்பொழுதும் அழகான குழந்தைகளாகவே இருக்கிறார்கள்.
அவர்களது கேள்விகளுக்கு
நம்மால் பதில் சொல்ல முடியவில்லை.
அவர்களுக்கு சொல்லும் கதைகள் எல்லாம்
உலகத்தின் கூடாரங்கள் பற்றிய கதைகளாகத்தானிருக்கின்றன.
அதிகாரத்தின் கூர்மையில்
அவர்களது புன்னகையையும் விளையாட்டு மைதானங்களும்
இன்னும்பிற வழிகளும் சிதைந்துபோயிற்று.
உலகத்தின் எங்களைப்போன்ற சனங்களுக்காக
கூடாரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தோழரே, இவர்களுக்காக நாங்கள் வியப்புட்டும்
எந்தக் கதைகளையும் சொல்ல முடியவில்லை.
பொம்மைகளையும் இதர விளையாட்டுப் பொருட்களையும்
இவர்கள் தூக்கி எறிகிறார்கள்.
கூடாரத்துக்குள் இவர்களின் உலகம் சுருங்கியிருக்கிறது.
குழந்தைகள் முட்கம்பிகளுக்குள்
எங்கேனும் திரிந்து விளையாடி திரும்பி வரலாம்
என்று முகாம் விதிகள் சொல்லுகின்றன.
கூடாரத்தை விட்டு வெளியேற எதை வேண்டுமானாலும்
செய்துவிடத் துடிக்கிறார்கள் சற்று வயது கூடிய சிறுவர்கள்.

மிக நீணட காலமாக கூடாரங்களை பாவித்திருக்கிறோம்.
மண் கூடாரங்களையும்
இந்த இறப்பர் கூடாரங்களையும் வழங்க மறுப்பின்றி
அனுமதி தரப்பட்டிருக்கிறது.
இதற்குள்ளே குழந்தைகளைப் பெறவும்
அவர்களை வளர்க்கவும் சொல்லியிருக்கிறார்கள்.
இவர்கள் வயதாக வயதாக பேசுபவைகளினால்
உலகத்தின் அத்தனை அகதிகளுக்கும்
ஆபத்து நேர்ந்துவிடும் போலிருக்கிறது
கூடாரங்களை மீறாத வகையிலேயே
நாங்கள் காவலிடப்பட்டிருக்கிறோம்.

ஜன்னல்களும் வாசல்களும் கூடிய இந்தக் கூடாரங்களை
தங்கள் புத்தகங்களிலெல்லாம் வளரும் சிறுவர்கள்
வரைந்து வைத்திருக்கிறார்கள்.
கூடார மக்கள்கள் அதிகரித்துக்கொண்டேயிருக்கறார்கள்.
எங்கள் வளரும் சிறுவர்களுக்கும்
சில கூடாரங்களை அடுத்த வாரங்களில்
தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
வண்ண வண்ணமான கூடாரங்களை புதிதாக இறக்குகிறார்கள்.

எங்கள் குழந்தைகளும் நாங்களும் அனுமதிக்கப்படும்பொழுது
கூடாரங்களை விட்டு வெளியே செல்லவும்
அல்லது நிரந்தரமாக இதற்குள் தங்கவும் தயாராக இருக்கிறோம்
என்பதை நாங்களாகவே வற்புறுத்தலின்றி ஊடகங்களுக்குச் சொல்லியிருக்கிறோம்.

மிக அவசர அவசரமாக கூடாரங்களைத் தந்தபிறகு
அவை நிரந்தரமாக காலுன்றப்பட்டன.
------------------------------------------------------------------------
(27.10.2009 ஆசிய மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் பசில் வேனாண் டோ வன்னி அகதிகளை "கூடார மக்கள்" என அழைக்கிறார்)

நன்றி: வார்த்தை டிசம்பர்

சனி, 5 டிசம்பர், 2009

அம்மா எதுவரைக்கும் காத்திருப்பாள்

தீபச்செல்வன்
----------------------------------------------------------------
01
அம்மா எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளக்கூடியவள்.
வீட்டிற்கு செல்வதற்காகவே
கொடிய வனாந்தரத்தின்
வெயிலிலும் அடர்ந்த மழையிலும் அவள் காத்திருக்கிறாள்.
நண்பனே நீண்ட நாட்களின் பிறகு
மகிழ்ச்சி தருகிற செய்தி ஒன்றை தந்திருக்கிறாய்.
உனக்காக உனதம்மா சொந்த நிலத்தில்
செய்து வைத்திருக்கிற உணவுகளுடன்
காத்துக்கொண்டிருக்கிறாள் என்ற
உனது மகிழச்சி ஒன்றுதான் இங்கிருக்கிற யாவரதும்
புன்னகையை துளிர்க்கச் செய்திருக்கிறது.

அதற்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
எதுவரைக்கும் எனது அம்மா காத்துக்கொண்டிருப்பாள்.

அழைத்துச் செல்வதற்கான அனுமதிக்காகவும்
பெயர் குறிப்பிடுகிற ஒலிபெருக்கிக்காவும்
அம்மா காத்திருக்கிறாள்.
நாட்களை தள்ளிச் செல்லுகிறபோது
அதை பொறுத்துக்கொள்ளுகிறாள்.
எதுவரைக்கும் காத்துக்கொண்டிருப்பாள்
என்பதை ஒரு கேள்வியாக நான் முன்வைக்கவில்லை.
யாரே சனங்கள் ஊர்களுக்கு
திரும்பிக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

02
அம்மாவை இன்றுதான் திறந்துவிட்டிருக்கிறார்கள்.
அவள் எந்த பையையும் தூக்கிக்கொண்டு
மீன் வாங்குகிற சந்தைக்கோ
புடவை வாங்குகிற கடைக்கோ செல்லவில்லை.
திரும்பி கூடாரத்துக்குள் வரவேண்டியதை
அம்மா மறுக்கவில்லை.
எப்பொழுதும் கூடாரத்துக்குள் வந்து
அடைந்து கொள்ள தயாராகவே இருக்கிறாள்.

அவர்கள் உங்களது வீடுகளை
உங்களிடமே தந்ததைப்போல
எங்களது வீடுகளை எங்களிடம் தருவார்கள்
என்றே அம்மா நம்புகிறாள்.
இன்று திறக்கப்ட்ட கதவின் அகலத்தின் அளவை
எனது நண்பன் ஒருவன் கேட்டிருந்தான்.
வெட்டபட்ட முட்கம்பிகளை
மீள இழுத்து கட்டினால் என்ன செய்வீர்கள்
என்று கேட்கிறான்.
நாங்கள் பதிலளிக்காத கேள்விகளுடன்
இதையும் சேர்த்துக்கொள்ளுகிறேன்.

முகாங்கள் திறந்துவிடப்படுகிறபோது
திறக்கப்பட்ட காத்திருப்புகளின் நீளத்தை
யாரும் அறிந்திருப்பார்கள்.
சோகங்களை அடுக்கி வைத்திருந்த கூடாரங்களை
யாரும் பார்த்திருக்க கூடும்.
உனது அம்மா எனது மற்றும் என் அம்மாவின்
காத்திருப்பை நன்றாக உணர்ந்திருப்பாள்.


சனங்கள் எதையாவது பிரதியீடாக தரவேண்டும்
என்றே திறந்து விடப்பட்டிருக்கிறார்கள்.
இப்பொழுது இருப்பது
காய்ந்து உக்கிய எலும்புகள் மட்டுமே.
எலும்பின் மூலைகளுக்குள் ஒதுங்கியிருந்த
கொஞ்ச இரத்தமும்
உறிஞ்சப்பட்ட பின்னர்
எங்கள் மிகுதி எலும்புகள்
அவரவர் ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
அம்மா
அதையும் கொடுக்க தயாராக இருக்கிறாள்.

அம்மா எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுவாள்.
இந்த வெளியில்
அம்மா எதுவரைக்கும் காத்திருப்பாள்.
நண்பனே
உனது ஆறுதலையும்
வீடு திரும்பிய மகிழ்ச்சியையும்
எனது அம்மாவுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
_______________
29.11.2009 சதீஸ் மற்றும் அவனின் அம்மாவுக்காக
(அம்மாவின் கூடாரத்துக்குளிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்)

வெள்ளி, 27 நவம்பர், 2009

குழந்தைகளுக்காக சேகரிக்கப்பட்ட யுத்தத்தின் நாணயத்தாள்

o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
குடுமி மலையில் யார் வாழ்ந்தார்கள் என்று
குழந்தைகள் கேட்கிறார்கள்.
அந்த மலையை ஆயுதம் நிரப்பிய
டோராப் படகுகள் ஏன் தாக்குகின்றன என்று
கேள்விகளை முன்வைத்தபடி
யுத்தம் நிகழும்
நாணயத்தாளை பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

யுத்தம் ஏதோ ஒரு வகையில் மீள மீள
ஞாபகப்படுத்தப்படுகிறது.
இந்த நாணயத்தாள் அந்த நாள் வரை
நிகழ்த்தப்பட்ட எல்லா அழிவுகளையும்
வரைந்து வைத்திருக்கிறது.

மீட்க சகிக்காத நிகழ்வுகளையும் தோல்வியையும்
நிரப்பி வைத்திருக்கிறார்கள்.
நினைவு கொள்ள முடியாத நாட்களின் கதைகளால்
செய்யப்பட் கேலியான தாளின் வாயிலாக
அச்சம் தரும் காலத்தின் காட்சிகளை மட்டுமே
குழந்தைகளுக்காக சேகரித்து வைத்திருத்திருக்கிறார்கள்.

இந்த விமானங்கள் இன்னும் ஏன்
பசிக்கிற வேகத்துடன் பறந்தலைகின்றன எனவும்
ரெலிகப்டர்கள் இன்னும் ஏன் மிகவும் இறக்கமாக
பறந்து திரிகின்றன எனவும்
இந்தத் குழந்தைகள் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.

வரலாற்றுள் ஒளிந்து கொள்ளுவதற்காய்
புனிதத்தை பூசிய
பின்பக்கமாக பதிந்திருக்கிற
குற்றம் நிரம்பிய முகத்தின் புன்னகையையையும்
திசை நோக்கியிருக்கிற கைகளையும்
நான் மொழிபெயர்த்து கூறமுடியாதபடியிருக்கிறேன்.
எதற்கும் இந்த நாணயத்தாளை தூக்கிக்கொண்டும்
கைகளுக்குள் வைத்துக்கொண்டும்
வாழ வேண்டியிருப்பதுடன்
அதற்காக உழைக்கவும் வேண்டியிருக்கிறது.

எரிந்து போயிருக்கிற தேசத்தில் செயின்பிளக்குகள்
இன்னும் ஏன் நிலத்தை பிய்க்கின்றன என
நான் கேட்கிறேன்?
இரணைமடுக்குளத்தினுள் அச்சம் தருகிற
உருவங்கள் இறங்குகின்றன.
எரிந்துபோன தேசத்தை தின்னும் நடவடிக்கையும்
மறுபக்கத்தில் உள்ள புன்னகையையும் விலக்க முடியாதபடி
ஒன்றின்மேல் ஒன்றாய் படிந்திருக்கிறது.
இந்த அரசன் ஏந்தியிருக்கும்
கூர் வாள் எனது குழந்தைகளை
இனிவரும் எல்லாக் காலங்களிலும் குத்தப்போகிறது.

தந்தையே எங்கள் கடலை யார் குடித்தார்கள்?
என்று எனது குழந்ழைதகள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.
பெரிய கொடியை எதன்மீது நாட்டினார்கள் எனவும்
அங்கு யாருடைய குருதி கொட்டியிருக்கிறது எனவும்
அங்கு குடியிருந்தவர்கள்
எங்கு துரத்தப்பட்டார்கள் எனவும்
எனது எதிர்காலக் குழந்தைகள் கேட்கப்போகிறார்கள்.

தங்களுக்காக சேமிக்கப்பட்டிருக்கிற நாணயத்தாள்களில்
நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற
படைகளின் சாப்பாத்துக்களையும்
தொப்பிகளையும்
அதிகாரம் வளருகிற நட்சத்திரங்களையும்
எல்லாக் குழந்தைகளும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். _________________________
18.11.2009

புதன், 18 நவம்பர், 2009

இல்லாதவர்களின் அளவற்ற கனவு

o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
அவர்கள் பெருங்கனவுடனே
மரணத்தை முத்தமிட்டனர்.
கடைசியில் அவர்களின் ஞாபகம் நிரப்பிவிடப்;பட்ட
கல்லறைகளும் நம்மிடம் இல்லை.
தாய்மார்கள் தீப்பந்தங்களையும்
தமது பிள்ளைகளுடன் இழந்து விட்டனர்.
மனைவிமார்கள் தங்கள் புன்னகையுடன்
கல்லறைமீதான
தமது சொற்களையும் இழந்து விட்டனர்.

கனவின் அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிடக்கிறது.
இம்முறை எந்தப் பூக்களும் மலரவில்லை.
இலைகளில் குருதி ஒழுக
பூமரங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன.

தலைகளை மின்கம்பத்தில் மோதி
இல்லாதவர்களை அழைக்கிறது
நம்பிக்கையற்ற மனம்.
கனவை உறிஞ்சி எடுத்துக்கொண்டு
அவர்களை தின்று முடித்துவிட்டது உலகம்.
அவர்கள் மீதெழுதப்பட்ட மரணப்பாடல்
நெருப்பில் கிடந்து பொசுங்குகிறது.
அவர்களை முழுமையாக
அழித்துவிட்டதாக இந்த நாளை
பிரகடனம் செய்கின்றனர்.

அப்பாவுக்காக தீப்பந்தம் ஏந்தி வருகிற குழந்தை
மண்ணை கிண்டி
கல்லறையை தேடிக்கொண்டிருக்கிறது.
நமது ஞாபகத்தின் கடைசி சொத்தையும்
அவர்கள் மிக வேகமாக அழித்தனர்.
அழுவதற்காக இருந்த
உரிமையையும் நாளையும் பறித்து எடுத்தனர்.
மனங்களில் கல்லறைகள்
எழும்பிக் கொண்டிருக்கின்றன.

எங்கோ ஒரு மூலையில் கனவு எரிந்து
கொட்டிக் கொண்டிருக்கிறது.
யாருமற்ற தனித்த நிலத்தில்
வரலாற்றின் துயரம் நிரம்பிய எலும்புக்கூடுகள்
எழும்பிச் செல்லுகின்றன.
மண்ணை பிரட்டி
வீரச்சொற்கள் எழுதப்பட்ட
கல்லறைகளின்
சுவர்களை ஆழத்தில் புதைக்கிறார்கள்.
கல்லறைகளின் போர் நடந்து முடிந்துவிட்டது.
சனங்களுடன் அவர்கள்
கல்லறைகளை துடைத்தெறிந்து விட்டனர்.

யாரிடமும் பூக்கள் இல்லை.
எவருக்கும் கல்லறைகள் இல்லை.
அணைக்கப்பட்ட தீப்பந்தள் அலைந்து திரிகின்றன.
வீர முகம் நிரம்பிய புகைப்படங்களும்
கரைந்து போய்விட்டன.
சனங்கள் ஏமாற்றப்பட்டனர்.
வீரர்கள் இறுதியில் தோல்வியடைந்தனர்.
இந்த நாள் தோல்வியால் நிரப்பப்பட்டிருக்கிறது.
கனவு வளர்க்கப்பட்ட பெரிய மண்ணிலிருந்து
இனம் படுகொலை செய்யப்பட்ட
சுடலையின் வாசனை திரண்டபடி பெருமெடுப்பில் வீசுகிறது.
__________________________________

புதன், 11 நவம்பர், 2009

மழைக்கிராமத்தில் நனைந்து ஊறிப்போன சொற்கள்

o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
சொற்கள் விறைத்துப்போயிருக்க
மழை சனங்களில் குளித்துக்கொண்டிருக்கிறது.

மலக்குழியில் புதைந்து இறந்த
சிறுமியின் உடலை
மீட்டு வைத்திருக்கிறர்கள்.
கல்லாற்றில் மிதந்துகொண்டிருக்கிறது
தண்ணீர் நிரப்பும் கலன்கள்.
முழுமையாக
நிவாரணக் கிராமத்தை
நனைத்துக்கொண்டிருக்கிறது மழை.
கூடாரங்களுக்குள் தண்ணீர் நிறைய
குழந்தைகள் மிதந்துகொண்டிருக்கின்றன.

மழைக்காடாகிறது
ஒதுக்குப்புறமாக இருக்கிற காட்டுக்கிராமம்.
அள்ளுண்டு போகிறது முட்கம்பிகள்.
களைத்த முகத்தை கழுவி
நிரப்பிக்கொண்டிக்கிறது பெருமழை.

திறந்த வெளியில் விளையாடிக்கொண்ருந்த
சிறுவர்கள்
மழையில் ஒதுங்கி நிற்கிறார்கள்.
குளித்துக்கொண்டிருக்கிறது கூடாரங்கள்.
சோற்றுப்பானை உடைந்து விழ
அடுப்பு கரைந்து முடிகிறது.

விறைத்துப்போயிருக்கிறது மனம்.
பள்ளத்தை நோக்கிச் செல்லுகிறது கூடாரம்.
கால்வாயில் போகும் பாத்திரங்களுக்கு
பின்னால்
ஓடிச்செல்லும் அம்மாவின் கால்கள்
மணலில் புதைகின்றன.

நிலத்தை கழுவிய நீர்
முட்கம்பிகளுக்குள் அலைந்து
கிராமத்தை குளமாய் நிரப்பியிருக்கிறது..
சொற்கள் நனைந்து நீருரிப்போய்க்கிடக்கிறது.
சேற்றில் புதைந்துகொண்டிருக்கிறது
ஆறு கிராமங்களும்.
--------------------------------
(13.09.2009 செட்டிக்குளம் தடுப்புமுகாம் கிராமங்கள்)

செவ்வாய், 3 நவம்பர், 2009

யுத்தகால நிகழ்வுகளின் கலந்துரையாடல்

o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
எங்கள் யுத்தகால நிகழ்வுகள் பற்றி
அவர்கள் கலந்துரையாடப் போகிறார்கள்.
யாரும் குற்றங்களை இழைக்கவில்லை
என்றே எல்லா விசாரணைகளும் சொல்லுகின்றன.
குழந்தைகள் எல்லாவற்றையும் அறிவார்கள்
மிக மிக கொடிய இரவுகளை
பனி படர்ந்திருந்த இரவுகள் என்றே
அவர்கள் சொன்னார்கள்.
எல்லாருடைய கைகளிலும்
குருதி பிறண்ட கோடுகள்தானிருக்கின்றன.

சரியாக ஆயுதங்களை பாவித்தார்களா எனவும்
சரியாக குண்டுகளை வீசினார்களா எனவும்
சரியான இடத்தில் நிலை கொண்டிருக்கிறார்களா எனவும்
எல்லா அறிக்கைகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

ஜனநாயக மேசைகளில் வடிந்து கொண்டிருக்கிற
குருதியை ஏந்தும் எல்லா விசாரணைகளும்
தந்திரம் வாய்ந்திருக்கின்றன.
குழந்தைகள் மறுக்கப்பட்ட பூமியில்
அவர்கள்
வாழ்வதற்கு எதிராக
சட்டங்களை கொண்டு வருகிறார்கள்.
யுத்தகால நிகழ்வுகள்
எவ்வளவு கொடுமையானவை என்பதை
குருதி பிறண்ட முகத்துடன் மிகவும் காயமுற்ற குரலுடன்
உலகின் எல்லாக் குழந்தைகளும்
அழுதபடி சொல்லின.
யாரும் படைகளை திரும்பப்பெறுவதாயில்லை.

எல்லாச் சந்திகளுக்குமாக கிளைமோர்களும்
எல்லா நகரங்களுக்குமாக குண்டுகளையும்
முழுப் பூமிக்கு எதிராக அணுகுண்டையும் தயாரித்தார்கள்.
அனைத்து மனிதர்களுக்கும் எதிராக
துப்பாக்கிகள்தான் அலைகின்றன.
குழந்தைகளின் உலகத்தை கொடுமையாக சிதைத்தார்கள்.
எப்பொழுதும் ஏதோ ஒரு மூலையில்
யுத்தம் நடந்துகொண்டேயிருக்கிறது.
எங்காவது குழந்தைகள் அஞ்சி பதுங்கியிருக்கிறார்கள்.

எல்லா விசாரணைகளும் யுத்த வெற்றிகளையே
பட்டியலிடுகின்றன.
கிண்ணங்களை பரிமாறி மேலும் களங்களை திறக்கின்றன.
அதிகாரத்தை வடிவமைப்பதைப் பற்றிய
எண்ணத்திலே தொங்குகின்றன.
மூடப்பட்ட கிடங்கை திரும்பவும் கிண்டத்தொடங்குகிறார்கள்.
சிப்பாய்களின் கைகளில் சோர்வடையும்
துப்பாக்கிகளை இறுகப் பற்றச் சொல்லுகிறார்கள்.

ஈராக்கின் எண்ணெய் கிணறுகளில்
குழந்தைகளை ஒளித்திருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் எறியப்பட்ட குண்டுகள்
ஆறாதிருக்கின்றன.
அமெரிக்கப் படைகள் உலகம் எங்கும் நிறைகின்றன.

எங்கள் யுத்தகால நிகழ்வுகள் பற்றி
அவர்கள் கலந்துரையாடப் போகிறார்கள்.
அவர்கள் எதையோ பெறுவதற்காகவும்
நிகழ்த்துவதற்காகவும்
புன்னகை மிகுந்தபடி
கூடுகிறார்கள்.

எல்லோருமே யுத்தக் குற்றவாளிகாக இருப்பதை
தந்திரமாக மூடுகிறார்கள்.
குழந்தைகள் எல்லாவற்றையும் அறிவார்கள்.
_____________________
{02.11.2009 யுத்தக் குற்றங்கள் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்கா விசாரணை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது}

வெள்ளி, 30 அக்டோபர், 2009

மீளவும் சில பொருட்களை தவறவிட்டிருக்கிறேன்

o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
பொருட்களை எந்த நேரத்திலும் தூக்கிச் செல்லுவதற்கு ஏற்றபடி
தயாராகவே வைத்திருக்கிறேன்.
எதிர்பாராத பின்னேரமாகவே நாங்கள் அழைக்கப்பட்டோம்.
எண்ணிக்கையற்ற பிரகாசமும் மகிழ்ச்சியும்
எல்லாவற்றையும் மறைத்து முன்னால் நின்றுகொண்டிருந்தன.
எங்கள் வீட்டிற்கே அழைத்துச் செல்லப்படுவதாக
ஏற்றிக்கொண்டு சென்ற பேரூந்தில்
பொருத்திய ஒலிபெருக்கி அறிவித்தது.
பார்க்க முடியாதபடி
நிலம் முழுவதும் அழிந்துபோயிருப்பதை கண்டேன்.

கடந்த வாரம் அதுவும் ஒரு மாலை நேரமாய்
நிதிலேகாவையும் குழந்தையையும்
மீளக்குடியிருத்த ஏற்றிச் சென்றார்கள்.
தான் விட்டுச் செல்லும் பொருட்களை எல்லாம்
அவள் எனக்கே தந்திருந்தாள்.
என்னுடன் மிகவும் பிரியமாயிருந்த
அவளது குழந்தையை நான் பிரிய நேர்ந்தது.

தனது ஞாபகங்களை மறக்கவும் எதையும் தாங்கிக்கொள்ளவும்
அவள் பழகியிருந்தாள்.
தனது கணவனை வழியில் இழுத்துச் சென்ற ஷெல் பற்றிய
அதிர்ச்சியை அவள் மறந்துபோயிருக்கிறாள்.
அவளது குழந்தையுடன் எல்லாவற்றையும் பேசுகிறாள்.
எனது கூடாரத்தின் பாதியில்
அவள் தடுத்து வைத்திருந்ததினால்
எனக்கு ஆறுதலாக இருந்தது.
யுத்தகாலத்தின் நினைவுகளை முழுமையாக மறந்துவிடலாம்
என அவள் எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருப்பாள்.
என்னால் தூக்க முடியாதவற்றை நான் விட்டுச்செல்லுகிறேன்.

இ;ன்னும் நாம் இடம்பெயர்ந்துகொண்டிருக்கிறோம்
என்பதை யாரும் பேசிவிடாதீர்கள்.
பொருட்களை எந்த நேரத்திலும் தூக்கிச் செல்லுவதற்கு ஏற்றபடி
தயாராகவே வைத்திருக்கிறேன்.
மகிழ்ச்சிகரமாக இடம்பெயரவும்
சிலவேளை துக்கத்துடன் திரும்பிவரவும் நேரிடுகிறது.
வரும்பொழுது
வழிகளை எல்லாம் பார்த்து
பார்க்க முடியாத இடங்களிலெல்லாம்
அலைந்து கொண்டிருக்கிறேன்.
இடையில் சில பொருட்களை தவறவிட்டிருக்கிறேன்.
பிடுக்கி வைக்கப்பட்ட கூடாரத்தை
மீளவும் பொருத்தி வைத்திருந்தார்கள்.

நிதிலேகாவை அவளின் பள்ளிக்கூடத்தில்
இப்பொழுது தடுத்து வைத்திருக்கிறார்கள்.
அவள் தனது காணிக்கு சென்று திரும்புவாள்.
வீடு திரும்புபகிற கனவுகள் எவ்வளவு இனிமையானவை
என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
நிதிலேகா அதைப்பற்றி என்னுடன் நிறையவே பேசியிருக்கிறாள்.
என்னுடன்
இந்தக் கூடாரமும் சரிந்து தூங்கிக்கொண்டிருக்கிறது.

இப்பொழுதெல்லாம் யாருமற்ற தனித்த
நிலம் பற்றிய கதைகளையே இரவுகளில் அளந்துகொண்டிருக்கிறேன்.
மீளவும் இலவசமாக
பொருட்களை விநயோகித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எனினும் தூக்கிச் செல்லுவதற்கு ஏற்றபடி
எல்லாமே தயாராக இருக்கின்றன.

பொதிகளில் எத்தனை ஏக்கங்கள் தவிப்புக்களை
அடைத்துவைத்திருக்கிறோம்.
அந்த ஒலிபெருக்கியை கழற்றி சூடாற விடுகிறார்கள்.
____________________________
30.10.2009

வெள்ளி, 16 அக்டோபர், 2009

அரசனின் நகரம் மாளிகை மற்றும் கடற்கரை


o தீபச்செல்வன்

அரசனின் நகரம் இரவு முழுவதும் சிரித்துக்கொண்டிருக்கிறது.
நண்பனே, உரையாடலின் பின்னர்
கடற்கரையில் வெகு நேரமாய் காத்திருந்தேன்.
அங்கிருந்து அகற்றப்பட்டு
தங்கியிருந்த வாடி வீட்டிற்கு முன்னால் கடற்கரையுடன்
முடிந்தவற்றை உனக்கு சொல்லியனுப்பிக்கொண்டிருக்கிறேன்.
நான் இனி என்ன செய்வது
என்பதை உன்னால் கூற முடியுமா?

கடற்கரை எதையோ செல்லிக்கொண்டிருக்கிறது.
அதிகாரத்தின் பெருஞ்சிரிப்பு கடலை கடந்து
எல்லாத் திசைகளுக்கும் சென்று கொண்டிருக்கிறது.
கடல் மகிழ்ச்சியடையவில்லை.
அது எல்லாப் பக்கங்களுக்கும் அலையை தள்ளி
எதையோ பேசிக்கொண்டிருந்தது.
விண்ணப்பங்கள் நிரம்பிய எல்லாக் கடிதங்களையும்
கடல்தான் முழுமையாக வாசித்துக்கொண்டிருந்தது.

கொண்டு சொல்லப்பட்ட நிரூபங்கள்
மிதித்தெறியப்பட்டதை எப்படி? வெளிக்கொணர முடியும்?
நாம் அவமானப்பட்டதை யாரிடம் பகிர முடியும்?
அதிகாரம் நாளுக்கு நாள் தீணியிட்டு
வளர்க்கப்படடும் அந்த மாளிகை
எங்களை சிறிய தகரப்பேணியில் அடைத்துக்கொண்டிருக்கிறது.
காய்ந்துவிடாத எங்கள் குருதியை எங்கும் அப்பி வைத்திருக்கிறது.
அரசன் எப்பொழுதும் சிரித்துக்கொண்டேயிருக்கிறான்.

அரசனின் பெரு மகிழ்ச்சியால் மாளிகை
எப்பொழுதும் அதிர்ந்துகொண்டேயிருக்கிறது.
கனவுகள் கிழித்து மறுபுறத்தில் உள்ள தெருவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்
கடற்கரையிலிருந்து என்னதான் சொல்ல முடியும்?
திரும்பும் பக்கங்கள் எல்லாம் தோற்கடிக்கப்பட்ட
எமது மண்மேடுகளது புகைப்படங்களின் மீதிருந்து
அரசன் சிரித்துக்கொண்டிருக்கிறான்.
அவர்களது நகரம் வெற்றியை இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
நமது வாழ்வை தின்று ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.

அரசனின் அன்றைய வார்த்தைகள் எவ்வளவு குரூரமானவை என்பதை
உனக்கு உணர்த்த வேண்டியுள்ளது.
எனினும் அவற்றை மீளவும்
என்னால் உச்சரிக்க முடியவில்லை.
முகம் இறுகி நாங்கள் வார்த்தைகளற்று தவித்தோம்.
நாங்கள் அரசனுக்காக சிரித்து
கைகளை தட்ட வேண்டும் என்று மந்திரி சொன்னான்.
முடியுமானவரை சிலர் அரசனை மகிழ்ச்சிப் படுத்தினார்கள்.

எல்லோரும் கடற்கரையை பார்த்து புன்னகையையும் கைகளையும்
இழந்ததாக சொல்லிக்கொண்டு நின்றனர்.
அரசன் தனது வீட்டுக்குச் சென்று உணவருந்திய பின்னர்தான்
நாம் வாடி வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டோம்.
எல்லாவற்றின் பிறகும், சில நாட்கள் கழிந்தும்
உன்னுடன் எதையும் பகிர முடியவில்லை.
நாம் தொடர்ந்து ஏமாந்துகொண்டிருக்கிறோம்.
நமது தேசம்போலன்றி இங்கு இரவுகள் முழுமையாக கிடைக்கின்றன.

இரவிரவாக எல்லாரது
புன்னகையும் கைகளும் கடல் வழியாக எங்கோ எடுத்துச் செல்லப்பட்டன.
அரசனின் நகரமும் இரவிரவாக சிரித்துக்கொண்டிருக்கிறது.
நன் கடற்கரையில் இருந்து முழு இரவையும் கடந்து கொண்டிருந்தேன்.
__________________________
12.10.2009

சனி, 10 அக்டோபர், 2009

அபிராஜ் புத்தகங்களை மறந்துபோயிருக்கிறான்


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------

லூர்த்தம்மா! காலம் பற்றி என்ன சித்தரிப்புக்களை
நான் செய்ய வேண்டியிருக்கிறது?
நாறி வதைத்துக்கொண்டிருக்கும்
எல்லாச் சொற்களையும்
உனக்காக அசைத்து கொட்டுகிறேன்.
மழைக் காலத்திற்கிடையில்
நமது காணியில் மேடு ஒன்றில் வீடு ஒன்றை
அமைப்பதற்காகவே இரவுகளில்
கற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

நான் அவர்களிடம் சொன்னேன்
குழந்தைகள் ஒரு பொழுதும் விரும்பி
துப்பாக்கிளை தூக்கி வரவில்லை என்பதை.
அபிராஜிடம் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக சொல்லுகிறார்கள்.

அபிராஜை இன்னும் நான் பார்க்கவிலை.
வெயில் கொட்டிக்கிடந்த நாளில்
மிகத் தெலைவுக்குச் சென்றும் அவனை பார்க்கமுடிவில்லை.
யாரையும் குறைகூறக்கூடாது?
எதைப் பற்றியும் விபரிக்க முடியாதிருக்கிறது.
நேற்றிரவு
கூடாரத்தை காற்று பிடுங்கிக்கொண்டு போயிற்று.
புழுதி முடிய உன் தங்கைகளை
காலையில் கிளிறியே எடுத்துக்கொண்டோன்.
நீங்கள் இப்பொழுது துப்பாக்கிளையெல்லாம்
மறந்துபோயிருப்பதாக
எனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருக்கிறேன்.
நான் எப்படி எல்லாம் பேசுகிறேன்!
வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

எல்லாவிதமான சொற்களையும் மறுப்பின்றி
ஏற்றதனால் அபிராஜை பார்க்க முடியும் போலிருக்கிறது.
அவனுக்கு வழங்கிய புத்தகங்களில்
தொழிற் கருவிகள் வரைந்துகொடுக்கப்பட்டுள்ளன.
மரவேலைகளை செய்யவும் பழக்கப்படுகிறான்.

உங்களைப்போலவே ஒவ்வொரு
காலையிலும் ஏற்றப்படும் சிங்கக்கொடியின் முன்னிற்கிறேன்.
சிங்கள தேசியகீதத்தை தவறாது பாடுகிறேன்.
ஜனாதிபதியின் புகைப்படங்களை
கூடாரத்தில் மாட்டி வைத்திருக்கிறேன்.
இப்படி
குருதி கொட்டாமலே எல்லாக்கொலைகளும் நிகழுகின்றன.
நீங்கள் துப்பாக்கி பற்றி பேசாதிருங்கள்.
பெரிய கிடங்கில் தள்ளுப்பட்டு விழுந்து கிடக்கிறோம்.
மண் நிரவிக்கொண்டிருக்கிறது.
நான் குறிப்பிட்ட வீடு நம்மை தேடியலைந்துகொண்டிருக்கிறது.

நான் மீளவும் மீளவும் பேசுகிறேன்.
பல்வேறு வருணங்களை கலந்த சொற்களை வைத்து.
குருதி பிறண்ட கோப்பைகளில் கைகளை நீட்டி அழைகிறேன்.
முயற்சியின்
எல்லையில் குவிந்துகிடக்கிற குப்பைபகள்
புகைந்துகொண்டிருக்கின்றன.
அபிராஜ் புத்தகங்களை மறந்துபோயிருக்கிறான்.

எந்த ஓட்டைகளுமில்லை.
வழி என்பது வேறு ஒரு பக்கத்திற்கு இழுத்துச் செல்லுகிறது.
மிகவும் இறுக்கமாக பின்னப்பட்டிருக்கின்றன அரண்கள்.
எனக்குப் பதில் எழுதாதே!
மீண்டும் உன்னைப் பார்க்க வேண்டும்,
லூர்த்தம்மா,
கனவுகள் எப்படி வருக்கின்றன என்பதை எழுதமுடியவில்லை.
அபிராஜின் கைகளில்
உழிகளும் பலகைத்துண்டுகளும் நிரம்பியுள்ளன.
____________________
06.10.2009

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கிறார்கள்


இப்படித்தான் கொடுமையான இரவுகளையே
எப்பொழுதும் உனக்கு தரவேண்டியாயிற்று.
காலை என்றாலும் உன்னை
நெருங்கிவிட முடியவில்லை.
எல்லாவற்றையும் நிர்பந்தங்களுக்காக
செய்துகொண்டிருக்கிறோம்.
உன்னை தனியே விட்டுச் செல்லுகிற
என் தாய்மையைப் பற்றி
என்ன சொல்லி அழுகிறாய்!
அந்த வெளியில்
கலந்து கிடக்கிற தாலாட்டுகள்
உன்னை தூங்க வைக்கும் என்றே நினைத்திருந்தேன்.

அவர்கள் உன்னை என்னிடமே சேர்ப்பதாக
சொல்லுகிறார்கள்.
வீடுகளை பார்த்து ஆசைப்பட்டுக்கொண்டு வந்த
பயணத்தின் இடையில்
ஒரு தோழிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.
அதற்கான பாதுகாப்பு விசாரணைகளுக்காகத்தான்
இடையில் தடுத்து வைக்ப்பட்டிருக்கிறோம்.
தூங்க மறுத்து
அழுது களைத்துப்போய் காலையில்
சூரியனை காணாது தூங்கிக்கொண்டிருக்கிறாய்.
நினைத்தபடி எங்கும் செல்ல முடியாது
என்பதால் உன்னை கொஞ்சம் பொறுக்கச்சொல்லுகிறேன்.

எனது கண்களும் கரைந்துகொண்டிருக்கின்றன.
என்னை மறந்து
தூங்கும்பொழுது மீளவும் உன்னிடம் வந்து
என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ள
துர்பாக்கியத்தில் நானிருக்கிறேன்.
இங்கு தோள்களில் பிள்ளைகளை அவர்கள் போட்டுக்கொண்டுதான்
புத்தகங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.
கூடவே தங்கள் துணைகளையும் அழைத்து வந்திருக்கிறார்கள்.
ஏன் நம்மை பிரித்து விட்டார்கள்.
இந்த இரவு மிகவும் கொடுமையாக
நீண்டுகொண்டே உன்னை தூரமாக்கிச் செல்லுகிறது.

நானும் உன்னைப்போலவே தூங்க மறுத்துக்கிடக்கிறேன்.
பால் சுறந்து வடிந்துகொண்டிருக்கிறது
மனம் கொதித்து அறைக்குள் அலைந்துகொண்டிருக்கிறேன்.
மகளே இப்படித்தான்
நாங்கள் எப்பொழுதும் பிரிக்கப்படுகிறோம்.
எப்படி நீ அருகில் இருக்கிறாய் என்றும்
நான் உன் அருகில் இருக்கிறேன் என்றும்
சொற்காளால் சமாளிக்க முடியும்?
நான் வெகு தூரத்திற்கு வந்திருக்கிறேன்.

எங்கோ ஒரு கூடாரத்தில் அழுகை படிந்து கிடக்கிற
உனது முகத்தை யார்தான் காட்டமுடியும்?
பல்வேறு விடயங்களுக்காக
குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கிறார்கள்.
நாளையும் விரைவாக வருகிறது.
எப்படி மீளவும் உனக்கு பதில் அனுப்பப்போகிறேன்.
அவர்கள் உன்னை கொண்டு வந்து தருவதாவே சொல்லுகிறார்கள்.
நான் சொன்னபடி
நிறைவே பொறுத்து உனக்கு தொண்டையடைத்துப்போயிருக்கிறது.
அவர்கள் சொல்லுவதைத்தானே சொல்ல முடியும்!

இவை கொடுமையான இரவு என்பதை
நான் சொல்லாமலே அறிந்து வைத்திருப்பாய்.
உனது அழுகை மிகச் சமீபமாகவே கேட்கிறது.

இன்னும் உன்னை பொறுத்துக்கொள்ளச் சொல்லுவது
எவ்வளவு இரக்கமற்ற வார்த்தைகளாக இருக்கும்!
உன்னை தூங்க வைத்து
அசைத்துகொண்டிருக்கும் மடிகளால் நிறைந்து கிடக்கிறது
என் கனவு .
எல்லாக் குழந்தைகளும்
எதோ ஒன்றின் நிமித்தம் அழுதுகொண்டேயிருக்கிறார்கள்.
o

தீபச்செல்வன்

03.09.2009 

முள்வேலித் தடுப்பு முகாமில் மாணவர்கள் மாத்திரம் விடுவிக்கப்பட்ட சமயத்தில் ஒரு வயதான தனது குழந்தையை கணவருடன் விட்டுப் பிரிந்துவர நேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி தனது குழந்தையை தன்னிடம் சேர்த்து விடும்படி கோரினார்.


திங்கள், 21 செப்டம்பர், 2009

முகத்தை மூடிக்கொள்ளுகிற குழந்தை


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
இன்று விடுவிக்கப்படாதவர்கள் மற்றொரு பக்கத்தில்
கம்பிகளுக்குள் நிற்கிறார்கள்.
அவர்களின் இடுப்பில் இருந்த குழந்தைகள் அழுகின்றன.
இந்தக் குழந்தை கொண்டாடத் தொடங்கிய
மகிழ்ச்சி முட்பம்பிகளில் மோதி சிதறுகிறது.
தனது அம்மா அப்பபாவின்
பெயர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறதா என உறுதி செய்யப்பட்டு
ஒலிபெருக்கியில் அறிவித்துவிட்டு
குழந்தையை ஒலிபெருக்கியில் அவர்கள் புன்னகைக்க விட்டார்கள்.

உன்னை வரவேற்பதற்காக சொற்களை கொண்டு வந்திருக்கிறேன்.
கைளில் கட்டியிருந்த அடையாள இலக்கை
அவிழ்த்து உன்னை வெளியில் அழைத்துச் செல்லுகிறேன்.
குழந்தை முகத்தைப் பொத்திக்கொண்டு புன்னகைத்துக்கொண்டிருக்கிறது.
வெளியைப் பற்றி அது அறிந்திராத கதைகளை கேட்டபடி
உள்ளே அறிந்து வைத்திருந்த ககைளையும்
தனது மொழியில் சொல்லத் தொடங்குகிறது.
எல்லோரும் கேட்டபொழுதும் யாருக்கும் புரிவதாயில்லை.

முள்ளி வாய்காலில் பதுங்குகுழியொன்றில்
ஷெல்களின் இரவில்
பிறந்து மிஞ்சியிருக்கிறவர்களுக்காக புன்னகையை வளர்த்துக் கொண்டிருக்கிறது.
இராணுவ தளபதியொருவனின் சட்டையில்
தூங்கிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களை இழுத்து பிடுங்க
அவனது தோள்களை எட்டிப் பிடிக்கிறது.
அந்தத் தளபதியும் குழந்தையைப் பார்த்து சிரிக்கிறான்.
குழந்தை முழுச் புன்னகையையும் சட்டென நிறுத்துகிறது.

குழந்தைகள் அழும் சத்திற்கிடையில்
மீளவும் மீளவும் இந்தக் குழந்தையின் புன்னகை எழும்புகிறது.
அவர்க்ள பேசுகிறார்கள் உலகத்தைப் பற்றியும்
வாழ்வைப் பற்றியும்
குழந்தைகளின் விடுலை பற்றியும்
இன்னும் விமானங்களை வானத்தில் காண்டுகொண்டிருக்கிற குழந்தைகள்
அதிர்வுகளுக்கு அஞ்சி நிலத்தில் விழுகின்றன.

இந்தக் குழந்தை புன்னகைத்தது., மற்றைய குழந்தைகளுக்காகவும்
அவர்களுடைய அம்மா அப்பாக்களுக்காகவும்.
மிகவும் பெரிதாய் புன்னகைத்தது. புகைப்படங்களுக்கு முகத்தையும் கொடுத்தது.
அவர்கள் சொன்னார்கள் குழந்தையை
எங்கள் உலகத்திலேயே வளர்த்து விடுங்கள் என.

இனி, இந்த நாட்டின் குழந்தை எனவும்
இது பயங்கரவாதத்திற்கு துணைபோயிருந்தது கண்டு பிடிக்கப்பட்டபோதும்
மன்னிக்கப்பட்டிருக்கிறது எனவும்
இறுதி யுத்திற்கு சில நாட்களின் முன்பாக
பிறந்து ஒரு வாரத்தில் சரணடைந்தபடியால் யுத்தக்குற்றங்களை
மற்றைய எல்லோரைவிடவும்
மிக குறைவாகவே செய்திருக்கிறது எனவும்
சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
குழந்தை மூச்சை அடக்கி வைத்துக்கொண்டு பார்க்கிறது.

பெயர் பதிவுசெய்யப்பட்ட புத்தகத்தில் கடைசியாக குறித்து வைக்கும்பொழுதும்
வாசலால் வெளியில் அனுமதிக்கப்படும்பொழுதும்
மீளவும் பேரூந்தில் ஏறுகிறபொழுதும்
பல கோணங்களில் படம் பிடிக்கப்பட்டது.
செல்லும் முகவரியையும் சுற்றித்திரியும் எல்லைகளைப் பற்றியும்
மீள ஞாபகப்படுத்தப்பட்டது.
கூப்பிடுகிறபோது எப்பொழுதும் குழந்தையை கொண்டு வருவதற்கு
தயாராக இருப்பதாக குழந்தையின் தகப்பன் சொல்லுகிறான்.

குழந்தை கைகளை விலக்கி பார்க்கிறது குருதி காய்ந்த தெருக்களை.
நான் சொல்லத் தொடங்குகிறேன் கொண்டு வந்த சொற்களை.
அதன் புன்னகைக்காக காத்துக்கொண்டிருந்தேன்.
கணவனை தேடி மற்றறொரு முகாமிற்கு செல்ல இறங்குகிற
இன்னொரு குழந்தையையும் தாயையும் பார்த்து
முகத்தை மூடிக்கொள்ளுகிறது.
கையை விலக்கிய பொழுது முகம் சிவந்துபோயிருந்தது.
கையில்
அடையாள இலக்கம் கட்டியிருந்த இடத்தில் குருதி கசிந்திருந்தது.
வீட்டின் முன், விறாந்தையில் இருந்தபடி
தனியே குழந்தை மீளவும் புன்னகைத்துக்கொண்டிருந்தது.
-----------------------
( 20.09.2009 அன்று கைதடி தடுப்பு முகாம்)

புதன், 16 செப்டம்பர், 2009

மண்ணிறங்குகிற கால்கள்


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------

பந்து எட்டாத தூரத்திலிருக்கிறது
கால்கள் இறங்காமல்
எப்பொழுதும் தூக்கி மடக்கி வைத்திருந்தபடி
அவள் எல்லாருடைய கண்கள் வழியாகவும்
நடந்து செல்லுகிறாள்.
பதுங்குகுழி உடைந்து
மண் விழுகையில்
தனது கால்கள் மேலும் நசிந்தன என்கிறாள்.

கால்களை ஷெல் கிழித்த பொழுது
தனது கண்கள் குருதியில்
நனைத்து கிடந்தன என்று கூறியபடி
சக்கரத்தை உருட்டுகிறாள்.

எனது கால்கள் இல்லாததைப்போலிருக்கின்றன.
நடப்பதற்கு ஆசைப்படுகிற
கால்கள் எப்பொழுதுமே தொங்குகின்றன.
மண்ணிறங்கும் கால்களுக்காக கனவு
காணுகிற இராத்திரிகளில் அவளது மனம்
நாற்காலியின் கீழாக தூங்குகிறது.

எப்பொழுதும் எங்கும் உருள மறுக்கிற
சக்கரங்களுடன்
யாரையாவது உதவிக்கு அழைத்தபடி
குழந்தைகள் விளையாடுகிற இடத்தின்
ஓரமாய் நிற்கிறாள்.
எட்டுவயது சிறுமி நற்காலியை நகர்த்துகிறாள்
கால்கள் நிரம்பிய பெரிய மனிதர்களின் மத்தியில்.

கால்கள் வளரும் என்று கூறுகிற தாயின்
சொற்கள் பொய்த்துவிடுகிறதாக
சொல்லிவிட்டு சிதல் கசியும்
காயத்தை காட்டுகிறாள்.
எல்லாம் ஒடுங்கியபடி
தங்கியிருக்கிறது அவளது உலகம்.
தனது கால்களை உடைத்து
தன்னிடமிருந்து
நடை பிரிக்கப்பட்டது என்கிறாள்.
மண்ணிற்குள் இறங்கிப்போயிருந்தது
அவளின் அம்மாவின் கால்கள்.

அவள் அறியாதபடி
கற்களின் மேலாகவும் கிடங்குகளிலும்
அந்தச் சக்கரங்கள் உருளுகின்றன.
அவளுக்கு முன்னால்
பெருத்த கால்கள் பெரிய அடிகளை வைத்தபடி
எங்கும் நடந்து திரிகின்றன.
தனது கால்களை தூக்கி மடியில் வைத்திருக்கிறாள்.
-----------
(12.09.2009 அன்று வவுனியா கதிர்காமர் தடுப்புமுகாமலிருந்து அழைத்து வரப்பட்ட எட்டு வயதுச் சிறுமி ----------- கைதடி தடுப்பு முகாமில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்ருடிக்கிறாள். ஷெல் தாக்குதலில் கால்கள் பழுதடைந்திருப்பதால் நடப்பதற்கு முடியாமல் சக்கர நாற்காலியை உருட்டியபடி திரிகிறாள்)

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

நிருவாணமாக கொலையுண்டவர்களின் பின்பக்கம்


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
தேங்கிய நீரில் துடித்து மிதந்து கொண்டிருக்கின்றன
பிடரிகளும் கண்களும் கைகளும்.
நிருவாணம் எல்லோரது
உடைகளையும் களைந்து விடுகிறது.
மிகவும் அஞ்ச வைத்தபடி
கோணல் துவக்கு தலையின் பின்பக்கம்
துளையிடுகிறது.
நிலம் பரிதாபமான குருதியால் நனைகிறது.

யாருடைய முகமும் தெரியவில்லை.

எல்லோரிடமும் எங்கும் குருதி கொட்டிக்கொண்டிருக்கிறது.
பேரூந்திலும்
நகரத்தின் உள் தெருக்களிலும்
வீட்டிலும்
தொலைக்காட்சிப்பெட்டியிலிருந்து
குருதி பரவிச்செல்கிறது.
பிள்ளைகளை தேடிக்கொண்டிருந்த தாய்மார்கள்
அலைவரிசைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இரச்சிக்கடைக்கரர்கள் சீருடையை
அணிந்தவர்களைப் போலிருக்கிறார்கள்.
தூக்குகயிறுகளில் முகங்கள் கொழுவுகின்றன.

குருதி நிலத்தை நனைக்கும்படி
கொட்டிக்கொண்டிருந்தது.
முகங்களை பார்க்க முடியாதபடியிருந்தன
என்னுடைய பிள்ளையைப்போலவும்
உன்னைய பிள்ளையைப்போலவும்
இவர்களுடைய பிள்ளையைப்போலவும்
அவர்கள் இருந்தனர்
தாய்மார்களின் முகங்களில் விழுந்துகொண்டிருக்கிறது
அந்த குருதி நனைந்த மண்துண்டுகள்.

பிள்ளைகளை காணாத தாய்மார்கள்
எல்லோரும் தங்கள் பிள்ளைகளென
கொலையுண்டவர்களின்
பின் பக்கங்களைக் கண்டு மாரதடித்தனர்.
குருதியில் அந்த தலைகள்
விழுந்து கொண்டிருக்க
இல்லாத பிள்ளைகளின் மரணம் பெருகுகிறது.

குருதி வடிகிற பிடரிகளால் நிறைந்திருக்கின்றன
கொலையாளிகளது சீருடைகள்.
அவர்கள் மனிதர்கள் என்பதைத் தவிர
எதுவும் தெரியாதிருக்க
எல்லோரது தலையின் பின்னாலும் குருதி ஊற்றியபடியிருக்கிறது.
அந்த வெளியில் கனவு சிதறி ஒழுகிய குருதியுறைந்திருந்தது.
-----------------------
(28.08.2009 சிறிலங்கா இராணுவ சீருடை அணிந்தவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கண்களும் கைகளும் கட்டப்பட்ட தமிழ் இளைஞர்களை கோரத்தனமாக சுட்டுக் கொல்லும் சாட்சியை 'சனல் 4' தொலைக்காட்சி கையடக்க தொலைபேசிக் கமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றில் வெளியிட்டியிருக்கிறது. இந்தக் காட்சி 2009 ஜனவரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்தத் தொலைக்காட்சி குறிப்பிடுகிறது)

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

சாம்பலாக்கப்பட்ட நிலத்தின் நடுவிலிருக்கிற சிதைக்கப்பட்ட நகரம்


o தீபச்செல்வன்
 ----------------------------------------------------------------

01
மாடுகள் அலைந்து திரிந்து
கண்ணிவெடிகளையும் மண்ணையும் மேய்ந்து கொண்டு
சாணியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக
நகரத்திற்கு வேறு பக்கம் திரும்புகின்றன.

எரிந்து கருகிப்போயிருக்கிறது
சனங்களின் நிலம்.
அழிந்து சமதரையாகிப்போன வெளியில்
பேய்கள் வாழ்ந்து திரிகிறது.
நிலம் எரிந்து சாம்பல் பூத்திருக்க
தலைகள் பிடுங்கப்பட்ட
மரங்கள் மண்ணில் குத்துண்டு நிற்கின்றன.
தலையிழந்த பனைகளால் மிகுந்த வெளியில்
நோடட்மிடுகிற காவலரண்களை
சுமந்து நிற்கிறது வேர் பட்ட பனங்குத்திகள்.
உப்பு விழைந்த வாடிகளில்
இல்லாத சனங்களின்
குருதியும் துயரும்
சேர்ந்து விளைந்து கொண்டிருக்கிறது.

02
யாரும் திரும்ப முடியாத வழியில்
எங்கும் குழிகளும்
அவற்றில் அவலமும் நிரம்பியிருக்கிறது.
கல்லறைகளை புதைத்து
நினைவுச் சிலைகளை கொலை செய்ய
இடிந்த கட்டிடத்தின்
சுவர்க்கரையில் மாடுகள் கன்றுகளை ஈன்றிருக்கின்றன.

ஞாபகங்கள் அழிந்து குவிந்து கிடக்கின்றன.
விட்டுச் செல்லப்பட்ட முகங்கள்
கொழுத்தப்பட்டுக்கொண்டிருக்க
கருகிக்கொண்டிருக்கிறது சூரியனின் முகம்.

அறுக்காத நெல்மணிகள் சாய்ந்து
எரிந்த சாம்பல் வயலில்
இருப்பிற்காய் அலைந்து
பாதியாய் உடைந்து போயிருக்கிற
கதிரையை யாரோ விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
புத்தர் கண் விழித்திருக்கிற
அரச மரங்களைத் தவிர எங்கும் நிழலில்லை.
வாசல் மறைத்து கறுப்புத் திரையிடப்பட்ட
கோயில்கள் இராணுவ நிறங்களால் தீட்டப்பட்டிருக்கிறது.
சனங்களின் கடவுள் வெளியேற்றப்பட்ட
ஊரில் அலைகின்றன மிருகங்கள்.
மணிகள் அறுத்து கீழே விழுத்தப்பட்டிருக்கிறது.

மிஞ்சியிருக்கிற ஒரு சில வீடுகளின்
சிதைந்த பகுதியில் சாம்பலில்
தொங்கிக்கொண்டிருக்கிறது
அழிப்பின் உக்கிரம்.
கூரைகளை இழந்த வீடுகளை துளைத்துப்போயிருக்கிறது
பீரங்கி வண்டிகள்.
பேரூந்தும் சைக்கிளும்
எரிந்த தகரச் சாம்பலில் புத்தர் அமர்ந்திருக்கிறார்.

கண்கள் பெரிதாய் திறந்தலையும்
அரச மரங்களின் கீழ்
பாத்திரங்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன.
முற்றிலும் மாறிப்போயிருக்கிறது நிலம்.

03
அடையாளம் தெரியாத வீதியில்
பள்ளம் மேடாக்கப்பட்டு
மேடு பள்ளமாக்கப்பட்டு
கற்களின் மேடாயிருக்கிறது நகரம்.
சைக்கிள்களையும் கதிரைகளையும்
ஒதுக்கி குவித்து விடப்பட்டிருக்க
சாம்பல் பரப்பி விடப்பட்டிருக்கிறது.
எரிந்த வானத்தின் கீழ்
நகரத்திற்கு மேலாக
சாம்பல் உதிர்ந்து கொட்டிக்கொண்டிருக்கிறது.

சிதைந்த மாடியின் மேலிருந்து
தொங்கிக்கொண்டிருக்கிறது
எப்பொழுதும் விழக்கூடிய ஜன்னல்.
மின்கம்பங்களில் முட்கம்பிகள் படர்ந்திருக்க
நெடு வீதி கரைந்து ஒழுகுகிறது.
விழுந்து கிடக்கிறது நகரின் பிரதான மின்கம்பம்.

வயல்களில் போட்டுச் செல்லப்பட்ட
படகுகளின் கீழாய்
மீன்கள் அலைகின்றன.
சாம்பலை சுற்றியிருக்கிறது வலை.
எல்லாம் தகர்த்து வீழ்த்தப்பட்ட
நகரத்தில்
தோல்வியின் வாசகங்களை
எழுதிக்கொண்டிருக்கிறது சிங்கள எழுத்துகள்.
தொப்பியால் மூடப்படுகிறது பள்ளிக்கூடங்கள்.
நெடு வீதி சீருடையால் போர்த்தப்பட்டிருக்கிறது.

04
சுவடுகள் அழிக்கப்பட்டு மண்மேடுகளால்
சுற்றி நிரப்பட்ட நகரத்தில்
எதுவும் தெரியவில்லை.
சாம்பல் மேட்டில் இனந்தெரியாதபடி
குறுக்கு வீதிகள் அச்சத்துள் மூடுண்டுகிடக்கிறது.
நகரத்தின் மேல் சாம்பல்.
சாம்பலின் மேல் மண்மேடு.
மண்மேட்டின்மேல் காவலரண்.
முழு நகரத்தையும் தின்று கொண்டிருக்கிறது
முன்னுக்கு சென்றுகொண்டிருக்கிற பவல்.
எப்பொழுதும் இராணுவ மோட்டார் சைக்கிள்கள்
சுற்றிக்கொண்டிருக்கிறது.
அடையாளத்தை இழந்துபோயிருக்கிறது நகரம்.

சாம்பல் கரைந்து குளத்தை நிரப்பியுள்ளது.
சொற்கள் மூழ்கி நாறிக்கொண்டிருக்கிறது.
கனவு பாசி பிடித்து எரிந்த தாமரைகளின் வேரில்
சுற்றிக்கிடக்கிறது.
சலனமற்றுக் இருக்கிறது பெருநிலம்.
கொலை செய்யப்பட்டிருக்கிறது நகரம்.
தோல்வியின் குருதியால் நிரப்பட்டிருக்கிறது குளம்.
05
காடுகள் பிரட்டி ஒதுக்கப்பட்ட
தீ எரிந்து கொண்டிருக்கிற திசையில்
அடியுடன் பிடுங்கி காய்ந்துபோன முகத்துடன்
எறியப்பட்ட பெருவேரில்
தீர்ந்து போயிருக்கிறது சனங்களின் நம்பிக்கை.
வீடு விழுந்து தாண்டுபோன கிணற்றை
முற்றம் குடித்திருக்கிறது.
முற்றம் இறங்கிய காணியில்
முதிர்ந்த பயன் மரங்களின் வேர்கள்
குவிக்கப்பட்டிருக்கின்றன.

சனங்களை இழந்த வெளியும்
வாசனையை இழந்த நிலமும்
நிறத்தை இழந்த நகரமும்
சாம்பலில் குளித்தலைகிறது.
பிணங்கள் கால் இறங்காமல்
பார்த்துச் செல்லுகிற வீதியில்
பேய்கள் எல்லாவற்றையும்
அடியில் தாழ்த்து
அதன்மேல் புதிய மண்ணை குவித்து
நிரப்பி எல்லாவற்றையும் அழித்து
அதன் மீது புதிய சொற்கள் எழுதுகின்றன.

வாழ்வு சாம்பலான வெளியில்
நிலம் எரித்து நகரம் சிதைக்கப்பட்ட
பூர்வீகமான வாழ்வு அகழ்ந்து துடைக்கப்படுகிறது.

யாரும் திரும்பாத நெடு வீதியின் கரையாக
இரவு விரிந்து பெருக மாடுகள் அலையத் தொடங்குகின்றன.
குழந்தைகளை இழந்த பொம்மைகள்
வயல்வெளிகளில் கிடந்து உக்கிக்கொண்டிருக்கிறது.
-----------------------
02.08.2009 வன்னி நிலம், கிளிநொச்சி, ஏ-9 வீதி, பயணம்.

சனி, 8 ஆகஸ்ட், 2009

உக்கிப்போயிருக்கிற அம்மாவின் புன்னகை


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------


அ.
எலும்பும் தோலுமாக தூரத்தில்
முட்கம்பி ஒனறில்
அம்மா கொழுவப்பட்டிருந்தாள்.
இருவரது முகங்களையும்
முட்கமபி கிழித்துத்கொண்டிருக்கிறது.
மெலிந்த கைகள்
முட்கம்பிகளுக்குள புகுந்து
கலந்துகொண்டிருக்க
நடுவில் இரண்டு முட்கம்பிச் சுருள்கள்
ஒன்றன்மேல் ஒன்றாய்
அடுக்கப்பட்டிருக்கிறது.

அம்மா புன்னகையை
இழந்துபோயிருக்கிறாள்.
தாழ்ந்து மறைந்துவிட்ட
கண்களுக்குள்
படிந்த புழுதியை கண்ணீர் கரைக்கிறது.
காலத்தின் பெருந்துயர் நிரம்பி
பிள்ளைகளுக்காக ஏங்கும் அம்மாக்கள் பலர்
அம்மாவின் பின்னால்
வரிசையில் நிற்கின்றனர்.

எல்லா அழுகைகளும்
எல்லா விசாரிப்புக்களும்
பரிமாறல்களின் துயரங்களும்
ஓலைக்கொட்டிலினுள்
நிரம்பிக்கொண்டிருக்கிறது.
அம்மாவின் சொற்கள் உடைந்து சிதறுகிறது.


கையேந்தியபடியிருக்கிற கைவிடப்பட்ட குழந்தைகளும்
அவர்களை சுமந்திருக்கிற தாய்மாரும்
முட்கம்பிகளுக்குள்
கைகளை நீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அம்மாவின் சொற்கள்
முட்கம்பிச் சுருளுக்குள் விழுந்து விடுகிறது.
பகிராத கதைகளுடன்
பத்து நிமிடங்களுக்குள் கண்ணீரை நிரப்ப
விசிலின் ஒற்றை சத்தத்தில்
இருபக்கமாக துரத்தப்பட்டு விடுகிறோம்.
03.08.2009

ஆ.
அம்மாவின் கூடாரம் காலத்தின் துயரால்
நிரம்பிக்கிடந்தது.
சிவப்புப் புழுதி படிந்த
கூடாரத்தில் காட்டு மரங்கள்
வந்து ஒதுங்குகின்றன.
அம்மாவும் தங்கைச்சியும் கூடாரத்திற்குள்
அடங்கிக்கிடக்க
சூரியன் கூரையின் மீது விழுந்து கிடக்கிறது.
குழந்தைகள் துடித்துக்கொண்டு
வெளியே ஓடிவந்து
துப்பாக்கியில் மோதுகிறார்கள்.

தண்ணீருக்கான வரிசையில் முட்டுகிற
உள் முட்கம்பிகளை
கடக்க காத்திருந்த பிரிந்திருக்கும் பிள்ளைகள்
தாய்மாரை காணாமலே திரும்புகிறார்கள்.
மலம் நிரம்பி நாறவும்
கழிவுநீர் கூடாரத்திற்குள் நுழையவும்
கலர் தண்ணீருக்காக
குழந்தைகள் அணிவகுத்து நிற்கிறார்கள்.

நிமிர முடியாதிருந்த நிலத்திலிருந்து
கொண்டு வரப்பட்டவர்கள்
நிமிர முடியாத கூடாரத்திற்குள்
நிரப்பப்படுகிறார்கள்.
இணையாதவர்களாய்
தேடிக்கிடைக்காதவர்களாய்
தடுத்துவைக்கப்பட்டவர்களாய்
இரவுக்கும் பகலுக்கும் இடையில்
அடிபடும்
சூரியனுடன் மோதினார்கள்.
அம்மா உதிர்ந்துகொண்டிருக்கிறாள்.

தொண்டு நிறுவனச் சின்னங்கள்
பொறிக்கப்பட்ட வெள்ளை அரிசியில்
வேர் பறிக்கப்பட்ட
வனத்தின் வெம்மை புதைகிறது.
புழுதி மூடிக்கொண்டிருக்கிறது
கூடாரங்களுக்கிடையிலிருக்கிற
சிறிய அடுப்புக்களை.

பிரமாண்டமாக முட்கம்பியால் பின்னப்பட்ட
சிறைக்குள்
கேடயமாக்கப்பட்ட எண்ணிக்கையற்ற கூடாரங்களை
சனங்களுடன்
புழுதி மூடியபடியிருக்கிறது.

பிரிந்தவர்கள் முன்னும் பின்னுமாக
எட்டிப் பார்க்க முடியாது
உயர சுற்றப்பட்டிருக்கும் முட்கம்பிகளுக்குள்
முகங்களை செலுத்தி
முகாம்களுக்கு முகாம் அலைந்தபடி
கற்கள் நிரம்பிய வீதியில்
நடந்து திரிகின்றார்கள்.
எல்லா ஒலி பெருக்கிகளும்
பிரிவை அளந்து கொண்டிருக்கிறது.

அம்மாவின் புன்னகை
எங்கோ ஒரு கூடாரத்தின் மூலையில்
நிவாரணப் பொருட்களுக்கிடையில்
உக்கிப்போனபடி கிடந்தது.

காலத்தை விழுங்கிய இருள்
அம்மாவை தள்ளிக்கொண்டு செல்கிறது.
04.08.2009
________________

ஞாயிறு, 19 ஜூலை, 2009

குழந்தைகள் தோற்கடிக்கப்படுகிற சமாதானத்தின் நிழல்


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
போர் தின்ற நகரத்தை
சமாதானத்தின் கடதாசி கட்டி எழுப்புகிறது.
பூக்களும் பறவைகளும்
நிலத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்டிருந்த நாளில்
வெள்ளைவீதி திறந்திருக்கிறது.
எல்லோருடைய கண்களிலும் போர் நிரம்பியிருக்க
கவிழ்ந்த கைகள்
நமது நகரத்தில் உலவித்திரிகின்றன.

சூழ்ச்சிகளால் வடிவமைக்கப்பட்ட
சொற்களை
மாறி மாறி பேசிக்கொண்டிருந்த
வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காலத்தில்
சீமெண்ட் சுவர் வளர்ந்து
மனதை மூடிக்கொண்டிருக்கிறது.
காலங்களின் ஒளியை
முழுவதுமாய் சுறண்டி எடுத்திருக்க
பொலித்தீன் பைகளில்
அலையும் கனவை அடைத்துக் கட்டப்படுகிறது.

தோற்றுத் தோல்வியின் துயரில்
முடிந்து விடுகிறது நிலத்தின் அடங்காத வாசனை.
எல்லோரும் பேசிவிட்டுப் போன பிறகு
கதிரைகள் வெடித்துச் சிதற
ஏங்கிக்கொண்டிருந்தது சொற்கள்.

போரை கொண்டாடிக்கொண்டிருக்கிற
சமாதானத்தின் கீழ்
பயங்கரம் நிரம்பியிருந்ததைக்
குழந்தைகள் கண்டனர்.
எல்லோரையும் மூடிக்கொண்டிருக்கிறது.
சமாதானத்தின் நிழல்.
குழந்தைகளின் கண்களை மெல்ல
சமாதானம் தின்கிறது.
மணல் நகரங்கள் எழும்பிக்கொண்டிருக்கிறது.

கிராமங்கள் புதைந்துபோக
முடிவற்ற பெயர்வு நிலத்தை வரைந்துகொண்டிருக்கிறது.
ஆற்றில் நகரத்தை அள்ளும்
படகு மிதக்கிறது.
முதலில் சொற்களின் ஒளி
மீள முடியாத சகதியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்க
காலம் தோற்க்கடிக்கப்பட்ட
வானம் முழுவதும் இருள் பொழிகிறது.

சமாதானத்தின் நிழலில்
எரிந்து கருகுகிறது கடதாசி நகரம்.
குழந்தைகள் துப்பாக்கிகளால் மடக்கிப்பிடிக்கப்பட்டு
கவச வாகனங்களில் நிரப்பப்படுகின்றனர்.
முன்னால் நிற்கிறது
ஷெல்களை பொழியத் தயாராக இருக்கிற பீரங்கிகள்.

நம்பிக்கைகளை ஏமாற்றியபடி
எதிர்பார்ப்புக்களை சிதைத்தபடி
சொற்கள் போர் வளர்த்துக்கொண்டிருக்கின்றன.
காத்திருப்புக்களின்மீது
மிதிக்க வெடிக்கிறது புதிய வெடிகள்.
குழந்தைகள்
எல்லாவற்றையும் கண்டு அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.

வாசனையை உணர்ந்த கிழவன்
திண்ணையை மேய்ந்த பின்மாலைப்பொழுதில்
தோற்கடிக்கப்படுகிறான்.
காலத்தின்மீது
நஞ்சுக் கனிகள் காய்த்து முற்றுகிறது.
துவக்குகள் ஆட்களைத்தேட
மரணம் அண்மையை சுலபப்படுத்துகிறது.
மரம் முழுவதும் பாம்புகள்
பூத்து அடர
குளத்தில் விஷம் நிரம்புகிறது.
ஆறுகளின்மீது
பெருமெடுப்பில் பாய்கிறது வீழ்ச்சியின் இலக்கு.

பீரங்கிகள் தயாராக இருக்கின்றன.
டாங்கிகள் புறப்படத் தொடங்குகின்றன.
துவக்குகள் நிமிர்ந்து நேராக நிற்கின்றன.

சொற்களைப் பிய்த்தெறிந்துவிட்டு
குண்டுகளை ஏற்றி வந்து இறக்குகிறது
பயண விமானங்கள்.
வெள்ளைவீதிளில் சமாதானம்
போரை வடிவமைக்கிறது.
குழந்தைகள் ஒழித்துக்கட்டப்பட்ட நகரத்தில்
அவர்கள் தோற்றதை
அறிவித்துக்கொண்டிருக்கிறது சமாதானத்தின் கடதாசி.
______________

வெள்ளி, 10 ஜூலை, 2009

முட்கம்பிக்குள் மண்மூடிய கிராமம்


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
எலலோருக்கும் பகிரமுடியாத
ஒற்றைக் கிணற்றையும்
முட்கம்பி சுற்றி எடுத்திருக்கிறது.
தென்னோலைகள் தலைகீழாக தூங்க
கண்களுக்கு எட்டிய இடமெல்லாம்
வெடித்துச் சிதறிய
குண்டுகளின் வெற்றுக் கோதுகள் கிடக்கிறது.

வெயில் வந்து
கூடாரங்களை மேய்ந்துகொண்டிருக்கிறது.
முடி பறிக்கப்பட்ட தலைகளை
சூரியன் தின்று கொண்டிருக்க
முட்கம்பிகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது
காலம் பற்றிய சொற்கள்.

குண்டுகளற்ற பெட்டியை தட்டி விரித்து செய்யப்பட்ட
இருக்கையில்
நீயும் நானும் வைக்கப்பட்டிருக்கிறோம்.
தரப்பட்ட நேரங்களை
நாமறியாதபடி தின்றுகொண்டிருக்கிறது கடிகாரம்.
எப்பொழுதும் வெடிக்க தயாராக
ஒரு குண்டு
இருக்கையின் கீழிருப்பதைப்போலிருக்கிறது.
மீளவும் மீளவும்
மனம் வெடித்து சிதறி எங்கும் கொட்டிக்கொண்டிருக்கிறது.

எப்பொழுதும் இலங்கங்களை
அறிவித்துக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கியில்
யாரோ சொல்லத் துடிக்கிற
சொற்கள்
வாசலில் வந்து பொறுத்து நிற்கின்றன.
எப்பொழுதும் ஒலிபெருக்கிகளுக்கு கொடுத்துவிட்ட
காதுகளுக்கு
யாரோ அழைப்பது போல கேட்கிறது.

திசை பிரித்து கொண்டு செல்லப்பட்டவர்களாய்
இன்னும் தேடிக்கிடைக்கப் பெறாதவர்களுக்காய்
விசாரித்துக்கொண்டிருக்கிற
தனித்துவிடப்பட்ட சிறுவன் எல்லோரையும் பார்க்கிறான்.
மீள்வதற்கு எந்த வழிகளுமற்றுப்போக
முட்கம்பி எங்கும் இழுத்துக் கட்டப்படுகிறது.

துவக்குகள் வரிசையில் நின்று பார்த்துக்கொண்டிருக்க
ஒடுங்கிய முகங்களில்
பயங்கரத்துள் கைவிடப்பட்ட துயரம் ஒழுகுகிறது.
யாரும் கண்களுக்கு எட்டடிவிடாத முடிவில்
தலையை முட்கம்பியில்
தொங்கப்போடுகிறான் அந்தச் சிறுவன்.

யாரையும் சந்திக்காத வெறுமையில்
வெயில் நிரம்பியிருக்கிறது.
ஒலிபெருக்கி களைத்து அடங்கிவிட
வெயில் இந்தத் தனிக்கிராமத்தை கடந்து சரிகிறது.
இரவானதும்
மனம் எப்பொழுதும் சிக்குப்பட்டுக்கிடக்கும்
அந்தக் கிராமத்தை மண் மூடிக்கொண்டிருக்கிறது.
_____________
05.07.2009

சனி, 4 ஜூலை, 2009

அபிராஜூன் தங்கை லூர்த்தம்மாவின் கண்கள்

o தீபச்செல்வன்


01
லூர்த்தம்மாவின் கண்கள் பின்னிரவுகளில்
அலைந்து கொண்டிருந்தன.
அந்தத் துவக்கு மிகப் பாரமாக இருந்தது
என்கிறாள்
அபிராஜின் தங்கை லூர்த்தம்மா.
அவள் இழுத்துச் செல்லப்பட்டபோது
அபிராஜ் புதர் ஒன்றுக்குள் ஒளிந்திருந்தான்.

மீளவும் அவள் ஓடி வந்து
சருகுகளிற்குள் ஒளிந்துகொண்டாள்.
அப்பொழுது அவள் பார்த்துக்கொண்டிருக்க
அபிராஜ் இழுத்துச் செல்லப்பட்டான்.
கனவு ஒழுகி சருகுகள் ஈரமாக
லூர்த்தம்மா அழுதுகொண்டேயிருந்தாள்.
அபிராஜ் துவக்கின் சூட்டில்
வாடிவிட
லூர்த்தம்மாவை தேடிக்கொண்டிருந்தான்.
களங்கள் எங்கும் குருதி வடிந்துகொண்டிருந்தது.

இனந்தெரியாத கால்களில் மோதுகிறபோது
அபிராஜை லூர்த்தம்மா கண்டாள்.
குழந்தைகள் சரணடைந்து துவக்குகளை கையளித்தனர்.

02
அவள் ஒதுங்கும் இடங்களில்
துவக்குகள் விழித்துக்கொண்டிருக்கின்றன.
லூர்த்தம்மாவுடன்
விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுமிகளின் கைகளில் பாரமான இலக்கங்கள்
கட்டப்பட்டிருக்கின்றன.
மீள மீள அவள்
சரணடைந்து கொண்டிருக்கிறாள்.
அபிராஜிடம் துப்பாக்கியை கொடுக்கப்பட்டு
பரிசோதிக்கப்படுகிறது.
வந்திறங்கும் சிறுவர்களுக்காக
தயாரிக்கப்படும் இலக்கங்களை
அபிராஜ் எண்ணுகிறான்.
அபிராஜின் கால்கள் மடங்கிப்போகின்றன.

இப்போது லூர்த்தம்மாவின் கண்களை
இந்தத் துவக்குகள் காவலிட்டுக் கொண்டிருக்கின்றன.
பொம்மைக் கடைகளில்
துவக்குகள் தொங்கிக்கொண்டிருக்கிறதாய் வருகிற
கனவுகள் இருவரையும் இரவுகளில் அலைத்தன.

அபிராஜ் மீள மீள பரிசோதிக்கப்பட்டான்.
லூர்த்தம்மாவின் கண்களில்
சமரிரவுகளின் துப்பாக்கிகள் குத்திக்கொண்டிருந்தன.
துவக்குகள் லூர்த்தம்மாவையும்
அபிராஜையும் துரத்திக்கொண்டேயிருக்கின்றன.

லூர்த்தம்மாவின் குருதி கசிந்து வாடுகிற கண்கள்
அபிராஜின் முன் அலைந்துகொண்டிருந்தன.
 
தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறுவர் போராளிகளான 15வயதுச் சிறுமியான லூர்த்தம்மாவும் அவளின் அண்ணனான 16வயதுடைய அபிராஜிம் இராணுவத்திடம் சரணடைந்து- கைதுசெய்யப்பட்டு அரசாங்கத்தின் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் இவர்களுடன் 94 சிறுவர்கள் இருப்பதாகவும் அவர்களில் 44பேர் சிறுமியர்கள் எனவும் லூர்த்தம்மா ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தாள்.

புதன், 1 ஜூலை, 2009

பாம்புகள் பரிசளித்த சவப்பெட்டிகள்


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
கடைசியில் ஒரு நாள் மலசலகூடம்
கட்டி முடித்த போது எறிகனைகள் வந்து கொண்டிருந்தன.
கிணற்றின் ஆழத்தை
அளந்து கொண்டிருந்தபோது வெளியில்
வேவு விமானம் பறந்து கொண்டிருந்தது.

மரணத்தின் தூதுவர்களை வேடிக்கை
பார்த்த நமது வீதிகளை குழந்தைகள் இழந்துவிட
நாம் காணாமலிருக்க
வீடு அதிர்ந்து போயிருந்தது.

சவப்பெட்டிகள் வந்து குவிய
நாம் பூக்களாலான ஊச்சலில் ஆடியபடியிருக்க
பாம்பு முற்றத்தின் மரத்தில் ஏறிக்கொண்டிருந்தது.
விஷத்தின் கனியை
பூசையறையில் வைத்து பூக்களை
படையல் செய்தபோது
மரங்கள் சவப்பெட்டிகளில் நிரப்பப்பட்டது.

ராஜாக்களிடம் ஏமாற்றமடைந்த உரையாடல்களிடம்
என்றைக்குமான சொற்கள் பலியானது.
ஊமையாகிற மேசைகளில்
வைத்து சொற்கள் நசுக்கப்பட்டன.
பறவைகள் பாம்பாகி பறக்க
மேசைகள் சவப்பெட்டியாகி வந்தன.

வாக்குமுலங்களின் மேசையில்
இன்று பிணங்கள் தரப்படுகையில்
நமதாயிருந்த தொன்மையான சொற்களையும்
வாழ்நிலத்தையும்
சவப்பெட்டி பெருமெடுப்புடன் தின்னத்தொடங்கிற்று.

சவப்பெட்டிகள் வாழுகிற ராஜாவின் தீர்ப்பில்
மரணம் விதியால் துரத்துகிற பகுதியில்
யாரும் அறிமாலிருக்க
இனத்தின் நெடுநாளின் வாழ்நிலக்கனவு
ஊசிகளால் குத்தி மெல்ல சிதைக்கப்பட்டது.

மரணத்தின் அறைகளும்
அதிகாரத்தின் மூலைவெளிகளும் அதிகரிக்க
வாழ்வென்று காத்திருந்த ஏக்கம் தகனம் செய்யப்பட
மரங்கள் ஆணிகளாக்கப்பபட்டு
சந்ததியை அறைகிறது.

தெரு கிணற்றுக்குள் தவளையாகிப்போகிறது.

ஈரம் காயுமுன்பே விட்டு வந்த
கட்டிடங்களில் மரணத்தின் படைகள் தமது மொழி எழுத
நீயும் நானும் ஒரு சவப்பெட்டியில் என்றைக்கும்
மீள முடியாதவர்களாக அடைக்கப்பட்டிருந்தோம்.
-------------------------------------------------------
13.01.2009

சனி, 20 ஜூன், 2009

ஆட்களை இழந்த வெளி

o தீபச்செல்வன்


வானம் நேற்றுக் காலைவரை
உறைந்திருந்தது
இப்பொழுது சிதறி
கொட்டிக்கொண்டிருக்கிறது
வானம் அழுகிறதென யாரோ
சொல்லிக்கொண்டு போகிறார்கள்
இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை
சனம் தகர்ந்து அடங்கிப்போயிறுக்கின்றனர்
குடி எரிந்து முடிகிறது.

ஹெலிஹொப்டர்கள் அலைந்து
கூடாரங்களின் சிதைவுகளை படம் பிடிக்கிறது
எரிந்த வாகனங்களை
மீட்டுக் கொண்டு போகிறது ஐ.நா
எல்லாம் நசிந்துபோக
அடங்கிக் கிடக்கிறது
ஆட்களை இழந்த வெளி.

கைப்பற்றப்பட்டவர்களாக
குழந்தைகளை தொலைக் காட்சிகள்
நாள் முழுவதும்
தின்று கொண்டிருந்தன
நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

நந்திக்கடலில்
பறவை விழுந்து மிதக்கிறது
பறவைதான் சனங்களை தின்றது
என்றனர் படைகள்
நந்திக்கடல்
உனது கழுத்தை நனைத்து
அழைத்துக்கொண்டு போயிருக்கிறது

உடைந்த ஆட்கள் குழிகளில்
நிரப்பட்டனா்
ஆடகளற்ற வெளி கரைந்து உருகுகிறது
மாடு காகத்தை சுமந்து
வீழ்ந்து கிடக்கிறது
அந்தச் சிறு கூடுகள் நிலத்தை
பிரித்து சிதறின.

இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை
பெரு மழை பெய்கிறது
எனினும் நந்திக்கடல் காய்ந்து போகிறது.

வானம் உருகிக்கொட்டியபடியிருக்க
மிருகம் ஒன்று
சூரியனை தின்று கொண்டிருக்கிறது
யாருமற்ற நிலத்தில்
தப்பிய ஒற்றை ஆட்காட்டிப் பறவை கத்துகிறது.
 
18.05.2009 நந்திக் கடலை அம்மா கடந்த பொழுது

செவ்வாய், 9 ஜூன், 2009

அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்

o தீபச்செல்வன்
----------------------------------------------------------------

இரவு திசைகளை தின்று
பரபரத்துக்கொண்டிருக்க
நீ புறப்பட்டிருந்த கடலை
யாரோ தின்றுகொண்டிருந்தனர்.
கையில் இழுபட்ட
பிள்ளைகளின் மெலிந்த
தோள்ககளைத் தவிர
ஒன்றையும் எடுத்துவரவில்லை.

அலைச்சலின் பெருந்துயர்கள்
கடலில் உன்னை துரத்தி வந்தது
வலியின் கோடி முகங்கள் சுற்றியிருக்கிற
உன்னை நான் சந்திக்கப்போவதில்லை.
வளர்ந்துபோயிருக்கிற
தோல்வியின் சொற்கள் எதையும்
பகிரவேண்டாம்.
ஞாபகங்கள் துடித்துக்கொண்டிருக்கிறது.

நடைகள் நிறைந்த மணலையும்
துண்டு நிலத்தின் பெரும் புகையையும்
சுருட்டி எடுத்து வந்து
பூவரசின் வேரை பன்றிகள் தின்னுகிற
கவிதை கொண்டு வந்திருக்கிறாய்.
அந்தப் பூவரசு சலசலத்துக்கொண்டிருந்த
பின்மாலையில்
முகத்தை கரைத்துத்தானே வழியனுப்பினாய்.

பன்றிகள் கிளறியெறிந்த வீதியில்
அந்த பூவரச மரத்தினடியில்
கிடக்கிறது நான் உன்னை சந்திக்கிற பொழுதுகள்.
நீ வைத்திருக்கிறாய்
பூவரச மரத்தின் துயர் படிந்த கிளைகளையும்
கிளறுப்பட்ட வீதியின் துகள்களையும்.

நீரை விரித்துக்கொண்டிருக்கிற
அடரும் கொடிய இரவில்
காற்றில் பன்றிகள் முட்களுடன்
வந்தன என்கிறாய்.
தனித்துப் புறப்பட்ட பயணத்தில்
எல்லாமே கரைந்துபோகிறது.

வெறுமையின் கீழ் குந்தியிருக்கிற
உன்னை பார்க்கப்போவதில்லை.
நம்பிக்கை தரமுடியாதிருக்கிற
உரையாடல் ஒன்றும் உன்னுடன் வேண்டாம்?
கூடாரத்தில் மணல் உதிர்ந்து
உன்னை மூடிக்கொண்டிருக்கிறது.

காய்ந்துவிடாத குருதியையும்
மணல் குடித்து முடிக்காத கண்ணீரையும்
கொண்டு வந்திருப்பாய்.
கரை அரிபட்டுக்கொண்டிருக்கிற கடலை
நீ இறங்கிய பிறகும்
யாரோ தின்றுகொண்டிருக்கின்றனர்.
---------------------------------------------------
07.05.2009. நன்றி அம்ருதா ஜூன்2009

வெள்ளி, 29 மே, 2009

பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி

o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
மண் சிதறி மூடப்பட்ட பதுங்குகுழியில்
மூடுண்டு போயிற்று
கடைசிவரை வைத்துக் காத்திருந்த
உடைந்த முகத்தின் எச்சங்கள்.
எங்கள் வெளி அர்த்தமற்றுப்போய்
அந்தரத்தில் துடித்துக்கொண்டிருக்கிறது.
மண்ணில்
உலகத்தின் யுத்தம் நிகழத்தொடங்கியது.

மிகவும் பயங்கரமான வெளியில்
தூக்கி வீசப்பட
கொதித்து துடித்துக்கொண்டிருக்கிறது மனம்.
மண்ணடியில்
புதைந்துபோனது விரிந்த வானமும்
நெடுநாள் காணாதிருந்த நட்சத்திரங்களும்.
வாசல் அடைக்கப்பட்ட குழியில்
யாரோ அடைக்கப்பட்டு நாளாகிறது.
முகங்கள் வெளியில் தனித்தலைந்தன.

மூடிப் புதைத்துவிடப்பட்ட கிராமம்
பிணங்களின் கீழ் அழுகிக்கொண்டிருக்கிற வீடு
தென்னைமரங்கள் பிடுங்கி நிரப்பட்ட கிணறு
எல்லாம் மூச்சடங்கி உயிர் துறக்கிறது.
முகமற்ற நகரத்தில்
அழிப்பின் சபதம் எழுதப்பட்டு
சிறையிலடைக்கப்படுகிறது.

அச்சத்தின் சனங்கள் வெளியில்
எடுத்து போடப்பட்டனர்.
உடைந்த சனங்களை மீளவும்
குழிகளில் போட்டு மூடிக்கொண்டு
அழிவு புதைக்கப்பட்டு சமதரையாக்கப்பட்டிருக்கிறது.
மணல் பரப்பி நடந்து கொண்டிருக்கிறது
மனிதாபிமான யுத்தம்.

எண்ணி அடுக்கப்பட்ட துண்டங்களாய்
வந்து விழுகின்றன
தாய்மாரை இழந்த குழந்தைகள்.
மழை மூழ்கடித்த இரவில்
கடும் சமரில்
யாரும் அறியாது இருளை பெய்தபடி
நிலவு பதுங்குகுழியில் வந்து ஒளிந்திருந்தது.

ஒளியிழந்து கொடியில் அடிபட்டு
வீழ்ந்து போகிறது சூரியன்.
இருள் பெரு வெள்ளமென வந்து
பதுங்குகுழிகளை குடித்து பசியாறின.
மண்ணை கிளறி உழுது
எச்சரிக்கைகளை விதைக்கப்பட்டன.

உலகின் சபையில் யுத்தம் பேராதரைவை பெறுகிறபோது
பதுங்குகுழியில் ஒளிந்திருந்த வெளி
கனவின் சுடலையாகிய
தரையிலிருந்து எழுந்து போகிறது.
எங்களுடன் நிலவும் பயங்கரவெளியில்
தோய்ந்தபடி அலைந்து கொண்டிருக்கிறது.
------------------------------------------------------------------------
29.05.2009

சனி, 23 மே, 2009

பந்துகள் கொட்டுகிற காணி

---------------------------------------------------------
தீபச்செல்வன்

---------------------------------------------------------------

மைதானத்துக்கான சமர்
ஓய்ந்துபோக மீளவும் தொடங்குகிறது
தீராத பேரினநோயின் யுத்தம்.
கூடாரத்தில் அடைந்துவிட
தாடி வளர்ந்து
உன்னை மூடிக்கொண்டிருக்கிறது.
உயிர்கள் கறுகிய மைதானத்தை
நனைக்கிறது இறுகிய மழை.
வாழ்வு
கூடாரத்தில் மூடிவைக்கப்பட்டிருக்கிறது.

பயங்கரவாதமாக வேர் அறுக்கப்பட்ட
பெருமிதங்களால்
வாழத்துக்களால் வெற்றியின் களிப்பில்
மிதந்துகொண்டிருக்கிற
கொண்டாட்டங்களில் நாம் எல்லாவற்றையும்
இழந்து போயிருக்கிறோம்.
இலக்கங்களாலும் ஒலிபெருக்கிகளாலும்
நீ கட்டி வைக்கப்பட்டிருக்கிறாய்.

என்னை அழைத்துச் செல்லுகிறபோது
முழு மரங்களும் பக்கத்தில் உதிர்ந்ததுபோல
அதிருகிறது உனது முகம்.
பான்கீமூனின் கைகளில் துவக்கு இருப்பதை
நீயும் நானுமே காணுகிறோம்.
இன்னும் அடங்காமல் பசித்திருக்கிற
துவக்குகளால்
சூழப்பட்டிருக்கிறது நமது காணி.

மண்ணடியில் நமது சிதைந்த வேரில்
திணிக்கப்படுகிற சொல்லாடல்களில்
நாம்தான் உன்மையில் தோற்றிருக்கிறோம்.
மைதானத்தைவிட்டு
வெளியேறிக்கொண்டிருக்கிறது யுத்தம்.

நாராயணனின் கைகளிலும்
மேனனின் கைகளிலும் பந்துகள் உருளுகின்றன.
பந்துகள் கொட்ட
தலைகள் சிதறுகிற காணிக்கிராமங்களில்
அருசி மூடைகளும் வந்து விழுகின்றன.

இனி கனவுகள் குறித்து மிக மௌனமாயிருப்போம்.
இறப்பர் கூடாரங்களால் நிரம்பியிருக்கிற
காணியில் முட்கம்பிகளில்
தொங்கிக்கொண்டிருக்கிறது போரின் பிறகான வாழ்வு.

நம்மை வென்றுவிட்டு கிடக்கிற
யுத்தம்
அறிவிப்பின்றி மெல்ல தொடருகிறது.
மனங்கள் காயப்படுத்தப்பட
தலைகள் கழற்றப்படுகின்றன.
நமது மைதானத்தில்
பந்தாடிக்கொண்டிருக்கிறது உலகம்.
குடிக்கிற தண்ணீருக்கான
வரிசை நீளுகிறது.
-----------------------------------------------------------------
21.05.2009

சனி, 16 மே, 2009

மணலில் தீரும் வீர யுகம்



ஒவ்வொன்றாய் விழுகின்றன மண்மேடுகள் 
மரணக் கிடங்கில் துயர் கொண்டலையும் 
பிணதேசத்தின் குழந்தைகள்

இதற்கு முன்பு பூமி பார்த்திராத 
கண்ணீர், குருதி
இதற்கு முன்பு பூமி பார்த்திராத 
வீரயுகம், தோல்வி

எல்லோருக்கும் கேட்கும் விதமாய்
எஞ்சியிருக்கும் குழந்தைகள்
என்ன சொல்லி அழுகின்றனர்?

கடல்கரையோரமாய் பெயர்ந்தலைந்து
மீள அதே இடத்திற்குத் திரும்பிய
வானம் பெயர்ந்து சுருங்கி வீழ்கிறது.

யாரிடமும் இல்லை கருணை
குழந்தைகளின் விழிகள் 
புதையுண்டன மணலில்

இன்று பின்னிரவிலும் ஆயிரம் பிணங்கள்
மண்மேடுகளின் பின்பக்கமாய் விழுந்தன
மீற்றர்களினால் முன்னேறுகிற
படைகள் பிணங்களின் குழந்தைகளை
மீட்டு படம் பிடித்தனர்.

கீழே வைக்கப்பட்ட ஆயுதங்களின் காட்சிகளுடன்
மூளும் தாக்குதல்களில்
மேலும் சுருங்குகிறது மண்
கைப்பற்றப்பட்ட மண்ணரணுள்
மூடப்பட்டிருக்கின்றன உயிரிருக்கும் பிணங்கள்.

வீழ்கிறது மண்
குழந்தைகள் மீளமீள மோதுகின்றனர் மணலில்
யுத்தத்தில் துயரமில்லை என்றனர்
குருதியில் தோய்ந்த வெற்றியை உண்டு மகிழ்ந்தனர்
இறுதிக் கட்டமாகவே
கழுத்து நெறிக்கப்படுகிறது  என்றனர்
அதன் பின்னர் குருதியும் இல்லை
உயிரும் இல்லை என்றனர்

இரண்டு இராணுவ அணிகள் சந்தித்து
கொடிகளை அசைத்தனர்
மூச்சடங்கிய குழந்தைகளின்மீது
பிணங்களைப் பற்றிப் பிடித்தனர் குழந்தைகள்
இன்னும் சற்று நேரத்தில் ஓய்ந்தடங்கும்
வீர யுகம் தீர்கிறது மணலில்
தீருகின்றனர் சனங்கள்
ஒவ்வொன்றாய் விழ்கின்றன
பாதுகாத்திருந்த மண்மேடுகள்.

தீபச்செல்வன்

15.05.2009

வியாழன், 7 மே, 2009

நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு



பிழைத்துப்போன களம் உன்னை
கொண்டுபோய் நிறுத்தி வைத்திருக்கிறது
நீ கொண்டு செல்ல வேண்டிய
பை கிடக்கிற கடற்கரையில் காற்று திரளுகிறது.

விளையாடுகிற முத்தமற்று
சைக்கிளில் திரிகிற ஒழுங்கையற்று
வாழ்வை யுத்தம் ஒடுக்கியருக்க
உன்னை களம் கொண்டுபோயிற்று
திணிக்கப்பட்டிருக்கிற துவக்கு
உன்னைத்தான் தின்றுகொண்டிருக்கிறது.

அண்ணாவின் கல்லறைதான்
ஒரு சொத்தென இருந்தது
அண்ணாவின் கனவு கலைக்கப்பட்டிருக்க
கல்லறையும் தகர்ந்து போயிற்று
இப்பொழுது வீடு இல்லை
எங்களில் யாரும் வாழ்வதற்கு
அண்ணாவைப்போலவும்
அவனின் கனவைப்போலவும்
அலைந்துகொண்டிருக்கிறோம்.

எல்லாவற்றையும் இழந்து
அலைந்து ஒடுங்கியிருக்கிற
அச்ச மூட்டுகிற இராத்திரிகளில்
பொத்தி வைத்திருந்த
உன்னை இழுத்துச் செல்லப்படுகிற
எங்கள் விதியை என்ன செய்வது?

எங்களை அலைத்துக்கொண்டிருக்கிற எதிரியை
நீ எப்படி சுடுவாய்?
எவற்றையும் உணர முடியாத
அறிந்திருக்காத வயதில்
உனக்கு யுத்தம் தரப்பட்டிருக்கிறது
கையில் தரப்பட்டிருக்கிற துவக்கு
பிஞ்சு மனதை வேகவைத்துக்கொண்டிருக்கிறது
எதியிடம் சரணடைகிறது எஞ்சிய நிலம்.

இப்படி ஒரு கவிதையும்
இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்
ஏன் என்னை நெருங்கின
கடைசியில் பொய்த்துப்போய்
கிடக்கின்றன என் சொற்கள்.
இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?

ஷெல்களின் மத்தியில் சேர்ந்துகொண்டு
நடுங்கியபடியிருக்க நீ வேண்டும்?
யார் உன்னை இழுத்துச் சென்றனர்?
அண்ணாவைப்போல அவர்கள் இருந்தனர்.
அண்ணா நமது தேசத்தைப்போலவே
உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்.

குழந்தைகள் துப்பாக்கிகளில் மறைந்திருந்தனர்
என்று அம்மா சொல்லுகிறாள்.

இப்பொழுது நமது நகரமும் இல்லை.
வாழ்வுமில்லை.
எதுவுமற்ற நாமும் இல்லை.
எனினும் நீ வேண்டும்
அவியாத கொஞ்ச சோற்றையும்
தண்ணிரில் அவித்த பருப்பையும் தின்பதற்கு.

விரைவாக வந்துவிடு
நாம் மேலும் நிலம் பெயர்ந்தலைவோம்.
0
தங்கச்சி வேங்கனிக்கு

தீபச்செல்வன்
20.04.2009


சனி, 25 ஏப்ரல், 2009

பயமுறுத்துகிற இருள்

(புகைப்படம்:தீபச்செல்வன்)
---------------------------------------------------------
தீபச்செல்வன்
---------------------------------------------------------------

அச்சம் தருகிற இராத்தரிகளையும்
ஒரு சிறிய பெட்டியாய் சுருங்கிய பகல்களையும்
எனக்கு தந்தீர்கள்?
எல்லாத் தெருக்களும் என்னைக் கண்டு
அஞ்சுகின்றன.
தெருவின் கரையில் பதுங்கியிருக்கிறது
என்னை தின்பதற்கு
காத்திருக்கிற கத்திகள்.

என்னிடம் எந்த சொற்களுமற்று
மௌனத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறேன்.
அச்சம் தருகிறதாக என் கவிதைகளை
எறிந்தீர்கள்.
உங்கள் பகலில் பாம்புகள் அலைகிறதை
நான் கண்டேன்.
எனது பிரதேசத்தில் தரப்பட்ட தெருவில்
அகதியாய் திரிய
என்னுடைய நினைவுகளை
நான் இழந்து வருகிறேன்.

அடையாளங்கள்ளற்ற வாழ்வில்
நான் எதையும் உணரவில்லை.
நிரந்தரமான அடிமையைப்போல என்னை
சித்திரிக்கிறது பறிபோயிருக்கிற தெரு.
மிகவும் நீளமாக போகிறது எல்லாத்திசைகளும்.
அழுவதற்கும் இடமில்லாது
அலைந்து கொண்டிருக்கிறேன்.

அம்மா சுட்டுத் தருகிற ரொட்டிகளையோ
தங்கையுடனான சண்டைகளையோ
மீள கொண்டாடுகிற நாள்கள் வரப்போவதில்லை.
வீடு பற்றியிருந்த நினைவுகள்
சிதறிப்போயிருக்க கால்கள் அலைகின்றன.

எனக்காக காத்திருக்கிற மரணம்
இந்த தெரு வொன்றில் முடிந்துபோகட்டும்.
நிறைவேறாத கனவுகளுடன்
மண்ணை முத்திமிடுகிறேன்.

இருளில் குவிந்திருக்கின்றன
என்னை தொடருகிற எல்லாரது முகங்களும்.
அந்நியமாகிற எனது கடலிலும்
முற்றிலும் மாற்றப்படுகிற மண்ணிலும்
இருள்தான் பரவிக்கொண்டிருக்கிறது.

மீண்டும் மீண்டும்
பயமுறுத்திக்கொண்டேயிருக்கிறது இருள்.
இருளே உன்னை கண்டு
நான் அஞ்சுகிறேன்.
உன்னையும் அவர்கள்
என்னிடமிருந்து பிரித்தனர்.
நான் உணருகிறேன்
இருள் பெரும் புயலாக வருகிறது.
என்ன செய்ய?
-------------------------------------------------
(08.04.2009 மீளவும் அச்சுறுத்தப்பட்ட இரவில்)

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்



இனித் திரும்பாத சூரியனுக்காய்
நீயும் நானும் சாம்பலில் காத்திருக்கிறோம்
மேலெறியப்படும் குண்டுகள்
தின்று தீர்த்துக்கொண்டிருக்கிற
வலயத்தில் மூளப்போகிற சண்டையில்
அவர்கள் நம்மிடம்
எதை எடுக்கப் போகின்றனர்?

துவக்கு மெல்ல புகுந்து
தின்கிறது இறப்பர் குடில்களை.

சிறிய ஆயுதங்களால்
போரிட கிடைத்திருக்கிற அனுமதியின்
இடையில் கனகரக ஆயுதங்கள்
அறிவுருத்தியபடி
உண்மையிலேயே
ஓய்ந்துபோயிருக்கிறதாவென நாம் அறிவோம்.
முற்றுகைகளால் நிறைந்திருக்கிறது
எம் வாழ்நிலம்.

போரிற்கு சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது
பாதுகாப்பு வலயம்
ஷெல்கள் எந்நேரமும் உலவித்திரிந்து
சனங்கள் பார்த்திருக்கவே
இழுத்துச் செல்கிறது
ஐ.நாவின் அனுமதி கிடைத்தது
அமைதியாக சனங்களை கொன்றகற்றுவதற்கு.

மெலிந்து போய்விட்ட சனங்கள்
அனுமதியுடன் ஒழிக்கப்படுகின்றனர்.

இழந்து போக முடியாத
தேசம் பற்றிய கனவை நீயும் நானும்
மறக்க நிர்பந்திக்கப்படும் நடவடிக்கையில்
நீயும் நானும் எல்லாவற்றையும் பிரிந்து
துரத்தி அலைக்கப்படுகிறோம்.

வாழ்வுக்கான பெருங்கனவை
கூடிச் சிதைத்தனர்.
நாமோ கூடு கலைந்து திரிகிறோம்.

போரிட்டுச் சாகிறது பெருநிலம்
சடலங்களுடன் அள்ளுண்டு போகிறது
வளர்த்தெடுக்கப்பட்ட கனவு
முடிவு நெருங்கும் கடைசிக் களத்தில்
தொடங்கவிருக்கிறது அடுத்த போர்.

அம்மாவே உன்னைப் போலிருந்த
எனது நகரத்தை நான் பிரிந்தேன்
தங்கையே உன்னுடன் வளர்த்த
எனது கனவுகளை நான் இழந்தேன்
அவர்கள்
எல்லாவற்றையும் என்னிடமிருந்து பிரித்தனர்
தூரத்தே உழல்கிறது எனது தெரு.

வழியற்றிருக்கிறது போர்க்களம்
கனவுகளுடன் குண்டேறி விழுந்த பேராளிகளின்
மூடுப்படாத விழிகளுடன்.

சண்டை மூண்ட பாதுகாப்பு வலயத்தில்
எப்படி உன்னை பதுக்கி
காத்துக்கொள்ளுவாய்?
அச்சங்களில் ஒளிந்திருக்கிற தங்கையின்
துடிக்கிற மனதை எதற்குள் பொத்தி  வைப்பாய்?
0

07.04.2009

தீபச்செல்வன்

திங்கள், 16 மார்ச், 2009

ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்


---------------------------------------------------------
தீபச்செல்வன்
---------------------------------------------------------------
இப்படித்தான் அந்த கொடுமிருகம்
இந்த நகரத்தையும் தின்று கொண்டிருந்தது.
கடல் மேலும் காய்ந்துவிட
மிருகத்திற்கஞ்சி மண் சுருங்கி ஓடுகிறது.

கால்களிற்குள் நீளுகிற அலைச்சலில்
தொலைந்து போன பொருட்கள் மிதிபடுகிற
நடைக்கனவுடன்
உன்னை தேடியலைகிறேன்
பின்னேரம் சுற்றுகிற முற்றுகையில்.

மண் கிளம்பி பெயர்கிறது.
சந்தி உடைந்து படைகளின் கால்களால்
எத்துப்படுகிறது.
சுவருக்குப் பக்கத்தில் நிற்கிற
மிருகம் பின் கோடியை தின்னுகிறது.

கூரைகளை கடித்து துப்பிவிட்டு
ஒழுங்கையை பிடித்துச் செல்லுகிறது.
முகப்பை நகங்களால் விறாண்டி
தனது மொழியில் பறகள் வரைகிறது.
பேய்கள் புகுந்து அடித்து
கடைகளை தின்றிருக்க
பனைகளின் தலைகள் அறுக்கப்பட்டிருக்கின்றன.

கடலில் புதைந்து கிடந்த
உனது சொற்களில் வடிகின்றன
இந்த சின்ன நகரத்தின் பாடல்கள்.
சாம்பலை நிரப்பி
எறியப்பட்டிருக்கிற சாடியில்
உன்னை அடைத்து வைத்திருந்தனர்.

கடைசி வார்த்தைகளால்
நம்மை வதைத்துக் கொண்டிருக்கிற
கர்ஜிப்பில் கடைசியாயிருந்த
நகரம்
மூச்சடங்கி கிடக்கிற பறவையைப்போல
துடித்து உயிரற்றுக் கிடக்கிறது.

இப்படித்தான் அந்த கொடுமிருகம்
நம்மை குறித்து ஒரு நாள்
அச்சுறுத்தியபடியிருந்தது.
நகரங்கள் ஆட்களற்றுப்போனது.

பசிக்கு ஏற்றபடி கால்களால்
நகரத்தை வளைத்து வைத்து
தின்றுகொண்டிருக்கிறது ஒற்றை மிருகம்.
கிளம்புகிற மண் வீதிகளால் பெருகி வழிகிறது.
----------------------------------------------------------------------------------
03.03.2009,புதுக்குடியிருப்பு,நகரம்,வீழ்ச்சி.

வியாழன், 26 பிப்ரவரி, 2009

எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி


தரப்பால்களின் கீழாய் கிடந்து அடங்குகிறது
நமது எல்லா வழிகளும்.
துப்பாக்கியின் நுனிகளில்
முகங்களும் எலும்புக்கூடுகளும்

எல்லாமே சட்டென தலைகீழாகிறது
நிலத்தை எரித்துக் கொண்டிருக்கிற துவக்கு
சாம்பலை எதிராய் கிளம்புகிறது.

குருதியின் ஒருதுளி கடலில் மிதந்து
தப்பிச் செல்லுகிறது
வழியில் தற்கொலை செய்துகொள்ள
துடிக்கிறது மீதமிருக்கிற நகரத்தின் சுவடு
ஒரு மாபெரும் அரசனின்
ஒற்றை வாளில்
முழுச் சுவரும் வெட்டுண்டுபோயிற்று.

பிள்ளைகளை அனுப்பிய தாய்மாரின்
கண்ணீரைத்தவிர
குறுகிய நிலத்தில் எதுவும் இல்லை
வானத்திற்கு மேலால் கடல்
இப்பொழுது கடைசிக் கெஞ்சல்
எதுவுமற்று வெளிக்கிறது துளி நிலம்.

முகத்தின் முன்னாலொரு ட்ராங்கியின் ஏவுகனை
குத்திக்கொண்டிருப்பதைபோலவே
எப்பொழுதும் துரத்துகிறது
தோல்வியின் பிறகான கூச்சல்

இன்றைக்கான தோல்வி பரிசளிக்கப்படும்
அலங்கரிக்கப்பட்ட மேடையில்
ஆக்கிரமிப்பின் சொற்கள்.

தேசம் முழுக்க புழுக்கிறது.

வெளியேறுகிற வழி
ஆக்கிரமிப்பின் வலையாக
கடல் எல்லாம் புதைக்கும் கிடங்காகிற்று.
கனவு
மற்றும் அதற்காய் சிந்திய குருதி
பறிக்கப்பட்ட
நிலத்தில் அழிக்கப்பட்டது.

வீழ்ந்த நகரம் தற்கொலை செய்துகொண்டது
கைப்பற்றப்பட்ட அதன் சுவர்கள்
உக்கத்தொடங்குகிற
எலும்புக்கூடாய் பிரிகையடைந்திற்று
சனங்களுடன் வெளியேற்றப்படுகின்றன
தற்கொலையுண்ட நகரத்தின் எலும்புக்கூடுகள்.

இனியொன்றும் இல்லை
துயரங்களைத்தவிர
சயனைட்டை அணைக்கிறது வாழ்வு.

வெளியேற வழியற்ற நிலம்
அந்தரித்து திரிகிறது

பதுங்குகுழிகளை அள்ளி ஏற்றுவதற்கு
கடலால் வருகிறது எண்ணெய் கொதிக்கிற கிணறு
பிள்ளைகளை கொன்று தாய்மார்களை
பிடித்துச் செல்லுகிறது சிங்கம்
தரப்பாலை சுற்றிக்கொண்டிருக்கிறது
பாம்பின் புகை.

தீபச்செல்வன்

(25.02.2009 வன்னி மக்களை வெளியேற்ற
அமரிக்காவும், இந்தியாவும் உதவுவதாக அறிவித்துள்ளது)

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...