(புகைப்படம்:தீபச்செல்வன்)
---------------------------------------------------------
தீபச்செல்வன்
---------------------------------------------------------------
அச்சம் தருகிற இராத்தரிகளையும்
ஒரு சிறிய பெட்டியாய் சுருங்கிய பகல்களையும்
எனக்கு தந்தீர்கள்?
எல்லாத் தெருக்களும் என்னைக் கண்டு
அஞ்சுகின்றன.
தெருவின் கரையில் பதுங்கியிருக்கிறது
என்னை தின்பதற்கு
காத்திருக்கிற கத்திகள்.
என்னிடம் எந்த சொற்களுமற்று
மௌனத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறேன்.
அச்சம் தருகிறதாக என் கவிதைகளை
எறிந்தீர்கள்.
உங்கள் பகலில் பாம்புகள் அலைகிறதை
நான் கண்டேன்.
எனது பிரதேசத்தில் தரப்பட்ட தெருவில்
அகதியாய் திரிய
என்னுடைய நினைவுகளை
நான் இழந்து வருகிறேன்.
அடையாளங்கள்ளற்ற வாழ்வில்
நான் எதையும் உணரவில்லை.
நிரந்தரமான அடிமையைப்போல என்னை
சித்திரிக்கிறது பறிபோயிருக்கிற தெரு.
மிகவும் நீளமாக போகிறது எல்லாத்திசைகளும்.
அழுவதற்கும் இடமில்லாது
அலைந்து கொண்டிருக்கிறேன்.
அம்மா சுட்டுத் தருகிற ரொட்டிகளையோ
தங்கையுடனான சண்டைகளையோ
மீள கொண்டாடுகிற நாள்கள் வரப்போவதில்லை.
வீடு பற்றியிருந்த நினைவுகள்
சிதறிப்போயிருக்க கால்கள் அலைகின்றன.
எனக்காக காத்திருக்கிற மரணம்
இந்த தெரு வொன்றில் முடிந்துபோகட்டும்.
நிறைவேறாத கனவுகளுடன்
மண்ணை முத்திமிடுகிறேன்.
இருளில் குவிந்திருக்கின்றன
என்னை தொடருகிற எல்லாரது முகங்களும்.
அந்நியமாகிற எனது கடலிலும்
முற்றிலும் மாற்றப்படுகிற மண்ணிலும்
இருள்தான் பரவிக்கொண்டிருக்கிறது.
மீண்டும் மீண்டும்
பயமுறுத்திக்கொண்டேயிருக்கிறது இருள்.
இருளே உன்னை கண்டு
நான் அஞ்சுகிறேன்.
உன்னையும் அவர்கள்
என்னிடமிருந்து பிரித்தனர்.
நான் உணருகிறேன்
இருள் பெரும் புயலாக வருகிறது.
என்ன செய்ய?
-------------------------------------------------
(08.04.2009 மீளவும் அச்சுறுத்தப்பட்ட இரவில்)
தீபச்செல்வன்
6 மாதங்கள் முன்பு
5 கருத்துகள்:
//அம்மா சுட்டுத் தருகிற ரொட்டிகளையோ
தங்கையுடனான சண்டைகளையோ
மீள கொண்டாடுகிற நாள்கள் வரப்போவதில்லை.//
இந்த இனிமைகள் எல்லாம் மறுபடியும் இலங்கை தமிழர் வாழ்வில் மலர வேண்டும் என் பிரார்த்திக்கிறோம்.
//எனக்காக காத்திருக்கிற மரணம்
இந்த தெரு வொன்றில் முடிந்துபோகட்டும்.
நிறைவேறாத கனவுகளுடன்
மண்ணை முத்திமிடுகிறேன்.//
எங்கள் மனதை கவ்விய இருள்.
மரணத்தை தடுக்க முடியாமல் கனவுபோல் வந்து போகும்
ஈழத்து ஆதரவை நினைத்து எங்களுக்கே வெட்கமாகதான் இருக்கிறது.
//அம்மா சுட்டுத் தருகிற ரொட்டிகளையோ
தங்கையுடனான சண்டைகளையோ
மீள கொண்டாடுகிற நாள்கள் வரப்போவதில்லை.
வீடு பற்றியிருந்த நினைவுகள்
சிதறிப்போயிருக்க கால்கள் அலைகின்றன.//
மீண்டும் கண்டிப்பாக வரவேண்டும். நாளைய குழந்தைகளுக்காவது இந்த இனிமைகள் இயலவேண்டும்.
நம்பிக்கையுடன் உமா.
எனது வலைப்பதிவில் தங்களுக்கு பட்டாம்பூச்சி விருதை வழங்கியிருக்கிறேன்.இந்த விருதை வழங்குவது ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பை நேசிக்கும் ஒரு வாசகியின் காணிக்கையாகத்தான். தங்களை இன்னும் சிலருக்கு அறிமுகப்படுத்த நல்ல வாய்ப்பாகவே கருதுகிறேன். [பட்டாம்பூச்சி விருது என்பது வலைப்பதிவர்கள் தங்களுக்குள் பாராட்டிக்கொள்வதே.]
அச்சம் தருகிற இராத்தரிகளையும்
ஒரு சிறிய பெட்டியாய் சுருங்கிய பகல்களையும்
எனக்கு தந்தீர்கள்?
எல்லாத் தெருக்களும் என்னைக் கண்டு
அஞ்சுகின்றன.
தெருவின் கரையில் பதுங்கியிருக்கிறது
என்னை தின்பதற்கு
காத்திருக்கிற கத்திகள்.
நான்?
உண்மையில் எனக்கான வார்தைகளாக இது வந்து விழுந்திருக்கின்றன.
நான் ஒட்டுசுட்டான் புளியங்குளத்தில் பிறந்தனான் தீபன்
அந்த வெளியில் கனவு சிதறி ஒழுகிய குருதியுறைந்திருந்தது.
கவிஞா, இந்த வெளி என் தாயகம்தான். எதிரிகளாலும் இளவரசர்களாலும் சிதைக்கப்பட்ட ஒரு ராசத்தியைப்போல விழுந்துகிடக்கிற என் தாயகம்தான். அது கொலைகாரர்களால் அழிந்துபோவதற்க்கு எங்களது உடல்கள் அல்ல. அது எங்களது ஆன்மா. உங்களைப்போன்ற இளைய கவிஞர்களின் கூடுகளுக்குள்தான் எங்கள்முட்டைகளையும் இட்டுவிட குயிலஆய் .....
கருத்துரையிடுக