Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

செவ்வாய், 27 ஜனவரி, 2009

சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்


----------------------------------------------------------------------------
தீபச்செல்வன்
____________________________________

எல்லாவற்றையும் நமது மண்ணிலிருந்து
துரத்தபடுகிற நாட்களில்
சுதந்திரம் பெருமனதுடன்
மரணத்தை வழங்க காத்திருக்கிறது.
இனவாதம் வடிவமைத்த
போர் நம்மை ஊடுருவி ஆளுகிறது.
வெல்ல முடியாதிருந்து
நமக்கெதிராயிருக்கிற யுத்தம்
ஆட்களற்ற நகரத்தை தோற்கடிக்கிறது.

கடலில் குதிக்கிற நகரத்தின்
சொற்பமற்ற எண்ணிகையான சனங்களுக்கு
எல்லாம் இத்தோடு முடிந்து போகிறது.
அகலமான கால்களினால் ஆக்கிரமிக்கிற யுத்தம்
சமாதானத்தை பேசுகிறது.

நாம் சொற்ப எண்ணிக்கையானவர்களாக
ஒதுக்கி முடிக்கப்படுகையில்
அழித்து முடிக்கப்படுகிற பயங்கரவாதிகளானோம்.
இனம் பற்றி வளர்த்த பேரெடுப்பு முடிகிற
கடைசி நிமிடத்திற்கென வருகிற
இனவாதப் புன்னகை
மனிதர்களை தின்றுகொண்டு வருகிற யுத்தமாகி
மனிதாபிமானம் பேசுகிறது.

கடைசியில் நமது சுயநலமும்
நமதினத்தை வாழ்நாள் சிறையிலடைத்தது.
இலங்கை ஈழத்தை கடலில் தாட்டு
தமிழர்களை புதைத்து கொடி ஏற்றுகிறது.
கடலில் இனி பொதிகள் சுமக்க விதிப்பட்டோம்.

நமது வாழ்வுரிமை முழுவதும் பலியிடப்படுகிறது.
துரோகங்கள் பிரித்தாடப்பட்டு
உலகம் பலிவாங்குகிறது.
நமது தேசம் முழுவதும் புதைக்கப்படுகிற
நடவடிக்கையில் நமதாயிருந்த வாழ்வு
பயங்கரவாதம் எனப்படுகிறது.

இனவாதம் சிறைக்குள் இழுத்துக்கொண்டு
கிட்டிய தூரத்தில் விடுவிக்கப்படுகிற
நாம் நிரந்தர அடிமைகளாக்கப்பட
காயமடைந்த உடலிலிருந்து
துண்டு மனம் வெளியேறுகிறது.

இனி எதையும் மனதின் ஆழத்திலும்
தேட முடியாதவர்களாக விதிப்படுகிறது.
ஏற்கடிமுடியாத அரசின்
ஆட்சியின் தாழ்வாரத்தில்
நிலத்திற்கான பெரும் வெறி மழையில் ஒதுங்குகிறோம்.
எல்லாம் இழந்தவர்களாக மாற்றப்படுகிறது.

வரலாறு மறந்தவர்களாக நிர்பந்திக்கப்பட
நமது குழந்தைகள் சொற்ப
எண்ணிக்கை ஆக்கப்பட்டனர்.
இனி நமக்கில்லை வாழுகிற தேசமும்
தொன்மையான பொருட்களும்
மிகவும் பசுமையான சொற்களும்.
எல்லாம் துரத்தப்பட
நமது இனம் பெரிய அகதியாக
அதனுடன் நிலமும் அழிகிறது.
-----------------------------------------------------------------------------
14.02.2009

திங்கள், 19 ஜனவரி, 2009

சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடையும் பொதிகள்
பொதிகளில் போட்டு அடைத்து வைத்திருக்கும்
வாழ்வை வெளியிலெடுக்க முன்பே
இந்தக் கிராமம் பெயர்ந்து திசைகளற்றுப் போகிறது.

கிராமங்கள் நிமிடங்களுக்குள்
மலை வீழ்வதுபோல அகப்பட
மீண்டும் பொதிகளில் கிராமங்களை அடைத்தோம்
விட்டு வந்தவை ஆடுகள் எனில்
வழி தவறியவர்கள் நாங்களாயிருந்தோம்.

உலகிற்கு அழுது காட்டி
மூட்டை சுமந்து
கண்களற்றுப்போய்
கண்ணீரில் மிதப்பது விதியெனில்
வீடுகள் இழந்தும்
வெளியில் வரதவர்களாய் இருந்தோம்.

மாடுகளை பட்டியில் விட்டு வர
படைகள் எல்லாவற்றையும் அடித்துத் தின்றனர்
தண்ணீருக்கு அலையும் குழந்தைகளுடன்
வலி சுமக்கும் பாடு கொண்டவர்களாயிருந்தோம்.

எறிகனைகளிற்குள் தஞ்சமடையும்
நமதாய்ப்போன கொடிய விதியெனில்
நமதாயிருந்த ஊர்களை சுமந்து சென்று
கடலினுள் போட்டுக் கொண்டோம்
சுமக்க வேண்டியதை தவறவிட்டு
சந்ததிக்கு கையளிக்க
பெரிய சுமைப் பொதிகளை சுமந்தே வந்தோம்.

ஆயுதங்கள் எல்லாவற்றையும்
கையாண்டு முடிக்க
எஞ்சி இருந்தது
அழுகையின் மிகப்பெரிய மூட்டை.

இடுப்பில் தலையில் கால்களுக்கு பின்னால்
கொண்டு செல்ல வேண்டிய
பொதிகளை கைப்பற்ற
எறிகனைகளுடன் படைகள் வர
குழந்தையின் மூச்சையும் பொதியிலடைத்தோம்.

எல்லாம் பொதிகளில்

அழுகை நிரம்பிய
மிகவும் பாராமான பொதிகளை
நம் குழந்தைகளின்
கைகளில் கொடுப்பவர்களாய் ஆனோம்.
0

தீபச்செல்வன்

13.01.2009

வியாழன், 15 ஜனவரி, 2009

மரண நெடில் வெளி இரவுவானம் எமக்கில்லை என்றனர்
காடல் பிரித்து அள்ளி எடுக்கப்பட்ட பட்டினத்தில்
மனங்களை புதைத்து வருகிற
ட்ராங்கியில் தலைகள் நசிந்து கொண்டிருக்க
தெருக்கள் கடலில் தொலைந்தன.

தோல்விப்படுத்திய மிகவும் அகலமான
கைகள் எல்லாவற்றையும் கடலில் கொண்டுபோய்
கரைத்துக்கொண்டிருக்கின்றன
வார்த்தைகளற்ற இரவில் மரண நெடிலில்
முழ்குகிறது வெளி.

முகங்கள் கிழிக்கப்படும் தீர்வில்
தப்பிச் செல்ல வழிகளற்று
ஒடுங்கிய இரணடு மரங்களினிடையில்
ஒரு பொந்து வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு பெரிய உலகத்தின்; வெடிகள்; கொட்டுகிற
கண்ணாடியில்
குழந்தைகள் சிரிக்கிற பிம்பங்கள் தெரிந்தன.

தொன்மங்களை கண்டுபிடிக்கும்  
படைகளின் வருகைகளின் போது
இரண்டொரு நாய்கள் திரியும் நகரத்தில்
ஊழைச்சொற்கள் கேட்டன.

எல்லாம் களவாடிய பிறகு
மிஞ்சியிருந்த மனங்களை தேடியழிக்க
புதிய நிறங்களாலான உடைகளில் திரிந்தது சிங்கம்.

விழிகள் மூட
இரவுகள் அலைகிற நாட்களில்
கறுப்பு நிலவுகள்
உதிர்ந்தன வானத்திலிருந்து

தாழ்ந்துபோன கடலில்
பெரு வானம் கவிழ்ந்துபோக
ஆட்களற்ற வெளியில் எங்கும் பொதிகள்
தோல்வி எழுதப்பட்ட வரலாற்றில்
மரண நெடிலடித்தது

மிதிபடுகிறது
நமது வாழ்வெளியின் மண்.
0

தீபச்செல்வன்

13.01.2009

ஞாயிறு, 4 ஜனவரி, 2009

கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்

----------------------------------------------------------------------------
தீபச்செல்வன்
____________________________________

01
நமது வாழ்வின் கனவு நகரமே
படைகள் உன்னை மிதிக்கும் பொழுது
நமது மனம் மிதிபடுகிறது.
கிளிநொச்சிக்குளத்தில் கந்தசாமிகோயில் முழ்கியது.
அதிகாரத்தின் கைகளிற்குள்
அடங்க முடியாத நகரம் நேற்றிரவு பின்வாங்கியது.
ஆழமான கிணறுகள்
வசந்தநகரை விட்டு பின்வாங்கின.

நமது நகரம் வீழ்ந்தது என்று
அறிவிக்கப்படுகையில் பெரும்துயர் சூழ்கிறது.
மெல்ல மெல்ல படைகள்
கடிக்கத்தொடங்கிய நாட்களில்
வீடுகள் எங்கோ போயிருந்தன.
கடைகள்
கரடிப்போக்கைவிட்டு பின்வாங்கின.

எனது வீடு முழுவதையும்
தின்றுவிட்டு பெருமிதம் கொள்ளுகிற
படைகள் நகரமெங்கும்;
நுழைந்து கொடிகளை
பறக்க விடுகையில்
காயம் ஆறாதிருந்த கட்டிடங்கள்
வெருண்டன.
ஐந்தடி ஆறு
இரத்தினபுரத்தைவிட்டு பின்வாங்கியது.

இந்தப்போர் எனது நகரத்தை
தின்று பசியாறுகிறது.
நான் வீட்டினை இழந்தேன்.
மரங்களையும் இழந்தேன்.
ஜனாதிபதியின் மிகுந்த மகிழ்ச்சியில்
போர்மீதிருக்கும் ஆசையில்
எனது கடைத்தெருக்களை
நான் இழந்தேன்.
புதிய கட்டிடங்கள் அறிவியல்நகரை
விட்டு பின்வாங்கின.

நேற்று வந்திருந்து பேசிய
சமாதானம் இன்று வந்து
கொடூரமாய் சிதைத்துக் கொண்டிருக்கிறது.
வாழைமரங்கள்
திருவையாற்றை விட்டு பின்வாங்கின.

தமிழர்களின் கனவு நகரம்
தோற்றுவிட்டதாய்
சிங்களவர்கள் வெடி கொளுத்தி ஆடுகிறபோது
மனம் படு காயமடைகிறது.

02
ஆட்களற்ற நகரத்தில்
அவர்களின் கனவுகளையும் நம்பிக்கையும்
படைகள் தேடியழித்துக் கொண்டிருந்தனர்.
கனகாம்பிகைக்குளத்தில் நூலகம் முழ்கியது.

நமது கனவின் நகரம் அழிந்துபோகாது?
திசைகளை மூடுகிற போர்
மரணத்தின் குழியில்
நம்மை தனிமையிலிட துடிக்கிறது.
தோல்விப்படுத்த முனைகிற
சிங்கங்கள் பற்களை கொண்டலைகிறது.
தோல்வி திணிக்கப்பட
சிதைந்த நகரத்தின் கொடுமையான
அனுபவத்திலிருந்து கோபம்; தூண்டப்படுகிறது.
வைத்தியசாலை
ஆனந்தபுரத்தைவிட்டு பின்வாங்கியது.

நாம் விட்டுச்செல்ல முடியாத நகரத்தில்
படைகள் நுழைய முடியாதிருக்கிறது.
தரைகளில் பதுங்கும் கண்களில்
இன்னும் சூடேறுகிறது
என்றும் தீரமுடியாத தாகத்தை
சவப்பெட்டிகளாக்குகிற கனவில்
வாழ்வுக்கான ஏக்கம் சாம்பலாவதில்லை?
மீனாட்சி அம்மன்
ஜெயந்திநகரை விட்டு பின்வாங்கினாள்.

நமது வாழ்வின் கனவு நகரமே
படைகள் உன்னை மிதிக்கும் பொழுது
நமது மனம் மிதிபடுகிறது
உன்னை மீள உயிருட்டுகிற கனவு
மீண்டும் வளருகிறது.
குளத்தடிக்காடுகள்
அம்பாள்நகரை விட்டு பின்வாங்கின.

நம்மை அழிக்கிற கனவு வளர்க்கிற
கொழும்பு
கிளிநொச்சியை தின்று மகிழுகிறது.

03
கனவு ஒருபோதும் உதிரப்போவதில்லை
அவலமாகிப்போன நம்பிக்கை
மீள துளிர்கிற தருணம் அதிகரிக்கிறது.
அம்பாள்குளத்தில் வாய்க்கால்கள் முழ்கின.

இந்த நகரத்தில் படைகள்
தங்குகிற நாட்களை எண்ணுவதிலிருந்தே
நாம் மீண்டும் திரும்புகிற
நாட்களில் தங்கியிருக்கிறோம்.
நாகதம்பிரான்
உதய நகரை விட்டு பின்வாங்கினார்.

படைகள் பலியிடத்துடிக்கிற
நமது நகரத்தை
நாங்கள் விட்டு வந்தோம்.
மாமரங்கள்
திருநகரை விட்டு பின்வாங்கின.

எங்கள் வாழ்வு தின்று களிக்கிற
அரசுகள் துரத்திக்கொண்டேயிருக்கிறது.
நாங்கள் குருதி சுமந்து
கட்டிய நகரம் நொருங்கியபடியிருக்கிறது.
தலையில் நமது நகரத்தை
சுமந்படி திரிகிறோம்.
துயிலுமில்ல வீதி
கனகபுரத்தை விட்டு பின்வாங்கியது.

பூக்களை பலியிடுகிற அரசு
எங்கள் கனவின் தலைநகரத்தில்
தனது கொடியை பறக்கவிடத்துடிக்கிறது.
ஜனாதிபதியின் உணவுக்கோப்பையில்
மண் நிறைகிறது.
வெறிகலந்த வெற்றிச்சொற்களை
சகிக்காத நீளமான வீதி நெளிகிறது.
மாதுளை மரங்கள்
சிவநகரை விட்டு பின்வாங்கின.

முழுக்கனவையும் நசுக்குகிற பேரெடுப்புடன்
தெற்கு வடக்கை ஆக்கிரமித்திருக்கிறது.

04
பரந்தன் மீண்டும் சிதைகிறது.
சின்னக்கடைகளையும் வீதிகளையும்
படைகள் கைகளிற்குள் போட்டு பிசைந்தனர்.
பறவைகள்
மலையாளபுரத்தை விட்டு பின்வாங்கின.

நமது பிரியம் மிகுந்த தெருவே
சின்ன ஒழுங்கைகளே
படைகளது அகன்ற காலடியில்
அதிகாரத்திடம் நசுங்குவது கண்டு துடிக்கிறோம்.
முறிப்புக்குளத்தில் ஆடுகள் மூழ்கின.

வாய்க்கால்களில் படைகள்
கால்களை நனைக்கிறபோது வயல்கள் எல்லாம்
தரிசாகிப்போகிறது.
பானைகளற்று கைகளில் வேகுகிற
பாதி அரிசியில் நமது கிராமங்கள்
ஒடுங்கி துடிக்கின்றன.
விட்டு வந்த கிராமங்களில்
தனியே உருளுகின்றன சைக்கிள்கள்.
முத்துமாரி அம்மன்
செல்வாநகரை விட்டு பின்வாங்கினாள்.

தோட்டங்கள் அழிந்துபோக
காட்டு இலைகளை வறுத்து பசியாறுகிற
குழந்தைகள் குளிக்க ஏங்குகின்றனர்.
எல்லா மரங்களையும் அடிமைப்படுத்துகிற
அதே படைகள்
சுவர்களையும் கூரைகளையும்
எங்களிடமிருந்து பிரித்தனர்.
கூழாமரம்
உருத்திரபுரத்தை விட்டு பின்வாங்கியது.

அகதிவெளிகளில் சாய்கிற
மரங்களில் இலைகள் உதிருகிறபோது
மீண்டும் எங்கள் வீடுகள் துளிர்க்கும்
என்று எங்கள் குழந்தைகளுக்கு
சொல்லி பதுங்குகிறோம்.
இரணைமடுக்குளத்தில்
சமாதானசெயலகம் முழ்கியது.

ஒரு இனம் மற்றொரு இனத்தின்
வாழ்வை அழித்துக்கொண்டிருக்கிறது.

05
இரணைமடுவே கிளிநொச்சி நகரம்
தண்ணீரில் மூழ்கி தவிக்கிறது.
சனங்களிடமிருந்து
பிரிக்கப்பட்ட நகரை படைகள் ஆளுகிறது.
தலைகளில் அதிகரிக்கிற சுமையில்
எதிரியின் கொடுமையான சொற்கள்
எங்களை மேலும் வருத்துகிறது.
பசுமை மிகுந்த வயல்கள்
கணேசபுரத்தை விட்டு பின்வாங்கின.

வீழ முடியாத நகரத்தை
விட்டுச் செல்லுகிற
சனங்களின் கண்ணீரை பருகி
வெடி கொழுத்தப்படுகிறது.
இரணைமடுக்காடே உன்னை
நம்புகிற சனங்கள் மீள
திரும்புகிற ஏக்கத்துடன் அலைகின்றனர்.
மாடுகள்
கனகாம்பிகையை விட்டு பின்வாங்கின.

நெடுநாளாய் கற்கள் கொண்டு
கட்டிய நகரத்தை வாழ்வுக்கான திட்டங்களை
தின்று பெருமித ஏக்கம் கொள்ளுகிறது
உன்னிடம் புதையப்போகிற படைகள்.
கொய்யா மரங்கள்
ஆனந்தநகரை விட்டு பின்வாங்கின.

பயங்கரவாதச் சனங்களாக்கப்பட்ட
எங்கள் அழகிய வாழ்வை சிதைத்து
கனவின் தலைநகர் வீழ்ந்தது எனப்பட்டது.
ஒரு சிங்கள வெடியிலிருந்து
மீண்டும் நமது போர்க்களம் திறபடுகிறது.
தென்னைமரங்கள்
பாரதிபுரத்தை விட்டு பின்வாங்கின.

எல்லாவற்றையும் எடுத்து செல்ல முடியாதபோது
நாம் உன்னை மட்டும் சுமந்து வந்தோம்.
கிளிநொச்சி நகரமே உன்னை வைத்து
செய்த எல்லாவற்றையும்
படைகள் ஆக்கிரமித்து நிற்கின்றன.
உடைந்த சுவர்களில் மெலிந்த சனங்கள்
கனவுகளை எழுதிச்சென்றனர்.

வாழ்வுக்கான ஏக்கம் இன்னும் அதிகரிக்க
கிளிநொச்சி நகரத்தோடு
வாழ்வுக்கான தேசம் மேலும் ஒடுங்கியபடியிருக்கிறது.
குந்தியிருக்க முடியாத நிலத்தில்
ஒடுங்கியிருக்கிற நகரத்தில்
முழுத்தேசத்திற்கான கனவு வளருகிறது.

ஒரு நாடு மற்றொரு நாட்டின்மீது
போரெடுத்து நிற்கிறது.
--------------------------------------------------------------------------------
(கிளிநொச்சி,வீழ்ச்சி,புலிகள்,பின்நகர்வு,
படைகள்,கைப்பற்றல்,அரசு,வெற்றி. 02.01.2009)

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...