வானம் எமக்கில்லை என்றனர்
காடல் பிரித்து அள்ளி எடுக்கப்பட்ட பட்டினத்தில்
மனங்களை புதைத்து வருகிற
ட்ராங்கியில் தலைகள் நசிந்து கொண்டிருக்க
தெருக்கள் கடலில் தொலைந்தன.
தோல்விப்படுத்திய மிகவும் அகலமான
கைகள் எல்லாவற்றையும் கடலில் கொண்டுபோய்
கரைத்துக்கொண்டிருக்கின்றன
வார்த்தைகளற்ற இரவில் மரண நெடிலில்
முழ்குகிறது வெளி.
முகங்கள் கிழிக்கப்படும் தீர்வில்
தப்பிச் செல்ல வழிகளற்று
ஒடுங்கிய இரணடு மரங்களினிடையில்
ஒரு பொந்து வழங்கப்பட்டிருக்கிறது.
ஒரு பெரிய உலகத்தின்; வெடிகள்; கொட்டுகிற
கண்ணாடியில்
குழந்தைகள் சிரிக்கிற பிம்பங்கள் தெரிந்தன.
தொன்மங்களை கண்டுபிடிக்கும்
படைகளின் வருகைகளின் போது
இரண்டொரு நாய்கள் திரியும் நகரத்தில்
ஊழைச்சொற்கள் கேட்டன.
எல்லாம் களவாடிய பிறகு
மிஞ்சியிருந்த மனங்களை தேடியழிக்க
புதிய நிறங்களாலான உடைகளில் திரிந்தது சிங்கம்.
விழிகள் மூட
இரவுகள் அலைகிற நாட்களில்
கறுப்பு நிலவுகள்
உதிர்ந்தன வானத்திலிருந்து
தாழ்ந்துபோன கடலில்
பெரு வானம் கவிழ்ந்துபோக
ஆட்களற்ற வெளியில் எங்கும் பொதிகள்
தோல்வி எழுதப்பட்ட வரலாற்றில்
மரண நெடிலடித்தது
மிதிபடுகிறது
நமது வாழ்வெளியின் மண்.
0
தீபச்செல்வன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக