பொதிகளில் போட்டு அடைத்து வைத்திருக்கும்
வாழ்வை வெளியிலெடுக்க முன்பே
இந்தக் கிராமம் பெயர்ந்து திசைகளற்றுப் போகிறது.
கிராமங்கள் நிமிடங்களுக்குள்
மலை வீழ்வதுபோல அகப்பட
மீண்டும் பொதிகளில் கிராமங்களை அடைத்தோம்
விட்டு வந்தவை ஆடுகள் எனில்
வழி தவறியவர்கள் நாங்களாயிருந்தோம்.
உலகிற்கு அழுது காட்டி
மூட்டை சுமந்து
கண்களற்றுப்போய்
கண்ணீரில் மிதப்பது விதியெனில்
வீடுகள் இழந்தும்
வெளியில் வரதவர்களாய் இருந்தோம்.
மாடுகளை பட்டியில் விட்டு வர
படைகள் எல்லாவற்றையும் அடித்துத் தின்றனர்
தண்ணீருக்கு அலையும் குழந்தைகளுடன்
வலி சுமக்கும் பாடு கொண்டவர்களாயிருந்தோம்.
எறிகனைகளிற்குள் தஞ்சமடையும்
நமதாய்ப்போன கொடிய விதியெனில்
நமதாயிருந்த ஊர்களை சுமந்து சென்று
கடலினுள் போட்டுக் கொண்டோம்
சுமக்க வேண்டியதை தவறவிட்டு
சந்ததிக்கு கையளிக்க
பெரிய சுமைப் பொதிகளை சுமந்தே வந்தோம்.
ஆயுதங்கள் எல்லாவற்றையும்
கையாண்டு முடிக்க
எஞ்சி இருந்தது
அழுகையின் மிகப்பெரிய மூட்டை.
இடுப்பில் தலையில் கால்களுக்கு பின்னால்
கொண்டு செல்ல வேண்டிய
பொதிகளை கைப்பற்ற
எறிகனைகளுடன் படைகள் வர
குழந்தையின் மூச்சையும் பொதியிலடைத்தோம்.
எல்லாம் பொதிகளில்
அழுகை நிரம்பிய
மிகவும் பாராமான பொதிகளை
நம் குழந்தைகளின்
கைகளில் கொடுப்பவர்களாய் ஆனோம்.
0
தீபச்செல்வன்
2 கருத்துகள்:
\\"சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்"\\
தலைப்பே வலியோடு இருக்கு.
தீபச்செல்வன்
//விட்டு வந்தவை ஆடுகள் எனில்
வழி தவறியவர்கள் நாங்களாயிருந்தோம்//
உமது தலைப்பின் பெரும் பொறுப்பை இந்தவரிகளே சுமந்துவிடுகின்றன, ஆரம்பவரிகளும் கூட அருமையானவை.
தொடர்ந்தும் எழுதுங்கள், உமது கவிதைகள் மிக நீழமானவையாகத் தெரிகிறது, காத்திரமான இறுக்கமான கவிதைகள் சுருக்கமானதாக இருப்பதே நல்லது என்பது எனது கருத்து
சிநேகத்துடன்
ப.அருள்நேசன்
கருத்துரையிடுக