வென்றவர்கள் கைப்பற்றியாளும் பூமியில்
தோற்ற பூர்வீகச் சனங்களை
அழிவுக்கு பரிந்துரைத்திருக்கிறான் அரசன்
காயங்களுககு உள்ளான புன்னகையையும்
சிதறுண்ட கைகளின் சின்னத் துண்டுகளையும்
யுத்த அரசன் பிடுங்கிக் கொள்ளுகிறான்
நகரில் கொலை வார்த்தைகளை எரிந்து
பயங்கரங்களை தெருவில் திறந்து
பூமியிலிருந்து நம்மை துடைக்கும்படி
மாபெரும் கட்டளையிட்டு
குழந்தைகளை தடாககங்களில் எறிந்து
மிரட்டும் நாட்களில்
ஒரு மருத்துவமனையை சவச்சாலையாக்கினான்
கீரிமலையின் கேணியில்
விஷத்தை கலந்து
பாவத்தண்ணீராக்கி பூமிக்குப் பாய்ச்சினான்
சனங்களின் பெயரை கொலைப்பட்டியில் எழுதி
நகரெங்கும் வீசியெறிந்தான்
அடிமை கொள்ளப்பட்ட நகரில்
வென்றவர்கள் யுத்த ஆட்டம் போடுகையில்
தோற்ற நாமோ துயருக்குள் அமிழ்த்தப்படுகிறோம்
யுத்த அரசனோ நமது பூமியை கொலை செய்து
அடியில் விசமரத்தை நடுகிறான்
நிலத்தோடு எல்லாம் பிடுங்கப்பட்டு
அழிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட எனது சனங்களே!
கொலை பூமியில்
குழந்தைகள் இன்னுமா போராட வேண்டும்?
* * *
கணையாழி மார்ச் 2012
(இக்கவிதைக்கு கணையாழியின் சிறந்த கவிதைக்கான ஆண்டாள் விருது வழங்கப்பட்டிருக்கிறது)