ஒளித்து விளையாடும் அம்மாவும்
தெருவும் தேயிலை மலையும்
மீண்டும் வருமெனக் காத்திருக்கும்
குழந்தையின் முன்னால்
குருதியை உறிஞ்சும் அட்டைகளும்
வெறும் கூடைகளும்
துளிர்த்திருக்கும் கொழுந்துகளும்
அடர்ந்த செடிகளுமாயிருக்கும் தேயிலைத் தோட்டங்களும்
உழைத்துழைத்துக் கூனிய முதுகளுடன்
கொழுந்துப் பைகள் கொழுவிய தலைகளுடன்
மலைக்கு வந்த நலிவுண்ட பரம்பரையின்
புகைப்படங்களுடன் எல்லாவற்றையும் மூடியது மண்
ஒவ்வொருவராய் தேயிலைச் செடிகளுக்குள்
புதைக்கப்பட அதன்மீதேறி
கொழுந்தெடுத்த சந்ததியை ஊரோடு மலை விழுங்கிற்று
எவ்வளவெனிலும் சம்பளம்
எத்தகைய குடிசைகளெனிலும் வாழ்வு
மயானங்களுமற்றவர்களின்மீது சரிந்தது பெருமலை
ஒடுங்கியிருக்கும் லயன்களிலிற்குள்
வெளியில் வர முடியாதிருந்தவர்கள்
ஒரு நாள் மலைகள் தம்மீது சரியுமென நினைத்திருக்கவுமில்லை
வாக்குரிமையோடு நாடற்றிருப்பவர்களின்
கண்ணீரின்மீதும் சிதையின்மீதும்
மீண்டும் மீண்டும் தேயிலைச்செடிகளை நாடும்
மலைத் தேசத்தில் சரிந்த மண்ணில்
புதையுண்ட குழந்தையைத் தேடிப் பிதற்றும் தாயொருத்தியின்
சாபத்தை கேட்டு பதிலற்றுக் கிடக்கிறது
ஊரை விழுங்கிய மலை.
அம்மதான் ஒழித்து விளையாடுகிறாள் எனில்
வீடும் ஊரும் தெருவும் தேயிலை மலையும்
ஒளித்து விளையாடுமா?
மாபெரும் கேள்வியோடிருக்கும் குழந்தை
அழத் தொடங்கும்போது
இந்த மலை என்ன பதில் சொல்லும்?
யார் யாரோ மலைகளைத் தின்றனர்
மலைகளோ தம்மை நம்பியிருந்த
சனங்களைத் தின்றன.
0
தீபச்செல்வன்
நவம்பர் 2014
நன்றி - கரை எழில், குளோபல் தமிழ்.