நேற்று எனது ஊரையும்
இன்று உனது ஊரையும்
அழிக்க எங்கிருந்து புறப்பட்டனர்?
நண்பனே, சிதைக்கப்பட்ட கிராமம் ஒன்றிலிருந்து
உனக்காய் குரல் கொடுக்கும்
நானறிவேன் இழப்புகளின் வலியை
நேற்று எனது வீட்டையும்
இன்று உனது வீட்டையும் உடைப்பது ஏன்?
இடிபாடடைந்த வீடொன்றிலிருந்து
உனக்காய் அவதியுறும்
நானறிவேன் வீடற்ற பொழுதுகளை
நேற்று என்மீது குண்டுகளும்
இன்று உன்மீது வாள்களும் வீசுகின்றவர் யார்?
ஆறாத காயங்களோடு
உனக்காய் துடிக்கும் நானறிவேன்
காயங்களின் நிணத்தை
என் கோவில்களையும்
உன் பள்ளிவாசல்களையும் இடிப்பது ஏன்?
கடவுள்களையும் கொலை செய்யும் நிலத்திலிருந்து
உனக்காய் பிரார்த்திக்கும் நானறிவேன்
கைவிடப்படுதலின் துயரத்தை
என்னிடம் தொப்பி இல்லை
நீயோ திருநீறு அணித்திருக்கவில்லை
ஆனாலும் நமது இரத்தம் உறிஞ்சப்படுகிறது
வெறியோடு அலையும் விலங்குகளின் கண்களுக்கு
உறிஞ்சப்படும் குருதி வேறுவேறல்ல
என் சகோதரிகள் பர்தா அணிந்திருக்கவில்லை
உன் சகோதரிகளோ கூந்தலில்
பூச் சொருகியிருக்கவில்லை
ஆனாலும் நமது கண்ணீர் அருந்தப்படுகிறது
வெறியோடு அலையும் விலங்குகளின் கண்களுக்கு
நீயும் நானும் வேறுவேறல்ல
நண்பனே உன் கண்ணீரைத் துடைத்து
உனக்காக கொந்தளிக்கும்
நானறிவேன் ஒடுக்குமுறையின் குரூரத்தை.
0
தீபச்செல்வன்
18.06.2014
நன்றி: தீராநதி, குளோபல் தமிழ் செய்திகள்