மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன்
உறவினர்களின் ஈமக் கிரியைக்காக
விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று
குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில்
என் பழைய கவிதைகளில் ஒன்றைப்
பகிர்ந்துகொள்ள தயக்கமாக இருக்கிறது நண்பா
இப்போதும் நினைவி்ருக்கிறது
போர் முடிந்து அடுத்த நாளாயிருக்க வேண்டும்
அவர்கள் கொல்லப்பட்ட லட்சம்
சனங்களின் சடலங்களை
ரசாயன பதார்த்தம் கொண்டு மறைவாக
அழித்து முடித்திருக்கக்கூடவில்லை
காயப்பட்டவர்களின் புண்களிலிருந்து
புழுக்கள் கொட்டித் தீரவில்லை
திரைப்படமொன்றைப் பார்த்து முடித்து
தொலைக்காட்சிப் பெட்டியொன்றை மூடியதைப்போல
எல்லாம் முடிந்துவிட்டது
இனி உனக்குச் செப்பனிடப்பட்ட காபெற் வீதிகளும்
வெள்ளையடிக்கப்பட்ட புதிய வீடுகளும் கிடைக்கும் என்றாய்
யுத்தம் முடிந்து ஒன்பது ஆண்டுகள் முடிந்தும்
அதன் கதைளை நீ ஏன் நிறுத்தவில்லை என்றாய் நேற்றும்
வகுப்பில் பதினொரு வயதுச் சிறுவன் ஒருவனுக்குச்
சிறுநீருடன் குருதி வெளியேறுகிறது என்றாள் தாயொருத்தி
போரில் தந்தையை இழந்த மற்றொரு பதினாறு வயதுச் சிறுமி
ரத்த அழுத்த மருத்துவ முகாமுக்குச் சென்று வந்திருந்தாள்
உனக்குச் சலிப்பூட்டும் உடைந்த வெண்கட்டிளால்
எழுதும் இக்கவிதைகளுக்காக
நீ ஒருபோதும் அழத் தேவையில்லை
இந்த நிலம் உன்னுடையதில்லை என
எழுதிச்செல்லும் வாசகங்களும்
என் பிள்ளைகளைத் தாருங்கள் எனக் காத்திருக்கும் தாய்மார்களும்
சாதாரணமாகிவிட்ட தெருக்கள் இருக்கையில்
இவை குறித்தெல்லாம் உனக்கு வருத்தம் இருக்காது நண்பா!
போரின் நெடு மௌனத்தைக் கலைக்காது
சிமென்ட் கொண்டும் காபெற் கொண்டும்
காயங்களைப் பூசி அழித்துவிடலாம் என அவர்கள் நம்பும்போது
இந்த நூற்றாண்டின் கொடும்போர் ஒன்று
ஒரு கணத்துடன் முடிந்துபோனது என நீயும் நம்புவாய்!
ஆம் நண்பனே, போர் அந்தக் கணத்துடன் முடிந்தேவிட்டது என்பதை
நானும் வெற்றுத் தோட்டாவால் எழுதிச் செல்கிறேன்.
- தீபச்செல்வன்
ஆனந்த விகடன் மின்னிதழ்