முன்பொருகாலத்தில் எனது தேசம் கடலாலானது
இப்போது இராணுவத்தினாலானது
எனது தொன்மங்களின்மீதெழுப்பட்ட இராணுவமுகாங்கள்
எனது வீட்டின் தளபாடங்களிலானது
எப்போழுதும் வீழா நந்திக்கடலருகே
பூவரசம் தடிகளில் செய்த வில்லினால்
இராணுவமுகாமை நோக்கி
அம்பெய்கிறான் கேப்பாபுலவுச் சிறுவன்.
பனியும் வெயிலும் தின்று தீர்த்தது
குழந்தையரின் புன்னகையை
எனினும், வாடிய மலரைப்போல
மரங்களின் கீழே தூங்கும் தொட்டில்களில்
அவர்களுமை சுற்றி வளைத்தே உறங்குகின்றனர்
துப்பாக்கிகளுக்கு அஞ்சாது
வெஞ்சினத்துடன் கொதித்தெழுகின்றனர் எம் பெண்கள்
வற்றாப்பளைக் கண்ணகிபோல
போராளிகளின் கதைகளில் வரும் நாயகிகள் போல
பள்ளிக்கூடம் செல்ல மறந்தவெம் சிறுவர்கள் பாடினர்
நிலம்மீதான பாடல்களை
கற்றனர் எப் பள்ளியும் கற்க முடியாத பாடத்தை
ஆக்கிரமிப்பு எதிரிப் படையே
கவர்ந்தவெம் நிலங்களை விட்டு உடனே வெளியேறு
இனி எனது தேசம்
கடலாலும் ஒரு பகுதி நிலத்தாலும் சூழ்ந்திருக்கட்டும்!
0
-தீபச்செல்வன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக