Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

செவ்வாய், 30 டிசம்பர், 2008

மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________
01
மாங்குளத்தினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

ஒரு நாட்டை நோக்கி யுத்தம்
அறிவிக்கப்படுகையில்
மரணம் குறித்து படைகள் அறியாதிருந்தன.
கடலுக்கு மிகவும்
நெருக்கமான சனங்களை துரத்துகையில்
படங்குகளில் தென்னை மரங்கள் பெயர்ந்தன.

எனக்கு மிகவும் பிடித்த கடலே
உனக்கு தனிமை பரிசளிக்கப்படுகிற
யுத்தத்திடம் எதுவரை காயப்படப்போகிறாய்?
படைகளை நீ மூழ்கடிப்பாய்
எனத்தான் நம்பிப் பெயர்கின்றன படகுகள்.

மனிதர்களை நெடுநாளாய் தின்று கொளுத்த
யுத்தத்திடம் வீதியும் கடலும்
முதலில் பலியிடப்படுவது
கண்டு மணல்கள் அலைகின்றன.

02
புளியங்குளத்தினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

பசிய காடுகளே குண்டுகளை கொண்டெறிந்து
வேர்களை அறுக்கிற படைகளின்
துப்பாக்கிகள் மறைந்திருக்கின்றன.
அது இன்னும் முன்னே செல்ல
காத்திருக்கிறது.
மரங்களில் தோல்வி எழுத முனைகிறது.

எனது காடுகள் ஒடுங்காதிருக்கின்றன.
படைகள் வேர்களால்
புதைக்கப்படு நாளை அறியாதிருந்தன.
காடுகளினுள் மரங்களின்
குருதி கசிற இடைவெளிகளில்
துப்பாக்கிகள் நீட்டப்பட
மரங்களின் தலைகள் அறுத்தெறியப்பட்டிருந்தன.

காடுகளை வேட்டையாடுகிற
படைகளிடம் முதலில் சனங்கள் வேட்டையாடப்பட்டன.
பாலைமரங்களிடம் மூளுகிற
மௌனத்தின் தீயில் காடுகளால்
படைகள் எரிக்கப்படு நளை அறியாதிருந்தனர்.

03
கனகராயன் குளத்தினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவிக்கின்றன.

மரங்கள் மிதக்கிற ஆற்றினிடையில்
சனங்களின் குருதியும்
சதைகளும் இராணுவத்தொப்பிகளில்
நிரப்பியபடி வந்தன.
வெள்ளம் ஆற்றை அள்ளிச்செல்லுகிற
மழைநாட்களில் படைகள்
துப்பாக்கிகளை நனைத்து
மெல்ல புகுந்தன.
கரைகள் மீதியற்று கரைகிறது.

ஆறுகள் அறுபட்டு திசையிழந்து திரிந்தன.
ஜனாதிபதி மாளிகையின்
தாழ்வாரங்களின் மீது மோதி
தரையிலிருந்து எழும்புகின்றன.
ஜனாதிபதி ஆற்றை வெட்டி எறிய
புதியபெயர்கள் காத்திருக்க
படைகள் ஆற்றை கால்களுக்கிடையில்
சுற்றி வைத்திருந்தனர்.

படைகள் ஆறுகளால்
இழுத்துச் செல்லப்படு நாளை அறியாதிருந்தனர்.

04
அலம்பிலினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

வீதிகளை பிடித்து தின்றபடி
செல்லுகிற படைகளின்
காலடியில் வீடுகள் மிதிபட
புத்தகம் கிழிந்து பறக்கிறது.
வெற்றியின் களிப்பில்
ஆளில்லாத கிணற்றில்
நாய் ஊளையிடுகிற
சத்தம் நிரம்புகிறது.

யாருமில்லாத ஊரின்
நடுவில் படைகள் விரித்து வைத்திருக்கிற
வரைபடத்தில்
நமது கிராமத்தின் ஆடுகள்
அலைவதை நான் கண்டேன்.

உடைந்த வீட்டின் மீதியை
தின்று இன்னொரு கிராமம்மீது பசித்திருக்கிற
படைகள் ஆடுகளால்
தின்னப்படு நாளை அறியாதிருந்தனர்.

05
குமுழமுனையுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

இரவை கைப்பற்றிய படைகள்
பகலில் மீது தாக்கத் தொடங்கினர்.
சனங்கள் இருளில் திரிய சூரியனது
திசையில் அடுத்த யுத்தம் அறிவிக்கப்பட்டது.

விளக்குகள் அணைய
முகங்கள் விறைத்திருக்க படைகள்
எறிந்து விளையாடுகிற
எறிகணைகளில் தென்னைகள் பட்டெறிந்தன.

தென்னைகள் சரிகிற இரவில்
வீடுகள் நசிய படைகள் புகுந்தன.
குளத்தின் முகத்தை படைகள் பிடிக்க
தண்ணீர் வெருண்டு புகுகிற
ஊரில் கிணறுகள் மூழ்கின.

படைகள் கிணறுகளால்
விழுத்தப்படு நாளை அறியாதிருந்தனர்.

06
ஒலுமடுவினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

வீதியின் நடுவில் காடு
தனியே கிடந்து துடிக்கிற பகலில்
ஒரு பள்ளிக்கூடம் அகப்பட்டது.
மேலுமாய் துயரத்தை அனுபவிக்கிற
கிராமத்தில் மீண்டும்
படைகள் புகுந்த வெற்றியில்
கோழிகளின் இறக்கைகள் மிஞ்சின.

மாடுகளின் எலும்புகள்
கண்டு பொறுக்குகிற படைகள்
சனங்களின் தலைகளை தேடினர்.
கொழும்பின் பசியில்
மாடுகளை படைகள் மேய்ந்தனர்.

படைகள் மாடுகளால்
முட்டப்படு நாளை அறியாதிருந்தனர்.

07
அம்பகாமத்தினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

காய்கறிகளை வெட்டி வீசுகிற
படைகள் கிழங்குகளை பிடுங்கி எறிந்தனர்.
பூக்கள் மறுக்கிற பூமரங்களை
படர்ந்த கொடிகளை வேரில் சுட்டனர்.
கைகளை தேடுகிற
படலைகள் ஓட்டைகளால் நிறைய
அதனூடே ஷெல்கள் நுழைந்தன.

கடலின் படலையில் மரணம்
படைகளை பார்த்தபடி
காத்திருக்கிறது.
சனங்களின் தவிப்பில் கொந்தளிக்கிற
கடலை போர் தாக்கிக் கொண்டிருந்தது.
ஆடுகள் கடலில் அலைய
கிணறுகள் மிதந்தன.

முல்லைத்தீவிடம் கால்
பதிக்க குதிக்கிற படைகள்
கடலிடம் தோற்கப்படு நாளை அறியாதிருந்தனர்.

மற்றொரு சந்தையும்
மருத்துவமனையும் நொருங்குப்படத் தொடங்க
இரண்டு பெரிய நகரங்களினிடையில்
ஒரு வீதியில் தமது வீடுகளை
தேடுகிற சனங்கள் அலைகின்றனர்.
--------------------------------------------------------------------------------
21.12.2008.முல்லைத்தீவு.இராணுவநடவடிக்கை.பலமுனைகள்

திங்கள், 29 டிசம்பர், 2008

மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________

மலைப்பாம்பு அரிசி மூட்டைகளுடன்
வருகிறது.

தனது வருகைக்கு முன்பாகவே
கொளுத்த மலைப்பாம்பு
நமது வாக்கு மூலங்களை
அவசரமாகவே தின்று விடுகிறது.

பாம்புகள் உட்புகுந்தலைகிற
நகரங்களில்
அவைகள் எழுப்புகிற புற்றுகளில்
முட்டைகளைப்போல
வாக்கு மூலங்கள்
விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மலைப்பாம்பு ஒன்றினது
வருகையை முன்னிட்டு
திருத்தப்படுகிற வீதியில்
வரவேற்பதற்காய்
குழந்தைகள் வரவழைக்கப்படுகிறார்கள்.

பிணைந்து கிடக்கிற இரண்டு
கைகளிற்குள்
பெருமெடுப்பில் அடிக்கிற
ஆயுத வெக்கையில்
முகங்கள் அவிகின்றன.

கொடிகள் நாட்டப்பட்ட
கதிரைகளின் முன்பாக
எனது நகரை
பெரும் புற்றாக்க அலைகிற
பெரும் பாம்பின் கனவுடன்
மலைப்பாம்பு பால் குடிக்கிறது.

ஒடுங்கிய பிரதேசத்தில்
அலைச்சல் மிகுந்த இரவில்
வாக்குமூலங்கள் மட்டும் மிஞ்சியிருக்கின்றன.

எல்லாவற்றையும் தின்ற பாம்பு
வானத்தையும்
சமுத்திரத்தையும்
தின்றபடி
வருகையை திட்டமிடுகிறது.

கோழிக்குஞ்சுகள்
கூடைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றன.

முட்டைகள் தின்று
அலைந்து கொண்டிருக்கிற பாம்புகளிடமிருந்து
கோழிக்குஞ்சுகளை
காப்பாற்றுகிற மலைப்பாம்பு
இன்னும் சில நாட்களில் வருகிறது.

முட்டைகளில் ஒளிந்திருக்கிற
குழந்தைகள்
வாக்குமூலங்களுடன்
வரவேற்க காத்திருக்கிறார்கள்.
--------------------------------------------------------------------------------
26.12.2008.பிரணாப்முகர்ஜியின் கொழும்பு வருகையை முன்வைத்து

சனி, 27 டிசம்பர், 2008

மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________


சிலவேளை மாடுகள்
பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம்.
மேய்ச்சல் தரைகளில்
குண்டுகள் காத்திருந்தன.
மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள்.

மிஞ்சியிருக்கும் இரண்டு
மாடுகளின்
சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன.
மாதாவின் தலை
அவளது கைகளுக்கு
எட்டாமல் விழுந்திருக்கிறது.

மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்.

தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில்
வாழுகிற மாடுகளாயிருந்தன.
தடைசெய்யப்பட்ட
குழந்தைகளுக்கு பால் கொடுத்திருந்தன.
ஒரு குழந்தை
வாய்க்காலில் மறைந்து
தப்பியிருக்க
மாட்டுக்கன்றுகள்
பால் காயு முன்பாகவே
இறந்து கிடக்கின்றன.

கொம்பு முளைத்த மாடுகளிடம்
எந்தத்துவக்குகளும் இல்லை.
இராணுவ உடைகளையும்
அணிந்திருக்கவில்லை.
வெடித்துச் சிதறிய குண்டு
மாடுகளை அள்ளி எடுத்த
பட்டியில்
துணைக்கு ஒரு நாய் மட்டும் நிற்கிறது.

சிதறிய சதைகளை
தின்ன முடியாதிருக்கும் மீறிய பலிகளில்
நாய் ஊழையிடுகிறது.
பாலுக்கு அழுகிற குழந்தை
தலை துண்டிக்கப்பட்டிருக்கிற
மாதாவை தேடுகிறது
இறந்த பசுவை
தேடுகிற கன்றினைபோல.

காயப்பட்ட உடல் பகுதியிலிருந்தும்
பட்டியிலிருந்தும்
மேய்ச்சலுக்காய் திரிந்த
தரைகளிலிருந்தும்
குருதிதான் பெருக்கெடுக்கிறது.

மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்?

பசுக்கள் குழந்தைகளுக்கு
பாலினை கொடுத்தது
பெருந்தவறு என்கிறது பராசூட் கொத்தணிக்குண்டு.
வாய்களை மீறி
மாடுகளிடம் அழுகை வருகிறது.

அவைகள் எதையும் பேசப்போவதில்லை?
குண்டுகளோடும்
கட்டளையிடுகிற இராணுவத் தளபதிகளோடும்
அதிகாரத்தோடும்?

மாதாவிடமும் எந்த
திருச்சொற்களும் இல்லை.

மாதாவும் மாடுகளும்
வாய்பேசாத பிராணிகளாகவே இருக்க
மேய்ச்சல் தரைகளில்
மேலும் பல குண்டுகள் காத்திருந்தன.
---------------------------------------------------------------------------
24.12.2008.குஞ்சுப்பரந்தன்,மதாகோவில்,85மாடுகள்.

திங்கள், 22 டிசம்பர், 2008

நீர் அறிந்திருக்காத சிலுவைகள்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________
வாழ்வுக்கு தவிக்கிற குழந்தைகள்
மறைந்திருக்கிற தரையில்
சிலுவைகள் புதைக்கப்பட்டிருக்க
யேசுவே நீர் இங்கு பிறக்க வேண்டாம்.

உமக்கான மாட்டுத்தொழுவங்கள்
எம்மிடம் இல்லை.
வைக்கோல் பட்டறைகளும் இல்லை;.

நீர் அறிந்திருக்காத சிலுவைகளை
நாம் சுமக்கிறோம்.

மழைக்காலத்தில் ஏணைகள்
இல்லாமல் தடிகளில் உறங்குகிற
குழந்தைகளை
வெட்டிப்போட கத்திகளுடன் திரிகின்றன
ஏரோது மன்னின் படைகள்.

குதிரைகள் அலருகிற இரவில்
குழந்தைகளை நாம் கட்டுக்குள்
கொண்டு வைத்திருக்கிறோம்.

படுக்கைகளில் குருதி வழிந்தோடுகிறது
தூக்கத்தில் பறி எடுத்த
குழந்தையை விமானம் தின்று
வீசிவிட்டுப் போகிறது.

நீர் மீண்டும் ஒரு சிலுவையை
இங்கு விட்டுச் செல்ல வேண்டாம்.

உம்மால் தாங்கிக் கொள்ள முடியாத
வலிகளான தொழுவங்களில்
போரிடம் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன
நமது தேசத்தின் குழந்தைகள்.

நீர் இந்த தேசத்தில்
இப்போது பிறக்க வேண்டாம்.

கத்திகள் அலைகிற காடுகளில்
நம்முடன் எங்கு வரப் போகிறீர்?
வெட்டுப்பட்ட சொற்களுடன்
நாம் ஒரு பாடலை தேடுகிற போரில்
நீர் சுமந்திராத
சிலுவைகளை சுமக்கிறோம்.

ஏராது மன்னன் பெரும் பசியுடன் வாளுக்கு
இரை தேடுகிற நாட்களில்
இங்கு எண்ணிக்கையற்ற மரியாள்கள்
தமது குழந்தைகளை கொண்டு ஒளிகின்றனர்.
--------------------------------------------------------------
20.12.2008.வன்னி.குழந்தைகள்.யேசுபிறப்பு.

சனி, 13 டிசம்பர், 2008

தேங்காய்களை தின்று அசைகிற கொடி

-----------------------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
____________________________________

உனது அப்பாவை தின்ற அதேகொடி
இன்று உனது நகர்
தேங்காய்களை தின்று அசைகிறது.

கொடூரத்தின் வெற்றிச் செய்தியில்
முறிகண்டிப்பிள்ளையாரின் தும்பிக்கை
அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

தேங்காய் உடைப்பதற்கு யாருமில்லை
எந்த தேங்காய்களுமில்லை.
கற்கள் நொருங்கிய வீதியில்
கச்சான் கடைகள் கைப்பற்றப்பட
உடைந்த அடுப்புக்கள்
நெருப்பாய் எரிய
தெருமுறிகண்டி வீழ்ந்ததென
கோயில் மணிகள் துடிக்கின்றன.

தும்பிக்கையற்ற பிள்ளையாரின்
கோயில் மணியை
படைகள் அசைக்க
நான் கிடந்து எழும்பிய
மடங்கள் பின்னால் நொருங்குகின்றன.
கழற்றி விட்டிச்சென்றிருந்த செருப்புகள்
கால்களை தேடுகின்;றன.

மீண்டும் முறிகிற வேப்ப மரங்களின் கீழே
எனது சைக்கிளை விட்டு வந்தேன்.
உனது சிறுநகரம்
வீழ்ந்ததெனக் கூறுகையில்
நமதாயிருந்த வீடு இழந்தோம்.

கண்டிப்படைகள் புகுந்து
கொடி பறக்கவிடுகையில்
நமது சனத்தின் தேங்காய்
உடைத்த கைகள் கழன்றே போயின
படைகள் நீ அணியும்
திருநீற்றை பூசுகின்றன.
சந்தனத்தை உரசி பூசுகின்றன.
நாம் நெற்றிகளை இழக்க
சனத்தின் முகம் சுருங்குகிறது.

உனது அப்பா மீட்ட
தெருவில் படைகள் மிதந்து நிற்க
மீண்டும் உன் வீடு சிதைந்துகொண்டிருக்கிறது.

பிள்ளையாரையும் கைவிட்டு வந்தோம்.
புத்தரின் பிள்ளைகள்
வெறிபிடித்தலைகிற
காடுகளில் இழக்கப்பட்ட
உனது அப்பாவின்
கோயிலை புத்தரே கைப்பற்றினார்.
கொக்காவில்
காடுகளின் கீழாய் இறங்குகிறது.

வெல்ல முடியாத யுத்தம்
மற்றொரு கோயிலை பிடித்துவி;ட்டு
மீள நகரக் காத்திருக்கிறது.
இந்தக் கொடி மீளமீள அசைந்து
வலியினை கிழிறிக்கொண்டேயிருக்கிறது.

உடைந்த தேங்காய்களை நம்பிக்கை
பொறுக்கி எடுக்கிறது.
சிரட்டை சில்லுகள் கூர்மையடைகின்றன.
அடுப்புக்கள் எரிந்து கொண்டேயிருக்கின்றன.

படைகள் அசைத்து குதிக்கிற
இந்தக் கோயில்மணி
இரணைமடுக் காட்டின் மரங்கள்
கொதித்தசைய
ஏதோ சொல்லிக்கொண்டே இருக்கிறது.
----------------------------------------------------------------------
11.12.2008.முறிகண்டி,கைப்பற்றல்.

ஞாயிறு, 30 நவம்பர், 2008

முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி



இப்பொழுது மிஞ்சியிருக்கும்
பதுங்குகுழியில்
பெருமழை பெய்கிறது.

அறிவிக்கப்பட்டிருக்கும் வெற்றிக்கும்
தோல்விக்கும் இடையில்
எனது நகரத்தை
பிரிக்கும் சமரில்
நகரத்தின் முகம் காயமுற்றுக் கிடக்கிறது.

நாளை அது வீழப்போவதாய்
இராணுவத்தளபதிகள் சூளுரைக்கும்  இரவில்
பதுங்குகுழியின் ஒரு சுவர் கரைகிறது.

வெற்றி இலக்கில் அகப்பட்டிருக்கும்
எனது சந்தையில்
இறைச்சிக் கடைகளை
திறக்க காத்திருக்கின்றனர் படைகள்

நான் நேசிக்கும் நகரத்தின்
நான் குறித்திருக்கும் பதுங்குகுழியில்
முற்றுகையிடப்பட்ட
நகரக் கடைகள் ஒளிந்திருக்கின்றன.

கால்களுக்குள் அலையும்
வெற்றிச் சொற்கள்
ஒடுங்கியிருக்கும்
வீடுகளின் கூரைகளை
உலுப்பி களிப்படைகின்றன.

தூரத்தில் ஒரு சிறிய
நகரத்தில் நடக்கும் சண்டையில்
உடையும் பள்ளிக்கூடத்தைக் கைபற்றி
அதன் முகப்பில் நின்று
செய்தி வாசிக்கிற
படைச் செய்தியாளனின்
வெறித்தனமான வாசிப்பில்
பள்ளிக்கூட கிணறு மூடுப்படுகிறது.

முற்றுகையிடப்பட்ட பதுங்குகுழியில்
எரியமறுக்கிற விளக்கை
சூழ்கிற ஈசல்களை
பாம்புகள் தின்று நகர்கின்றன.

சனங்கள் வெளியேறிய பெருவீதிக்கு அருகே
கிடங்குகள் விழுந்த
மைதானத்தில் காற்று முட்டிய
பந்து கிடந்து உருள்கிறது
உலகம் விளையாடத் தெடாங்கியது.

மேலுமொரு சுவர் கரைகிறது.

படைகள் வளைத்து
முற்றுகையிடும் பொழுது
மழை சூழ்கிறது
கொண்டைகளை அறுத்தெரியும்
சேவல்கள் கூவ மறுக்கும்
அதிகாலையில்
படைகள் மேலும் நுழைய முனைகின்றன.

எல்லாச் சுவர்களும் அசைகின்றன

முன்னேற்றம் தடுக்கப்பட்ட
நகரத்தில்
சண்டையை மூட்டக் காத்திருக்கும் படைகளை
சனங்கள் கொதித்து ஏசுகிறபோது
வயல்களில்
கைப்பற்றப்பட்ட தெருக்கள் புதைந்தன.

படைகளிடம் வீழ்ந்திட முடியாத
எனது நகரத்தின் முகப்புக்காக
அலைகின்றன இராணுவக் கமராக்கள்.
0

தீபச்செல்வன்

27.11.2008, கிளிநொச்சி நகரத்தை நோக்கிய முற்றுகை முன்னேற்றேத்தை தொடங்கியது இலங்கைப் படைகள். 

திங்கள், 24 நவம்பர், 2008

மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________
இழக்க முடியாத நிலத்தில்
ஓட்டிக்கொண்டிருக்கிற
நமது முகங்களும்
விட்டு வந்த ஊரில்
தங்கியிருக்கின்ற நம்பிக்கைளும்
நீ கூற முடியாதிருக்கிற
கதையின் பின் நெருப்பாய் கொட்டுகிறது.

உன்னை விழித்து
விசாரிக்கிற நள்ளிரவில்
சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தில்
உனக்காக
தலைவலிக்கிற பொதிகளை
நான் கனவில் சுமந்தேன்.

போர் குறித்து
நீ பேசிய கதைகளிலிருந்து
யாருமில்லாத கிராமத்தின் மௌனத்தில்
பெருந்துயர் வடிகிறது.

அண்மையில் இருக்கிற
கிராமம் ஒன்றையும்
பெரும் வீதி ஒன்றையும்
கைப்பற்றிவிட்டாதாய்
அறிவித்து விட்டு படைகள் மீள நகர்கிற
பின்னிரவில்
தடிகளில் பெய்கிற அடைமழையைப்போல
செய்திகள் வருகின்றன.

போரில் எழுதப்படுகிற கோட்பாடுகள்
முகங்களை அறுத்தெரிகிறது
மனிதாபிமானத்தின்
நடவடிக்கையில் நீ இழந்திருக்கிற ஊரை
போர் மூடி படர்ந்திருக்கிறது.

போரில் மிகவும் பிரியம்
கொண்டு வருகிற படைகளிடம்
மாட்டிவிடுகிற
உனது பதுங்குகுழிக்குள்
சண்டை நிகழ்கிறது.

நீ விலத்தியிருக்கிற போர்
உனது பழைய சைக்கிளின்
பின்னால் ஏறியிருக்கிறது
நீ போரை மேற் கொள்கிறாய்.

என்னிடம் சொல்லப்போகிற
கதைகளில் இருந்து
எஞ்சியிருக்கிற நிலத்தின்
மற்றொரு திசையில்
மூள்கிற சண்டையில் அப்பால்
ஒரு திசையில் அலைந்துகொண்டிருக்கிறாய்.

குருதி வடிகிற நினைவுக்கற்களில்
எழுதிய சொற்களின் மீது
கொடியைப் பறக்க விடுகிற
வெற்றிக்களிப்பில்
கோயில்கள் உடைய
கடைத் தெரு சந்திகளை இழந்தோம்.

முன்னரங்குகளில் மோதுகிற
ஜனாதிபதி கொண்டாடுகிற
செயின்பிளக்குகள் களங்களை திறக்க
தவிர்க்கமுடியாத போரிற்கு
சென்றிருக்கிற பிள்ளையின்
உனது நினைவுகள்
காடுகளின்
ஆற்றம் கரைகளில் ஒதுங்கியிருக்கின்றன.

ஏக்கம் வடிகிற இரவில்
நீ திட்டிக் கொண்டிருக்கிற போர்
உன்னை வலிந்திழுக்கிறது
நீ போரை அனுபவிக்கிறாய்.

மனிதாபிமானத்தின்
படை நடவடிக்கையில்
வயல்களிலிருந்து வயிறு வரை
தீப்பற்றி எரிகிறது.
உன்னை குறித்து
விழித்திருக்கிற அதிகாலையில்
எறிகனை பட்டு துடிக்கிற
சூரியன் ஊர் எரிகிற
புகையில் தாண்டு விடுகிறது.

அழகிய நகரங்களை
தின்று விடுகிற
படை நடவடிக்கையின்
மிகப்பெரிய வெற்றிவிழாவில்
எனது சந்தி நசிகிறது
உன்னை படைகள் நெருங்குகின்றன.
போர் எல்லாரையும் நெருங்குகிறது.

நீ எழுதாதிருக்கிற கவிதைகளிலிருந்து
உனது போர் பற்றிய
கதை தெளிவாய் கேட்கத்தொடங்குகிறது.

விட்டு வர முடியாத நமதூரில்
படைகள் கைப்பற்றிய பாலத்தின் கீழாய்
நான் உன்னுடன் மறைந்திருக்கிறேன்.
----------------------------------------------------------------------------
20.11.2008-போர்,கொண்டாட்டம்,நிலம்,இழப்பு.

திங்கள், 17 நவம்பர், 2008

அண்மையில் மிதிபடுகிற கடல்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________

மடுமாதாவின் பெருமூச்சு
அடிபடுகிற
பூநகரி கடல் வெளியில்
உப்புக்காற்று
சுழன்று அவதிப்பட்டு திரிகிறது.
நொருங்குண்ட
முடியை அணிந்த மாதா
பரந்தனையும் தாண்டிப்போகிறாள்.

மிக அண்மையில்
வந்து உறுமுகிற ட்ராங்கியில்
எனது கடல் மிதிபடக் கண்டேன்.
வலைகளில்
வந்து மாட்டித்துடிக்கிற
மீன்களின் குருதியில்
டோறாக்கள் பயணிக்கத் தொடங்குகின்றன.

மெல்லிய இரவும்
மிகவும் பெரிய கடலும்
அடர்ந்த காடுகளும்
சனங்களை இழக்க வைத்த
இராணுவ நகர்வுகளிடம்
சிக்கித் தவிப்பதை நான் கண்டேன்.

மேற்குக் கடல் கரைகளை
இழக்க காயப்பட்டு துடிக்கிறது
கடற்கரைத் தெரு.
இரண்டு பெரும் தெருவின்
நடுவில்
மாட்டிப்புரள்கிற கடல்
திரும்பமுடியாத
திசைக்கு சென்றுவிடுகிறது.

மீன்பிடிக்கிற படகுகளை இழந்த
கரையிலிருந்து
கடல் எட்டிச்செல்கிறது.
தென்னை மரங்கள்
மணல் வெளியில் புதைய
ஆயுதங்கள் கொண்டு வருகிற தெரு
வீழ்ந்து நெளிகிறது.
கிராஞ்சியில் விமானத்தின் குண்டுகளில்
சிதறுண்ட குழந்தைகளின்
கைகளை படைகள் மீட்டெடுத்தனர்.

இராணுவ வண்டிகள்
மிதித்துத் திரிகிற கடலின்
மிகவும் பிரியமான கரையை
படைகள் தின்று மகிழ்ந்தாட
அதன் சனங்கள்
வெயிலில் விழுந்து துடித்தனர்.

பின் நகர்ந்த சனங்களின்
வீடுகள்
சங்குப்பிட்டிக் கடலில் கரைக்கப்பட
கைவிடப்பட்ட தனிமையுடன்
கிடக்கிறது மிகப்பெரிய கடல்.

இரண்டு இராணுவத்தளபதிகள்
மிதித்து
கைகுலுக்க முன்பாகவே
ஜனாதிபதியின் வெறிச்சொற்கள்
ஓலிக்கத் தொடங்கிய நாளில்
இறந்து போக
எனது கடல் வீழ்ந்த தெருவில்
காய்ந்து மிதிபடுவதை
நான் கண்டு துடித்தேன்.
----------------------------------------------------------------------------
14.11.2008 பூநகரி,புலிகள்,பின்நகர்வு,ஆக்கிரமிப்பு

செவ்வாய், 11 நவம்பர், 2008

மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு


-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________

சவப்பபெட்டியின் முகத்தோடிருக்கிற
சுவர் முட்டிய
அறைகளின் மூலையில்
எங்கோ இருப்பவர்களுக்காய்
தூவிய பூக்கள்
காய்ந்து குவிந்து கிடக்கின்றன.

நாளுக்கு ஒரு மாதிரியாய்
போர் வகுக்கிற வியூகங்களில்
சிக்கிக் கொண்டிருக்கிறது
நீ பிடித்துச் செல்லுகிற தெரு.

பூட்டி ஏற்றப்பட்ட தொழிற்சாலையில்
வாங்க முடியாத போன
கடைசி மாத சம்பளத்துடன்
மீண்டுமொரு மரத்திற்கு நகர்ந்தாய்
நம்மீது விழ்த்தப்போகும் குண்டுகளுக்கான
செலவு விபரங்களை
ஜனாதிபதி நமது மொழியில் வாசித்தபொழுது
மூட்டையின் அடியிலிருக்கும்
ஒரு ரூபாய் காசிலிருந்து
கர்ஜிக்கும் மிருகம் குண்டாக வெடிக்கிறது.

நம்மை போர்
துரத்திக்கொண்டேயிருக்கிறது
அதன் நீண்ட நகங்கள்
ஒடுங்கிய இரவினை கிழித்தெறிய
நீ மீண்டுமொரு கோயிலின்
தாழ்வாரத்தில் பதுங்குகிறாய்.

மிகவும் பச்சைக்காடுகள்
முழுவதுமாய் அழிய
தெருக்கள் புதைந்த மண்மேட்டினை
உடைத்து
வந்த படைகள் அக்கராயன் குளத்தை
குடித்தபொழுது
எனது கைகளும் கூடவே ஈரமாகின.

ஒரு முறை நாம்முடன் பலர் ஒதுங்கிய
பள்ளிக்கூடத்தின் கூரைகளை
கைப்பற்றிய பிறகும்
அம்பலப்பெருமாள் சந்தியிலிருந்து
மிகவும் நிலத்துக்கான
பசியோடு பற்கள் முளைத்த கொடி பறக்கிறது.

இரண்டு போராளிகளின்
சேறு ஊறிய உடல்களுடன்
கைப்பற்றப்பட்ட பதுங்குகுழியில்
இடம்பெயர மனதின்றி
இன்னும் யாரோ தங்கியிருக்கிறார்கள்.

நம்மைப் போர் விடுவதாயில்லை
உன்னையும் என்னையும்
பிரித்து வைத்திருக்கிறது
எனது கனவுகளையும் தெருக்களையும்
தின்றுவிட்டு
உன்னை மரங்களின் கீழாய்
பின் வாங்க வைக்கிறது
நிலங்களை துண்டாடிவிட்டு
பசிக்கேற்ற முகங்களை அணிந்திருக்கிறது.

மீண்டும் இரவிரவாக வரப்போகும்
விமானங்களிடமிருந்து
தப்புவதங்காய் துடிக்கிற நாய்க்குட்டியைப்போல
மரம் உனக்கு மேலாய் பதறுகிறது.

நாளை நீ பேசப்போகும்
சொற்களை தேடியலைகிற கனவில்
இன்னும் நிறைய மரங்களுக்கு கீழாய்
அதனுடன் நீ பின்வாங்குவதைக் கண்டென்.
-0-------0-------0----------0---------0---------0------0------
08.11.2008 அம்மாவின் அழைப்பிற்காய்காத்திருந்த நாள்.

திங்கள், 3 நவம்பர், 2008

நம்மைத் தொடருகிற போர்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________
01
போரே தீர்வென்று கோடுகளின் கீழாய்
எழுதிச் செல்கிறேன்
எல்லாம் மாறி உடைத்த பொழுதும்
போர்க்களங்களின் முகங்கள் மாறவில்லை
யுத்தம் உன்னையும் என்னையும்
தின்பதற்காய் காத்திருக்கிறது
காலம் நம்மிடம் துப்பாக்கியை
வழங்கிவிட்டு மௌனமாக கிடக்கிறது.

கருத்தப்பூனையைப்போல
கருணாநிதி
மேடையிலிருந்து இறங்கிச் செல்கிறார்
நேற்றிலிருந்து கருணாநிதி கவிதைகளிலிருந்து
பூனைகள் வெளியேறுகின்றன
வாய் கட்டப்பட்டவர்களின்
பேரணிகளிலும்
பூனையின் கறுத்த மௌனம் ஊடுருவுகிறது.

புல்லரித்து முடிந்த நிமிடங்களில்
வாய்களை மூடும் தீர்வு போரைப்போல வருகிறது
முப்பது வருடங்களை இழுபடுகிற
போரை உணவுப்பைகளில்
கறுத்தப்ப+னைகள் அடைக்கின்றன.

02
போர் தீர்வென்று வருகையில்
நமக்கு போராட்டம் தீர்வென்று மிக கடினமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டோம்
விமானங்களை நம்பியிருக்கும்வரை
குண்டுகளை நம்பியிருக்கும்வரை
துப்பாக்கிகளை நம்பியிருக்கும்வரை
நாமது கைகளிலும் துப்பாக்கிகள் வந்தன
நமது பதுங்குகுழி விமானமாய் பறக்கிறது.

போர்க்களங்களில் தீர்வுகள்
இலகுவாகிவிட்டன
நீயும் நானும் பெற்றெடுக்கும் குழந்தை
உயிர் துறக்கப்போகும் இந்தப்போர்க்களம்
நம்மோடு முடிந்துபோகட்டும்
விமானங்கள் மனங்களை தீர்மானித்து விட்டன
மிகக்கொடுரமான அனுபவத்திலிருந்து
நமது விமானங்கள் எழும்புகின்றன
எனது காயத்திலருந்து வெளியேறுகிற
குருதி காவலரணை கழுவுகிறது

03
ஓவ்வொரு செய்தியின் கீழாயும்
மறைக்கப்பட்ட குறிப்புக்களை நீ கண்டாய்
அதன் மேலொரு கோடு கீறினேன்
பயங்கரவாதிகளை அழித்துச் சென்ற
விமானங்களின் கீழாய்
பள்ளிச்சிறுவனின் முகம் பதிவுசெய்யப்பட்ட
புகைப்படத்தை நீ கண்டாய்
விமானங்களும் அதன் இரைச்சல்களும்
நம்மை மிரட்டிக்கொண்டிருந்தன
ஒரு விமானத்தைப்போல ஜனாதிபதி பேசுகிறார்
ஒரு எறிகனையைப்போல
இராணுவத்தளபதி வருகிறார்.
கருணாநிதி ஒரு கிளைமோரை
பதுங்கியபடி வைத்துச்செல்கிறார்

04
அழுகை வருகிறது
தோல்வியிடம் கல்லறைகள்தானே இருக்கின்றன
எனினும் இந்த மரணம் ஆறுதலானது
அதில் விடுதலை நிரம்பியிருந்தது
இரண்டு வாரங்களில்
எடுத்துப்பேச முடியாத போரை
நாம் முப்பது வருடங்களாக சுமந்து வருகிறோம்
நம்மிடமே நம்மை தீர்மானிக்கும்
சக்தி இருக்கிறது
மரணங்கள் பதிலளிக்கும்பொழுது
குருதியில் மிதக்கிற கதிரைகளை பிடித்துவிடுகிற
அரசியல்வாதிகளிடம்
நாம் முப்பது வருடங்களாக ஏமாறுகிறோம்.

அழகான வாழ்வுக்காய் பிரயாசப்படுகையில்
உலகம் மாதிரியான
குண்டுகள் அறிமுகமாகிவிட்டன
மிகவும் கொடூரமாக மேற்க்கொள்ளப்படுகிற
போரை எதிர்க்கும் பொழுது
துப்பாக்கிகள் வாழ்வில் ஏறிவிட்டன
நீ போரின் நுட்பங்களில் கவனம் செலுத்துகிறாய்.

05
பிரித்து ஒதுக்கி ஒடுக்கப்படகிறபொழுதுதான்
இனம் குறித்து யோசிக்கத்தோன்றுகிறது
எனக்கு இந்தக் கல்லறைகளை
எண்ணி முடிக்க இயலாதிருக்கிறது.

படைகள் புகுந்துநிற்பதாய்
கனவு காண்கையில்
தூக்கம் வராத நாட்களாகின்றன
வீட்டுச்சுவர்கள் தகர்ந்துவிட
பேய்கள் குடிவாழ்கின்ற கிராமங்களில்
திண்ணைகள் கொலை செய்யப்பட்டிருக்க
எப்படி தூக்கம் வருகிறது
அதுவே தீர்வாகையில்
கை துப்பாக்கிளை இறுகப்பிடிக்கிறது.

தீர்க்கமுடியாத பிரச்சினைகள்
போர்க்களத்தில் சுடப்பட்டுக்கொண்டிருந்தன
நம்மை துரத்துகிறபோர் மிகவும் கொடூரமானது
அதன் பின்னால்
அழிகிற இனத்தின் நகரங்கள்
புரதானங்கள் குறித்து
சன்னம் துளைத்துச் செல்கிற சுவர்களைத்தவிர
எதனால் பேசமுடிகிறது?

06
நீ போர் அழகானது என்றாய்
உன்னால் போரில் நசியமுடியாதிருந்தது
அம்மா பின்னால் நிற்க
நான் சுட்டுக்கொண்டிருந்தேன்
நான் போரை சமாளிக்க வேண்டியிருந்தது.

நம்மால் சட்டென பேசமுடிகிறது
துப்பாக்கிகளைத்தான் இறக்க முடியவில்லை
மிகவும் விரைவாக சுட்டுவிட முடிந்தது
மரணங்களின் பிறகு போர்க்களம்
அடங்கிக்கிடக்கிறது
நேற்று நம்மைப்பற்றி பேசியவர்கள்
மேடைகளைவிட்டிறங்கி
கதிரைகளில் மாறிக்கொண்டிருந்தார்கள்.

படைகளும் நகரத் தொடங்க
நாம் மீண்டுமொரு சமருக்கு
எதிராக தயாராகினோம்
சிறுவர்கள் இழுத்துச் செல்லுகிற
தண்ணீர்க் குடங்களை போர் தொடருகிறது.
----------------------------------------------------------------
8.35, 31.10.2008

புதன், 22 அக்டோபர், 2008

குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்

-----------------------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
____________________________________

குழந்தையை படுக்கையில் வைத்து
தின்று முடித்த பாம்பு மெல்ல நகர்ந்து செல்கிறது
பாம்புகள் காடுகளை நிறைத்துவிட
காடுகள் மழையை நிறைத்துவிட
மழை இரவை நிறைத்துவிடுகிது.

உன்னைப்பிரிந்த சூரியன் எழும்பியிராத
கறுப்புக் காலையின் நாள்
மீண்டும் வருகிறது
கடைசியாய் அருந்திய தேனீர்
நீ ஊட்டிய கேக்
தீர்ந்து பசியெக்க தொடங்கிய நாள் வருகிறது
நீ என்னைப் பெற்றதும்
நான் உன்னைப் பிரிந்ததுமான நாள்
மெல்ல மெல்ல வந்துவிடுகிறது.

நீ எனது புத்தகங்களை விட்டுச்சென்றிருக்கையில்
நனைந்தழிந்த புகைப்படங்களின் குறையில்
எனது முகம் தேடுகிறாய்.

முதலைகள் ஊர்களுக்குள் புகுந்தன
குளங்கள் வற்றிவிட
ட்ராங்கிகள் நீந்துகின்றன
ஒவ்வொரு ஊரும் நகரும் வீழ்கிற பொழுது
உன்னைப்பிரிந்த வலியெடுக்கிறது.

குளங்களை படைகள்
குடித்து விட்டு எறிகிற எறிகனைகள் விழும்
மரங்களின் கீழே
உன்னை தின்பதற்காய்
அலையும் பாம்புகளை கண்டேன்.

தூக்கமும் கண்களும்
மழையில் தொலைந்து விடுகிறது
குழந்தைகளை பாம்புகள் இழுத்துச்செல்வதாய்
இறுக அணைத்துக்கொள்கையில்
மழை தாய்மாரை இழுத்துச் செல்கிறது.

மரங்களின் வேர்களினிடையே
உன்னோடு பொறுத்துவிடுகிற
எனது புகைப்படங்களில் பாம்புகள் அசைகின்றன
சமையல் பாத்திரங்களில் பசி நிரம்பியிருந்தது.

முதலைகள் மாமரத்தை தின்றுவிட
மழை வீட்டை தின்றுவிடுகிறது
படைகள் கிராமத்தை தின்று விடுகின்றனர்
முழுக் குழந்தைகளையும் தின்பதற்காய்
சருகுகளினிடையே பாம்புகள் காத்திருக்கின்றன.

உன்னைப்பிரிந்து வந்த எனது பிறந்தநாள்
தாங்கமுடியாத
தோல்வியையும் அவலத்தையும் நிறைத்து
மழையில் நனைந்த
அடுப்புக்கற்களினிடையில் கிடக்கிறது.
---------------------------------------------------------------------------
24.10.2008 அம்மாவை பிரிந்த எனது பிறந்தநாளை நினைவு கூர்ந்து
---------------------------------------------------------------

திங்கள், 6 அக்டோபர், 2008

அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள்


---------------------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
வாழ்வு பற்றி பெரிய ஆசையிருந்தது
பூக்கள் பற்றி நிறைய கனவுகள் இருந்தன.

இந்த நகரத்தின் பெருஞ்சுவர்களை
அழித்த பிறகு
வீடுகளை புதைக்கிற
நிகழ்வு அறிவிக்கப்படுகிறது
பூக்கள் பற்றிய கனவு உதிர
வரிசையாய் போடப்பட்ட கதிரைகளை
உடைத்துதெறிக்கும் தீர்வு வருகிறது.

பூக்களை உற்பத்தி செய்யும்
நகரத்தை அழிப்பதற்கு பிரகடனத்தை
அறிவித்தபொழுது
புரதான பெருஞ்சுவர்கள் அதிர்ந்து போயின.

விமானங்களுக்கு பலிகொடுக்கப்பட்ட
மேசைகள் உடைந்து கிடக்கும்
வெடித்துச் சிதறிய கண்ணாடி மாளிகைகளில்
அருந்திவிட்டுப்போன
தேனீரின் மிச்சம் காயாமாலிருக்கிறது.

எல்லோரும் வந்திருந்து பேசிய
கதிரைகளை உடைத்துவிட்டுப்போகையில்
அருகிலிருந்த மாமரங்கள் முறிந்து விழ்ந்தன.

யுத்தத்தின் விதி புதியதாய் இயற்றப்பட்டு
மாறிக்கொண்டிருந்தது.

மூன்றாவது போர் முடிந்தபொழுது
எழுப்பப்பட்ட மாளிகைகள்
மீண்டும் தகர்ப்பதற்கான
நாலாவது போர் ஒளிந்திருந்தது.

02
ஷெல்கள் வந்து விழும்
நகரத்தின் மையத்திலிருக்கும்
மருத்துவமனையில்
காயமடைந்து வந்து சேர்ந்த
நோயாளியின் அதிருகிற தெருவின்
அழும் குரலில்
ஒரு பெரிய சனக்கூட்டத்தின்
ஓலம் ஒலித்துக்கொண்டிருந்தது.

பூக்கள் பற்றிய கனவிலிருந்து
வெளியேறும் தருணம் வருகிறது.

இந்த நகரத்தோடும்
சனங்களின் மரணத்தோடும்
துப்பாக்கி அணிந்து வீழ்ந்த போராளிகளோடும்
பூக்களின் நகரம் பற்றிய கனவு
முடிந்துபோய்வடுவதாய் கருதப்படுகையில்
அரசுகளின் யுத்தக்கனவில்
இனநிலவெறி நாடு ஆடுகிறது.

எல்லோரும் பயங்கரவாதிகள் என்று
அறிவிக்கப்படுகையில்
எஞ்சியிருந்த பூக்கள் உதிர
நகரத்தை அழிப்பதற்கான பிரகடனம் கேட்கையில்
உடைந்த கதிரைகள் மேலும் உடைய
அதன் கைகளிலும் துப்பாக்கிகள் முளைத்தன.

வாழ்வு பற்றி பெரிய ஆசையிருந்தது
பூக்களின் நகரம் பற்றி நிறைய கனவுகள் இருந்தன.
-----------------------------------------
05.10.2008

வியாழன், 2 அக்டோபர், 2008

அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.


---------------------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________

ஆள்களற்ற நகரத்திலிருந்த
ஒரே ஒரு தொலைபேசியில்
இலக்கங்களை அழுத்தி களைத்திருக்கிறாய்
கூரை கழற்றப்பட்ட
மண்சுவரிலிருந்த
நாட்காட்டியும் கடிகாரமும்
புதைந்து கிடக்கிறது.

பூவரச மரத்தின் கீழ்
உனது கடைசி நம்பிக்கை
தீர்ந்து கொண்டிருக்கிறது.

எடுத்துச் செல்லமுடியாத பொருட்களிலும்
கைவிடப்பட்ட படலைகளிலும்
மீண்டும் வரும் நாட்களை கணக்கிடுகிறாய்.

உனது துயர்மிகுந்த ஒரு வார்த்தையேனும்
கேட்க முடியவில்லை
ஐநாவில் ஜனாதிபதியின் தமிழ் உரையில்
உனது மொழி
நசிபட்டுக்கொண்டிருந்தது
அழுகையின் பல ஒலிகளும்
அலைச்சலின் பல நடைபாதைகளும்
சிரிப்பாக மொழிபெயர்க்கப்பட
தலைகள் அசைந்து கொண்டிருந்தன.

கைவிட்டுச்சென்ற
கோழியும் குஞ்சுகளும் இறந்துகிடக்க
வெறும் தடிகளில்
தலைகீழாய் தூங்கும் வெளவால்கள்
அழுதபடியிருந்தன.

நேற்றோடு எல்லோரும்
நகரத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.

ஐநாவின் உணவு வண்டியை
துரத்திச் சென்ற சிறுவனின் பசி
ஓமந்தை சோதனைச்சாவடியில்
தடுத்து வைக்கப்படுகையில
குண்டைபதுக்கிய அமெரிக்கன்மாப்பையில்
உனது தீராத பசி எழுதப்பட்டிருக்கிறது.

வானம் உன்னை ஏமாற்றிட்டதுபோல
பார்த்துக்கொண்டிருக்கிறாய்
இன்று நள்ளிரவோடு
வாழ்வதற்கான அவகாசம் முடிந்துவிட்டதாய்
அறிவிக்கப்படுகையில்
மீண்டும் தொடரப்படும் படைநடவடிக்கைக்கு
நாள் குறிக்கப்பட்டிருக்கிறது.
-------------------------------------------------------------------------------
01.10.2008இரவு8.00

வெள்ளி, 19 செப்டம்பர், 2008

பெரிய நகரை தின்கிற படைகள்

-----------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________


மீண்டும் பொதி சுமக்கும்
நாட்கள் வந்துவிட்டன
பெரிய நகரத்தினை
சூழ்க்கிற படைகள்
பிணங்களோடு வருகின்றனர்
எனது
பழைய சைக்களில்
எந்தப் பொதியை
ஏற்றிச் செல்கிறாய்
படையெடுக்கும் இரவில்
நான்
உன்னை கைவிட்டு வந்தேன்
எனது பொதிகளையும்
நீ சுமந்து செல்லுகிறாய்.

முதுகில் வழிகிறது உனது சுமை.

வேப்பமரங்களை
பாம்புகள் சூழ்ந்த நாளில்
மாமரத்திலிருந்து
தோட்டாக்கள் உதிர்ந்த நாளில்
முற்றங்களில் குழிகள் விழுந்தன.

கொய்யாமரத்தின் கீழிருக்கும்
கிடங்கில்
பதுங்கியிருக்கிறது
ஷெல்லில் தாயை இழந்த
ஆட்டுக்குட்டி.

நீ மண் சுமந்த நகரத்தை
நேற்று முதல் நாளிலிருந்து
படைகள் கடிக்கத் தொடங்கி விட்டன.

அந்தச் சைக்கிளில்
நான் திரிந்த நகரம்
எல்லோருடைய கால்களையும்
இழந்து விடுகிறது
அலைவதற்கு இடங்கள் இல்லாத பொழுது
வழிகள்
முற்றுகையிடப்பட்டபொழுது
காடுகளில் மிதக்கின்றன
பொதிகள்
இணைக்கப்பட்ட தலைகள்.

நமது வீட்டிற்குச் செல்லும்
ஒழுங்கையில்
மாடுகள் செத்துக்கிடக்கின்றன.

கிணறுகள் மூடுண்டு கிடக்கின்றன.

சில நாட்களுக்கு முன்பு
கட்டி முடித்த நகரத்தின்
கடைத் தெருக்களையும்
தண்ணீர்க் குழாய்களையும்
மின்சாரக் கம்பிகளையும்
அறுத்துக்கொண்டு வருகிறது ட்ராங்கி.


சூரியனுக்குப் பதிலாக டெலிகப்ரர் தெரிகிற
குண்டுகளின் புகையில்
விடிகிற காலையில்
குடிப்பதற்கு தண்ணீருக்கும்
அதை நிரப்ப
ஒரு கோப்பைக்கும்
நீ அலைவதைக்கூட
நான் அறியமுடியாதிருக்கிறது.
------------------------------------------------
18.09.20008
------------------------------------------------------

திங்கள், 8 செப்டம்பர், 2008

போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்

-----------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு
திரும்பிக்கொண்டிருந்த
அம்மாவை அக்கராயனில்
நான் தேடிக்கொண்டிருந்தேன்
ஷெல்களுக்குள்
அம்மா ஐயனார் கோயிலை
விழுந்து கும்பிட்டாள்
ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது.

நேற்று நடந்த கடும் சண்டையில்
சிதைந்த கிராமத்தில்
கிடந்தன படைகளின் உடல்கள்
கைப்பற்றப்பட்ட
படைகளின் உடல்களை
கணக்கிட்டு பார்த்தபடி
சிதைந்த உடல்கள்
கிடக்கும் மைதானத்தில்
பதுங்குகுழியிலிருந்து
வெளியில் வந்த
சனங்கள் நிறைகின்றனர்.

பக்கத்து வீட்டில்
போராளியின் மரணத்தில்
எழுகிற அழுகையுடன்
இன்றைக்கு நாலாவது தடவையாக
திடுக்கிட்டு எழும்பிய அம்மா
முறிகண்டி பிள்ளையாரை
கும்பபிட்டபடி ஓடுகிறாள்
பூக்களும் மண்ணும்
கைகளில் பெருகுகிறது.

02
போன கிழமை விட்டு வந்த
கிராமம் முழுவதுமாய் சிதைந்து போனது
குசினிக்குப் பக்கத்தில்
கிடந்த பதுங்குகுழியில்
படைகளின் ஏழு சடலங்கள்
மூடுண்டு கிடந்தன.

போராளிகள் கைப்பற்றிய
ஆயுதங்களில் மீட்கப்பட்டிருந்த
கிளைமோர்களைக் கண்டும்
எறிகனைகளைக்கண்டும்
சனங்கள் பெருமூச்செறிந்தனர்.

போர் வாழ்வை அழித்தபொழுது
கிராமங்கள் போர்க்களமாகின
அக்கராயன்குளம் காடுகளில்
ஒளிந்திருக்கும் படைகளிடம்
நாச்சிக்குடா வீதியே அகப்பட்டிருந்தது

03
அகதிகள் வீடாயிருந்த
ஸ்கந்தபுரம் இத்திமரம்மீது எறிகனைகள் வீழ்ந்தன
அகதிக்குடியிருப்புகள் நிறைந்த
மணியங்குளம் கிராமம்
எரிந்து சாம்பலாய்க் கிடந்தது.

நிலத்தில் பதுங்கமுடியாதபொழுது
வெளியில் வந்து விடுகிறேன்
தலைகளில் விழும் எறிகனைகளை
ஏந்தும் பிள்ளைகளை
நினைத்து துடிக்கிற
தாய்மார்கள் வெளியில் நின்றனர்.

செஞ்சிலுவைச்சங்கம்
கொண்டு வந்த போராளியின் உடல்
மேலும் குத்தி கிழிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் ஒரு சிங்களத்தாய்
துடித்தழுகிறாள்
ஈழத்தில் ஒரு தமிழ்த்தாய்
துடித்தழுகிறாள்
சிதைந்த கிராமங்களில்
பரவிக்கிடந்தன
படைகளின் உடல்கள்
மதவாச்சியை கடந்து
படைகள் வரத்தொடங்கியபொழுது
வவுனியாவைக்கடந்து
போராளிகள் போகத்தொடங்கினர்.

தெருமுறிகண்டி மடங்களில்
கிடந்தன ஆள் இல்லாதவர்களின் பயணப்பொதிகள்.

புதுமுறிப்பில் வீழ்ந்த
ஏறிகனைகளில் இறந்த
குழந்தைகள்
வரிச்சீருடைகளை அணிந்த
காட்சிகளை
ரூபவாஹினி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

படைகளை நோக்கி சுடுகிற
போராளிகளின் மனங்களில் இருந்தன
பசுமையான கிராமங்களும்
அங்கு நடமாடித்திரிகிற சனங்களும்.
-------------------------------------------------------
04.09.2008
-----------------------------------------------------

வியாழன், 21 ஆகஸ்ட், 2008

போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

----------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
போராளிகள் மடுவைவிட்டு
பின் வாங்கினர்.

நஞ்சூறிய உணவை
தின்ற
குழந்தைகளின் கனவில்
நிரம்பியிருந்த
இராணுவ நடவடிக்கைகளிலிருந்து
போர் தொடங்குகிறது.

நகர முடியாத இடைஞ்சலில்
நிகழ்ந்து
வருகிற
எண்ணிக்கையற்ற
இடப்பெயர்வுகளில்
கைதவறிய
உடுப்புப்பெட்டிகளை விட்டு
மரங்களுடன்
ஒதுங்கியிருக்கின்றன சனங்கள்.

போர் இன்னும் தொடங்கவில்லை.

02
போராளிகள் இலுப்பைக்கடவையைவிட்டு
பின் வாங்கினர்.

பயங்கரவாதிகளை
துரத்திக்கொண்டு வருகிறது
அரச யுத்தம்.

மரத்தின் கீழ்
தடிக்கூரைகளில்
வழிந்த
மழையின் இரவுடன்
சில பிள்ளைகள்
போர்க்களம் சென்றனர்.

யுத்தம் திணிக்கப்பட்டதை
பிள்ளைகள்
அறிந்தபோது
பரீட்சைத்தாள்கள்
கைதவறிப் பறந்தன.

ஓவ்வொரு தெருக்கரை
மரத்தடியிலும்
காய்ந்த
உணவுக்கோப்பைகளையும்
சுற்றிக்கட்டியிருந்த
சீலைகளையும்
இழந்த போது
ஜனாதிபதியின்
வெற்றி அறிக்கை
வெளியிடப்பட்டிருந்தது.

03
போராளிகள் விடத்தல்தீவை விட்டு
பின்வாங்கினர்.

யுத்த விமானங்களிடமிருந்து
துண்டுப்பிரசுரங்கள்
வீசப்பட்ட பொழுது
வறுத்த
கச்சான்களை தின்கிற
கனவிலிருந்த சிறுவர்கள்
திடுக்கிட்டு எழும்பினர்.

எல்லோரும் போர்பற்றி
அறியவேண்டி இருந்தது.

04
போராளிகள் முழங்காவிலை விட்டு
பின்வாங்கினர்.

கைப்பற்றப்பட்ட கிராமங்களை
சிதைத்து எடுத்த
புகைப்பபடங்களை
வெளியிடும்
அரச பாதுகாப்பு இணையதளத்தில்
சிதைந்த
தென்னைமரங்களைக் கண்டோம்
உடைந்த
சமையல் பாத்திரங்களைக் கண்டோம்
தனியே கிடக்கும்
கல்லறைகளை கண்டோம்.

யுத்தம் எல்லாவற்றையும்
துரத்தியும்
எல்லாவற்றிலும் புகுந்துமிருந்தது.

05
மல்லாவியையும்
துணுக்காயையும் விட்டு
சனங்கள் துரத்தப்பட்டனர்.

ஒரு கோயிலை கைப்பற்ற
யுத்தம் தொடங்கியபோது
வணங்குவதற்கு
கைகளையும்
பிரார்த்தனைகளையும்
இழந்தோம்.

அரசு அகதிமுகாங்களை திறந்தது.

இனி
மழைபெய்யத்தொடங்க
தடிகளின் கீழே
நனையக் காத்திருக்கிறோம்
தடிகளும் நாங்களும்
வெள்ளத்தில்
மிதக்கக் காத்திருக்கிறோம்.

வவுனிக்குளத்தின் கட்டுகள்
சிதைந்து போனது.

கிளிநொச்சி
அகதி நகரமாகிறது
இனி
பாலியாறு
பெருக்கெடுத்து பாயத்தொடங்கும்.

நஞ்சூறிய உணவை
தின்ற
குழந்தைகளின் கனவில்
நிரம்பியிருந்த
இராணுவ நடவடிக்கைகளிலிருந்து
போர் தொடங்குகிறது.
---------------------------------------------------------------
20.08.2008
-------------------------------------------------------------------------

துண்டிக்கப்பட்ட சொற்கள்

----------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
தோல்வியின் வர்ணிப்பு நிரம்பிய
உனது குரல்
எனக்குக் கேட்க வேண்டாம்

துண்டிக்கப்பட்ட
தொலைபேசிகளிலிருந்து
எனது நகரத்தின்
கண்ணீர் வடிகிறது

கம்பிகளின் ஊடாய்
புறப்பட முயன்ற
எனது சொற்கள்
தவறி விழுகின்றன

மேலும்
தோல்வி வருணிக்கப்பட்டு வரும்
உனது குரல்
எனக்குக் கேட்க வேண்டாம்.

02
உனது கடிதம்
வந்து
சேராமலிருந்திருக்கலாம்
நீ
எந்தக் கடிதத்தையுமே
எழுதாமல் விட்டிருக்கலாம்

தபாலுறை
நாலாய்க் கிழிந்திருந்தது
முகவரிகளில்
இராணுவம் முன்னேறிய
குறியீடுகள் இருந்தன

நான் தேடி அலைந்தேன்
கடிதம் எங்கும்
வெட்டி மறைக்கப்பட்டிருந்த
உன்னையும்
உனது சொற்களையும்.

மறைக்கப்பட்டிருந்த
உனது சொற்களுக்கு கீழாய்
உனது முகம் நசிந்து கிடக்க
தோல்வி வருணிக்கப்பட்டிருந்தது.
------------------------------------------

வியாழன், 14 ஆகஸ்ட், 2008

கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்


தானியங்கள் வீடுகளில் நிரம்பிக்கிடக்கின்றன
வீடுகள் நிரம்பிய கிராமங்களைவிட்டு
நாங்கள்
வெளியேறிக்கொண்டிருக்கிறோம்.

துயரத்தின் பாதைகள்
பிரிந்து நீள்கின்றன
எல்லா பாதைகளும்
தலையில்
பொதிகளை சுமந்திருக்கின்றன.

எல்லோரும் ஒருமுறை
நமது கிராமங்களை
திரும்பிப்பாருங்கள்
இப்பொழுதே
தின்னைகள் சிதைந்துவிட்டன
வீடுகள் வேரோடு அழிந்து விட்டன.

ஒரு துண்டு நிலவுதானே
வானத்தில் எஞ்சியிருக்கிறது
அடர்ந்த மரங்களுக்கிடையில்
காடுகள் வரைந்த வீதிகளில்
நாங்கள் எங்கு போகிறோம்.

எனது அம்மாவும்
ஏதோ ஒரு வழியில்
போய்க்கொண்டிருக்கிறாள்.
நான் எங்காவது
அம்மாவை சந்திக்கலாம்.

எனது வயதிற்கும்
எனது உருவத்திற்கும் ஏற்ற
பொதி ஒன்றை  சுமந்திருக்கிறேன்
எனது அம்மாவும் தனக்கேற்ற
பொதி ஒன்றை சுமந்தே
போய்க்கொண்டிருக்கிறாள்.

இந்த பொதிகளை வைத்து
நாம் ஒரு வாழ்வை
தொடங்கப்போகிறோம்
எங்கள் வானம்
பறிக்கப்பட்டு விட்டது
எங்கள் நட்சத்திரங்கள்
பறிக்கப்பட்டு விட்டன.

செல்கள் முற்றங்களை மேய்கின்றன
முற்றங்கள் சிதைந்து மணக்கின்றன
விமானங்கள் வானங்களை பிய்க்கின்றன
கிராமங்களை தின்னுகின்றன
வீதிகளை இராணுவம் சூறையாடுகிறது.

எங்ள் கிராமங்களை
விடுவித்துக்கொண்டதாக
அரச வானொலி அறிவிக்கிறது.

இனி நாங்கள்
ஒரு துண்டு தரப்பாலுக்கு
திரியப்போகிறோம்
ஒரு மரத்தை தேடி
அலையப்போகிறோம்.

உற்றுப்பாருங்கள் . . .
இங்கு இரவாயிருக்கிறது.

நாங்கள் கறுப்பு மனிதர்கள்
கறுப்பு பொதிகளை
சுமந்தபடி
நிழல் வீடுகளை
பறிகொடுத்து விட்டு
சிறுதுண்டு நிழலுக்காக
எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.
0

24.09.2007
 

சனி, 2 ஆகஸ்ட், 2008

மிதந்து திரியும் திறப்புகள்

கவிதை_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------
சில சைக்கிள்களின்
கான்டிலை
கழற்றி எடுத்தார்கள்
சில சைக்கிள்களின்
சீற்றை
கழற்றி எடுத்தார்கள்
சில சைக்கிள்களின்
கரியலை
கழற்றி எடுத்தார்கள்.

சைக்கிள்களின் சொந்தக்காரர்கள்
திரும்புவார்கள் என்ற நம்பிக்கை
யாரிடமுமில்லை.

சில பேர் சைக்கிளையே
திருடிக்கொண்டு போனார்கள்.

அலுமாரிகளை உடைத்து
புதையலை கண்டெடுப்பதுபோல
எனது தோழர்கள்
மகிழ்கிறார்கள்
அவர்களின் வாசனை செண்டுகளும்
பவுடரும்
சீப்புகளும் இன்னும்
வாசனையுடனிருந்தன.

உடுப்புகளை கிழறி
அறையில் எறிந்து விட்டனர்
சிலர் அந்த உடுப்புகளால்
அறையின் தூசியை
தட்டிக்கொண்டார்கள்
கடைசியில்
குப்பைத்தொட்டியில்
நிரம்பியிருந்தன அந்த உடைகள்.

அடிப்பகுதி கழன்ற சப்பாத்துக்களும்
உருக்குலைந்த செருப்புகளும்
அறையை விட்டு
ஒதுங்கியபடியிருந்தது.

பாடக்குறிப்புகள் கிழிந்தும்
உருக்குலைந்தும்
அள்ளி வீசப்பட்டும்
காற்றோடும்
கால்ளோடும் மிதிபட்டும்
குப்பையாகி கரைந்தன.

அவர்கள் எழுதிய
பாடக்குறிப்புகளும்
சேகரித்த
பத்திரிகை பகுதிகளும்
அடிமட்டங்களும்
மை இறுகிய பேனாக்களும்
சிப்புகள் அறுந்த
ப்பாக்குகளை விட்டு
தூரக்கிடக்க
அலுமாரிகளை விட்டு
தூரக்கிடந்தன
அந்த தூசி படிந்த ப்பாக்குகள்.

அறைகளின் மூலைகள்
பக்கங்கள்
எங்கும் கிடந்து உருண்டன
அவர்களிடமிருந்து
உதிர்ந்த முடிகள்
தலையணைகள்
வேலி ஓரமாய் எறிந்து கிடந்தன.

குளியலறை தட்டுகளில்
கிடந்தன
ஈரம் உலராத சவர்க்காரங்கள்
மலஅறையில்
வெண்கட்டியால் எழுதப்பட்ட
தூஷனங்கள்
தண்ணீரால் கழுவி
அழிக்கப்பட்டிருந்தது.

முகம் அழியாத கண்ணாடியுடன்
பெயரும் ஊரும் வகுப்பும்
எழுதப்பட்ட சுவர்களுக்கு
வெளுறிய வண்ணம் பூசப்பட்டிருந்தது.

அவர்களின் பொருட்களில் ஏக்கம் வழிகிறது
பெரும் ஆறாய்
யாரும் கண்டுகொள்ளாத
கரைகளை எடுத்து உடைத்தபடி..

அவர்கள் புதிய சைக்கிள்களோடும்
புதிய ப்பாக்குகளோடும்
திரும்பி வருவார்கள்
என்ற நம்பிக்கை யாருக்குமில்லை.

சிதறுப்பட்டு கலைந்து
மிதக்கிற
அவர்களின் கனவின் ஏக்கங்களைப்போல
சைக்கிள்களினதும்
அறைகளினதும்
துருப்பிடித்த திறப்புகள்
எங்கும் அலைந்து
மிதந்து கொண்டிருந்தன..
01.04.2008
--------------------------------------------------------------

செவ்வாய், 8 ஜூலை, 2008

நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்.

எழுதியவர்-------------------------------------
--------------------------தீபச்செல்வன்

````````````````````````````````````````````````````````
ஜீன்சுக்குள் கிடந்த
நோக்கியாபோன் அலறுகிறது.

பத்து ரூபாய்க்கு வாங்கியருந்திய
முந்நூறு மில்லி
கொக்கக்கோலா சோடாவை
எழுபத்தைந்து ரூபாய்க்கு
வாங்கி அருந்திக் கொண்டிருந்தேன்.

இருபது ரூபாய்க்கு
வாங்கிய சிகரட்
வாயில்
கொளுந்து விட்டெரிகிறது
இன்னும் ஜந்து ரூபாவால்
அதிகரித்தபோதும்
வாய் எரியாமல் இருக்கிறது.

தெருவில் சிகரட்டை
சப்பியபடி
பியர்ப் போத்தலை
தூக்கி அருந்தியபடி திரிய முடிகிறது

எப்போதாவது வரும்
நெட்வேர்க்கில்
வியர்வையை காசுகளை
குடிக்கும்
நொக்கியாபோன் திரும்ப
அலறுகிறது
மேலதிக காசில் வாங்கும்
ரேசர் கோட் கார்ட்டுக்காக.

யாருடனாவது
பேசிக்கொண்டிருக்கலாம்
யாராவது அழைப்பார்கள்
யாரையாவது அழைக்கலாம்
எதாவது பேசலாம்.

பக்கத்திலிருக்கும் தோழனுடன்
பேசவேண்டியவை பேசாமல்
புரியவேண்டியவை புரியால் இருக்கிறது
அவனின் கேள்விகளும்
உரையாடலும்
வெறுமையில் அடிபட்டுக் கிடக்கின்றன.

காசைக் குடித்துவிட்டு
பசிகளின் முன்னால்
நொக்கியாபோன் காலை நீட்டிப் படுத்திருக்கிறது
சொற்களும் உரையாடல்களும்
கம்பிகளிலிருந்து வெளியே இருக்கிறது.

கொக்கக்கோலா சோடா அடங்கிக் கிடக்கிறது.
-----------------------------------------------------------------------------

புதன், 4 ஜூன், 2008

அடிமைகள் நகரத்தின் தீபாவளி


எழுதியவர்-------------------------------------

--------------------------தீபச்செல்வன்


````````````````````````````````````````````````````````
இந்த அடிமைகளும்
ஒரு தீபவாவளி கொண்டாடினர்.

வாகனங்கள் வீதியில்
இறங்க
நடுங்கிக் கொண்டிருந்தன
ஒரு இராணுவ வண்டியின்
நீளத்தினுள்
முழு வீதியும் அடங்கி
நசிந்து கிடந்தது.

நேற்றிரவு வெட்டி
கொலை செய்யப்பட்டவர்களின்
துண்டுதுண்டு உடல்களும்
சனங்களோடு வீதியில்
ஒதுங்கி நின்றன.

அடிக்கடி அடிமைகள்
நகரத்தினுள்
கடல் நுழைந்து திரும்பியது.

வீட்டிலிருந்து சனங்களை
திறந்து
வெளியில் விடுகிற
சாவிக் காலை
கறுப்பாகிக் கிடந்தது
துண்டுதுண்டாய்
வெட்டி எறியப்பட்ட
வீதியல் கிடந்தன
குழந்தைகளின்
தீபாவளி உடைகள்.

அடிமைகள் நகரத்தில்
தீபாவளி ஒன்று நடந்ததுதான்.

வெடிகள் தீர்க்கப்பட்டன
ரவைகள் நிரம்பிய
நகரத்தின் நடுவே
குருதிப்புள்ளடியிடப்பட்ட
உடைகளை வாங்கி
திரும்பினர் சனங்கள்
அடிவாங்கிப் போகிற
சனங்களின் முதுகில்
கிடக்கின்றன பலகாரங்கள்.

வளைந்த சனங்களின்
முதுகில் பீரங்கியை
பூட்டி விடுகிறான் படையினன்
இந்த அடிமைகள்
குனிந்தபடி
தீபாவளி கொண்டாட
அனுமதிக்கப்பட்டனர்.
`````````````````````````````````````````````````````````

சனி, 24 மே, 2008

இரவு மரம்

எழுதியவர்___________________________
--------------------------தீபச்செல்வன்

````````````````````````````````````````````````````````

இரவு முழுவதும் நிலவு
புதைந்து கிடந்தது
நெடுஞ்சாலையின் அருகிலிருக்கும்
எங்கள் கிராமமே
மண்ணுக்குள்
பதுங்கிக் கிடந்தது
வானம்
எல்லோரும் வெளியேறிய
வீட்டின்
சுவரில் ஒட்டியிருந்தது.

நேற்று இறந்தவர்களின்
குருதியில்
விழுந்து வெடித்தன
குண்டுகள்
நாயும் நடுங்கியபடி
பதுங்குகுழியின்
இரண்டாவது படியிலிருக்கிறது.

ஒவ்வொரு குண்டுகளும்
விழும் பொழுதும்
நாங்கள் சிதறிப்போயிருந்தோம்
தொங்கு விளக்குகளை
எங்கும்
எறிந்து எரியவிட்டு
விமானங்கள்
குண்டுகளை கொட்டின.

எங்கள் விளக்குகள்
பதுங்குகுழியில்
அணைந்து போனது
இரவு துண்டுதுண்டாய் கிடந்தது
பதுங்குகுழியும் சிதறிப்போகிறது
எங்கள் சின்ன நகரமும்
சூழ இருந்த கிராமங்களும்
தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தன.

மெதுவாய் வெளியில்
அழுதபடி வந்த
நிலவை
கொடூரப்பறவை
வேகமாய் விழுங்கியது.

இரவு முழுக்க விமானம்
நிறைந்து கிடந்தது
அகோர ஒலியை எங்கும்
நிரப்பிவிட
காற்று அறைந்துவிடுகிறது.

தாக்குதலை முடித்த
விமானங்கள்
தளத்திற்கு திரும்புகின்றன
இரவும் தீப்பிடித்து
எரிந்துகொண்டிருந்தது
மரங்களும் எரிந்து கொண்டிருந்தன
சிதறிய பதுங்குகுழியின்
ஒரு துண்டு
இருளை பருகியபடி
எனது தீபமாய் எரிந்து
மரமாய் வளருகிறது.
```````````````````````````````````````````````
30.06.2007 நாட்களில் தீபம் http://deebam.blogspot.com/ என்ற எனது வலைப்பதிவு பதுங்குகுழிச்சூழலிலிருந்து தொடங்கப்பட்டது.
```````````````````````````````````````````````````

திங்கள், 12 மே, 2008

துப்பாக்கிகள் விழுங்கிய இரவின் மறுநாள்.

எழுதியவர்___________________________
--------------------------தீபச்செல்வன்

-------------------------------------------------------------
எனது அறையை சூழ்ந்து வந்தன
பல மிருகங்கள்
இரவை கடித்து குதறிய
மிருகங்களின் வாயில் கிடந்து
இரவு சீரழிந்தது
நிறுத்தப்பட்ட துப்பாக்கிகளின்
முன்பாக
எனது இரவின் பாடல்
விழுந்து சிதறிக் கிடந்தது
இன்னும் எனது காதலி
அறைபோய்ச் சேரவில்லை.

மிருகங்கள் பாதையையும்
அறுத்து தின்றன
பேரூந்தை விட்டிறங்கி அவள்
வயல்களுக்கால்
நடந்து போகிறாள்
இருவரும் அறைபோய்ச் சேர்வதற்கு
இடையில்
ஆயிரம் மிருகங்கள் வழிமறித்தன.

பறித்து வீசப்பட்ட
எனது சைக்கிளில் ஆயிரம் குண்டுகள்
பொருத்தப்பட்டிருந்தது
கால்களிற்குள் மாட்டி
அறுந்து போன ஒரு செருப்பை
காவிச் சென்று ட்ரக்கில் போடுகிறது
மோப்ப நாய்.

அறை முழுக்க
அறைகளை முழுக்க
மோப்பமிடுகிறது அந்த நாய்
புத்தகங்களையும்
பேனாக்களையும்
ட்ரக்கில் நிரப்பிவிடுகிறது.

அந்த மிருகங்கள்
என்னை நெருங்கி அறைந்து விடுகின்றன
கைகள் கழன்றுவிட
நான் முண்டமாகிக்கிடந்தேன்
தணிக்கை செய்யப்பட்ட
செய்தியை
வானொலி வாசிக்கிறது.

சொற்கள் கொலை செய்யப்பட்டு
புதைக்கப்பட்ட
துப்பாக்கிகள் விழுங்கிய இரவின்
மறுநாள்
குருதி வடியும் புத்தகங்களை
சுமந்து
நானும் அவளும் வகுப்பறைக்கு போனோம்.
-----------------------------------------------------------------------------
07.05.2008 அன்றைய இரவையும் மறுநாள் காலையையும் இணைத்து
---------------------------------------------------

புதன், 30 ஏப்ரல், 2008

ஒரு கமரா ஒளித்துக்கொண்டிருக்கிறது.

எழுதியவர்_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------


குழந்தைகள் பூக்களை நிரப்பி
உன்னை வணங்கிச் செல்கிறார்கள்
தெயவம் என்ற பக்தியோடு
உன்மீது
சனங்கள் பாடி ஏற்றுகிறார்கள்
குருதி பிறண்ட
கமராவோடு இருக்கிறது உனது அறை.


சனங்கள் சனங்கள் பாடிய
எனது அன்புத்தோழனே
ஒரு நாள் நான் வருவேன்
சனங்களின்
கனவு நிரம்பிய நீயான கல்லறைக்கு.

சனங்களின் ஏக்கங்களை
அள்ளி நிரப்பி வரும்
உனது கமரா
களத்தில் தோளிலிருந்து
உதிர்ந்து விழுந்ததை
நான் நம்பாமலிருக்கிறேன்.

சனங்கள் துரத்தப்பட்ட கிராமத்தில்
ஒரு துப்பாக்கியோடும்
உனதான கமராவோடும்
நீ சமராடிய நிமிடங்களை
நான் நினைத்துப் பார்க்கிறேன்.

நஞ்சு நிரப்பிய
உனது சயனைட் குப்பியில்
பதுங்குகுழிச்சனங்களின்
கண்ணீரையும் கோபத்தையும்கூட
நிரப்பிவைத்திருந்தாய்
அது உனது கழுத்தில் தொங்கியபடியிருந்தது.

உனது ஒரு சூரியனின் முகத்தையும்
குழந்தையாய்
நெருங்கி வருகிற முகத்தையும்
உனது அறையில் நிரம்பியிருந்த
நமது வார்த்தைகளையும்
நான் எந்த களமுனையில் தேடுவேன்.

சீருடைகயையும்
துப்பாக்கியையும்
கமராவையும் இவைகளுடனான
உனது கடமையையும்
உனது அறையில் நான் தேடித்திரிகிறேன்
நாம் பருகிய தேனீர்க்கோப்பைகள்
அழுது கிடக்கிறது.

நீ களப்பலியானாய்
என்ற செய்தியை சொல்லிவிட்டு
ஒரு பறவை துடிக்கிறது
கனவில் நிரம்பிவிட்ட
கல்லறைகளில்
நான் உன்னை தேடியலைகிறேன்.

உனது கமராவிற்குள்
இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
பதுங்குகுழிச்சனங்களின் அழுகை.

--------------------------------------------------------

மன்னார் களமுனையில் கார்த்திகை14 2007 இலங்கை இராணுவத்தினருடனான சமரில் எனது அன்புத்தோழன் கமராப் போராளி மேஜர் அன்பழகன் களப்பலியாகினான்.
-------------------------------------------------------------------

செவ்வாய், 22 ஏப்ரல், 2008

திருப்பலி:கருணாரட்ணம் அடிகளார்

எழுதியவர்_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------
இன்னும் பலிபீடங்களுக்காய்
நமது ஆடுகள்
அழைத்துச்செல்லப்படுகின்றன
அவர்களின்
அதிகாரம் நிரம்பிய
சிலுவைகளின் முன்னால்
சனங்கள் ஜெபித்தனர்.

போர் நடக்கும் தேசத்தில்
சிலுவைகளை
சுமந்து திரியும் சனங்களோடு
அடிகளார் போனார்
யேசுவோடு பல ஆயிரம்
சனங்கள்
இங்கு சிலுவையில்
அறையப்பட்டனர்.

சவப்பெட்டிகள் நிரம்பிய
தேவாலயத்தில்
அவரின் ஜெபபிரசங்கம்
அதிகாரத்தின் முகத்தை
குத்தியபடியிருந்தது.

கனிகள் இல்லாத தேசத்தில்
தோட்டம்
கருகிக் கிடந்தது
சருகுகளின் மத்தியில்
அடிகளார் மரக்கன்றுகளுக்காய்
விதைகளை தேடினார்.

குழந்தைகள் வந்தனர்.

யுத்தத்தில் பதுங்கியிருந்த
சனங்களின் மத்தியில்
அடிகளார் உயிர்களை
தேடிப் பொறுக்கினார்
நசிந்து உடைந்து சிதறிய
சிலுவைகளின் கீழாய்
சனங்களின்
அழுகை கிடக்கக்கண்டார்.

அழிந்துபோன தேவாலயத்தில்
தொங்கிய
சிலுவையுடனிருந்தார்
சனங்கள் திருப்பலியாகினர்.

சிலுவை பொறிக்கப்பட்ட
வண்டியில்
நிரம்பியிருந்தது பிரார்த்தனைகள்.

அடிகளாரும் அவரது சிலுவையும்
சனங்களின் தெருவில்
பலியாகி கிடக்கக் கண்டேன்..
20.04.2008
-------------------------------------------------------------------------------
20.04.2008 மல்லாவி வவுனிக்குளத்தில் இலங்கை இராணுவம் ஆழஊடுறுவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் மனித உரிமைப் பணியாளர்( வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலக பணிப்பாளர்) அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் பலிகொள்ளப்பட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------

திங்கள், 21 ஏப்ரல், 2008

கிணத்தினுள் இறங்கிய கிராமம்


கவிதை_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------
எனது கிராமம் இப்பொழுது
கிணத்தினுள்
இறங்கியிருக்கிறது.

தவளைகள் தரித்திருக்கும்
பொந்துகளினுள்
ஒளிந்திருக்கும் அம்மாவே
உன்னைப் போன்ற
நமது கனவுகள் நிரம்பிய
பைகள்
மாமரத்தில் தொங்கியபடியிருக்கிறது.

நீயும் நானும்
நமது சனங்களைப்போலவே
இன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம்.

காட்டில் பதுங்கியிருக்கும்
சூரியன்
பாலைமரங்களையும்
வீர மரங்களையும் விலத்தியபடி
புழுதி உதிர
நமது கிராமம் திரும்பிவிடும்.

சூரியனை காணாத
இரவோடிக்கிறது நமது நாடு.

கிணத்தினுள் நிரம்பிய
உனது வியர்வை வெளியில் வழிகிறது.

*பள்ளிப் பேருந்துமீது
ஒரு கிளைமோர் வெடிக்கிறது
பிணங்களாய் பள்ளி மாணவர்கள்
அடுக்கப்பட்டிருந்தார்கள்
புத்தக மேசைகளில்.

குழந்தை யேசுவை தூக்கி வைத்திருக்கும்
மாதாவின்
மடு தேவாலயத்தின்மீது
விமானங்கள் பறந்தடிக்கிறது.

**எனக்கு இளநீர் பருகத்தந்த
தோழன் ஒருவனின்
தலையை
விமானம் கடித்தெறிந்தது
அவனது தலை
இரத்தினபுரத்தில் கிடந்தெடுக்கப்பட்டது..


***கிராஞ்சியில் குழந்தைகளின்
கைகள் பிடுங்கி எறியப்பட்டன
கையில் கட்டியிருந்த
பாசி மணிமாலைகளும்
கிழிந்த பாய்களும் வலைகளும்
தென்னை மரங்களும்
மணல் தரையில் குருதியாய் கிடந்நது.
ரஷ்யா இன்னும் வேகமான
விமானங்களை
இந்த தலைகளின் மேலால் பறக்கவிடுகிறது.

கிணத்தினுள் தண்ணீர் ஊறுகிறது.

கருணாநிதியின்
கவிதைகளை கேட்க முடியாமலும்
ஜெயலலிதாவின் கூச்சல்களை
கேட்க முடியாமலும்
தவளைகள் கத்துகின்றன.

****கடைசியாய் இருந்த
முறிகண்டியின்
கச்சான்கடைகளாலான
வழி இறங்கு இடமும்
தகர்ந்து கிடக்கிறது
அம்மா உனது நேத்திகளும்
உடைந்த தேங்காய்களும்
தும்பிக்கை உடைந்த
பிள்ளையாரோடு.

கிராமம் கிணத்துக்குள் இறங்கிவிட
இராணுவத்தின்
கவசவாகனங்களும் ராங்கிகளும்
சேற்று நிலத்தில் புதைகின்றன
வீடு கடலில் இறங்கித் திரிகிறது.

தங்கச்சி கனவுகண்டு துடித்தெழும்பி அழுகிறாள்.

எனினும் நீயும் நானும்
நமது சனங்களைப்போலவே
இன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம்.
-----------------------------------------------------------------------------

*29.01.2008 செவ்வாய்க்கிழமை
மன்னார் மடுவில் இலங்கை இராணுவம் பள்ளிப் பேரூந்துமீது ஆழஊடுறுவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் 11 பள்ளி மாணவர்கள் உட்பட 20பேர் பலியாகியுள்ளனர்.

**02.11.2007 அன்று நடைபெற்ற விமானத்தாக்குதலில் எனது தோழன் நிர்மலசிங்கன் பலியாகினான்.

***பெப்ருவரி 22 பூநகரி கிராஞ்சியில் நடத்தப்பட் விமானத்தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 8 பொதுமக்கள் பலியாகியிருந்தனர்.

****16.11.2007 நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் முறிகண்டியில் உள்ள மீன்பிடி படகு உற்பத்தி நிறுவனம் அழிந்தது. இது ஏ-9 வீதியில் பேருந்து தரித்து நிற்கும் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலிருக்கிறது.
--------------------------------------------------------------------

சனி, 5 ஏப்ரல், 2008

மாதா வெளியேற மறுத்தாள்






எழுதியவர்_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------

சனங்கள் மாதாவையும்
குழந்தை யேசுவையும்
கூட்டிச் சென்றிருக்கலாம்.

யேசுவின் குருதியால்
எழுதப்பட்ட பைபிள்களை
கிளைமோரில் சிதறிய
மாணவர்களின்
குருதி பிறண்ட
வெள்ளைச் சீருடைகளில்
ஆயர்கள்
கட்டி எடுத்துப்போனார்கள்.

வத்திக்கான் எங்கேயிருக்கிறது.

பதுங்குகுழியில் மாதா ஒளிந்திருந்தாள்
வெளியில் போன அருட்சகோதரிகள்
குருதி பிறண்ட
திரு ஆடைகளோடு விழுந்தனர் பதுங்குகுழிக்குள்.

மடு மாதாவின் தேவாலயம்மீது
எண்ணிக்கையற்ற
எறிகனைகள் நுழைந்தன
குழந்தை யேசுவின் அழுகை
வீறிட்டு கேட்க
ஆயர்கள் வளாகத்தை எட்டிப்பார்த்தனர்.

சிலுவை பொறிக்கப்பட்ட
எறிகனைகளும்
பிறை பொறிக்கப்பட்ட்
எறிகனைகளும்
சூலம் பொறிக்பப்பட்ட
எறிகனைகளும்
புத்தரின் மூடிய கண்களில்
சுழறும் தர்மச்சக்கரத்திலிருக்கும்
படையினரிடமிருந்து
வந்து விழுந்து கொண்டிருந்தன.

வளாகத்தை விட்டு
வெளியை விமானம் உழுதடித்தபோது
சனங்கள் மாதாவை குழந்தையோடு
தனியே விட்டுச் சென்றனர்.

பாப்பரசர் வத்திக்கானில்
பைபிளை திறந்தபோது
குருதி ஒழுகியது
அமெரிக்காவின் முன்னால்
குருதி காயாத
சிலுவையோடு நின்றார் யேசு.

மிஷன் பாடசாலைகளுக்கு சென்ற
பிள்ளைகளையும்
சவப்பெட்டியில் கண்டோம்
வண்ணத்துப்பூச்சி திரிகிற
பற்றைகளில்
பதுங்கியிருந்தன கிளைமோர்கள்
வருகிற பிள்ளைகளை பார்த்தபடி
யேசுவை தூக்கிச் செல்ல மாதா அஞ்சினாள்.

பாப்பரசர் மன்றாடவில்லை
ஆயர்களும் அருட்சகோதரிகளும்
ஜெபத்தில் திடுக்கிட்டனர்.

சனங்களோடிருந்த மாதாவுக்கும்
குழந்தைக்கும் எதிராக
அரசுகள் யுத்தத்தை புரிந்தன
பைபிள்களாலும் ஜெபமாலைகளாலும்
பதுங்குகுழி நிரம்பியிருந்தது.

இனி இங்கிருக்கமுடியாது
என்று
ஆயர்களும் அருட்சகோதரிகளும்
மாதாவுக்கு எடுத்துக்கூறினர்
மாதா மறுத்தாள்
குழந்தை யேசுவின் அழுகையை துடைத்தபடி.

சனங்கள் விட்டுப்போன
மாதாவையும் குழந்தையையும்
ஆயர்களும் அருட்சகோதரிகளும்
கட்டாயப்படுத்தி
நேற்றோடு கூட்டிச்சென்றனர்
மடு தேவாலய வளாகத்தை விட்டு..

--------------------------------------------

03.04.2008 இரவு 9.30
---------------------------------------------------------------------------------
03.04.2008 6.30 மணிக்கு அன்று மடு மாதா தேவாலய திருச்சொரூபம் ஆயர்களால் வளாகத்தை விட்டு தூக்கிச்செல்லப்பட்டது என்று ஆயர்கள் பி.பி.சிக்கு தெரிவித்தனர்.மடு மாதா தேவாலயப் பகுதியை கைப்பற்றுவதற்காக கடந்த ஒரு வருடமாக இலங்கை அரசாங்கத்தின் படைகள் கடும் போர் புரிந்து வருகின்றார்கள்.சகல இன மக்களும் வணங்கும் மடு திருத்தல பகுதி பெரும் போர் பூமியாக காணப்படுகிறது. அப்பகுதி மீதான கடும் தாக்குதல்களால் ஏற்கனவே மக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் நேற்று மடுமாதாவின் திருச்சொரூபமும் அங்கிருந்து வெளியெறியது.
------------------------------------------------------------------------------------

திங்கள், 24 மார்ச், 2008

நொருங்கிக் கிடக்கும் கடதாசிச் சைக்கிள்கள்

கவிதை_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------
மரங்கள் பிடுங்கி
எரிக்கப்பட்டிருக்கும்
சாம்பல்மேட்டில்
நான் குந்தியிருக்கிறேன்.

வாயில் சிகரட்
ஓரு பாம்பாய் வழிகிறது
அதன் சாம்பலில்
கால்கள் புதைகின்றன.

சாலையில் நொருங்கிக் கிடக்கும்
கடதாசிச் சைக்கிள்களுக்கிடையில்
காணாமல் போன
காதலியை தேடி
துருப்பிடித்த
எனது சைக்கிள் அலைகிறது.

நொருங்கிய தேனீர்சாலையின்மீது
வழியும்
வெறுமைக்கோப்பை துண்டுகளை
நக்கிய நமது பூனைக்குட்டி
கால்களுக்கிடையில்
சோர்ந்து படுத்திருக்கிறது.

இப்பொழுது பியர்போத்தலினுள்
பாம்பு அடைக்கப்பட்டிருக்கிறது
கோப்பையில்
கரித்துண்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது.

கோழி சாப்பலை சாப்பிடுகிறது.

இலைகள் வாடிக்கொட்டின
கிளைகள் வெட்டி
மொட்டையடிக்கப்பட்ட
மெலிந்த தடிகளாய்
நிற்கும் மரங்களாலான
வேலியின் கீழ்
படுத்திருக்கும் ஆடு
பற்களை அசை போடுகிறது.

துருப்பிடித்து உக்கிய
சைக்கிள்கள்
பொது மண்டபத்தில் அடுக்கப்பட்டிருந்தன.

கரும்பேன்கள்
ஆடைகளை தின்றன
உக்கிய புத்தகங்களும்
ஆடைகளும்
தெருவின் குப்பைத் தொட்டியில் போடப்பட்டிருக்கிறது.

அவள் கருகிய பூவையே
சூடியிருந்தாள்
அவள் ஓட்டிச்சென்ற
சைக்கிள் நொருங்கிக்கிடந்தது
நாம் அமர்ந்து பேசிய
புல் வெளிமீதில்
சூரியன் உருண்டு துடிக்கிறது.

தடிகாளாய்ப் போன
மரங்களுக்கிடையில்
நிழல் தவித்துத் திரிகிறது.

பேரூந்தின் ரயரும் ரீப்பும்
மடிந்து பிய்ந்து கிடந்தது
காற்று வெளியேறியிருந்தது
கண்ணாடிகள் உடைய
துருப்பிடித்து கொட்டியது
உருக்குலைந்த
ஜன்னலின் ஊடாய்
நகரம் உள்நுழைந்து
ஒளித்திருக்கிறது.

ஒரு தாய் அதில் பயணம்போக
ஏறியிருக்கிறாள்
வீதி அறுந்து கிடக்கிறது.

காணாமல் போன இளைஞர்களின்
செருப்புகளும் குடைகளும்
கெல்மட்டுக்களும்
தாய்மார்களிடம் வழங்கப்பட்டன.

துடித்தபடி நானும் அவளும்
ஒருவரை ஒருவர் அணைத்தோம்
சாம்பலாய் உதிர்கிறது.
--------------------------------------------
அர்ஜென்றீனாவில் காணாமல் போன இளைஞர்களின் அன்னையர்கள் சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகளை மீட்க கடதாசிச் சைக்கிள்களை செய்து காட்சிக்கு வைத்தபடி போராடினார்கள். பின்னர் அந்த அன்னையர்களில் பலரும் காணாமல் போயிருந்தார்கள்

புதன், 16 ஜனவரி, 2008

யுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்


தூங்க மறுக்கும் குழந்தைமீது
தாயின் பாடல்
மிக மெல்லியதாக படர்கிறது.

நள்ளிரவு அதிரக் கூவுகிற
வெளுறிய கொண்டையுடைய சேவலின்
தொண்டைக்குழியில்
எறிகனைபோய்
சிக்கிக்கொள்கிறது.

தறிக்கப்பட்ட
பனைமரங்களில் வழியும் சொற்களை
சூன்யப்பிரதேசத்தில் திரியும்
குட்டையடைந்த நாய்
முகர்ந்து பார்க்கிறது.

குழந்தைகள்
தூக்கி எறியப்பட்ட நாட்டிலிருந்து
சூரியன் விலகுகிறது.

திசைகளை விழுங்கும் இராணுவ
தொலைத்தொடர்பு கோபுரத்தில்
திடுக்கிட்டு எழும்பும்  குழந்தையின்
அதிர்வு நிரம்பிய பாடல்
பதிவாகிக்கொண்டிருந்தது.

அதில்
குரல் பிடுங்கி எறியப்பட
பேசும் பறவையின்
வேகமும் சிறகுகளும்
காயப்பட வீழ்கிறது.

இடைவெளிகளில் மிதக்கும்
நாற்காலிகளில்
இருள் வந்து குந்தியிருக்கிறது.

கருவாடுகளை குத்தி குருதி
உறிஞ்ச முனையும் நுளம்புகளை
பூனைகள் பிடித்துச் சாப்பிடுகின்றன.

தலைகளை பிடுங்கி எறிகிற
அதிவேகத்தோடு
மக்களின் குடிமனைகளிற்குளிருந்து
எறிகனைகள் எழும்பி பறக்கின்றன.

முழு யுத்தத்திற்கான பிரகடனமாக
குட்டையடைந்த நாய்
பெரியதாய் ஊழையிடுகிறது.

வீட்டு வாசலில்
வந்து நின்ற போர்
கதவை சத்தமாக தட்டுகிறது.

குழந்தை ஒலி அடங்கி அழுகிறது.
0

16.01.2008

இன்று இரவு ஏழு மணியுடன், இலங்கை அரசாங்கம்  தமிழீழ விடுதலைப்புலிகளுடன், 2002இல் செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்டசமாக விலகிக்கொள்வதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. தமிழ்மக்கள்மீதான பாரிய இன அழிப்புப் போர் ஒன்றையே இலங்கை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் இவ் இன அழிப்புப் போரை மேற்குலகம் மௌனத்தால் ஆதரிக்கிறது.

வியாழன், 3 ஜனவரி, 2008

பதுங்குகுழிகளும் பயங்கரவாதிகளும்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

````````````````````````````````````````````````````````

01
காலாவதியான ஒரு
கொக்கக்கோலாவை சுற்றி
எறும்புகள் சூழ்ந்திருந்தன.

எனது வஸ்திரங்கள் கரைய
அதிகாரத்தின் முன்
நிருவாணமாய் நின்றிருந்தேன்
அது என்னை அடிமையாக்கி
பயங்கரவாதி என அழைத்தது.

புரட்சி ஒன்றின் விளிம்பில்
அடிமை பீடிக்கிறதை
நான் உணர்ந்தேன்
கூச்சலிட்டு சொல்லி உதருகிறேன்.

சனங்கள் நிறைந்த
எனது கிராமத்தின் மேலாக
வேக விமானம் ஒன்றை
உக்கிரேன் விமானி ஓட்டுகிறாள்.

பயங்கரவாதிகளுக்குள்
பதுங்குகுழிகள் பதுங்குகின்றன.

குழந்தைகள்
தாய்மார்கள்
முதியவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள்
என ஜநா அறிவித்தது.

நான் பயங்கரவாதி என்பதை
உரத்து சொல்கிறேன்.

என்னை அமெரிக்காவின் நேர்மை
தேடிவருகிறது
ஜநா படைகளும்
அமெரிக்காப் படைகளும்
இந்தியப் படைகளும்
இலங்கைப்படைகளைப்போல
எனது தெருவுக்கு வர
ஆசைப்படுகிறார்கள்.

நான் அப்பிள் பழங்களை
புசிப்பதற்கு ஆசைப்பட்டிருக்கிறேன்.
கிரேப்ஸ் பழங்களை
உற்பத்தி செய்யத்தொடகினேன்.

நான் ஒலிவம் இலைகளை
மறந்திருந்தேன்
பேரீட்சை பழங்களை
உண்ணாதிருந்தேன்
எனது பனம்பழங்களை
இழக்க நேர்ந்தது.

ஒட்டகங்களின் முதுகில்
குவிந்திருந்த பொதிகள்
சிதைந்ததை நான் மறந்தேன்
எனது மாட்டு வண்டிகள்
உடைந்து போயின.

தலைவர்களின் இடைகளில்
எண்ணைக்குடங்கள் நிரம்பியிருந்தன
அவர்களின் கூடைகளில்
எனது பனம்பழங்கள்
நிறைக்கப்பட்டிருந்தன.

கனியின் விதை கரைய
என்மீது கம்பிகள் படர்ந்தன.

02
திருவையாற்றில் குருதி
பெருக்கெடுத்து ஓடுகிறது
பிணங்களை அள்ளிச் செல்கிறது
வெங்காயத்தின் குடில்கள்
கருகிக்கிடந்தன
தோட்டம் சிதறடிக்கப்பட்ட
செய்தியை அமெரிக்கா வாசிக்கிறது.

இரணைமடுவில் பறவைகளின்
குளிர்ந்த சிறகுகள் உதிர்ந்தன
தும்பிகளும் நுளம்புகளும்
எழும்ப அஞ்சின
இரணைமடுக்குளத்தில்
குருதி நிரம்ப பிணங்கள் சேர்ந்தன
நோர்வேயின் படகு மிதக்கிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும்
ஆயுதங்கள் பெருக
எனது ஊரின் நடுவில்
போரிட்டுக்கொண்டிருக்கிறது.

உலைப்பானைகளும்
அடுப்புகளும் சிதைய
எனது மனைவி நசிந்து கிடந்தாள்.

எனது வீதியை ஜப்பான்
சுருட்டி எடுத்தது
அமெரிக்காவும் ஜநாவும்
எனது குழந்தையை
பள்ளியோடு கொன்று விட்டது
பிரித்தானியாவின்
சிறையில் நானிருந்தேன்.

ஒரு மாம்பழத்தை தின்பதற்கு
எல்லோரும் அடிபட்டு
எனது காணியை சிதைத்தார்கள்
கத்திகளை இன்னும்
கூர்மையாக்கி வருகிறார்கள்.

இந்தியாவும் அமெரிக்காவும்
எனது தலையில்
காலுன்ற அடிபடுகிறது
சீனாவும் ரசியாவும்
எனதூர் ஆலயத்தின்
கூரைகளை பிரித்துப்போட்டது.

நான் முதலில் அமெரிக்காவிற்கு
பதில் சொல்ல வேண்டும்

கோதுமைகளுடன்
அமெரிக்காவின் கப்பல்
திருமலைக்கு வருகிறது
அமெரிக்கா எனது படத்தை
குறித்திருந்தது
ஜநா எனது குழந்தையின் படத்தை
குறித்திருந்தது.

எல்லாவற்றக்காகவும்
வலிந்து விழுங்கிய
அதிகாரங்களால்
நான் பயங்கரவாதி எனப்பட்டேன்
ஒடுக்கப்பட்டவர்களின் கூட்டத்தில்
நான் தூக்கி எறியப்பட்டேன்.

நமது ஓலங்களிற்குள்
பெருகும் குருதி ஆறுகளிற்குள்
சந்தைகள் பரவி நிகழ்ந்ததன.

அமெரிக்கா இரணைமடுவுக்கு
ஆசைப்படுகிறது.
````````````````````````````````````````````````````````
'இரணைமடு' ஈழப்போராளிகளான விடுதலைப் புலிகளின் விமானதளம் இருப்பதாக கூறப்படுகிற வடக்கின் முக்கிய தளமாகும். இப்பகுதி மீதும் இதனை அண்டியிருக்கும் பகுதிகள் மீதும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து விமானத்தாக்குதல் நடத்தி வருகிறது.
````````````````````````````````````````````````````````

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...