01
குடா நிலத்தின் யாழேசை காயமுற்றொலிக்கிறதுநிலம் அள்ள வரும் கைகள்
யாழை இழுத்து பிய்த்துடைக்கின்றன
இந்த யாழ் உடைந்து போகட்டும்!
அல்லது எரிந்து சாம்பலாகட்டும்!!
என்று அறிவிக்கப்படாத பிரகடனங்களுடன்
யார் யாரோ வந்திறங்கி
யாழெடுத்து எறிகிறார்கள்
வானத்தை பிளந்து எட்டி முகங்களை மறைக்கும்
விளம்பரப்பலகைகளின் நிழலில்
அடுக்கிவிடப்படட குளிரூட்டும் இருக்கைகளில்
அமர்ந்திருப்பவர்களின் கைகளிலுள்ள
கிண்ணங்களில் யாழின் சாம்பலிருக்கின்றன
யாழ் நகரில் வேறொரு பாடலை யாரோ ஏற்றிவிட்டு
யாழோடு நிலத்தை
யாரோ சாம்பலோடு கிண்ணகளில் போட்டுத்
தின்று கொண்டிருக்கின்றனர்
நகரெங்கும் நிலமெங்கும்
உடைந்த யாழ்கள் கால்களுக்குள் மிதிபட
யாழ்நிலத்தில்
நரம்புகள் அறுந்தெழும் துடிப்போசையை
அன்றைய மாலைநேரம் அவர்கள் தின்றாடினர்
02
தங்கள் பூர்வீக நிலங்களை அறிந்திராதஅகதிகளின் குழந்தைகள்
யாழறியாது புகையிரத வழியில் உறங்க
உச்ச பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்
வீடுகளற்று தெருக்கரையில்
தெருக் குழந்தைகளாய் காட்சியாயிருக்கிறார்கள்.
புகையிர வண்டிகள் மீண்டும் வரப்போகின்றனவா?
நுழைய அனுமதிக்கப்படாத
வலயத்திற்குள் குருதிச்சதை படிந்த சக்கரங்களுடன்
செல்லப் போகின்றனவா?
நிலத்திற்காய் அலைபவர்களை
தங்கள் வழிகளுக்காக பலியெடுக்கப் போகின்றனவா?
புகையிரத வழியிலே பிறந்த
இந்தக் குழந்தைகள் புகையிரதங்களையும் பார்த்ததில்லை
வீடுகளை அறிந்திராத
இந்தக் குழந்தைகள் ஒரு நாளும் புன்னகைத்ததில்லை
தினசரி தங்கள் பாதங்களால்
புகையிரத வழியின் பெருங்கற்களை நொருக்குகின்றனர்
03
நமது குழந்தைகளின் கைகளில் பொம்மைகள் இல்லைபொம்மை வெளியாகிப்போன
வாழ்வில் பிறக்கும் இந்தக் குழந்தைகள்
பொம்மைகளுக்குப் பதிலாக
குப்பைபகளை அணைத்தபடி
யாழுக்குப் பதிலாக
கழிவுத் தகரங்களை வாசிக்கின்றனர்
யாரும் எழுந்திரா காலையில் குப்பைப் பைகளுடன்
கூடாரங்களுக்கு வருகின்றனர்
எல்லாத் திசைகளிலிருந்தும் வரும்
குப்பைகள் பெருகும் நகரின் ஓதுக்குப்புறங்களில்
இலையான்களுடன் பழகி
குப்பைகளை நம்பி பிறந்து
குப்பைகளுடன் வளர்கின்றனர்.
குப்பைகளில் பொறுக்கி வந்த
புத்தகப் பைகளை மைதீர்ந்த பேனாக்களை
பொம்மைகளின் தலைகளை
என்னவென்று இவர்கள் கேட்கின்றனர்?
குப்பை வாசனையடிக்கிற இந்தக் குழந்தைகள்
முத்தமிடும் பொழுது யாழ்நெஞ்சின் நரம்புகள் வெடிக்கின்றன.
04
சாம்பலை மூடிய சுவர்கள் அதிர்வினால் உடைந்து போய் விடுமோ?
மீண்டும் மீண்டும் இந்தப் புத்தகங்கள்மீது
அவர்கள் கற்களோடு தீப்பந்தங்களை எறிய முற்படுகிறார்கள்
ஒட்டி உலர்ந்த சுவர்களில்
படிந்திருக்கிற சாம்பலை கிளற முற்படுகிறார்கள்
நமது நிலத்தைப்போல
எல்லா வகையிலும் காட்சிப் பொருளாக
புரிந்து கொள்ளாமலே இருக்கின்றன நமது புத்தகங்கள்
இந்தப் புத்தகங்களை விரிக்கும் பொழுது
சாம்பல் உதிர்ந்து கொட்டுகிறது
இவர்கள் எங்கள் சாம்பலையும் திருடிச் செல்கிறார்கள்.
தாள்கள் மாற்றப்பட்ட நமது புத்தகங்களில்
புதிய கதைகள் எழுதப்பட்டு சேகரிக்கப்படுகின்றன
இவர்களும் தீ மூட்டிய தடிகளுடன் வந்தார்கள்
சிரில் மாத்தியூவும்
காமினி திஸ்ஸநாயகேவும்
சாம்பல் வழியும் எரிந்த புத்தகங்களை தின்றுழல்வதை பார்த்தனர்
அவர்களில் இன்றைய அரசர்களின் முகங்களை கண்டனர்
வெறிவழியும் நினைவுகளுடன்
புத்தகங்களை தூக்கி எறிந்தனர்
பிள்ளைகளுடன் கொல்லப்பட்ட நூல்களுக்காகவும்
துடிக்கும் தாய்மார்களை
இவர்கள் இன்னும் புரிவதாயில்லை
சத்தமில்லாது காதோரமாய் ஒலிக்கும்
நமது நிலச் சனங்களின் கதைகளை
கிழித்தெறிய கொடுங்கைகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன
யாழ் நகரமெங்கும் அன்றைய மாலை
கிழிந்த எங்கள் புத்தகங்கள் பறந்தலைந்து கடலில் படிந்தன.
புத்தகங்களின் உயிர்கொல்ல
இன்னும் கொடும் தீப்பறவைகள் வட்டமிடுகின்றன
நமது புத்தகங்களுக்கு எதிராகவும்
இவர்கள் எதையும் செய்யத் துணிகிறார்கள்
06
துப்பாக்கிகளாலும் அதிகாரச் சீருடைகளாலும்நாங்கள் துரத்தபப்பட்ட பகுதியில்
யாரோ வந்தமர்கிறார்கள்
எங்களிடம் உள்ள இடர் நிரூபங்கள்
கொடுங் கைகளால் கிழித்தழிந்து போயிருக்கின்றன
கொண்டு வந்திருக்கிற குளிர்ந்த நிரூபங்கள்
இந்த நிலம் உங்களுக்குச் நமக்குச் சொந்தமில்லை என்கிறது.
தங்கள் பெரும் மலைகள் போதாது என்று
எங்கள் நிலத்தில் பங்கு கேட்டு
மண்ணுக்கடியில் இருக்கும் தொன்மைப்பொருட்களில்
புத்தரின் அரசமரக் கதைகள் எழுத முற்படுகின்றனர்.
கண் திறாதக்காது உறங்கும் புத்தரே
எங்கள் நகரமும் நாங்களும் எரியூட்டப்படுகையிலாவது
கண் திறந்திருக்கலாம்
அகலக்கால் வைத்திருக்கிற புத்தர் சிலைகள்
இராணுவ சீருடையணிந்து
கண்களை இறுக மூடியபடி நகர்கின்றன
கண்களற்ற புத்தரே
யாழெடுத்த தெருவில் எல்லாம்
உமது புதல்வர்கள் துவக்கெடுத்திருக்கின்றனர்
வாழ் நிலத்திற்காக அழும்
எங்களின் நிலத்தை துண்டாடிச் செல்லவும்
துகள்களை அள்ளித் தின்னவும்
உமது கொடும் கைகள் நீள்கின்றன
கடலே இங்கு யார் வந்திறங்கினர்?
கடல் நகரச்சனங்களின் இடிந்த வீடுகளில்
யாராலும் படிக்கப்படாத
துயர்க்காலக் கதைகள் படிந்திருக்கின்றன
அந்நிய வேரோடும் மரங்களின் விதைகளை
நமது நிலத்தில் யார் தூவினார்கள்?
நம் கடல் பெருங்காயத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
யாழின் வாய் உடைந்து வார்த்தைகளற்றிருக்கிறது
__________________
2010