மலையும் சரிந்து கிடக்கிறது
நிலமும் சரிந்து கிடக்கிறது
கண் தளைத்த குளத்தில் முகம் கழுவ முடியாது
தாமரைகளில் பேய்கள் கண்மூடியிருக்கின்றன
கண்களற்று அலைந்து பேய்களில் மோதி விழுகிறோம்
கோணமலையில் ஒரு பெரிய பேய் அமர்ந்திருக்கிறது
தலை நிலத்தை நாளும் தின்னும்படி
அரசன் பேய்களுக்கு உத்தரவிட்டிருக்கிறான்
மலைகளை தின்று களிக்கும் பேய்கள்
தலை நகரத்தில் நடனமாடும் காலத்தில்
அகோரம் தாங்க முடியாது வாடுகின்றன முகங்கள்.
முதிய ஊரில் யாருமில்லை
சர்வ அழகான ஊரிலிருந்து துரத்தப்பட்டவர்கள்
அகதி முகாங்களிலிருந்து இன்னும் திரும்பவில்லை
மலைகளின் ஊரில் மலைகளுக்கடியில்
சூழ்ச்சிகளுடன் பேய்கள் உறங்குகின்றன
மலைகளையும் நிலத்தையும்
அரித்து அரசனுக்கு அனுப்புகின்றன.
மலைகளின்மீது கால் வைத்தலையும்
புத்தரின் நிழலில் பௌத்தக் கொடிகள் பறக்கின்றன
சிங்களம் பூசப்படும் தெருக்களில்
ஊர்கள் கொல்லப்பட்டு வேறு ஊர்களாக்கப்படுகின்றன
நமது முகங்கள் கண்களுடன் அழுகிப்போக
கண்தளைத்த குளத்தில் துவக்குகள் நீந்துகின்றன.
பாடற் தலத்தை புத்த சரணங்கள் தின்னத் துடிக்க
துறைமுகத்தில் மலைகளை திருடும் கப்பல்கள்
சுற்றி வளைக்கின்றன
மகாவலி ஆற்றில் பேய்கள் படகுகளில் வந்து குடியேறின
மாவிலாற்றில் எறியப்பட்ட நமதுயிர்கள் கடலினுள் மூழ்கின.
எங்கள் கோட்டையின் கொடியை தின்றுகொண்டிருக்கும்
பேய்களின் கொடி மாநிலத்தோடு தலை நிலத்தையும் மூடியிருக்கிறது
நரகங்களோடு தலைநகரத்தையும் மூடியிருக்கிறது
அடங்காக் கனவு பேய்களின் தீனியாக
ஆதி நிலத்து சனங்களுடன்
கொடியசைந்த மலைகளும் சரிந்தன
மாநிலமும் சரிந்தது.
27.02.2011
தீபச்செல்வன்
அம்ருதா செப்டம்பர் 2011