01
கால்கள் எதுவுமற்ற என் மகள்
தன் கால்களைக் குறித்து
ஒருநாள் கேட்கையில்
நான் என்ன சொல்வேன்?
அவர்கள் கூறினர்
யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென
ஒருவரும் கொல்லப்படவில்லையென
யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென
அவர்கள் கூறினர்
ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென
யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென
பின்னர் கூறினர்
போராளிகளே மக்களைக் கொன்றனரென
பின்னர் கூறினர்
படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென
இறுதியில் சொல்லினர்
யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென
எமை மீட்கும் யுத்தமென்றனர்
மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா?
மனிதாபிமான யுத்தமென்றனர்
பீரங்கியின் சுடுகுழலில் மனிதாபிமானமுண்டா?
நிகழ்த்திய எல்லாவற்றையும் மறுத்து
மேலும் அதை தொடர்ந்து
எல்லாவற்றையும் மறப்போமென்றனர்
எதையும் பகிராமல்
ஒருதாய் பிள்ளையென்றனர்
தாயற்ற என் மகளுக்கு
இதையெல்லாம் எப்படி விளக்குவேன்?
பழி வாங்கும் ஜனங்களென்றனர் ஒருபோது
மன்னிக்கத் தெரியாத ஜனங்களென்றனர் இன்னொருபோது
திரும்பாத இழப்பை
வெற்றி என்போரே!
என் மகளைக் குறித்து
நான் கண்ணீர் மல்குதல்தான்
பழிவாங்குதலா?
02
எனதாசை மகளே!
இம்மாபெரும் காயத்தை எப்படி ஆற்றுவோம்?
இம் மாபெரும் இழப்பை எப்படி நிரப்புவோம்?
காயங்களை மூடும்
இழப்புக்களை மறைக்கும்
தந்திரம் மிக்க வார்த்தை
என்னிடமில்லை
மீளப் பெறமுடியாத கால்களை மறந்து
கால்களை பறித்த வெற்றியை
கொண்டாடச் சொல்லினர்
அவர்களோ போருக்கு காரணம் சொல்லினர்
நாமோ அழிக்கப்பட்டதின் நியாயத்தை வேண்டினோம்
மகளே! போரிடம் என்ன நியாயம் இருக்கும்?
அது நம் குழந்தைகளை கருவிலே நசித்தது
அப்பாவிகளின்மீது குண்டுகளைப் பொழிந்தது
நிலத்துடன் லட்சம் மனிதர்களை
தின்று செரித்தது
எலும்புக்கூடுகளினிடையே
நிணங்களினிடையே
குருதியினிடையே
கொடி உலுப்பி மகிழ்ந்தது
அவர்கள் சொல்லுவதைப் போல
அந்தக் கணங்களை மறந்துவிட முடியுமோ?
அவர்கள் சொல்வதைப்போல
அந்தக் கணங்களை மன்னிக்க முடியுமோ?
திட்டமிட்டு செய்யப்பட்டவைகள்
மறக்கக்கூடியவை அல்லவே
வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டவைகள்
மனிக்கக்கூடியவை அல்லவே
03
ஆட்களற்ற வீடுகளைக் குறித்தும்
வீடுகளற்ற நிலங்களைக் குறித்தும்
புகைப்படங்களில் இருக்கும்
இல்லாதவர்களைக் குறித்தும்
பெயர் பட்டியல்களில் மாத்திரம் இருப்பவர்களைக் குறித்தும்
என் அன்பு மகளே என்னிடம் கேட்காதே?
இரத்தமும் சதைகளும் படிந்த
பழைய பத்திரிகைகளை
நீ விரித்துப் பார்க்காதபடி
மறைவாகவே வைத்துள்ளேன்
04
யுத்த வெற்றியின் பாடலில் மயங்கியபடி
எல்லாவற்றையுமே மறக்கும்படி சொல்லினர்
என் பிஞ்சுக் குழந்தை கால்களற்று நிற்கிறாள்
என் கால்களுக்கு என்ன ஆனது?
ஏன் என் கால்களை எறிகணைகள் தின்றனவென
அவள் கேட்கையில் நான் எதைச் சொல்வேன்?
என் தாயிற்கும்
என் ஐந்து சகோதரர்களுக்கும் என்ன ஆகிற்று?
நம் பதுங்கு குழியில் யார் குண்டு வீசினரென
அவள் கேட்கையில் நான் எதைச் சொல்வேன்?
மாபெரும் இனக்கொலையை ருசிக்கும்
பற்கள் நிரம்பிய கொடியை
என் மகளுக்கு பரிசளிக்கும்
இந்த நாட்களில் தொடங்குமொரு காலம்
எப்படியானதாய் இருக்கும்?
மேலுமொரு காயம் வேண்டாம் மகளே
மேலும் பலர் இல்லாதுபோக வேண்டாம் மகளே
05
நாம் கேட்பதெல்லாம்
உயிருக்கு உயிரல்ல
கொல்லப்பட்டவர்களை
நினைவுகூரும் உரிமையை
மாண்டுபோனவர்களின் கல்லறைகளை
அழுது கண்ணீர் விடும் விடுதலையை
நாம் கேட்பதெல்லாம்
குருதிக்குக் குருதியல்ல
அழிக்கப்பட்டவர்களுக்கு நீதியை
நாம் கேட்பதெல்லாம்
பழிக்குப் பழியல்ல
இன்னொரு இனக்கொலையற்ற அமைதிநிலத்தை
நாம் கேட்பதெல்லாம்
எவருடைய உரிமையையுமல்ல
எம்முடைய உரிமையை
எனதருமை மகளே!
நாம் கேட்பதெல்லாம்
நீதியின் உண்மையை
உண்மையின் நீதியை
உண்மைகளை நம் சடலங்ளைப் போலப் புதைத்து
இடுகாடுகளாக்கப்பட்ட நம் மண்மீது
எளிய நம் சனங்களின் குருதியினால்
பொய்யை புனைந்தெழுதிய அவர்களின் வீர வரலாறு
அழிக்கப்பட்டவர்களை உறங்கவிடாது
ஏனெனில் அவர்களின் போர்
சூழ்ச்சிகளினால் வென்றது
ஏனெனில் அவர்களின் போர்
அநீதிகளால் வென்றது
ஏனெனில் அவர்களின் போர்
விதிகளை மீறியது
05
எனதருமை மகளே!
நம்முடைய நிலத்தை அபகரிக்கவும்
தம்முடைய அதிகாரத்தை பரப்புவும்
நம்முடைய அரசை கலைக்கவும்
தம்முடைய வேர்களைப் பதிக்கவும்
நம்மை பூண்டோடு துடைக்கவும்
உனது கால்களை பிடுங்கி
உன் தாயையும்
ஐந்து சகோதரர்களையும் கொன்றனரென அறிகையில்
இந்த உலகத்தை குறித்து நீ என்ன நினைப்பாய்?
தீபச்செல்வன்
2016
ஓவியம்: றஷ்மி
பிரசுரம்: குளோபல் தமிழ் செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக